-பிரியம் காந்தி மோடி
ஆங்கில எழுத்தாளரும் மும்பையில் உள்ள விஸ்வாமித்திரா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனருமான திருமதி பிரியம் காந்தி மோடி ‘தி இந்து’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் தமிழில் பதிவாகிறது...

ஹமாசுக்கு எதிரான போரை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும்போதே, ஜூன் 13ஆம் தேதி, அது ஈரானைத் தாக்கியது. ஏற்கனவே கொத்தளிப்பில் உள்ள மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – ஈரான் மோதல் 12 நாட்கள் நீடித்தது.
இஸ்ரேல் – ஈரான் மோதல் பற்றிய இந்தியாவின் எதிர்வினை முன்னெச்சரிக்கையுடனே இருந்தது. ‘இது போராக மாறக் கூடாது. மோதல் தவிர்க்கப்பட வேண்டும். அந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டும்’ என்று இந்தியா கூறியது.
மனித குலத்திற்கு ஏற்படும் அழிவு பற்றி கவலை தெரிவித்த பிரதமர் மோடி ‘இது போருக்கான யுகம் அல்ல’ என்று மீண்டும் கூறினார். அவரது தலைமையிலான இந்திய அரசு தேவைப்படும் போதெல்லாம் மிக விரைவாக மனிதநேய உதவிகளைச் செய்தது. ஐ.நா. மன்றத்தில், காசா பகுதியில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது.
மோதல் பகுதிகளில் இருந்து தனது குடிமக்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தது. இப்பொழுது, மிக அண்மையில், இஸ்ரேல் – ஈரான் பகுதிகளில் இருந்து ‘சிந்து நடவடிக்கை’ என்ற பெயரில் தன் குடிமக்களை, பலரும் மருத்துவ மாணவர்கள், பத்திரமாக மீட்டது.
வலிமையின் அடையாளம்
இந்தியாவின் நம்பகத் தன்மையையும் அதன் ராஜதந்திர வல்லமையும் உலகம் அங்கீகரித்து வருகிறது. இந்தியாவின் அமைதியான ராஜதந்திரச் செயல்பாடுகள் அதன் உயர்வைக் காட்டுகின்றன. இந்தியா அவசியமென்றால் பேசுகிறது. தேவைப்படும்போது செயல்படுகிறது. கேட்டுக் கொண்டால் முயற்சிகளை முன்னெடுக்கிறது.
இஸ்ரேலுடன் ராணுவ ஒத்துழைப்பு, ஈரானுடன் எண்ணெய் மற்றும் வர்த்தக உறவு, வளைகுடா நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ள தன் குடிமக்களின் நலன் – என மேற்கு ஆசிய பகுதியில் இந்தியாவின் ஈடுபாடுகளும் செயல்பாடுகளும் அதிகம்.
அரபு நாடுகள் பலவற்றுடன் பிரதமர் மோடி வளர்த்துள்ள நல்லுறவால் அந்நாடுகளில் சில இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்துள்ளன; இணைந்து வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளன. இது அவரது ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. உலகில் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருப்பதால், பொருளாதார ஒப்பந்தங்களும் ஒத்துழைப்பும் ராஜதந்திர நடவடிக்கைகளின் மையமாக இருக்கின்றன.
ஒரு போரில் தேவையில்லாமல் தலையிடுவது- அதுவும் நமக்குத் தொடர்பில்லாத போரில் தலையிடுவது – நம்முடைய தேச நலனுக்கு எதிரானதும் அவசியமற்றதும் ஆகும். எந்தச் சாய்வும் இல்லாமல் தன்னிச்சையான நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது இந்தியப் பண்புகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் துரோகம் செய்வது என்றாகாது. மாறாக எல்லாத் தரப்பினருடனும் உறவாடவும் தன்னுடைய நலன்களை உறுதியாகப் பாதுகாப்பதும் ஆகும்.
சிந்தூர் நடவடிக்கையும் அதன் பிறகும்
இன்றைய சர்வதேச ராஜதந்திர நடவடிக்கைகள், தங்கள் தங்கள் தேசிய நலனைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளன. அண்மையில் பகல்காமில் பாகிஸ்தானிய பயங்கரவாதத் தாக்குதலும் அதற்கு ‘சிந்தூர் நடவடிக்கை’ என்ற பெயரில் இந்தியா கொடுத்த பதிலடியும் அதன் பிறகு இந்திய – பாகிஸ்தான் மோதல் குறித்து உலக நாடுகளின் நிலைப்பாடும் நாம் வாழும் காலத்தில் புவி அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக் காட்டுகின்றன.
அம்பலமானது பிற்போக்குத்தனம்
முன்னெல்லாம் பல நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் பன்னாட்டு அமைப்புகளும், பயங்கரவாதத்திற்கு எதிராக இருப்பதாக காட்டிக் கொண்டே பாகிஸ்தானுக்கு நிதி உதவியும் ஆயுதங்களையும் தந்து வந்தன. இதனால் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்த பாகிஸ்தான் தெம்பாக இருந்தது.
மேற்கத்திய நாடுகள் -அதில் பல இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த விரும்பி முயற்சிகளை மேற்கொள்பவை – இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தரத்தில் வைத்து பார்த்தன. கடந்த இரண்டு முறை ஆட்சியில் இருந்தவர்கள் (மோடி அரசு) இதை தவறென்ன நிரூபித்தபடியே இருந்தனர் .
பல நாடுகள் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருந்தன. அதன்மூலம் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்கள், விமானதளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அவற்றிற்கு வாய்ப்பு கிடைத்தது. இதனால் அந்த நாடுகள் சீனா, ஈரானுடனான மோதலின் போது தங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும் என்று கருதின.
பாகிஸ்தான் தன் விசுவாசத்தை அதிக விலை கொடுப்பவர்களுக்கு என்றதால், சர்வதேச நிதி நிறுவனத்தின் கடன், நவீன ஆயுதங்கள், தலைவர்களுடன் விருந்து என்று அதன் விசுவாசம் விலைக்கு வாங்கப்பட்டது. இதில் முரண்நகை என்னவென்றால் ஜனநாயகத்தைப் பற்றி உரை நிகழ்த்தும் நாடுகள், ‘ஜனநாயக மதிப்பீடு’களைக் காப்பதாகச் சொல்லி மற்ற நாட்டின் மீது படையெடுத்த நாடுகள், பாகிஸ்தான் ராணுவ ஆட்சி தலைமையுடன் உறவாட முனைந்ததுதான். இதற்கு காரணம் அது அவர்களது நலனுக்கு வசதியாக இருந்தது என்பதுதான்.
இந்தியாவுடன் உறவை வளர்த்துக் கொண்டாலும் அரபு நாடுகள் அதைவிட வேகமாக பாகிஸ்தானை ஆதரித்தன. மத ரீதியான சகோதரத்துவம் இதற்கு காரணம். இந்திய அயலுறவுக் கொள்கையானது இந்த நுட்பங்களை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவின் ராஜதந்திர நிலைப்பாடுகள் தன் நாட்டின் நலன்கள், பாதுகாப்பு, மதிப்பீடுகள் , வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளன.
மேற்கு ஆசியா
உலகில் அரசியல் ரீதியாக மிகவும் நிலையற்ற தன்மை கொண்ட பகுதி மேற்கு ஆசியா. அங்குள்ள நாடுகள் இடையே பல மோதல்களும், தொடர் சண்டைகளும், அரசு அல்லாத சக்திகள் மோதலில் ஈடுபடுவதும் நடந்து வருகின்றன. நிலையற்ற, அடிக்கடி வெடித்துப் பீறிடும் சூழ்நிலையில் அணு ஆயுதம் வைத்திருப்பது ஆபத்தை மிகவும் அதிகரிப்பதாகவும், பொறுப்பற்றுப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை அளிப்பதாகவும் உள்ளது.
அணு ஆயுதங்கள் நீண்ட மோதல்களையும் வெகு ஜனங்கள் மீது மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே அணு ஆயுதப் பரவல் தடை சட்டம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அணு ஆயுதம் கொண்ட மேற்கு ஆசியாவால் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள மோதல்கள் வலுப் பெறும். அத்துடன் அணு ஆயுதத் தயாரிப்பு திட்டத்தில் அவையும் தீவிரமாக ஈடுபடும். மேற்கு ஆசியா சீராக இருக்க வேண்டுமானால் ஆயுதக் கட்டுப்பாடு, மோதல்களைத் தவிர்த்தல், பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை தேவை.
தேர்ந்தெடுத்த ஆவேசமும் வசை பாடுவதும்
பொதுவான புரிதல் கூட இல்லாத போதனைகள், பல நேரங்களில் அரசியல் உள்நோக்கம் கொண்டு சொல்லப்படும் ஆலோசனைகள், இவையெல்லாம் இன்று பரிணமித்து வரும் உலக விசைகளைப் பற்றிய போதிய புரிதல் இன்மையையே வெளிப்படுத்துகின்றன.
மேற்கு ஆசியாவின் நிலையற்ற தன்மைக்கு ஈரானும் காரணம் என்பதை இந்தியா அலட்சியப்படுத்த முடியாது. ஹமாஸ் 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய கொடூரத் தாக்குதலை இந்திய அயலகத் துறை அதிகாரிகள் புறந்தள்ள முடியாது. பாலஸ்தீனிய பொதுஜனக் கட்டமைப்பை ஹமாஸ் தனது கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டதை கண்டு கொள்ளாமல் அறிக்கை விடவோ நிலைப்பாட்டை மேற்கொள்ளவோ முடியாது.
தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் ஆவேசத்தை வெளிப்படுத்துவது, தார்மீகத்தின் அடிப்படையில் பேசுவதாக திரையிட்டுக் கொண்டு வெப்பமாக பேசுவதெல்லாம், தேச நலனுக்கு எதிரானதாகவே இருக்கின்றன.
பலரும் உணர்ச்சிகரமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். அவை சரியான தகவல் இன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்தியா அவற்றை தீவிரமாகக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் ராஜதந்திர ரீதியான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். இந்தியாவின் வலுவான, தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றம் தடைப்படும்.
இந்தியாவின் பக்கச் சார்பற்ற, சுதந்திரமான ராஜதந்திர நிலைப்பாடுகள் அதன் தெளிவையும் தைரியத்தையும் உறுதியையும் வெளிப்படுத்துகின்றன. தன் வளர்ச்சிப் பாதையில் நம்பிக்கையுடன் முன்னேறும் இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போதுள்ள இந்தியா, அரசியல் பொதுவெளியில் வெளியிடப்படும் அறிக்கைகளால் உந்தப்பட்டு உலக மோதல்களில் ஒரு பக்கச் சாய்வை மேற்கொள்ளாமல், தனக்கென சுயமான கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு, இரு தரப்பினருடன் உறவாடும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.
- நன்றி : தி ஹிந்து (7 ஜூலை 2025)
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$