-எம்.ஜே.அக்பர்
சில மாதங்களுக்கு முன், ‘ஔரங்கசீப் தற்கால இந்தியாவுக்குப் பொருத்தமானவர் அல்ல’ என்று ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் திரு. சுனில் அம்பேக்கர் கூறியதை சர்ச்சையாக்க இடதுசாரிகள் முயன்றனர். அப்போது ‘தி டெலிகிராப்’ பத்திரிகையில் மூத்த இதழாளர் திரு. எம்.ஜே.அக்பர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது... தற்காலத்தின் வழிகாட்டலுக்கு இது போன்ற கட்டுரைகளின் தேவை அதிகமாக இருக்கிறது.

ஔரங்கசீப் பாகிஸ்தானின் கருத்தியல் தந்தை; அதைப் பாதுகாக்கும் புரவலர். முஸ்லிம்கள் மீதான அன்பினால் பிறந்தது அல்ல பாகிஸ்தான்; ஹிந்துக்கள் மீதான வெறுப்பில் உருவானது. பிரிட்டிஷாரின் கூட்டாளியான, நவநாகரீக உடை அணிந்த முகமது அலி ஜின்னா பிரசவகால தாதியாக இருந்து வெளிக்கொணர்ந்தது.
ஔரங்கசீப் வழியில் பிரிட்டிஷார்
ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் பிரிவினை இருக்க வேண்டும் என்பதை அரசின் கொள்கையாக்கியவர் ஔரங்கசீப் . திலகம் அணிவது, ஹோலி பண்டிகை கொண்டாடுவது என இரு மதத்தினர் இடையே தினசரி வாழ்வில் வெளிப்பட்ட கலாச்சார ஒற்றுமை, மொழி ஒற்றுமை என நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இருந்த சமூக ஒருமைப்பாட்டை உடைத்து, நேரெதிராக இரு மதத்தினரையும் நிறுத்தியவர். பிரிட்டிஷார் இந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டனர்; ரயில் நிலையங்களில் முஸ்லிம்களுக்கான தனி தண்ணீர் குடம், ஹிந்துக்களுக்கான தண்ணீர்த் தொட்டி என்பன போன்ற திட்டங்களால் வேற்றுமையை நீரூற்றி வளர்த்தனர்.
இரு மதத்தினருக்கும் தனித்தனி தொகுதி, ஒரு சார்பாகச் செயல்பட்டு, தேர்தல் முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் இருத்தல் போன்றவற்றால் ஹிந்து- முஸ்லிம்களிடையே மோதலை வழமையாக்கினர். ‘முஸ்லிம்களுக்கு தனித் தொகுதி’ என்ற ஏற்பாடுதான் பிறகு தனி நாடாக வடிவெடுத்தது. அவர்களின் செயல்கள் மற்றும் நோக்கங்கள் இடையே இருந்த தொடர்பு வெளிப்படையானது.
மதவெறி என்னும் நச்சு அடித்தளத்தின் மீது எதிர்கால இந்தியாவைக் கட்டி எழுப்ப முடியாது. கடந்த காலத்தைப் பார்த்து கழுத்து விரைத்து நோவுபடாமல், எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் இந்தியா என்பதே நம் நாட்டின் அறிவாற்றலை வெளிப்படுத்துகிறது. 21ஆம் நூற்றாண்டின் எழுச்சியுடன் மின்னும் விண்மீன் இந்தியா. 19 ஆம் நூற்றாண்டு சகதியில் சரிந்து விட்டது பாகிஸ்தான். அதற்கு வேறுபட்ட மக்கள் என்பது காரணமல்ல; வேற்றுமையை, வெறுப்பை மையமாகக் கொண்டதுதான் காரணம்.
ஆர்எஸ்எஸ் கலாச்சாரம்
ஆர்எஸ்எஸ் சார்பாகப் பேசுபவர்கள், அவர்கள் உயர்ந்த தலைவர்களாக இருந்தாலும் கூட, தன் விருப்பம் போல் பேசி விட முடியாது. அவர்களுக்கு நம்முடைய அரசியல் கலாச்சாரம் ஒத்து வருவதில்லை. நடைமுறைக்கு ஏற்ற முடிவுகளைக் கூட கட்டுப்பாடுடனே முன்னெடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டவர்கள். அரசியல் கட்சிகளின் பேச்சாளர்களைப் போல விருப்பம் போலப் பேசவோ, சூழ்நிலைக்கு ஏற்ப வார்த்தைப் பிரயோகங்களைச் செய்துவிட்டு, உதறல் எடுத்தது போல உடனடியாக மாற்றிக் கொள்ளும் சுதந்திரமோ, ஆர்எஸ்எஸ் பேச்சாளர்களுக்கு இல்லை. விஷயம் எவ்வளவு தீவிரமானதோ அதற்கேற்ப தீவிர சிந்தனைக்கும் விவாதங்களுக்கும் பிறகு மட்டுமே ஒரு நிலைப்பாடு எடுக்கப்படும். இந்த விஷயத்தில் ஏற்பு – மறுப்பு என்ற வாய்ப்பு உங்களுக்குக் கிடையாது.
ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை பரப்புச் செயலாளரான சுனில் அம்பேகர், ஆறாவது முகலாய அரசரின் சமாதி தொடர்பாக எழுந்த வன்முறையை ஒட்டிப் பேசும்போது, ‘21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு ஔரங்கசீப் தேவையற்றவர்’ என்று சொன்னார். அந்த அமைப்பின் அதிகாரம் மிக்க பொதுச்செயலாளராக இருக்கும் தத்தாத்ரேயா ஹோசபலே, இந்திய கலாச்சார பண்புகளின் அடிப்படையிலேயே ‘நல்லிணக்கம் கொண்ட ஒன்றுபட்ட பாரதம் கட்டமைக்கப்படுகிறது’ என்று உறுதிப்படத் தெரிவித்தார். அமைப்புக்குள் நடந்த சீரிய விவாதங்களுக்கும் சிந்தனைக் கடைசலுக்கும் பிறகு உருவான நிலைப்பாட்டைத்தான் இருவரும் வெளிப்படுத்தினர்.
கலாச்சாரமும் மதநம்பிக்கையும்
கலாச்சாரமும் மத நம்பிக்கையும் ஒன்றுதான் என்று நிறுவ மத அடிப்படைவாதிகள் எவ்வளவுதான் முயன்றாலும், அவை இரண்டும் ஒன்றல்ல.
இந்தோனேசியர்களும் அரேபியர்களும் ஒரே மதத்தைப் பின்பற்றினாலும் ஒரே கலாச்சாரம் கொண்டவர்கள் அல்லர் . இந்தோனேசியாவில் உள்ள ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே மொழியைப் பேசுகிறார்கள். அரேபிய கிறிஸ்தவர்கள் அரபு மொழி பேசுகிறார்கள்.
குரான் சொல்கிறது
ஒவ்வொரு மொழியிலும் இறைதூதரை அனுப்பி உள்ளதாக குரான் சொல்கிறது. ஏனெனில் படைப்பில் வேறுபாட்டைப் பார்க்க இறைவனால் முடியாது. நமக்கு மத நம்பிக்கை இருக்குமானால் நாம் எல்லோரும் இறைவனின் படைப்பு என்று ஏற்றுக் கொள்வோம். ஔரங்கசீப் மனப்பாடமாக குரானை சொல்லக் கூடியவர் என்பதால் அவருக்கு, ‘லா கும் தீன் ஓ கும் வா இல் யா தீன்’ – ‘உங்கள் நம்பிக்கை உங்களுக்கு என்னுடைய நம்பிக்கை எனக்கு’ என்ற குரானின் வசனம் தெரியும். ஆனால் அதைப் புரிந்துகொள்ள விடாமல் அவருடைய முன்முடிவான கருத்துக்கள் தடுத்தன.
ஏராளமான கசடுகள் நம்முடைய கதையாடலில் கலந்து விட்டதால் அவற்றைக் களைந்து விரிவான தளத்தில் புரிந்துகொள்ள மீள்சீரமைப்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, நம்மிடையே நடக்கும் விவாதங்கள் வெறுப்பைத்தான் வளர்க்கின்றனவே தவிர இணக்கத்தை அல்ல.
ஜிசியா வரி
1669 ல் ஔரங்கசீப் ஹிந்துக்கள் மீது ஜிசியா வரியை விதித்தார். அந்த அநியாயமான வரி விதிப்பு கடும் கண்டனத்தையும் எதிர்வினையையும் கிளப்பியது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டு மதத்தினரிடையே பெரும் இடைவெளியையும் உருவாக்கியது. முகலாயர்களுக்கும் ரஜபுத்திரர்களுக்கும் இடையே இருந்த உறவை மோசமாக பாதித்தது.
அதற்கு நூற்றாண்டுக்கு முன்பு அக்பரும் அவருக்குப் பின் வந்த முகலாயப் பேரரசர்களும் இந்த நாட்டுக் கலாச்சாரத்துடன் முரண்படும், மக்களின் இயல்புக்கு மாறான மத அடிப்படையிலான (ஜிஸியா) வரியை நீக்கிவிட்டார்கள் என்பது இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். அக்பர் மத நம்பிக்கைகளில் இருந்து விலகி விட்டதாக குற்றம் சாட்டி அவரது தம்பி முகமது ஹக்கீம் இஸ்லாமிய மத பழமைவாதிகளைத் திரட்டி அக்பருக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். கிளர்ச்சியாளர்களை ஓட ஓட விரட்டி காபூலில் ராஜா மான்சிங் தோற்கடித்தார்.
ஜிசியா வரியை அரசுக்கு வருமானத்தைச் சேர்க்காமல் தோல்வி அடைந்தது ஒரு முரண்நகை. மதரீதியான முன் முடிவுகளை விட ஊழலே வென்றது. ஔரங்கசீப்புக்கு முட்டுக் கொடுக்கும் வரலாற்றாளர் ஆட்ரி ட்ருஷ்கே, ‘ஜிசியா வரி விதிப்பைக் கொண்டு வந்ததன் மூலம் வலிமையான உலாமாக்களின் இடையே (முஸ்லிம் மத அறிஞர்கள்) ஔரங்கசீப்புக்கு செல்வாக்கு அதிகரிக்கவில்லை. ஜிஸியா வரி வசூலில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக ஔரங்கசீப்பின் சகாக்கள் திரண்டனர். வரி வசூல் செய்பவரின் பைக்கு பணம் சென்றதே தவிர கஜானாவுக்கு வரவில்லை. இது போன்ற திருடுகளைத் தடுக்கும் ஆண்மை ஔரங்கசீப்புக்கு இல்லை’, என்று எழுதியுள்ளார் (ஔரங்கசீப்: உண்மையும் கட்டுக்கதையும்)
ஹிந்து விரோதம்
1679இல் அதுவரை நடைமுறையில் இருந்த ஜாரோகா தரிசன முறையை ஔரங்கசீப் ரத்து செய்தார். அந்த தரிசன முறையில் ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டு ஹிந்துக்களுக்கு மொகலாய மன்னர்கள் தரிசனம் கொடுப்பது வழக்கம் . இது ஹிந்து சமயப் பழக்கம் எனக் கூறி அதை நிறுத்திவிட்டார். அவரது மதவெறிக்கு பாலின வேறுபாடும் தப்பவில்லை. முஸ்லிம் மகான்களின் கோயில்களுக்கு பெண்கள் செல்லக் கூடாது என தடை விதித்தார்.
அவர் எதையெல்லாம் தடை செய்தார் என்று பார்த்தால், அவையெல்லாம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மொகலாயர்களின் ஆட்சியில் நடைமுறையில் இருந்ததைக் காணலாம்.
ஔரங்கசீப்புக்கு வக்காலத்து வாங்கும் ட்ருஷ்கே போன்றோர், 21ஆம் நூற்றாண்டு நடைமுறைகளைக் கொண்டு அவரை மதிப்பிடக் கூடாது என்கிறார்கள். அது சரியான விஷயம்தான். ஔரங்கசீப் தன் சொந்த குடும்பத்தின் பண்புகளின்படி, தந்தை ,பாட்டன், முப்பாட்டன் போன்றோர் பின்பற்றிய நன்னெறிகளின்படி பார்த்தால் கூட குற்றவாளிதான்.
ஷாஜகான் காட்டிய வழி:
அவரது தந்தை ஷாஜகான் ஹோலி பண்டிகையை ‘ஈத்- இ- குலாபி‘ என்ற பெயரில் கொண்டாடினார். ‘ஆப்-இ-பாஸி‘ – மலர் தூவுதல் விழா கொண்டாடினார். ஷாஜகானின் அவையில் இருந்தவர்கள் பன்னீரை சொம்பில் எடுத்து பிறர் மீது தெளிப்பார்கள். அப்போது முரசுகளும் நகராக்களும் ஒலிக்கும் அந்த இசைக்கு ஏற்ப அவர்கள் பன்னீரைத் தெளிப்பார்கள். பிறகு அரசரின் நெற்றியில் வண்ணத் திலகம் இடுவார்கள். இதை ‘திஜீப் -இ-அக்லாக்’ -நல்லிணக்கத்தின் நெறி என்பார்கள்.
நட்டாற்றில் நாட்காட்டி
ஔரங்கசீப் தன்னுடைய குறுகிய கண்ணோட்டத்திற்கு ஒத்துவராத எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டி விடுவார். 12 மாதங்களைக் கொண்ட பாரசீக நாட்காட்டி முறையை விடுத்து சந்திரனின் போக்கை அடிப்படையாகக் கொண்ட அரபிக் நாள்காட்டி முறைக்கு மாறினார். இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்று ஆலோசனை சொல்லப்பட்ட போதிலும் நாட்காட்டியை முறைமையை மாற்றினார். அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது.
உண்மையும் பிம்பமும்
அவரைப் பற்றிய விளம்பரத்திற்கும் உண்மைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ஔரங்கசீப்பின் ஆதரவாளர்கள், அவர் எளிய வழக்கங்களைக் கொண்டிருந்தார். குரானை பிரதி செய்து விற்பது, பிரார்த்தனை நேர குல்லாக்களை நெய்து விற்பது ஆகியவற்றின் மூலம் கிடைத்த வருமானத்தில்தான் வாழ்ந்தார் என்கிறார்கள். இது போன்ற முட்டாள்தனம் வேறு ஏதும் இல்லை.
ஔரங்கசீப் பேரரசன். அதற்குத் தகுந்தாற்போல் வாழ்ந்தார்; ஆடைகளை அணிந்து கொண்டார். அவருடன் காஷ்மீருக்கு பயணம் செய்த பர்னியர், “ஔரங்கசீப் பகட்டான ஆடைகளை அணிந்து கொண்டிருந்தார். மஸ்லின் துணியில் தைத்த சட்டை. அது பட்டு மற்றும் தங்கச் சரிகையால் செய்யப்பட்ட வேலைபாடுகளுடன் இருந்தது. தங்க சரிகைகளால் ஜொலிக்கும் தலைப்பாகை அணிந்திருந்தார். அதில் பெரிய வைரங்கள் பதிக்கப்பட்டு ஒளி வீசி கொண்டிருந்தன. மார்பில் அணிந்திருந்த கோமேதக மாலை சூரிய ஒளியில் பிரகாசித்தது. கழுத்தில் போட்டிருந்த முத்துமாலை வயிறு வரை நீண்டிருந்தது. அவரைப் பார்க்க வந்த பிரபுக்கள் கொடுத்த பரிசுகள் தங்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டனவாக இருந்தன. சில பரிசுகள் தனிப்பட்ட அல்லது அரசுப் பணியில் அவர்கள் செய்த தவறுகளை மன்னிப்பதற்காக கொடுக்கப்பட்டன. மற்ற சில பிரபுக்கள் கொடுத்த பரிசுகள் மன்னரின் கருணையால் ஆதாயம் தேடக் கொடுக்கப்பட்டன“ என்று எழுதியுள்ளார்.
அரியணையில் உட்கார்ந்திருந்தது துறவி அல்ல. அரசு வியாபாரம் எங்கும் இருக்கும் வழக்கம் போல இங்கும் சிறப்பாக நடந்தது.
ஔரங்கசீப்பும் ஷியாகளும்
பாகிஸ்தானில் உள்ள ஔரங்கசீப்பின் பக்தர்கள், இருபதாம் நூற்றாண்டின் நாயகராகக் கொண்டாடும் ஜின்னா ஒரு ஷியா என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
ஔரங்கசீப் ஷியாக்களை வெறுத்தார் . அவர்களை ‘குல்- இ- பயாபானி’ (பிணம் தின்னும் பிசாசுகள்) , ‘பட்டில் மஷாபான்’ (இறைநம்பிக்கை இல்லாதவர்கள்) என்று இழிந்துரைத்தார்.
பீஜப்பூர், கோல்கொண்டா மீது படையெடுத்த போது, அதை ஆட்சி செய்த சுல்தான்கள் ஷியாக்கள் என்பதால் அதை ‘புனிதப் போர்’ (ஜிகாத்) என்று சொன்னார். ஔரங்கசீப்பின் ஷைக்-உல்- இஸ்லாம் (தலைமை மதகுரு) ஆக இருந்தவர் அவருடைய குறுகிய மதவெறியை சகித்துக் கொள்ள முடியாமல் பதவியை விட்டு விலகினர்.
பாரசீகத்தைச் சேர்ந்த ஷியாக்களை ஔரங்கசீப் தன் படையில் சேர்த்துக்கொண்டார். காரணம் அவர்கள் நன்றாகப் போரிடக் கூடியவர்கள். படையில் சேர்ந்த பிறகு அவர்கள் சன்னி முறைப்படி தான் நமாஸ் (தொழுகை) செய்ய வேண்டுமென கட்டளையிட்டார்.
ஔரங்கசீப்பும் தாராவும்
மக்கள், தாராளமாத சிந்தனைகளைக் கொண்டவரும் எல்லோரையும் அரவணைத்துச் செல்பவருமான தாராவை நேசித்தனர்- குறுகிய மனமும் கடுமையாக நடந்து கொள்ளும் ஔரங்கசீப்பை அல்ல. ஔரங்கசீப் அரியணையை வென்றார்; ஆனால் மக்கள் மனங்களை வெல்ல முடியாமல் தோற்றுப் போனார்.
தாரா தோற்கடிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட போது மக்கள் என்ன செய்தனர் என்பதை பர்னியர் பதிவு செய்துள்ளார். மக்கள் கண்ணீர் விட்டனர்; கதறி அழுதனர். வெட்டப்பட்டு தன் முன் வைக்கப்பட்ட தாராவின் தலையைப் பார்த்து ஔரங்கசீப் கூட, தான் தவறிழைத்து விட்டதை உணர்ந்து பரிதாபமாகக் கதறி அழுதார்.
தாரா யார்?
ஷாஜகான் தனக்குப் பிறகு தன் மூத்த மகன் தாரா சுக்கே அரியணை ஏற வேண்டுமென விரும்பினார். அவரை அரியணை வாரிசாக அறிவித்தார். தாரா வக்த் -அல்-உஜித், எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். ஹிந்து அறிஞர்கள் ஞானிகளுடன் அவர் உணர்வு பூர்வமாக இணைந்து இருந்தார்.
கோசைன் விட்டல்ராய் என்ற கோகுல (வைணவ- யாதவ) சமயத் தலைவருக்கு 1643 இல் நில மானியங்களை வழங்கினார். பஞ்சாப்பைச் சேர்ந்த பாபா லால் என்ற ஆன்மிகத் தலைவருடன் விரிவான கருத்துப் பரிமாற்றம் செய்தார்; அதை ஆவணப்படுத்தினார். அந்தச் சந்திப்பை ஓவியமாக வரைந்து வைத்திருந்தார்.
பாபா லாலுடன் நடந்த கருத்துப் பரிமாற்றத்தின் ஆழத்தையும் விரிவையும் இரண்டு எடுத்துக்காட்டுகளில் இருந்து புரிந்துகொள்ள முடியும். ‘ஒரு பக்கிரியின் அரசாட்சி எது?’ என்று தாரா கேட்டார். ‘தன்னை உணர்ந்து கொண்டு, எதைப் பற்றியும் கவலையற்று இருப்பது தான்’ என்று அந்த துறவி பதிலளித்தார்.
சமஸ்கிருதமும் பாரசீக மொழியும்
அறிவின் ஆதாரமாக சமஸ்கிருத மொழியை தாரா கருதினார். பான்வாலி தாஸ் என்ற சமஸ்கிருத அறிஞரை ஆதரித்தார். அந்த அறிஞர் பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ‘பிரபோத சந்திரோதயம்’ (ஞான நிலவொளி) என்ற சமஸ்கிருத நாடகத்தை பாரசீக மொழிக்கு பிரதிபெயர்த்தார். அது சூபியசத்தின் நூலாக அறியப்படுகிறது.
வேதாந்த நூல்களான அஷ்டவக்ர கீதை, ஆத்ம விலாசம், பகவத் கீதை ஆகியவற்றை பாரசீக மொழிபெயர்ப்பு செய்ய நிதி உதவி அளித்தார் தாரா.
1656இல் குளிர் காலத்தில் காசியில் சமஸ்கிருத அறிஞர்களின் மாநாட்டைக் கூட்டினார். அதில் உபநிஷதங்களை பாரசீக மொழிக்கு மாற்ற வேண்டுமெனக் கோரினார். அதற்கு நிதி உதவி அளித்தார். அவர் கேட்டுக்கொண்டதன்படி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அவை பாரசீக மொழியில் வெளிவந்தன.
அதற்கு ‘ஷிர்- ஐ -அக்பர்’ (மகத்தான ரகசியம்) என்று தலைப்பிட்டு ஒரு விரிவான முன்னுரையையும் தாரா எழுதினார். அதில், இஸ்லாமியக் கருத்தான ‘தவூஷித்’ – இறை ஒற்றுமை உபநிஷதங்களில் இருக்கிறது என்றும் அதனால் உபநிஷதங்களை புனித குரானின் விளக்க உரையாக கருதலாம் என்றும் எழுதியுள்ளார்.
ஞானத் தேடல்
தாரா பல்வேறு ஞானதளங்களில் இருந்து அறிவை சேகரித்தது மதப் பழமைவாதிகளுக்கு சவால் விடுவதாக இருந்தது. ‘ஷா ஷார்மத்’ என்ற பாரசீக மொழி பேசும் ஆர்மீனிய அறிஞர் ஒருவர் இந்தியாவை தாய்நாடாக ஏற்று வாழ்ந்து வந்தார். எல்லா மதங்களும் இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகள் என்று போதித்து வந்தார். தான் குரானை ஏற்றுப் பின்பற்றுவதாகவும் அதே வேளையில் ஒரு ஹிந்து குரு சொல்வதையும் கிறிஸ்தவப் பாதிரியார் கூறுவதையும் யூத ரபியின் (மதத் தலைவர்) மொழியையும் முஸ்லிமின் வார்த்தைகளையும் ஏற்பதாக ஷா ஷார்மத் கூறினார்.
தாரா அவரை தத்துவவாதியாகவும் தனது வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டார். அவ்வாறு கடிதத்திலேயே குறிப்பிட்டுள்ளார். நல்வாய்ப்பாக அந்தக் கடிதம் மட்டும் தப்பிப் பிழைத்து ஆவணம் ஆகியுள்ளது. ஔரங்கசீப் அரியணை ஏறிய மூன்றாம் ஆண்டு 1661 இல் ஷா ஷார்மத் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். தில்லியில் அவர் உடல் புதைக்கப்பட்டது.

மதச்சார்பின்மை விளக்கம்
இஸ்லாமிய மதகுருவான ஷேக் முஹிபுல்லா (1587-1648) அலகாபாத்தில் இருந்தார். சக்கரவர்த்தி அவரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்பினார். தன் மகன் தாராவிடம் அதைச் சொல்லி அவரிடம் இருந்து பதில் வாங்கி வர அனுப்பினார். ஷேக் முஹிபுல்லா கொடுத்த பதில் 17ஆம் நூற்றாண்டில் மதசார்பின்மையை வரையறை செய்வதாக இருந்தது.
‘…… மக்கள் (இறை) நம்பிக்கை உள்ளவர்களோ அல்லாதவர்களாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களது நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதே ஆட்சியாளர்களின், நிர்வாக அதிகாரிகளின் கடமை. எல்லா மக்களையும் சமமாக நடத்த வேண்டும். அப்படி செயல்படுவதுதான் நீதி. இறைத்தூதர் முஹம்மது நபி நல்லவர்கள் மீதும் தீமை செய்தவர்கள் மீதும் கருணை காட்டினார். நம்பிக்கை கொண்டோரிடமும் நம்பிக்கை அற்றவர்களிடமும் தயையோடு இருந்தார்.’
(நூல்: இந்திய முஸ்லிம்கள், மக்துபாத் -ஐ-ஷா முஹிபுல்லா இலஹாபாதி – மேற்கோள். ஆஸாத் நூலகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்)
கேள்வி இதுதான்: ராஜ விசுவாசத்தை வலியுறுத்திய 17ஆம் நூற்றாண்டு மன்னராட்சி முறைமைகளை, முடிவுகளை 21ஆம் நூற்றாண்டில் சம உரிமை கொண்ட, ஜனநாயக நாட்டின் வாரிசுகள் ஏன் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்?
ஔரங்கசீப்பின் வாழ்க்கை சொர்க்கத்துக்குச் செல்லும் தூய மனிதரின் வாழ்க்கையாக இல்லை. மாறாக தோல்வியுற்று, குழப்பத்திலும் வெறுப்பிலும் வாழ்ந்து ஒரு பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட மனிதரின் வாழ்க்கை. இதை விரைவில் வெளிவர இருக்கும் எனது ‘முகலாயர் காலத்தில் வானவியல்’ என்ற நூலில் விரிவாக எழுதி உள்ளேன்.
- நன்றி: தி டெலிகிராப்
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$