-லக்ஷ்மி மணிவண்ணன்
தமிழ்க் கவிதையுலகின் கவிச்சித்தர் கவிஞர் விக்கிரமாதித்யன். அவரைப் பற்றிய அற்புதமான எழுத்துச் சித்திரத்தை அளித்திருக்கிறார் கவிஞர் திரு. லக்ஷ்மி மணிவண்ணன்....

தமிழ்க் கவிதையில் பாரதி இனி எப்படி சாத்தியமில்லையோ, அது போலவே விக்ரமாதித்யனும்.
நிகழ்ந்த அற்புதங்கள்.
மறுபடி மீண்டும் சாத்தியங்கள் அற்றவை.
குற்றாலம் கவிதைப் பட்டறையில் திருமேனியும், முத்து மகரந்தனும் ஆளுக்கொரு பக்கமாக கைத்தாங்கலாக விக்ரமாதித்யனை தூக்கிக் கொண்டு வந்த காட்சி இப்போதும் என்மேல் நிலவுகிறது. தள்ளாடிய மகாராஜன் பல்லக்கில் வருவது போல அக்காட்சி. திருமேனியும் சரி, முத்து மகரந்தனும் சரி அப்போது இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டிய கவிஞர்கள். திருமேனியின் கவிதைகளை கைப்பிரதியாக ஒரு முறை சுந்தர ராமசாமி படிக்கக் கொடுத்து படித்திருந்தேன். நிகழ்ச்சி நடைபெறும் திவான் பங்களா வாசலில் இருந்து தொடங்கிய இந்த பல்லக்கு பவனி; திவான் பங்களாவின் உள்ளறைக்கு வர சாமி இறக்கி வைக்கப்பட்டார். படையலுக்கு தினுசான பலவகை ரசாயனங்கள். உண்டியை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் அவையும் வேடிக்கைக்காக வந்து உட்கார்ந்திருந்தன.
திரவ ஆகாரத்தின் மீது மட்டும் நம்பிக்கை கொண்ட கூட்டமே அப்போது அவரை வட்டமடித்துக் கிறங்குவது. அது வெறுமனே திரவத்திற்காக மட்டுமே என்று சொல்வதற்கில்லை. விக்ரமாதித்யனோடு சேர்ந்து அருந்தும் கள்ளிற்கும், சாராயத்திற்கும் தனிச்சுவை. திரவத்தின் மீது ஒருவித ஜலமயக்கத்தை அப்போது அண்ணாச்சி ஏற்படுத்தத் தொடங்கியிருந்த காலம். ஜலமற்றது எதுவுமே கவிதையாகாது என்னும் திடக்கொள்கை ஸ்தாபிக்கப்பட்டு கொடி பறந்து கொண்டிருந்தது. நான் குறிப்பிடுவது தொண்ணூறுகளின் தொடக்ககாலம். சாமி பல்லக்கில் இருந்து இறக்கி வைக்கப்பட்டதும் “இன்று கவிதையாக வந்து கொட்டுகிறது” என்று கூற கொட்டிய கவிதைகளெல்லாம் எழுதி எடுக்கப்பட்டன.
விக்ரமாதியனிடம் ஒரு சகாயம் உண்டு. அடிப்பொடியில் இருந்து யார் வேண்டுமானாலும் நிகராக நின்று மல்லுக்கட்ட முடியும். மல்லுக்கட்டி கட்டி இலக்கியம் கற்க முடியும். பிற படைப்பாளிகளிடம் எப்போதும் இந்த சகாயம் கிட்டும் என்று சொல்வதற்கில்லை. ஆரம்பநிலை சந்தேகங்கள் தொடக்கி, ஆழங்கள் வரை செல்லும் மல்யுத்தம் அது. ஜலமயக்கதிற்கு ஒதுங்கிக் கொள்பவர்களுக்கு இந்த வாய்ப்பில்லை. ஜலமின்றி இந்த எந்திரம் ஓடாது. ஓடியதில்லை. ஜலம் தீருமிடத்தில் இலக்கியம் நிற்கும்.
குடிக்காத விக்ரமாதித்யனைக் காண இன்று வரையில் எனக்குப் பிடிப்பதில்லை. விக்ரமாதித்யன் எப்போது தனித்து வருகிறவர் இல்லை. அவரோடு இணைந்து பழைய கவிராயர்கள் எல்லாம் கூடவே வருகிறார்கள். அவர் குடிக்காத வேளைகளில் அவர்கள் இவருடன் கூட்டு வைத்துக் கொள்வதில்லை. “டேய் முட்டாள்” என அவர் ஒருவராக நின்று கூறினால் அதற்கு மதிப்பு வராது. திடுக்கிடாது. அவருக்கும் கூறும் தைரியம் கிடையாது. அவர் குடித்திருக்கும் வேளையில் மொத்த கவிராயர்களும் ஒட்டுமொத்த குரலில் நின்று திட்டுகிறார்கள் என்பதுதான் பிரச்சனையே!
தனியாக வருகிற போதும் அவர் தனியாள் இல்லை. அவர் ஒரு மாயக்கூட்டத்தையும் அழைத்துக் கொண்டு வருவது போலவே தோன்ற இதுவே காரணம். ஒரு ஊர்வலம் வருவது போல வரக்கூடியவர். தூரத்திலிருந்து வரும்போதே தெரியும் அண்ணாச்சி வருகிறார் என்பது. விக்ரமாதித்யன் வருகிறார் என்றாலே அது ஒரு ஊர்வலம் வருகிற திக்கைக் குறிப்பது. குடிக்காத விக்ரமாதித்யனின் தனிமை காணக் கூடாதது. கண்டால் அடித்து விடும். பிசாசின் கை ஓங்கி அடித்தது போல வலியெடுக்கும். அது பல நூற்றாண்டு காலசாமிகள் ஏற்கிற தனிமை. காணக் கூடாதது. அவரும் அந்த தனிமையின் அகோரத்தை மறைக்கத்தான் பொதுவில் குடித்துக் கொண்டே இருக்கிறார். பல சாமிகள் பண்டிகைகளில் தங்களைக் காட்டி பின் மறைந்து விடுதலைப் போல. குடியற்ற விக்ரமாதித்யன்தான் விக்ரமாதித்யனின் சவம்.
ஆரம்பகாலங்களில் அண்ணாச்சி குடிக்கிறார் என்பது கருதி ஒதுங்கிக் கொள்கிறவர்கள் பலர் இருந்தார்கள். இப்போது பலர் டாஸ்மாக்கிலேயே அடையாளம் கண்டு நலம் விசாரிப்பது பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. முன்பு ஒதுங்கியவர்களுக்கு குடித்து விட்டு அவர் உளறுவதாக கற்பனை இருந்தது. அது உண்மையில்லை. குடித்து விட்டு அவர் பேசுவதுதான் பேச்சே. குடிக்காமல் பேசுவதெல்லாம் நப்பாசை. திரும்பத் திரும்ப சில விஷயங்களை ஒரே அலைவரிசையில் பேசுவார். சில வேளைகளில் அது அலுப்பூட்டும். ஆனால் உங்கள் அகத்தின் பூட்டுகள் அத்தனையையும் அவர் உடைத்து நொறுக்கிவிடுபவர். ஸ்திரமாக மனதில் நாம் ஏற்றி வைத்திருக்கும் தீர்மானங்களை அழிக்க வல்லவர் அவர். அகம் உடையும் சத்தத்திற்கு அஞ்சுபவர்களே அவரது போதையைக் காரணம் காட்டினார்கள் என்பதே நிஜம். அவரது போதையின் முன்பாக எந்த கம்பீரத்திற்கும் கதி கிடையாது, கலையையும் இலக்கியத்தையும் தவிர. ஒரே ஒரு கவிதையை மட்டும் தீர்க்கமாக எழுதிவிட்ட இளைஞனோடு அவர் உரிமையோடிருப்பார்.
எனக்கு விக்ரமாதித்யனைக் காண்பது என்பது முதலில் ஆனந்தம். பாதிக்குப் பின்னர் நரகம். அவரைப் பார்க்கப் போகிறோம் என்பது மிகுந்த உற்சாகத்தைத் தருவது எப்போதும். பின்பு மெல்ல மெல்ல உற்சாகம் கழன்று இனி இவரைப் பார்க்கவே கூடாது எனத் தோன்ற வைப்பது. ஆனால் மீண்டும் பார்க்கக் கிளர்த்துவது.
எனது வயதை ஒத்தவர்களில் அவரைக் காணாமல் மல்லுக்கட்டாமல் வாழ்ந்தவர்கள் ஏதோ ஒருவகையில் ஏதோ ஒன்றை இழந்தவர்கள் என்னும் எண்ணம்தான் எனக்கு. சமகாலத்தின் சாறை அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தவற விட்டவர்களே. கவிதையிலும், இலக்கியத்திலும் சிந்தனை திரண்டு உருவமாகி உடலாகுதல் என்பதைக் காண வாய்க்காதவர்கள். நீங்கள் இறுக்கத்தில் கொண்டிருக்கிற இறுகிய அதிகாரம் அத்தனையும் கழன்று விழுகிற இடத்திற்குச் செல்லுதல் அது. பாக்கியமற்றவர்கள் அந்த இடத்திற்கு செல்லுதல் கடினம்.
பல படைப்பாளிகளைப் படைப்புகளை மட்டும் படிப்பதோடு நின்றுகொள்ள முடியும் என்பது போல தோன்றும்.அப்படி பலர் இருக்கிறார்கள். அப்படி இல்லாதவர்களில் ஒருவர் விக்ரமாதித்யன். பார்க்காமல் தீராத கணக்கு. பார்க்காமல் புரிபடாது. சில விஷயங்கள் அகத்தின் முன்பாக தெளிந்த பின்னர்தான் பார்க்கவே முடியும். தனது சுயத்தின் அகத்தை உடையாமல் தூக்கிச் சுமக்க நினைப்பவனுக்கு இது வாய்க்காது. அவரை சந்திக்கும் இடம் என்கிற ஒன்று முதலில் அகத்தில் கூடி வரவேண்டும். இல்லாமல் சந்திப்பு சாத்தியமில்லை. அப்படி கூடாத சந்திப்பிலும் பலனில்லை. அவர் ஒரு இழிவு எனக் கருதுபவர்களுக்கு பாக்கியம் கெட்டுவிடும். அவர் கொண்டு நடக்கும் காமம் என்பது உலகியலின் பாற்பட்டது என்று தோன்றினாலும் அது அதன் பாற்பட்டதல்ல. கவிதை கொண்டிருக்கும் உலகியலின் பாற்பட்டது. அதனால்தான் அவரோடு அருந்தும் சாராயமும் தனிக் குணம் கொள்கிறது. டாஸ்மாக்கிலோ, உயரிய மதுவிடுதிகளிலோ அவருடன் அருந்துகிற மதுவை விலைபேசி எவரும் வாங்கக் முடியாது. கிடைக்காது.அப்படி ஒரு சாராயம் அது. விஷம் ஊற்றி நிரம்பிய சாராயம். அகம் உடைந்தவனுக்கு அமுது.
ஆரம்ப காலங்களிலிருந்தே இப்போது வரையில் அவருடன் தொடர்பு பெற்று வருகிறேன். தொண்ணுறுகளில் நடந்த குற்றாலம் கவிதைப் பட்டறையில் மேற்கத்திய தர்க்க முறைகளை ஆதிக்கம் செலுத்திய போது “கண்ணதாசனைப் பற்றி என்னப்பா சொல்றிங்க ? முதலில் அதைச் சொல்லுங்கள், பிறகு மற்றதை பேசிக் கொள்ளலாம் என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது மேற்கத்திய தர்க்க முறைகளை எதிர்த்துப் பேசுவதே கடினம். ஏராளமான கருவிகள் கொண்டு கொட்டப்பட்டு பீதி ஏற்பட்டிருந்த காலம். இந்தக் கேள்வியின் முன்பாக அவை திகைத்ததைப் பார்த்தோம். கண்ணதாசனை தமிழ் நவீனத்துவதுடன் தொடர்பு கொண்டவர் என்றும் சொல்ல முடியாது. ஆனால் எவரும் அவரை தமிழில் நிராகரிக்கவும் முடியாது. தொடர்பும் கிடையாது, விடவும் முடியாது எனத் தோன்றும் ஒரிருவரில் கண்ணதாசனும் ஒருவர். அப்போது கண்ணதாசனைப் பற்றி பேசினாலே சூழலில் தவறாகப் பார்ப்பார்கள். இந்தக் கேள்வி அந்த உறைந்த நிலையில் கேட்கப்பட்ட கேள்வி. எளிமையின் முன்நின்று கேட்கப்படும் கேள்விகளை எதிர் கொள்ள முடியாதவர்களே விக்ரமாதித்யன் உளறுவதாகச் சொன்னார்கள்.
அண்ணாச்சி போதையில் பேசிய பல விஷயங்கள் முக்கியமானவை. ஒரு கவிதை விமர்சனத்தின் போது ஒருவர் சம்பந்தப்பட்ட கவிதையில் நுட்பமிருக்கிறது என வாதிட “சினிமா போஸ்டர்லயுந்தாண்டா நுட்பமிருக்கு? அப்ப சினிமா போஸ்டரும் கவிதை என்பீர்களா?” என முற்றிய போதையில் கேட்டதை சமீபத்தில் குறிப்பிட்டு, ‘போதையில் ஒருபோதும் அண்ணாச்சி உளறியதில்லை’ என்று அண்ணாச்சி பற்றிய அவதானிப்பை ஜெயமோகன் பகிர்ந்து கொள்ளக் கேட்ட போது; அண்ணாச்சியின் பல வாக்கியங்களை மீண்டும் அசைபோட்டு பார்க்க இயல்பவர்களுக்கு இது புரிந்துவிடும் என்று தோன்றியது. ஒரு கூட்டத்தில் சுந்தர ராமசாமியை நோக்கி “Why are you more obsession in your poems rama sami ? ” எனக் கேட்டார். சுரா “ எனக்கு ஆங்கிலம் தெரியாது, தமிழில் கேளுங்கள்” எனக் கூற, “எனக்கும்தான் ஆங்கிலம் தெரியாது, நான் கேட்கவில்லையா?” எனத் திருப்பிக் கேட்டார் விக்ரமாதித்யன். இது பகடிதான்- ஆனால் வெறும் பகடி மட்டுமில்லை.
அமைப்பியல் கிறக்கங்கள் படைப்பாளி இறந்தது விட்டான் என்கிற சங்கை தமிழ்க் கவியின் காதில் கல்வியாளர்களின் துணையுடன் வந்து கிசுகிசுத்த போது; “விக்ரமாதித்யனைத்தான் அடக்கம் செய்ய முடியும், விக்ரமாதித்யனின் கவிதைகளை அடக்கம் செய்ய முடியாது” என்று பதிலுரைத்ததையும் ஜெயமோகன் நினைவுபடுத்தினார்.
பழைய இந்திய மற்றும் வங்காள இலக்கியங்களைக் கற்க எப்போதும் அவர் ஒரு இலக்கிய மாணவனுக்கு வழிகாட்டியாகத் திகழ முடியும். லட்சிய ஹிந்து ஹோட்டல், நீலகண்ட பறவையைத் தேடி போன்ற நாவல்கள் நான் அவ்வாறு அவர் கூறிப் பயின்றவை. இன்றுவரையில் புதிதாக நம்பிக்கையேற்படுத்தும் விதத்தில் கவிதை எழுதுபவர்களை அறிய விக்ரமாதித்யனைத்தான் கேட்கிறேன். புதிதாக புதுமையுடன் ஒன்றிரண்டு கவிதை எழுதியவனாக இருந்தாலும் கூட அவனை அறிந்து வைத்திருப்பது மட்டுமல்ல, அவனோடு நேர் பழக்கத்திலும் இருக்கிறார். கையில் ஒரு சல்லிக்காசு இல்லாமல் தமிழ்நாடு முழுதும் சுற்ற நினைப்பவனுக்கும் இன்றும் அவர்தான் வழிகாட்டி. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏதோ ஒரு இளைஞனோடு கவிதையை மையமிட்ட ஒரு தொடுப்பு அவருக்கு உண்டு. நீங்கள் யாரேனும் பெருஞ்சபை ஒன்றிலிருந்து அவரைத் தூக்கி வெளியேற்றி எறிந்தால் அவர் சென்று விழுவது ஏதேனும் கிராமத்தில் கவிதையுடன் தூங்கச் செல்லும் ஒருவனின் மடியாகத் தான் இருக்கும். உங்கள் பெருஞ்சபை அவன் மடியைக் காட்டிலும் மிகச் சிறிது என்பதை அனுபவத்தில், அலைச்சலில் கண்டுபிடித்துக் கொண்ட ஆங்காரமே விக்ரமாதித்யன்.
ஒருமுறை கும்பகோணத்தில் ஒரு மகாசபைக் கூட்டம். விடுதியில் அறைகள் பேணப்பட்டிருந்தன. சபையில் என்ன நடகிறதென்றே எங்களுக்குத் தெரியாது. சபைகளுக்கு முன்காலங்களில் சென்றதெல்லாமே சபைகளுக்கு வெளியே கூடுவதற்காகத் தானே? பேச்சு முற்றி பேச்சு. கடைசியில் விகாரமாகிவிட்டது எப்போதும்போலவே.விடுதியில் அறையை விடுவிக்கும் போது நள்ளிரவு. நாங்கள் இருவருமே இரவிற்கு மிஞ்சினோம். நெடுஞ்சாலையில் நடக்க பசி. சில நாட்களாகவே சாப்பிடாத உணவை எல்லாம் ஒரே சமயத்தில் வேண்டும் என உடல் கேட்கிறது. எங்கு செல்கிறோம் என்பது தெரியாது. அவர் யாரோ ஒருவரின் பெயரைக் கூறி அருகில்தான் போய்விடலாம் என்கிறார். இப்படி அவரது எத்தனையோ பொய்களைக் கேட்டுக் கேட்டுத் தான் தமிழ்நாடு என்பது என்ன என்பதை அறிந்து கொண்டேன். நான்கைந்து கிலோ மீட்டர்கள் கடந்தபிறகு நள்ளிரவில் திறந்திருந்த கல்யாண மண்டபத்தில் சாப்பிட்டு விடலாம் என்றேன். அவரோ இனியும் எவரோ குடிவாங்கித் தரவிருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையில், அன்னபூரணியின் கையால் பிச்சை அமுது உண்டால்தான் சிவனின் கபாலத்தில் இணைந்திருக்கும் திருவோடு அகலும் என வழிநடைப் பாசாங்கு. எனக்கு அவரது சிவனோடு சண்டை ஏற்படுவது இது போன்ற தருணங்களில்தான்.
என்னுடைய இலக்கிய வாழ்வு தொடங்கியதிலிருந்து நான் உள்ளும் புறமுமாக இணைந்தே இருக்கும் ஐந்தாறு பேர்களில் விக்ரமாதித்யனும் ஒருவர். அவரின் கோலம் கண்டோ, பழக்கம் கண்டோ என் வீட்டில் குழந்தைகள் உட்பட யாருக்கும் சுணக்கம் கிடையாது. என்னுடைய இல்லறத்தில் முதல் நான்கு வருடங்கள் குழந்தைகள் இல்லை. திருவண்ணாமலைக்கு கிரிவலம் போகச் சொன்னவர் அவர். கிரிவலம் போய் வந்த பின்னர் பிறந்தவன்தான் ரிஷிநந்தன். கிரிவலம் சென்று நந்தன் பிறந்தான் என்பதைக் காட்டிலும், அதனைப் பொதுவெளியில் உரக்க அறிவிக்கும் தைரியத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே, அது முன்னதைக் காட்டிலும் அருங்காரியம். பல காரியங்களை அவரைக் கேளாமல் முடிவு செய்வதில்லை. அப்படி செய்கிறோமா என்பது வேறு விஷயம். என்றாலும் இப்படி செய்யலாமா அண்ணாச்சி என கேட்கும் பழக்கம். கவிதைகள் வழியாகவும், பழக்கத்திலும் என்னிலிருந்து பல்வேறு இறுக்கங்களை அகற்ற எனக்குத் துணை புரிந்தவர் அவர்.
அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட பண்புகளில் முக்கியமானது, எதிரியே ஆனாலும் கூட ஒரு நல்ல கவிதையையோ,படைப்பையோ ஒருவன் உருவாக்கிவிட்டால் சகலத்தையும் மறந்து அவனை ஒத்துக்கொள்ள வேண்டும் என்பது. அவன் என்றால் அவளும்தான்.
தொண்ணுறுகளின் தொடக்கத்தில் திருநெல்வேலியில் நடந்த பிரமிள் பற்றிய கூட்ட அரங்கிற்கு வெளியே “பனையேறிக்கு எப்படியடா கவிதை வரும் ? என ஓங்கிக் கேட்டவர்தான் அவர். பின்னாட்களில் எனது கவிதைகள் பற்றி அதிகம் பேசியதும் எழுதியதும் அவர்தான். போக்குவரவின் அனைத்துப் பாதைகளிலும் பேசித் திரிபவரும் அவர்தான். சாதியை சச்சரவை உண்டாக்குவதற்கான வழிமுறையாக அவர் நண்பர்களுடன் கையாள்வதில் எனக்கு இடர்பாடு உண்டு. ஆனால் அவரால் பெயர் உச்சரிக்கப்படாத ஒருவனும் தமிழில் கவியானதில்லை என்பது தெளிவு . பிரான்சிஸ் கிருபா, யவனிகா ஸ்ரீராம், ஷங்கர்ராமசுப்ரமணியன், என்.டி.ராஜ்குமார் என நாங்கள் பலர் அவர் உச்சரிப்பிலிருந்து எழுந்து தோன்றியவர்கள்தாம்.
அவரது அடாவடித்தனங்கள், நிஜ கலகங்கள் அத்தனையும் தமிழ் அம்மை விரும்பி அணிந்து கொண்டிருக்கிற அலங்காரங்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகு அறிய இன்னும் நிறைய காலங்கள் ஆகுமோ, என் பொன் அன்பர்களே ?
ஒரேஒரு கவிதை மட்டுமே முழுமையான போதையில் தள்ளாடிய வண்ணம் என்னால் எழுதப்பட்டது. போதையில் ஒருபோதும் எனக்கு எழுதும் திறன் கிடையாது. அந்த ஒரு கவிதை விக்ரமாதித்யனைப் பற்றியது. இந்தக் கவிதையை மனநல மருத்துவர் ருத்ரனின் அறையின் முன்னிருந்து எழுதி அவருக்குப் பரிசளித்து விட்டுத் திரும்பினேன். இரண்டாயிரத்தில் என நினைவு.
கலகக் கவிஞனின் சரிதம் எல்லோரும் விரும்பும் இல்லாத எதிரியின் கோலத்தை பலாச் சக்கையாய் வெட்டிப் பிளந்து பாவனை செய்யும் கவிஞன் கருணை யேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழாத வருடத்தில் பிறந்தான். இயற்கையின் ஓலைகள் அசைந்தன. பிறந்த அன்றே விதியின் முற்றுப்புள்ளி வரையில் குழந்தையுடலைக் கிழித்தெறிந்தான் ஈவிரக்கமற்ற கடவுள். குழந்தையுடல் சாபமாய் சிரித்தது. "குழந்தையுடலைக் கிழித்தெறிந்த கடவுளே இனி என்ன செய்ய வேண்டும்? முகம் சரியில்லை... நடத்தை பிழை … என்கிற மொழி உடலைச் சுற்றி முளைத்த போது திருமணம் செய்து கொண்டான் கலகக் கவிஞன். "பட்டினி பற்றி அவன் கவிதை எழுத வேண்டும்… கடன்காரர்களுக்கு ஒளிப்பதை வெளிப்படுத்த வேண்டும்… இற்று விழப் பார்க்கும் உத்திரத்தைப் பாட வேண்டும்". கடவுளின் நற்செய்தியைப் பந்துருட்டி அவன் மீது எறிந்தார்கள் சக குமாஸ்தா புலவர்கள் "டேய் பிச்சைக்காரா… டேய் குடிகாரா… டேய் வேசியின் மகனே…" படித்துறையில் கட்டிய ஈரச் சேலையாய் அவனைப் பற்றிய படிமங்கள் படபடத்தன. அவனது தாய், சந்தையில் விற்ற சூடான இட்லிகள் உலர்ந்து கவிதை வரிகளில் அமர் எய்த ஊளையிட்டான். மெல்லிய மனசுக்காரன் நான் என்றான்… அதிகாரிகளிடம் சென்று பணிந்தான்… அதனால் மேலும் பணிய வேண்டியிருந்தது. தன்னை நேசிக்க இயலாத தன்னிலை கொண்டு குழந்தைகள் வளர்த்தான். தாடி வளர்க்காத அவனைக் கொலை செய்யும் கத்திகளின் எண்ணிக்கை அதிகரித்த போது தாடி வளரத் தொடங்கியது. கத்திரித்து நேர் செய்யப்படாத நேர்ச்சைத் தாடியில் குற்றவுணர்ச்சிகள் கொத்தாய் பூத்தன. "அதிகாரிகளே உங்களைத் தொந்தரவு செய்துவிட்டேனா? நண்பர்களே தவறிழைத்து விட்டேனா?” மதுவற்ற நிலையில் தொங்கிய தலை ஒருபோதும் நிமிரவில்லை. "நகர்ந்து விட்ட கிராமத்திற்குத் திரும்ப வேண்டும்… சாதித் தலைவனாய் மீள வேண்டும்… புத்திமதிகள் சொல்ல வேண்டும்… நிலத்தின் மன்னனாக வேண்டும்… அடிமைகளை, பசியால் நிறைந்தோரை கடவுளின் பிரநிதியாய்க் கொல்ல வேண்டும்… வேறு வழியில்லை, உங்கள் கனவுகளை ஆமோதிக்கிறேன். நானொரு பிழை… குழந்தையாய் பிறந்தது ஒரு தற்செயல்… அடிபணிந்த கலகக்காரனை எடுபிடியாய் நடத்த உத்தரவு செய்கிறேன்". தொடர்வண்டியில் சத்தம் தட்டிப்பாடும் பாடகனாய் மரணமடைந்த பின் அவன் குடித்தெறிந்த மதுப்புட்டிகளில் செடிகள் முளைத்தன. கடலை நோக்கி காதல் கடிதங்கள் எறிய மதுப்புட்டிகள் துடி கொண்டன. அவை யார் கையிலேனும் கிடைக்கக் கூடும். கிடைத்த செய்தியை வெளிச்சொல்ல, மறைக்காமலிருக்க, வரலாறு அவர்களுக்கு மனம் தர வேண்டும்.
$$$