-பத்மன்
சென்னையில் 15.06.2025 அன்று நடைபெற்ற ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமத்தில்’, வெற்றிச் சிந்தூரம் என்ற தலைப்பிலான கவியரங்கில், புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் கவிஞர் புதுகை ச.பாரதி பாடிய கவிதை இது…

.
ஆறு கொண்ட பகல்காம் குருதியில் நனைந்தது;
வீறுகொண்ட வீரர்களின்உறுதியால் வெற்றி மலர்ந்தது!
அரபிக்கடல் ஆழம் அளந்தது இந்திய ராணுவம்;
அடியோடு அழிந்தது அறிவிலிகளின் ஆணவம்!
பாரதப் பெண்களுக்கு பகலில் நடந்தது கொடூரம்;
பாதகம் செய்தவர்களை இரவில் அழித்தது சிந்தூரம்!
பெண்ணியம் மதிக்காதவர்களையும்
கண்ணியம் குறையாமல் விரட்டியது நமது ராணுவம்!
தரம் தாழ்ந்த தந்திரத்தினால் தாக்கினர் பயந்து…
அறம் சார்ந்த திறத்தினால் விரட்டினோம் விரைந்து!
கரம் அறுந்த நேரத்திலும் அச்சமென்பதெதற்கு?
சிரம் கவிழ்ந்து வாழ்வது துச்சம்தானே நமக்கு!
தடைகள் எங்கிருந்து எத்திசையில் வந்தாலும் நம்
படைகள் இங்கிருந்து வெற்றித்திசையில் செல்லும்!
வல்லபபாய் படேல் எனும் இரும்பு மனிதர்
நல்லதாய் இணைத்த தேசம் இது.
கொல்லைப்புறம் வந்து தாக்கினர் பேடிகள்…
எல்லைப்புற சாமிகள் காத்ததனால் ஓடினர்!
இருண்ட மனம் உள்ள துரோகிகள் இருப்பினும்
திரண்ட வீரம் கொண்ட வீரர்கள் சிறப்பதால்,
துவண்ட மனதிற்கு மாமருந்தாய் விரைவில்
அகண்ட பாரதம் மலரும் நாளில் இனிதே சந்திப்போம்!
$$$