-வ.மு.முரளி

வ.வே.சு.ஐயர் எனப்படும் வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் இந்திய விடுதலை வரலாற்றில் நிகழ்த்திய சாகசங்கள் பலரும் அறியாதவை. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தலைநகரான லண்டனில் இருந்துகொண்டே, இந்தியாவில் நடந்த ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தவர் அவர். புரட்சியாளர்கள் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம் காமா, வீர சாவர்க்கர், டி.எஸ்.எஸ்.ராஜன், எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோருடன் லண்டனில் இந்தியா ஹவுஸில் தங்கி விடுதலைப் போரில் ஈடுபட்டவர் ஐயர்.
ஆங்கிலேய அதிகாரி கர்சான் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை இந்திய இளைஞன் மதன்லால் திங்ரா சுட்டுக் கொன்றான். அதன் விளைவாக இந்தியா ஹவுஸில் இருந்தபடி நடத்திய விடுதலைப்போர் முடிவுக்கு வந்தது. சாவர்க்கர் கைதைத் தொடர்ந்து பாரிஸ் தப்பிச் சென்ற வ.வே.சு. ஐயரின் சாகசங்கள் சிலிர்ப்பூட்டுபவை. பிறகு மாறுவேடத்தில் பிரிட்டிஷ் இந்தியா வந்த அவர், போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவி பிரெஞ்ச் ஆட்சிப் பகுதியான பாண்டிச்சேரிக்குத் தப்பினார்.
அங்கிருந்தபடி, அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோருடன் தொடர்பு கொண்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்ட அவர், 1920இல் ஆங்கிலேய அரசு அளித்த பொதுமன்னிப்பை அடுத்து சொந்த ஊர் திரும்பினார். அதன்பிறகு அவரது கவனம் இலக்கியப் பணியிலும் கல்விப் பணியிலும் திசை திரும்பியது. ஆரம்பத்தில் திலகரின் அணியில் இருந்த அவர் இறுதிக்காலத்தில் மகாத்மா காந்தியின் அஹிம்சைக் கொள்கையுடன் இணங்கி காங்கிரஸ் கட்சி அரசியலில் ஈடுபட்டார்.
ஐயரின் தேசிய சிந்தனை, சமயப் பற்று, பன்மொழிப்புலமை, ஜாதி பேதமற்ற கொள்கை, சீர்திருத்தக் கருத்துகள் ஆகியவை நம்மை வியக்கச் செய்பவை. அவரது தமிழ், ஆங்கில இலக்கியப் பணிகள் தமிழ்மொழிக்கு வளம் கூட்டுபவை. அவரது அகால மரணத்தால் தமிழக அரசியல் களம் தீவிர தேசியவாதியை இழந்தது.
தான் வாழ்ந்த 44 ஆண்டுக் காலத்தில், புரட்சியாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல்வாதி, கல்வியாளர் எனப் பல அவதாரங்களை எடுத்த இந்த மாமனிதரின் வீர வாழ்க்கையை நூலாசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன் மிகவும் சுவாரசியமாகவும் எளிய நடையிலும் எழுதி இருக்கிறார். பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டிய அற்புதமான வாழ்க்கை வரலாற்று நூல் இது.
***
வ.வே.சு.ஐயர்
-அனந்தசாய்ராம் ரங்கராஜன்
168 பக்கங்கள், விலை: ரூ. 200-
வெளியீடு:
சுவாசம் பதிப்பகம்,
சென்னை.
போன்: 81480 66645
$$$