வெற்றி முழக்கங்கள் ஒலிக்கட்டும்!

-கவிஞர் சுரேஜமீ

சென்னையில் மே 15இல் நடைபெற்ற  ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர் சங்கமம்’ நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் ஆபரேஷன் சிந்தூரை வாழ்த்தி  கவிஞர் திரு. சுரேஜமீ பாடிய கவிதை இது...

பல்லவி

வெற்றி முழக்கங்கள் ஒலிக்கட்டும் – படை
வீரர் செயலதைப் போற்றியே!

அனுபல்லவி

சற்றும் இளைத்தவர் நாமில்லை – இந்தச்
சகத்தில் நமைவெல ஆளில்லை!

சரணங்கள்

எங்கள் ஆயுதம் தேசமே – இதை
எங்கு செல்லினும் சொல்லுவோம்!
திங்கள் ஞாயிறு போற்றுதும் – எட்டுத்
திசைகள் யானையும் வெல்லுவோம்!

எமக்குள் ஆயிரம் பகையுண்டு, ஆனால்
எங்கள் பாரதம் உயிரென்போம்!
நமக்குள் பகையினை ஊட்டுவோர் – குல
நாசம் செய்குவோம் சத்தியம்!!

என்ன பாவமே செய்தனர் – அவர்
இந்து வென்றது குற்றமோ?
மின்னல் போலவே விழித்தது – தேசம்
வெகுண்டு கனலென எழுந்தது!

பெண்கள் திலகத்தை யழித்தவன் – அந்தப்
பேதை நாட்டினன் கூலியே
மண்ணைக் கவ்வினன் பார்த்தமே – இனி
மடியை ஏந்தியே திரிவனே!

சிந்தூர் என்பதன் திறமதை – இன்று
செகமும் பேசுதே கேளடா
இந்து நீரதை நிறுத்தினோம் – இனி
எம்மை எதிர்த்தவன் தொலைந்தனன்!

சூலம் ஏந்திய காளியாய் – நம்
முப்படைகளும் ஆடிய
தூலத் தாண்டவம் கண்டவன் – பெருந்
துயரை எண்ணியே கெஞ்சினான்!

போரை நிறுத்தினோம் நாமுமே – பாவம்
போக்கிலன் என்று கருதியே
யாரும் சொல்லிநாம் செய்திலை – இதை
யாவர் உணர்ந்திலர் அறிவிரே!

வியோமி காவொடு படையினர் – அவர்
வெற்றித துணையென சோஃபியா
தாயுமானவர் கண்டொமே – அவர்
தரணி போற்றவே வாழ்கவே!

இரத்தம் சிந்திய வீரர்கள் – குலம்
இமைகள் போலவே காத்திட
உரத்த சிந்தனை கொள்வமே – உயிர்
தேசம் போற்றியே வாழ்வமே!

வந்தே மாதரம்!

$$$

Leave a comment