இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம் தான்!

-ஜனனி ரமேஷ்

மிக விரைவில் உலகின் 3ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியாவை, ‘இறந்த பொருளாதாரம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சிப்பதை வயிற்றெரிச்சல் என ஒதுக்கி விடலாம். ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவரை வழிமொழிவதையும், உண்மை எனப் பாராட்டுவதையும்,  என்னவென்று  சொல்ல?

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியப் பொருளாதாரத்தை  ‘இறந்த பொருளாதாரம்’  என்று கூறியுள்ளார்.  இந்தியாவும் ரஷியாவும், தங்களது ‘இறந்த’ பொருளாதாரத்தை இணைந்தே எடுத்துச் செல்லலாம்  என்றும் கிண்டலடித்துள்ளார்.  இந்தியாவின் அதிக வரி விதிப்பையும், வர்த்தகக் கொள்கைகளையும் சுட்டிக்காட்டி, ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவில்  இறக்குமதியாகும் இந்தியப் பொருள்கள் மீது 25 % கூடுதல் வரி விதித்துள்ளார். மேலும் ரஷிய எண்ணெய்  மற்றும் ராணுவத்  தளவாடங்களை வாங்குவதற்காக இந்தியாவிற்கு அபராதம் என்றும்  மிரட்டல் விடுத்துள்ளார். 

அரசியல் கொள்கைகள் எதுவாக இருப்பினும், நாட்டின் இறையாண்மையும், பொருளாதாரப் பாதுகாப்பும், அந்நியா நாடுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, ஆளும் அரசை ஆதரிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் தார்மிகக் கடமையாகும். ஆனால், ட்ரம்பின் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  ஆதரித்தும், ஆமோதித்தும் வரவேற்றுள்ளார்.   ‘அமெரிக்க அதிபர் உண்மையைச் சொல்லி உள்ளார். இந்தியப் பொருளாதாரம் செத்து விட்டது.  பிரதமர் மோடி அதைக் கொன்று விட்டார். இது பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் தவிர உலகிலுள்ள அனைவருக்கும் தெரியும்’ என்று, ஜாடைமாடையாகக் கூட அல்ல. நேரடியாகவே கடுமையாகத் தாக்கி உள்ளார். தனது கருத்தை  உறுதிப்படுத்த நான்கு காரணங்களை முன் வைக்கிறார். அவை:

மோடி – அதானி கூட்டணி:

கௌதம்  அதானியின் வர்த்தகங்கள் அனைத்திற்கும் கண்மூடித்தனமான ஆதரவு, பண மதிப்பிழப்பு, குறைபாடுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி விதிப்பு – இத்தகைய கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப்  பாதித்துள்ளன.

தோற்றுப் போன ‘இந்தியாவில் தயாரி’  முனைவு

‘இந்தியாவில்  தயாரி  முனைவு’ தோற்றதால் பொருளாதாரம் நசிந்து போனதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது.  இளைஞர்கள்  தங்கள் எதிர்காலம் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

குறு சிறு நடுத்தரத் தொழில்கள் அழிந்துவிட்டன.

அரசின் கொள்கைகள் பெரு நிறுவன முதலாளிகளுக்கே  சாதகமாக உள்ளன.  இவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி, குறு சிறு நடுத்தரத் தொழில்களைப் பாதித்துள்ளன.

விவசாயிகள் நசுக்கப்பட்டுள்ளனர்

வேளாண் சட்டங்கள் விவசாயத் துறையை அதள பாதாளத்திற்குத் தள்ளி உள்ளன.  விவசாயிகள் மன உளைச்சலில் இருக்கின்றனர்.

-இவை ராகுல் கூறியவை.

இந்தியப் பொருளாதாரம் ‘இறந்த’ பொருளாதாரம் அல்ல.  ‘வளர்ந்த’  பொருளாதாரம் என்று ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஆளும் கட்சி தரவுகளுடன் பதிலடி தந்துள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் அவரது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், ராஜீவ் சுக்லா ஆகியோர் ராகுலின் பேச்சை மறுத்து அறிக்கை விடுத்துள்ளனர். 

சசி தரூர் கூறியதாவது: ‘அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சத் தேவையில்லை.  அமெரிக்கா மட்டுமே நமது வர்த்தகப் பங்குதாரர் அல்ல.  வேறு பல நாடுகளும் உள்ளன. பிரதமரின் சமீபத்திய பிரிட்டன் விஜயத்தில் அத்துடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழத்தாகி உள்ளது. அடுத்தடுத்த ஐரோப்பிய நாடுகள் பட்டியலில் உள்ளன. நாம் சீனாவைப் போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மட்டுமே அல்ல. அதற்கு இணையான வலுவான உள்நாட்டுச் சந்தையும் நமக்கு உள்ளது.

மற்றொரு காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘ட்ரம்ப் சொல்வது தவறு.  இந்தியப் பொருளாதாரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது.  நாசிம்ம ராவின் பொருளாதாரச்  சீர்திருதங்களை வாஜ்பாய் முன்னெடுத்துச் சென்றார்.  பின்னர் வந்த மன்மோகன் அதை வலிமைப்படுத்தினார்.  இப்போதைய அரசு அப்பணியைச் சிறப்பாகச் செய்கிறது. தனக்கு  விருப்பமான நாட்டுடன் வர்த்தகம் செய்ய அனைத்து நாடுகளும் உரிமை உண்டு. அதற்குக் கட்டுப்பாடு விதிப்பது,  பிரிக்ஸ் அமைப்புக்கு எதிராக அறிக்கை விடுவது, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தால் வரிகளை அதிகரிப்பது என  மிரட்டுவது  தவறான போக்காகும்’  என்றார்.

இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, சர்வதேச அமைப்புகள், உலகளாவிய முதலீட்டாளர்கள் தரும் முக்கியப் புள்ளிவிவரங்கள் டிரம்ப் கருத்தை மறுக்கின்றன. ஆண்டுதோறும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.  இந்தியப் பொருளாதாரத்தை  ‘வளரும்’  என்று கூட இனி கூறாமல் ‘வளர்ந்த’  என அழைப்பதே  பொருத்தமாக இருக்கும். இதற்கான தரவுகள் பின்வருமாறு:

உலகின் 4ஆவது பெரிய பொருளாதாரம்

உலக அளவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகமாகவே உள்ளது.  சர்வதேச நாணய நிதியம் ஜூலை29ஆம் தேதி அறிக்கையில் இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை 2025-26 ஆண்டுக்கு 6.4 % ஆக உயர்த்தி உள்ளது. இது அமெரிக்காவின் 1.9 % மற்றும் சீனாவின் 4.8 % விகிதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா கடந்த 9 ஆண்டுகளில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகியவற்றை விடவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில், ஜப்பானை முந்திக் கொண்டு உலகின் 4ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இறக்குமதியிலிருந்து ஏற்றுமதிக்கு

ஒரு காலத்தில் இந்தியா உணவுப் பொருள்களைக் கூட இறக்குமதி  செய்து கொண்டிருந்தது.  இன்றைக்கு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது.  போர்த்  தளவாடங்களும்,  ஆயுதங்களும் இறக்குமதி செய்த காலம் போய், கடந்த 11 ஆண்டுகளில் ஆயுதங்களை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.  2014-15இல்  ஆயுத ஏற்றுமதி ரூ. 686 கோடிகள்.  2024-25இல் ரூ. 23,622 கோடிகள்.  கேனலிஸ் ஆய்வறிக்கையின்படி, தயாரிப்புத் துறையில் 2025இல், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத உச்சம் தொட்டிருக்கிறோம். அமெரிக்காவுக்கான அறிதிறன் பேசிகள் ஏற்றுமதியில் சீனாவைப் பின்னுக்குத்  தள்ளி உள்ளோம்.

டிஜிடல் பொருளாதாரம்

இந்திய  டிஜிடல் பொருளாதாரம் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு  வருகிறது.  இதன் வருடாந்திர வளர்ச்சி 15.6 % என்பது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை  விடவும் 2.4 மடங்கு வேகமாகும்.

இளைஞர்கள் அதிகமுள்ள பொருளாதாரம்

இந்தியாவின் 65 % மக்கள் 35 வயதுக்குக் குறைவானவர்கள்.  நமது பொருளாதார  வளர்ச்சிக்கு இந்த இளைஞர் பட்டாளமே  அடிநாதம்.  மேம்பட்ட உற்பத்தி, கண்டுபிடிப்பு, நுகர்வு மூலம் பொருளாதார வளர்ச்சியை எட்டலாம்.  3ஆவது பெரிய பொருளாதார நாடு என்னும் இலக்கு நிச்சயம் சாத்தியமே.

இந்தியா உலக முதலீட்டாளர்களின் ‘நம்பிக்கை நட்சத்திரம்’

ட்ரம்ப் மற்றும் ராகுலின் ‘இறந்த பொருளாதாரம்’ என்னும் விமர்சனத்தைப் பொய்யாக்கும் வகையில் ‘ரிபப்ளிக் மீடியா நெடிவொர்க்’ ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் புகழ் பெற்ற பிரபல முதலீட்டாளர் மார்க் மோபியஸ், இந்தியாவை ‘உலக அளவில் வளரும் நட்சத்திரம்’ என்று பாராட்டி உள்ளார். அவருடைய பேச்சு தரவுகளை அடிப்படையாகக்  கொண்டது. 

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா 748 பில்லியன் டாலர்கள் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற்றுள்ளது.  இது முந்தைய பத்தாண்டுகளை விட 143 % அதிகமாகும்.  கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவிற்கு  வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடுகளில்  70 %  பிரதமர் மோடி ஆட்சியில் வந்தவை ஆகும்.  2014 தொடக்கத்தில் இந்தியாவில்  89 நாடுகள் முதலீடு  செய்தன.  இது 2025இல்  இது 112 ஆக உயர்ந்துள்ளது.

வங்கிகள் இணைப்பும், சீரமைப்பும்

அரசு வங்கிகள் இணைப்பு, சீரமைப்பு, கடன் வசூல் தீர்ப்பாயம் காரணமாக, மொத்தச் செயல்படா சொத்துக்கள் 9.11 % இருந்தது.  இது 2025இல் 2.58 % ஆக குறைந்துள்ளது.  மேலும், 2025  மார்ச்   முடிய வங்கிகள் ஈட்டிய மொத்த லாபம் ரு. 1.78 லட்சம் கோடிகள் ஆகும். 

தனி நபர் வருமானம் இரு மடங்கானது

2014இல் $ 1,438 ஆக இருந்த தனிநபர் வருமானம் 2024இல் $ 2,880 ஆக இரு மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு பெருகியுள்ளது என்பதுடன் இந்திய மக்கள் தொகையில் 25 கோடிமக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்  என்பதே முக்கிய செய்தியாகும். 

வலுவான அடித்தளங்கள், கட்டமைப்புகள், பிரம்மாண்ட உள்நாட்டுச் சந்தை, அதிக இளைஞர்களைக் கொண்ட மக்கள் தொகை மற்றும் அதிகரிக்கும் வாங்கும் திறன், ஆகியவை உலகின் மிக லாபகராமான முதலீட்டு நாடாகவும், அசைக்க முடியாத வலுவான பொருளாதார சக்தியாகவும் இந்தியாவை உருமாற்றியுள்ளது.

மிக விரைவில் உலகின் 3ஆவது மிகப் பெரிய பொருளாதார வல்லரசு நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியாவை, ‘இறந்த பொருளாதாரம்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சிப்பதை வயிற்றெரிச்சல் என ஒதுக்கி விடலாம். ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவரை வழிமொழிவதையும், உண்மை எனப் பாராட்டுவதையும்,  என்னவென்று  சொல்ல?

  • நன்றி: தினமணி (05.08.2025)

$$$

Leave a comment