வருவாள் செண்பகவல்லித் தாய்! (பகுதி- 2)

-கருவாபுரிச் சிறுவன்

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது... இது நிறைவுப் பகுதி...

தீர்த்தச் சிறப்பு

 பழமையும் தொன்மையும் புராணச் சிறப்பும் கொண்டது  தமிழ்நாடு. இங்கு பாயும் ஆறுகள் நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும்  ஏனைய அருளாளர்கள் காலத்தில் இருந்தே மென்மேலும் சிறப்பு பெற்று இருந்தது. அதனை அவர்களுடைய பாடல்களின் வழியே நன்கு உணரலாம்.

நம் திருநாவுக்கரசு நாயனாரும், ஹரதத்த சிவாச்சாரியாரும், எங்கள் சற்குரு கணபதி சுவாமிகளின் பரம குருநாதராகிய சங்கரநாராயணரும் இன்ன பிற அடியார்களுக்கும் அவர்களது தவ வலிமையால் கங்கை தீர்த்தச் சிறப்பினை இருந்த இடத்திலேயே நிகழ்த்தி பரம்பொருளை தரிசிக்க  வைத்தார்கள்.

இம்மண்ணில் உதித்த மகான்கள் எத்தனையோ பேர் இம்மகிமையை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதனால் தான் நம் தேசிய கவி, 

காவிரி, தென்பெண்ணை, பாலாறு
தமிழ்கண்டதோர் வையை, பொருனை நதி 
என மேவிய ஆறு பலவோடத்
திருமேனி செழித்த தமிழ்நாடு!

-என்று நதிகளுக்கு புகழாரம் சூட்டினார் போலும். 

நன்றி அறிவித்தல்

தமிழக மக்கள் தீர்த்தத்தின் மூலம்  விளைந்த முதல்  விளைச்சலை  அவரவர் குலதெய்வத்திற்கும், இஷ்ட தெய்வத்திற்கும் சமர்ப்பிப்பார்கள். இதையெல்லாம் நினைக்கும் போது தம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும் இயற்கைக்கு நன்றியுணர்வினைத் தெரிவித்து பெருவிழாவாகக் கொண்டாடியுள்ளார்கள்.  

புகழ் பெற்று விளங்கும் சங்கரன்கோவில் கோமதியம்பிகை சந்நிதியின் நுழைவாயில் இடது பக்கத்தில் செண்பகவல்லியம்மைக்கு பீடம் போன்ற சிறிய அமைப்பில்  சன்னிதி ஒன்று உள்ளது. மேலும் இங்கு ஆண்டுதோறும் நடைபெறும்  ஆடித்தபசு வைபவத்தன்று அன்னை கோமதியம்பிகை, சங்கரநாராயணர், சங்கரலிங்கசுவாமி ஆகியோர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளுவார்கள். அப்போது  அதன் மீது விளைச்சல் தானியப் பொருட்களை அப்பகுதி விவசாய பெருங்குடியினர் வீசியும், காணிக்கையாகக் கொடுத்தும் நன்றி அறிதலை வெளிப்படுத்துவார்கள். இதைக் காண்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 

மேலும் இப்பகுதி கோயில்களில்  நடக்கும் பெரிய திருவிழா கொடியேற்ற நாட்களில் விளைந்த பயிர்களை கொடிமர தர்ப்பபுல்லோடு சேர்த்து கட்டி வைப்பதையும் இன்றும் காணலாம்.

இவற்றையெல்லாம் தொன்றுதொட்டு பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வரும் விவசாயப் பெருங்குடிமக்களுக்கு செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை திடமான முறையில் சீர் செய்தால் அவர்கள் மூவேழு தலைமுறைக்கும் நன்றி அறிதலோடு இருப்பார்கள்.

பாரதத்தின் முதுகெலும்பு

நீண்ட நெடிய பெருமையையும் சிறப்பினை கொண்ட நீர் வளத்தில் ஒன்றான செண்பகவல்லி உடைப்பு  தடுப்பணை விஷயம் இன்று வியாபாரமாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டதற்கு மக்களும் ஒரு முக்கிய காரணம் என்பதற்கு மறுப்பதில்லை.

மேலும், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அனைத்துக்கட்சி தலைவர்கள் முதல் அடிப்படை தொண்டர்கள் வரை  நினைவில் கொண்டு எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.

இன்றைய மக்கள், எதிர்கால மக்களின் ஆரோக்கியமான நலனையும் கருத்தில் கொண்டு தயவு கூர்ந்து இவ்விஷயத்தில்  நல்லதொரு தீர்க்கமான செயலை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த  வேண்டும் என அம்மையப்பனாகிய  சிந்தாமணிநாதரின் திருவடிகளில்  பிரார்த்திக்கிறோம்.

அறம் சார்ந்த நீதியரசர்களின் கனிவான கவனத்திற்கு… 

செண்பகவல்லி தடுப்பணையின் உடைப்பு  என்கிற இச்செயல் மீண்டும் சீர் செய்து நடைமுறை படுத்தப்பட்டால், தென்தமிழகத்தில் இதுவும் மற்றொரு தாமிரபரணியாகும். 

தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி  ஆகிய மாவட்டங்களில் இருக்கும்  சுமார் 40,000 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு சொந்தமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.(இதனால் வழி நெடுகிலும் உள்ள  ஆற்றங்கரைகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் தானாகவே சரியாகும்)

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வானம் பார்த்த பூமியாக இருக்கும் தரிசு நிலங்களில்  வளம் கொழிக்கும்.  மக்களிடம்  அமைதி நிலவும். அவர்களது  நல்லெண்ணங்கள் வலுப்பெறும். 

ஆற்றங்கரையோரங்களில் இருக்கக்கூடிய சைவ, வைணவ ஆலயங்களில் தொன்றுதொட்டு நடைபெறும் பண்டைய வழிபாட்டு  நடைமுறை பொலிவுபெறும். 

ஒவ்வொரு தனிமனிதர்களின் எதிர்கால சிந்தனை இன்றைய நடைமுறையை விட மிகவும் உயர்ந்தாக இருக்கும். மலையில் வாழக்கூடிய எண்ணற்ற விலங்குகள், பறவைகள் யாவும் பெருக்கமுறும். அவற்றின் தாகம் தீர்க்கும் தீர்த்தத்தடாகமாக மீண்டும் மாறும். 

வாசுதேவநல்லுார் மலையில் தொடங்கி, சிவகிரி, ராயகிரி வழியாகவும், கரிவலம் வந்த நல்லுார் பால்வண்ணநாதர் திருக்கோயிலுக்கு முன்பாகவே பிரிந்து  சிறு ஆறு, ஏரி, குளம் குட்டை கண்மாய், கால்வாய் என பயணித்து இருக்கன்குடி மாரித்தாயின் காலடியில்  முன்பாக சென்று கலந்து தூத்துக்குடி- வைப்பாறு வழியே வங்கக்கடலில் சங்கமிக்கிறாள் இந்த செண்பகவல்லித் தாய். 

இவளால் மூன்று மாவட்ட மக்கள் நீர்வளத்தால் செழிப்புற்று விளங்கியுள்ளார்கள் என்பதை மீண்டும் மக்கள் பயனுற அறத்தின் வடிவமான நீதிபதிகள் மனம் வைக்க வேண்டும் என்பதை இவ்விடத்தில் விண்ணப்பமாக வைக்கிறோம்.

இதனால் கால்நடைகளான  ஆடு, மாடுகள் யாவும் தாகம் தீர்க்கப் பயன்படும்.

விவசாயிகளின் வயிறும் மனமும் குளிருவது மட்டுமல்ல… எண்ணற்ற மனிதர்களில் தொடங்கி,  புழு பூச்சிகள் வரையுள்ள கண்ணுக்கு தெரியாத எத்தனையோ உயிரினங்கள் நலம் பெறும். 

‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ என்ற வேத வாக்கியத்தை நினைவில் கொண்டு அறம் சார்ந்த நீதியரசர்கள் இந்த செண்பகவல்லி உடைப்பு தடுப்பணையை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த தாமாக முன்வுவந்து  நல்லதொரு நிரந்தரத் தீர்வினை வழங்க வேண்டும்.  

பொது நலத்தில் விருப்பமுடைய வழக்கறிஞர்கள், தன்னலமற்ற அரசியல்வாதிகள், இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக சேவகர்கள் அனைவரும் இச்செயலை நிறைவேற்ற உறுதியேற்க வேண்டும் என்கிற பணிவான விண்ணப்பத்தினை தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.  

வாழ்க பாரதம்!  வாழிய பாரத மணித்திருநாடு 

$$$

One thought on “வருவாள் செண்பகவல்லித் தாய்! (பகுதி- 2)

Leave a comment