-ஹரன் பிரசன்னா, ஆமருவி தேவநாதன், கவிஞர் சுரேஜமீ, ச.சண்முகநாதன், மந்திரமூர்த்தி அழகு
சென்னையில் நடந்த கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றத்தும் அதில் அவர் சர்ச்சைக்குரிய் வகையில் பேசியதும், கம்பனின் பக்தர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திராவிட மாடல் அரசின் அதிகாரத்திற்கு அஞ்சி, அவர்களின் ஆசி பெற்ற வைரமுத்துவைக் கண்டிக்க இயலாமல் அவர்கள் மனதினுள் குமைகின்றனர். ஆனால், முக்காலமும் வாழும் தமிழுக்கு முன் எக்காளமிடுபவன் எவனும் தூசி தான் என்பதை இங்கு வெளியாகும் கண்டனப் பதிவுகள் நிரூபிக்கின்றன. இது இரண்டாம் பகுதி…

6. திகைத்தனை போலும் செய்கை
-ஹரன் பிரசன்னா
திகைத்தனை என்ற சொல்லுக்கு, மதி மயங்கிச் செய்தல் என்ற ஒரு பொருளும் உண்டு என்பதைக் கண்டுபிடித்துவிட்டு, தனக்கு ஏற்றவாறு வைரமுத்து அடித்துவிட்டிருக்கிறார்.
தன் மனைவியைப் பிரிந்த ராமன், எது நியாயம் என்று தெரியாமல், மனைவியைப் பிரிந்த மதி மயக்கத்தில் தன் மீது மறைந்திருந்து அம்பெய்துவிட்டான் என்பது வாலி சொல்வது குற்றச்சாட்டு. பின்னர் வாலியே ராமனைக் கடவுள் என்று புரிந்துகொண்டுவிட்டான். இது உண்மையில், ராமனைக் கடவுள் என்று அறியாமல், தன் மேல் அம்பு பாய்ந்த மதி மயக்கத்தில் வாலி சொல்வது!
உண்மையில் ராமன் மதி மயங்கித்தான் இதைச் செய்தாரா? இல்லவே இல்லை. முதலில் ராமன், சுக்ரீவனை வாலியுடன் சண்டைக்குச் செல்லச் சொல்கிறார். ஆனால் அன்று ராமன் வாலி மீது அம்பெய்யவில்லை. வாலி சுக்ரீவனை வெளுத்து அனுப்புகிறான். ஏன் அம்பெய்யவில்லை என்று சுக்ரீவன் கேட்டபோது, இருவரில் யார் வாலி என்று தனக்குப் பிடிபடவில்லை என்று சொல்லும் ராமன், மறுநாள் சுக்ரீவனை ஒரு மாலை அணிந்துகொண்டு வாலியுடன் சண்டைக்குச் செல்லச் சொல்கிறான். இதுவா மதி மயங்கிச் செய்வது? இது சிறப்பாக யோசித்துச் செய்வது. சீதையின் பிரிவால் மனம் வாடிச் சோர்வுற்றுக் கிடந்தாலும், ராமன் மதி மயங்கிக் கிடக்கவில்லை. மதி மயங்கவே இல்லை என்னும்போது, எங்கே புத்தி சுவாதீனம் இல்லாமல் போவது?
பின்னர் ஏன் வைரமுத்து போன்றவர்கள் இப்படி வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள்?
இவர்களுக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வளவுதான். இதே வைரமுத்துவின் இன்னொரு பேச்சு யூ-டியூபில் கிடைக்கிறது. அதில் வைரமுத்து சொல்கிறார்: கருணாநிதியும் இவரும் லிஃப்டில் போகிறார்கள். லிஃப்டில் ஐந்து பேர் இருக்கிறார்கள். ஆறாவதாக ஒருவர் லிஃப்டுக்குள் ஏறுகிறார். லிஃப்ட் அதிகப் பளு காரணமாக இயங்காமல் போக, ஒருவர் வெளியேற வேண்டியதாகிறது. பின்னர் லிஃப்ட் கிளம்பவும் கருணாநிதி சொன்னாராம், ‘லிஃப் பாஞ்சலி போல, ஐந்து பேரை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்’ என்று!
இவர்களுக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வளவுதான். எதையும் உடலுடன் முடிச்சுப் போடுவது. இதைக் கற்றதே இவர்கள் செய்த சாதனை. எத்தனை பெரிய காவிய நாயகி என்றாலும் உடலும் உடலுறவுமே இவர்களுக்குப் பிரதானம். ஏனென்றால் இவர்கள் புத்தி எப்போதும் இருப்பது அதற்குள்ளே மட்டும்தான். இவர்களிடம் என்ன தீவிரமான இலக்கிய ஆய்வை எதிர்பார்த்துவிட முடியும்?
வைரமுத்து சொல்கிறார், புத்தி சுவாதீனம் இல்லாமல் ராமன் வாலி வதம் செய்தது தவறில்லையாம். ஏனென்றால், இன்றைய சட்டம் அதைச் சொல்கிறதாம். அடித்துவிடுவது என்றானபின், என்ன வேண்டுமானாலும் பேசலாம். இன்றைய சட்டத்தை அன்றே ராமன் கணித்தானா? விவாதிப்போம்!
மதி மயங்கிச் செய்வதும் புத்தி சுவாதீனம் இல்லாமல் ஒருவன் செய்வதும் ஒன்றல்ல. ராமன் மதி மயங்கிச் செய்ததல்ல வாலி வதம். அது வாலிக்கே தெரியும். புத்தி சுவாதீனம் இல்லாமல் செய்வது என்றுமே ராமனல்ல. இப்படி பேசித் திரியும் வைரமுத்துக்களே.
- திரு. ஹரன் பிரசன்னா, எழுத்தாளர்; சுவாசம் பதிப்பகத்தின் நிறுவனர்.
$$$
7. கம்பன் கழகம் வாழ்க!
-ஆமருவி தேவநாதன்
கம்பர் விருது பெறுவதற்கு வைரமுத்து முழுத் தகுதி உடையவர்.
ஏனெனில் கம்பன் சொல்வதைப் போலவே வாழ்ந்து வருபவர் அவர்.
கம்பன் இப்படிச் சொல்கிறான் :
'இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்'
– இது இராமனைப் பற்றி.
'நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்'
– இது அனுமனைப் பற்றி.
பெண்களைப் பற்றிய நினைவே இல்லாமல் வாழும் வள்ளுவரான வைரமுத்துவிற்கு (!) கம்பன் விருது கொடுத்தது சாலத் தகும். சென்னை கம்பன் கழகத்திற்கு வாழ்த்துகள்.
- திரு. ஆமருவி தேவநாதன், எழுத்தாளர்.
$$$
8. ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணார்!
-கவிஞர் சுரேஜமீ
ஆண்டாண்டு காலமாக தமிழ் மண்ணில் பல்வேறு காப்பிய வியாக்கியானங்கள் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்றுதான்.
ஆன்றோர் பெருமக்கள் சான்றோர் அவையில் காரண, காரியங்களை அலசுவதும் இயல்புதான்.
அறியாமை இருள் அகற்ற அறிவின் ஒளியைப் பாய்ச்சும் அற்புதக் கலையில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள்!
அறமொன்றே இலக்காக, அதன் வழியில் பொருளீட்டி, இன்பத்தைத் துய்க்கும் ஒப்பற்ற ஓரினம் தமிழினம் என்பதே வரலாறு சாற்றும் உண்மை.
இந்த அறம் பழகுதற்காகவே, ஆலயம் எழுப்பி, அன்பைப் பாய்ச்சி, ஒழுக்கத்தை வளர்த்து, உயர்வறம் பேணி உலகுக்குக் காட்டியவர்கள் தமிழர்கள்!
வடமொழிப் புலமையிலும் வல்லவர்கள்! பிறமொழிச் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் மட்டும் அல்ல; அதனைத் தத்தம் வாழ்வியலுக்கு ஏற்ப மாற்றி, அறம் வளர்த்த பெருமைக்குரியவர்கள்!
தற்பெருமை பேசுவதை தற்கொலைக்குச் சமமாக நினைத்தவர்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, பாரதத்தில் இருந்து ஒரு சூழலை மேற்கோள் காட்டி, அச்செயலின் தன்மையை உணர்த்தியவர்கள்! உணர்ந்தவர்கள்!
இந்தப் பீடிகை எல்லாம் எதற்கு என்றுதானே உங்கள் கேள்வி?
சற்றே பொறுமையாக இருங்கள்! பதிலுக்கு வருவதற்கு முன்னர் உங்களுக்குச் சில கேள்விகள்:
கவிச்சக்கரவர்த்தி என்றால், யார் உங்கள் நினைவுக்கு வருகிறார்?
கவியரசர் என்றால்?
மிகச் சரி!
கம்பனும், கண்ணதாசனும்தான்!
ஆனால், அவர்களின் கால் தூசி கூடப் பெறாத சிலர், தமக்குத் தாமே மகுடம் சூட்டிக் கொள்வதோடு மட்டும் அல்லாமல், இந்த மண்ணின் பெருமையையே சிறுமைப்படுத்துகின்றனர்.
அதிலும் குறிப்பாக, வயதில் பெரியவர்களை, அறிவிற் சிறந்தவர்களைச் சவாலுக்கு அழைப்பது, எனக்கு எல்லாம் தெரியும் என்பது, சுயபுராணம் பாடுவது, பாரசீகம் முதல் பாலி வரை அத்தனை மொழியும் அத்துபடி என்பது!
இவையெல்லாம் சில உதாரணங்கள்! ஆட்களை அடையாளம் காண வேண்டியது உங்கள் பொறுப்பு!
சரியா?
அதுவல்ல நம் தலைப்பு என்று உங்களில் யாரோ முணுமுணுப்பதை அறிவேன்!
தலைப்புக்குள் வருகிறேன்!
வாலி வதம் செய்யப்படுகிறான். மார்பில் பாய்ந்த அம்பை எடுத்துப் பார்த்தால் “இராமன்” என்னும் முத்திரை தெரிகிறது. இராம மந்திரம் எத்தகையது?
மும்மைசால் உலகுக் கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானே இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, “இராமன்” என்னும் செம்மைசேர் நாமந் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்!
அத்தகைய வலிமை படைத்த மந்திரத்தைக் கண்ட அடுத்த கணம்,
மெல்லக் கண் விரித்துப் பார்த்தால்… எதிரில்…
நீலக் கார்முகில் வண்ணன், தாமரை மலர்கள் பல மலர்ந்தது போன்ற மேனியுடன், கட்டமைந்த வில்லை ஏந்தி வருவதைக் காண்கிறான்! இதைக் கம்பன் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்,
கண்ணுற்றான் நீலக் கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும், மாலை!
இருவருக்கும் இடையே பல்வேறு சம்பாஷனைகள் நடைபெறுகின்றன. நிறைவில், வந்தது இறைவனே என அறிந்து, அதனைத் தன் மகனுக்கும் உணர்த்தி, மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து எனச் சொல்லி,
மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தர்மம் நீ! பகையும் நீ! உறவும் நீ!
-என்றெல்லாம் சொல்லி இறைபதம் அடைகிறான்!
ஆனால், இதை எதையுமே வாசித்துப் பொருளுணரும் பக்குவமற்ற சிலர், வாலியை மறைந்திருந்து கொன்ற இராமனிடம் வாலி கேட்ட “திகைத்தனை செய்கை போலும்” என்ற ஒரு சொல்லை வைத்துக் கொண்டு,
12ஆம் நூற்றாண்டுக் கம்பனையும், அவனே வேத முதற்காரணனோ என இராவணனே வியந்த பரம்பொருளான இராமனையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தன்னை நிரபராதி போலக் காட்டும் அயோக்கியர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என்பதுதான் இந்தப் பதிவின் சாரம்.
இருப்பினும், கற்றறிந்தவர்கள், பிறர் விளங்கக் கற்றவற்றைப் பறைசாற்றும் சான்றோர்கள் வாசிப்பின் ஆழம் புரிந்து, கவிஞனின் உளத்தை ஆய்ந்து, அறிந்து, தெளிந்து, வகுத்து, பகுத்து, தொகுத்துச் சபைகளில் கூறாத வரை, ‘ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணார்’ என்ற பாரதியின் குற்றச்சாட்டு தொடரும்!
சரிதானே?
தலைப்புக்கும், கம்பனுக்கும் நியாயம் செய்துவிட்டோம் அல்லவா?
இனியாகிலும் சில பைத்தியங்கள் உளறுவதை நிறுத்திக்கொள்ளட்டும்!
- திரு. சுரேஜமீ துபையில் பணியாற்றும் கவிஞர்.
$$$
9. மக்கட் பதடி யெனல்
-ச.சண்முகநாதன்
வைரமுத்து போன்றவர்களுக்கு கம்பன் பெயரில் விருது கொடுப்பது, 5 வயது சிறுவனுக்கு 8 முழம் வேஷ்டி கட்டிவிட்டதைப்போல இருக்கிறது. He doesn’t fit in and he trips down at every step.
ராமநாமம் எனும் அமிர்த சாகரத்தில் கொஞ்சம் திராவகம் ஊற்றப் பார்க்கிறது திராவிடம்.
"ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை"
இந்த இரண்டு வரிகளை தலைமேல் வைத்துக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. “திகைத்தனை போலும் செய்கை” என்பது “புத்தி ஸ்வாதீனமில்லாதவன்” என்று தீர்ப்பெழுதி கொக்கரித்துக் கொண்டிருக்கிறது அவரது கேடுகெட்ட எண்ணம். இது பெரிய நகைச்சுவை போல தனக்குத்தானே வயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறது.
It is a bad joke Vairamuthu. Infact the joke is on you.
வாலி மண்ணில் வீழ்ந்த பிறகு அம்பில் “இராமன் என்னும் செம்மை சேர் நாமம் தன்னை” கண்களின் தெரியக் கண்டான். ராமன் பெயர் பொறித்திருந்ததைக் கண்டு ராமனை இகழ்ந்து பேசத் தொடங்குகின்றான். அவற்றில் ஒன்றுதான் இந்த “திகைத்தனை போலும், செய்கை”.
“என்பால் எப் பிழை கண்டாய்? அப்பா!” என்று ராமனிடம் விளக்கம் கேட்கின்றான்.
இங்கே குற்றவாளிக்கூண்டில் நிற்பவன் வாலி, ராமன் அல்ல. சத்ரிய தர்மத்தின் படி ராமன் தண்டனை கொடுக்கும் இடத்தில இருக்கின்றான்.
“திகைத்தனை போலும், செய்கை” என்பதை விட இன்னும் கடினமாகவே கேள்விகள் கேட்கின்றான் வாலி. அதுதான் கம்பன். வாலிக்கும் சம வலிமை கொடுத்து வாதத்தை சமநிலையில் வைக்கிறான். ராமன் என்பதற்காக வலியின் கேள்விகள் வலுவில்லாதவை அல்ல.
“திகைத்தனை போலும், செய்கை” என்பதை விட கடுமையான சொல் சொல்கிறான் வாலி. “பண்பு அழிந்து ஈரம் இன்றி, இது என் செய்தவாறு அரோ?” என்பது வாலியின் வரிகள். ஒரு ராம பக்தனாக இந்த வரிகள் என்னைக் காயப்படுத்தும். ஆனால் வாலியின் வலிதான் இந்த வரிகள் என்ற புரிதல் நமக்கு உண்டு.
வாலியின் இகழ்ச்சிக்கு ராமன் சொல்லும் பதில் மேன்மை பெற்றது. கம்பனைப் படிப்பதற்கு பொறுமை வேண்டும். நுனிப்புல் மேய்வதோ திராவிடக் கொள்ளிக் கண்கள் மூலம் பார்ப்பதோ, பயன் தராது.
இங்கே வைரமுத்து செய்திருப்பது சின்னத்தனம்.
கம்பன் ராமனை குற்றவாளி என்று கருதி section 84இல் விடுவித்தான் என்பதுதான் அப்பழுக்கற்ற புத்தி சுவாதீனம். ராமன் யாரையோ கூடி வந்து அவனுக்கு வக்காலத்து வாங்கி ஜாமீன் கொடுத்து நாயகனாகப் போற்றவில்லை. இவன்தான் உத்தமன் என்று மனதுக்குள் தோன்றிய பின்னரே காவியம் எழுதுகிறான்.
வாலியும் ராமனும் வாதிடுகிறார்கள். அதில் குற்றவாளியின் முதல் வார்த்தையை எடுத்துக்கொண்டு தீர்ப்பெழுகிறார் வைரமுத்து. கயமைத்தனம் அல்லவா இது?
குற்றவாளியின் வாதம் தீர்ப்பாகுமா? அதிலும் கம்பன் அதைச் செய்வானா? “காசு இல் கொற்றத்து இராமன் கதை (குற்றமில்லாத ராமன் கதை) பேச வந்தேன் என்றல்லவா ராமாயணத்தை ஆரம்பிக்கிறான் கம்பன்!
வாதத்தின் இறுதியில் வாலி ராமன் செய்தது தவறில்லை என்று ஒப்புக்கொண்டான். “கவி குலத்து அரசு, அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்”. என்னை மன்னித்தருள், நாய்போல எளியராய் இருக்கும் எங்களுக்கு உன் நேர்மை புரியாதது ஆச்சர்யமில்லை, “நாய் என நின்ற எம்பால், நவை அற உணரலாமே?” என்று சொல்லி வாதத்தை நிறைவு செய்கிறான் வாலி.
இறுதியில் தன் மகன் அங்கதனை அழைத்து தேற்றி “நாயகன், இராமன், செய்த நல்வினைப் பயன் இது’ என்று ஆறுதல் கூறுகிறான்.
இதுதான் கம்பன்.
கம்பனைப் போற்றிப் பாடும் சந்தர்ப்பத்திலும் கம்பனின் நாயகன் ராமனை வசைபாடும் எண்ணம் வக்கிரம். தன்னுடைய வக்கிர எண்ணத்தை “கம்பன் குற்றவாளி ராமனை section 84 மூலம் விடுதலை செய்கிறான்” என்று கம்பன் மீது கடத்துவது கேடு கேட்ட எண்ணம்.
கம்பனைப் பற்றி பேச பத்தாயிரம் விஷயங்கள் இருக்கும் பொழுது, இவர் ராமன் குற்றவாளி என்று கம்பன் நினைத்தான் என்று பேசுவது என்ன மனநிலை?
பதர் என்றே அழைக்கத் தோன்றுகிறது.
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். -திருக்குறள்
- திரு. ச.சண்முகநாதன், பெங்களூரில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்.
$$$
10. கம்பன் கழகம் மறுப்பறிக்கை வெளியிடுக!
-மந்திரமூர்த்தி அழகு
பொன்விழா கொண்டாடுகின்ற சென்னை கம்பன் விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கம்பன் விருது வழங்கியது சரியா?
இராமாயணத்தைப் பாட வந்த கம்பர் அதன் நோக்கமாக
"ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென. ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்றுஇக் காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!"
-என்று பாடுகிறார்.
அதாவது குற்றம் இல்லாத இராமனின் கதையைக் கூறுவதற்காக இந்தக் காவியத்தை எழுதுவதாகக் கூறுகிறார்.
கம்பன் எழுதிய நூலின் அடிப்படையையே மறுத்து வாலி வதையின் அடிப்படையில் வாலி பேசிய வார்த்தையை வைத்துக் கொண்டு இராமனைக் குதர்க்கமாக கம்பன் கழக மேடையிலேயே பேசுகின்ற கவிஞர் வைரமுத்துவுக்கு -கம்பனின் புகழ் பாடுவதற்காக நிறுவப்பட்ட சென்னை கம்பன் கழகமானது கம்பனின் பெயரில் விருது வழங்கியது சரியானதுதானா?
தன்முனைப்போடு எங்கு வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசுகின்ற கவிஞர் வைரமுத்து, கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நோக்கத்தை மறந்து அல்லது மறைத்து, சென்னை கம்பன் கழக மேடையிலேயே பேசுவதை ஏற்கலாமா?
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் சென்னை கம்பன் கழக விழாவில் கவிஞர் வைரமுத்துவின் முதல் நாள் உரையை மூன்றாவது நாளில் மறுத்துப் பேசி இருக்கிறார்.
சென்னை கம்பன் கழகம் கவிஞர் வைரமுத்துவின் உரையை மறுத்து அறிக்கை வெளியிட வேண்டும். கவிஞர் வைரமுத்துவிற்கு இந்தப் பொன்விழா ஆண்டில் கொடுத்த கம்பன் விருதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் பரிசீலனை செய்ய வேண்டும்.
- திரு. மந்திரமூர்த்தி அழகு, முகநூல் எழுத்தாளர்; இலக்கிய ஆர்வலர்.
$$$