– கருவாபுரிச் சிறுவன்
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது... இது முதல் பகுதி...

செண்பகவல்லி தாயே! எங்கள் அம்மே! இந்த பூமியிலே இரண்டு தலைமுறைக்கு மேலாக வாழும் எங்கள் முன்னோரும், நாங்களும் அழைக்கும் குரல் உனக்கு இன்னும் கேட்கலையோ! எங்களின் துயரைத் தீர்க்க உனக்கு இன்னும் மனம் இரங்கலையோ! அம்மா, நாங்கள் செய்த பாவம் தான் என்ன…
எல்லோருடைய பிறவிப்பிணியைப் போக்கும் சிவனுக்கு பிரியாமானவளே! அவரின் திருவே! ஞானவெள்ளமே! எங்களைக் கடைக்கண் பாராயோ! ஆதிபராசக்தியே! தமிழகத்திலும் கேரளத்திலும் வாழும் உன் பிள்ளைகள் இந்த விஷயத்தை லட்சியம் கொள்ளாமல் ஏறெடுத்து பார்க்காமலும் இருக்கிறார்கள். அதற்காக நீ அவர்களை ஒருபோதும் அலட்சியப்படுத்திவிடாதே தாயே! என உன்னிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். எங்களை கடைக்கண் பார் தாயி!…
அன்பர் பவத்தறிபிடுங்கி இருவினையா நிகளமதை அறுத்து வீட்டி வன்புபுரி அறுவர் பகை தவிர்த்துமல மலைதகர்த்து மாயையாய துன்ப சமுத்திர முழக்கி முத்தமிழ் மும்மதம் பொழிந்து சுகமே நல்கும் இன்புறும் சண்பக களிற்றின் இணை மலர்த்தாள் துணை என நெஞ்சில் இருந்துவோமே.
உலகத்திலுள்ள மக்கள் இருவினையாலும், அவர்களுக்குள் தெரியாமலே இருக்கும் காமம், வெகுளி, விருப்பு, வெறுப்பு, பொறாமை, மயக்கமாகிய ஆறு உட்பகையினாலும் வரக்கூடிய துன்பங்களை அறுத்து எறியக்கூடிய ஒரே தெய்வம் தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லுார், சிந்தாமணி நாதர் தலத்தில் எழுந்தருளி இருக்கும் செண்பகவிநாயகர் தான்.
இவரின் திருவடியாகிய பாதத்தை நாம் எப்போதும் நெஞ்சில் இருத்தி வைத்துக் கொண்டால் நமக்கு சுகமாகிய நன்மை உண்டாகும் என சொக்கம்பட்டி சமஸ்தான ஸ்தானதிபதி பொன்னம்பலப்பிள்ளை போற்றிப் பணிந்து நமக்கு வழிகாட்டுகிறார்கள்.
(இவரே ராமநாதபுரம் சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் உத்திர கோச மங்கை தலத்தில் இருந்த உற்ஸவ மூர்த்தியான சங்கரநாராயண சுவாமியை மீண்டும் திருநெல்வேலி ஆறை அழகப்ப முதலியாரின் வேண்டுகோளின்படி சங்கரன்கோயிலுக்கு எழுந்தருளச் செய்த பெருமைக்கு நிரந்தரச் சொந்தக்காரர்).
கொங்கு நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் அமைந்த சிவஸ்தலங்கள் பல சிறப்புகளைக் கொண்டவை. அவற்றுள், திருச்செங்கோடு, வாசுதேவநல்லுார் ஆகிய இரு தலங்களும் ‘மாதொரு பாகனார் திருத்தலம்’ என்று சைவ அன்பர்களால் போற்றி வழிபடக் கூடிய பெருமையினைக் கொண்டவை. இத்தலத்தில் மூலஸ்தானத்தில் எங்கும் காண முடியாத ஒரே வடிவத்தில் பரம்பொருளாகிய அம்மையப்பனைத் தரிசித்து மகிழலாம் என்பதே இதன் தனிச்சிறப்பு. சிவசிவ ஹரஹர.
தமிழ் கூறும் கூடுதல் சான்றுகள்
சிவபெருமானை சிந்தையில் இருத்தியவர்கள் சித்தர்கள். அவர்களில் முதன்மையானவர்கள் பதினெண்மர் என்பர். அவர்களுள், கோரக்கர் என்ற சித்தர் ஸ்ரீவில்லிபுத்துார் அருகேயுள்ள சதுரகிரி மலையில் ஜீவசமாதி எய்தியதாக வரலாறு கூறும். அப்பெருமான் அருளிச் செய்த தமிழ் நுால் ஒன்றில் இப்பகுதியில் உள்ள மலை, மலையில் விளையும் மூலிகைச் செடி, கொடிகளைப் பற்றி குறிப்பிடுகிறார். அதில் சிவகிரி, வாசுதேவநல்லுார் பகுதியில் உள்ள அதாவது செண்பகவல்லி தடுப்பணை அமைந்த மலைப்பகுதியையும் பற்றி குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியாயின் அம்மலை யாருக்கு சொந்தமானது என்பதை வாசகர்களாகிய தங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.
இ.மு. சுப்பிரமணியா பிள்ளை என்பவர் சங்கரன்கோவிலின் அன்றைய போர்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி செய்தவர். சென்னை தமிழ் மாகாணச் சங்கம் என்ற அமைப்பை நிறுவி பல்வேறு பணிகள் இன்றும் நிலைபெறக் காரணமாக இருந்த பெரியார் இவர். இப்பகுதியில் வாழ்ந்த முதுபெரும் தமிழறிஞர்களில் இவரும் ஒருவர்.
அன்னாரின் பெற்றோரும் தேசியகவி பாரதியாரின் பெற்றோரும் ஆத்ம நண்பர்களாக விளங்கியவர்கள். விருதை சிவஞானயோகிகளிடம் சித்த வைத்தியத்தைக் கற்றுக் கொண்டவர். முன்னாள் முதல்வர் காமராஜரின் நெருங்கிய நண்பர். ஆன்மிக ஆலோசகர். சோதிட வல்லுனர். தேவேந்திர குல அன்பர் ஒருவருக்கு ஜோதிடம் கற்றுக் கொடுத்து புரட்சி செய்த பெருந்தகையார். பிறர் நலம் போற்றிய பேராளர்.
இப்பெரியார் சென்ற இடங்களிலும், வசித்த இடங்களிலும் உள்ள தெய்வீக உண்மைச் சிறப்புகளை எல்லாம் ஒன்றாகத் திரட்டி பல்வேறு இதழ்களில் கட்டுரையாக எழுதியவர். தமிழகத் திருத்தல வரலாறுகளை நூல்வடிவாக அன்றே உருவாக்கம் பெறச்செய்த உத்தமர்.
சொக்கம்பட்டி பொன்னம்பலப்பிள்ளை இயற்றிய செய்யுள் வடிவிலான வாசுதேவ நல்லுார் தல புராண மூல நுால் மக்களை சென்றடைவதிலும் படிப்பதற்கும் சிரமமாக உள்ளது என்பதை எண்ணி, அதை புதிய முறையில் உரை நடையாக ஆக்கி தந்த பெருந்தன்மையாளர்.
அவர் எழுதிய வாசுதேவநல்லுார் வரலாற்று நூலில் உள்ள வரிகள் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய அரணாக இருந்து உதவும் என நினைக்கிறோம். அதை அப்படியே இங்கே பதிவிடுகிறோம்.
மலை, குன்று, ஆறு, குளம் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலே இவ்வூர் இருக்கிறது. இவ்வூரின் தென்மேற்கில் இம்மலை கோட்டை மலை எனப்படுகிறது. அதற்கு மேலே குளிராட்டி என்றும், அதன் வட பகுதி கோவில்மலை, பளிச்சி மலை எனவும், அதன் மேலே கள்ளி மலை என்றும் இம்மலை பகுதிகள் பெயர் பெறுவன. கோட்டை மலை ஆற்றின் தென்கிளை தான் சிந்தாமணி ஊர்க் குளங்களுக்குப் போவது. அதன் வட கிளை இவ்வூரின் மேற்கேயுள்ள பெரிய குளத்தை நிரப்புகிறது. பெரிய குளத்துத் தண்ணீர் பல குளங்களை நிரப்பிப் போற்றுகிறது. இங்கே மரங்கள் அடர்ந்த காடுகளும் இருக்கின்றன. கள்ளிமலையில் பாலையாறு என்பது தோன்றுகின்றது. இது தலையணை என்பதனால் தடுக்கப்பட்டு இவ்வூர் குலசேகரப்பேரி என்ற மிகப்பெரிய குளத்தையும் சிவகிரியைச் சேர்ந்த இராசசிங்கப்பேரியாகிய நீர்வாடக்குளத்தையும் நிரப்பி வழிந்தோடி மேலும் பல குளங்களை நிரப்பி வாழ்விக்கிறது. வைப்பாறு (நிட்சேபநதி) என்றும் கருப்பையாறு எனவும் பெயர் பெறும் பேராறு இங்கேதான் தோன்றுகிறது. கோவிலை அடுத்து வடகிழக்கில் கும்பக்குளம் இருக்கிறது. பெரியகுளம், குலசேகரப்பேரி இளங்குளம், சிந்தாமணிப்பேரி, நாராயணப்பேரி, அம்மைச்சியார் குளம், கூனிக்கரைக்கால் முதலிய பெரிய பெரிய குளங்களாலும் கால்வாய்களாலும் சூழப்பெற்றது இவ்வூர்.
-சிவகிரி வாசுதேவநல்லுார் பகுதி தற்போது இருந்ததை விட நீர்வளமும் நிலவளமும் நிறைந்த பகுதியாக சிறந்து விளங்கியது என்பதை இ.மு. சுப்பிரமணியாபிள்ளை அவர்களின் வரிகள் வழியே அறிந்து உணரலாம்.
மக்கள் சிந்தனைக்கு…
என்றும் நிலையான தர்மம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்களால் கட்டப்பட்ட செண்பகவல்லி தடுப்பணையின் நோக்கமும் குறிக்கோளும் சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை.
செண்பகவல்லி தடுப்பணை முழுக்க இரு மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது என்று சொல்லக்கூடிய தமிழகமும், கேரளாவும் சகோதரத்துவம் நிறைந்த தனித்துவம் கொண்டது என்பதை ஆட்சியாளர்களும் அரசவைக் கவிஞர்களும், ஆஸ்தான இலக்கியவாதிகளும் மறந்துவிட்டார்கள் போலும்.
மேலும், தமிழகத்திற்குச் சொந்தமானது என இலக்கிய சான்றுகள் பல உள்ளன. இச்செய்திகளையெல்லாம் பக்கத்து மாநிலமான கேரளா அரசிற்கு தான் எடுத்துச் சொல்வதற்கு இங்கு ஆள் இல்லை.
தமிழகத்தில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது செண்பகவல்லி தடுப்பணையைப் பற்றிய குறிப்புகளை இரு மாநில நிர்வாகமும் கருத்தில் கொள்ளாமல் இருந்தது ஏனோ என்று இன்றுவரை விளங்கவில்லை.
அன்றுமுதல் தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சிக்காரர்கள் கேரளா ஆட்சியாளர்களுடன் நட்பாகவும், இணக்கமாகவும் இருந்திருக்கலாம். அது இன்றுவரை அரசியல், ஆட்சி, அதிகாரத்திற்காகத் தொடரலாம். அதனால் இவ்விஷயத்தை நீர்த்துப் போகச்செய்யும் வகையிலான நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்களோ என பொதுமக்களின் மனதில் சந்தேகம் எழத் தொடங்கிவிட்டன.
கேரளா அரசு இன்னின்ன காரணத்திற்காக முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை தமிழக அரசு இது வரை மேற்கொண்ட பேச்சு வார்த்தை நடத்திய விஷயத்தின் சாரம்சத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழக அரசின் அறிக்கை: பொதுப்பணித் துறையில் ஒன்றான நீர்வளத்துறை மூலம் செண்பகவல்லி அணையை சீரமைத்தல் தொடர்பான தமிழக அரசின் அறிக்கை: கேரள மாநில எல்லையில் பெரியாறு வடிநிலத்தில் புளியம்பட்டிதோடு மற்றும் சொக்கம்பட்டிதோடு ஆகிய இரு ஓடைகள் கூடுமிடத்தில் தமிழ்நாடு நோக்கி தண்ணீரரை திருப்பி விட ஏதுவாக தமிழ்நாட்டின் மேற்கு எல்லைக்கு அருகில் செண்பகவல்லி அணை கட்டப்பட்டது. இந்த அணை சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள முக்கியமான இரு ஏரிகளான குலசேகரப்பேரி, இராச சிங்கப் பேரி ஆகிய ஏரிகளுக்கு சுமார் 4400 அடி (1341 மீட்டர்) நீளமுள்ள கன்யாமதகு கால்வாய் வழியாக நீர் திருப்பி விடப்படுகிறது. இதனால் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சுமார் 10, 924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தமிழ்நாடு அரசு செண்பகவல்லி அணைக்கட்டை சீரமைப்பதற்கு கேரள அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையை மேற்கொண்டு வருகிறது. செண்பகவல்லி அணை மற்றும் கன்யாமதகு கால்வாயைச் சீரமைக்கும் பணியினை விரைவில் மேற்கொள்ள வேண்டி மூன்று ரிட் மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாடு அரசு இவ்வழக்குகளுக்கான பதிலினை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்களுக்கு இடையே திருவனந்தபுரத்தில் 25.09.2019 அன்று இருமாநில நதிநீர் பிரச்னைகள் குறித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போதும், மற்றும் 17.09.2021 அன்று தமிழ்நாடு அரசு மற்றும் கேரள அரசுகளுக்கிடையே காணொளி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்திலும், செண்பகவல்லி அணைக்கட்டு விவகாரம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இருந்தது. எனினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் காக்கவும் தீர்வு காணவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
(இதனை மீண்டும் மீண்டும் படித்தால் ஒரு வேடிக்கையான விஷயம் விளங்கும். மேலும் காலந்தோறும் பேச்சு வார்த்தை நடத்திவருவது தான் ஆட்சியாளர்களின் ஆக்கப்பூர்வமான சாதனை. ஆக்கபூர்வமற்ற செலவுகளுக்கு கோடிக்கணக்கான நிதிகளை ஒதுக்கும் அரசுக்கு செண்பகவல்லி உடைப்பு தடுப்பணையைச் சீர் செய்ய நிதியும் இல்லை, அவர்களின் மனதில் நீதியும் இல்லை என்பது தான் மக்கள் இங்கு நினைவில் கொள்ள வேண்டிய உண்மையாகும்).
பாரதப் பிரதமரிடம் முறையீடு எதற்கு?
ஜல்ஜீவன்விசத் , ஜல்சக்தி அபியான், நமாமி கங்கே, வேளாண்நீர் பாசனத்திட்டம் போன்றவற்றை வெற்றிகரமாக இத்தேசத்தில் செயல்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியாண்டில் 2025 பிப்ரவரி 18 – 19 நாட்களில் ராஜஸ்தான், உதய்பூரில் அகில இந்திய நதிநீர் இணைப்பு இரண்டாவது மாநாடு நடைபெற்றது.
இந்த வேளையில், தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லுார் மலைப்பகுதியில் அமைந்துள்ள செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சீர் செய்ய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று விண்ணப்பமும் வேண்டுகோளும் வைக்க வேண்டும் என்பது பொருத்தமானதே.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் வழியாக ஆறுகள் ஓடும் போது அவற்றிற்கான தண்ணீர் பகிர்ந்து கொள்வது தொடர்பான பிரச்னை இயல்பாகவே உருவாகும். இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை உண்டாகிறது.
- ஆற்று நீர்ப் பகிர்வுக்கு தீர்வு குறித்த பிரச்னை
- இரு மாநிலங்களுக்கு இடையே வரும் தண்ணீரை நிர்வகித்தல்
இவ்விரண்டிலும் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும் என்ற கேள்வி எழும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இவை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
காடுகள், ஏரிகள், ஆறுகள், வன விலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதும், மேம்படுத்த வேண்டியதும் நமது அடிப்படைக் கடமையாகும் என அரசியல் அமைப்பு சட்டம் தெரிவிக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஒரு மாநிலத்தின் நீர்வளங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற அம்மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.
தண்ணீர் தொடர்பான அரசியல் அமைப்பு சட்டத்தின் மாநிலப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 17 வது இனத்தின் படி, அதேசமயம் மாநிலங்களுக்கு இடையே பெரிதும் பாதிக்காதவாறு பயன்படுத்தலாம். ஆனால் பாயும் நதிகளை முறைப்படுத்தவும், மேம்படுத்தவும் தேவையான சட்டங்களை இயற்றும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது.
தண்ணீர் என்பது மாநிலப்பட்டியலில் உள்ளது போலவே மத்திய பட்டியலிலும் உள்ளது. எனினும் அனைத்து விஷயங்களிலும் நாடாளுமன்றம் எடுக்கும் முடிவு தான் இறுதியானதாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு தான் இரு மாநிலங்களிடையேயான பிரச்னை குறித்த பல்வேறு பிரிவுகள் நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
தண்ணீர் தொடர்பான சிறப்பு அம்சங்கள் அனைத்தும் மாநிலப் பட்டியலில் உள்ள 17 ஆவது இனம், மத்தியபட்டியலில் உள்ள 56 வது இனம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி 262 வது பிரிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
ஏழாவது அட்டவணை, இரண்டாவது பட்டியல் ( மாநிலம்) 17 வது இனம்:
தண்ணீர் என்பது மாநிலம் சார்ந்த பொருள். இருப்பினும் அது மத்திய பட்டியலிலுள்ள 56 வது இனத்தின் அம்சத்தின் அடிப்படையில் உடன் பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
முதலாவது பட்டியல் (மத்திய அரசு) 56 வது இனம்:
மாநிலங்களுக்கு இடையே ஆன ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளை முறைப்படுத்தி மேம்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த அளவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறதோ அந்த அளவிற்கு பொதுநலன் கருதி அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்த முடியும்.
பிரிவு 248 ( சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம்):
பொதுப்பட்டியல் மற்றும் மாநிலப் பட்டியலில் இடம் பெறாத எந்த ஒரு விஷயம் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் இந்தப்பிரிவின் படி நாடாளுமன்றத்திற்கு மட்டும் உண்டு.
பிரிவு 254:
பிரிவு 254 நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களுக்கும் , மாநில சட்டப் பேரவைகள் நிறைவேற்றும் சட்டங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் இருந்தால் , மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உள்ள அம்சம் தான், அது சட்டப்பேரவை சட்டத்திற்கு முன்பாகவோ பின்பாகவோ நிறைவேற்றப்பட்டிருந்தாலும் செல்லுபடியாகும்.
1. பிரிவு 262 மாநிலங்களிடையே பாயும் ஆறுகள் அல்லது ஆற்றுப் பள்ளதாக்குகளின் தண்ணீரை பயன்படுத்துவது , பகிர்ந்து கொள்வது , ஆதிக்கம் செலுத்துவது ஆகியவை தொடர்பாக எந்த சிக்கல் எழுந்தாலும் அதற்கான தீர்வை புதிய சட்டம் இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றம் தான் வழங்க வேண்டும்.
2. அரசியல் அமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் முதலாவது பிரிவில் கூறப்பட்டுள்ள ஆற்றுநீர்ப் பிரச்னைகள் அல்லது புகார்கள் மீது உச்ச நீதிமன்றமோ அல்லது வேறு ஏதேனும் நீதி மன்றங்களோ தலையீட முடியாத அளவுக்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்.
மேற்கண்ட சட்ட திட்டங்களை நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கிறோம். அவற்றைப் பயன்படுத்தி இங்குள்ள நதிகளை இணையுங்கள், புதிய நீர்தேக்கங்களை உருவாக்குங்கள் என வலியுறுத்தவில்லை. நமது அத்தியாவசியத் தேவைக்கு நம் முன்னோர் உருவாக்கிய நீர்நிலை தடுப்பணையை திடப்படுத்திக் கொடுங்கள். அல்லது மக்களாகவே செண்பகவல்லி உடைப்பு தடுப்பணையை சீர் செய்து, திடப்படுத்திக் கொள்ள அதிகாரப்பூர்வமான அனுமதியை கொடுங்கள் என்றுதான் 60 ஆண்டிற்கு மேலாக குரல் எழுப்பிக் கொண்டு இருக்கிறோம் என்பதை எண்ணத்திலும் எழுத்திலும் செயலிலும் கொள்க.
(தொடர்கிறது)
$$$