-தத்தோபந்த் தெங்கடி
1982 ஆம் ஆண்டு விஜயதசமி (27.10.1982) நன்னாளில், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில், பாரதீய விசார் கேந்திரம் (பாரத சிந்தனை மையம்) தொடங்கப்பட்டது. அந்த விழாவில் பாரதீய மஸ்தூர் சங்க நிறுவனர் திரு. தத்தோபந்த் தெங்கடி அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கமான தொகுப்பு இது.

பாரதீய விசார் கேந்திரத்தின் தொடக்க விழா, எனக்கு சாதாரண விஷயமாகத் தோன்றவில்லை, இது ஒரு மாபெரும் பணியின் சின்னஞ்சிறு தொடக்கம் மட்டுமே. எந்தவொரு மகத்தான பணியின் மூலாதாரமும் எப்பொழுதும் சிறியதாகவே இருக்கும். சிறு துளிகளாகச் சேர்ந்தே பெரிய கடல் உருவாகிறது. இன்று சிறு விதையாகத் தென்படும் இந்தப் பணி எதிர்காலத்தில் மாபெரும் ஆலமரமாகத் தழைத்தோங்கும். இதன் பின்புலத்தில் திரு. பி.பரமேஸ்வரன் அவர்களின் கடின உழைப்பு இருப்பது பாராட்டுக்குரியது.
இந்த அமைப்பின் பெயரிலுள்ள ‘விசார்’ (சிந்தனை) என்ற சொல் மிகுந்த பெருமை கொண்டது. இந்த மையத்தின் மூலம் எப்படிப்பட்ட பணி நடைபெறும் என்பதை இந்தப் பெயரே நமக்குக் காட்டுகிறது. தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, (நடைமுறையில் உள்ள) வெகுஜனக் கருத்தைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையைத் தேடுவோரின் கண்ணோட்டத்தில், இந்த அமைப்பு நடுநிலையுடனும், அறிவியல்பூர்வமானதாகவும் உள்ளது. இதில் பாரபட்சம், முரண்பாடு, வெறுப்பு ஆகியவற்றுக்கு இடமே இல்லை. உண்மையே இங்கு வழிபடப்படும் பொருள். பிறர் நம்மை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும், தவிப்பும் இந்த மையத்துக்குக் கிடையாது.
ஒருமுறை, புதுச்சேரி ஆசிரமத்தில் மகரிஷி அரவிந்தரை, குருதேவர் ரவீந்திரநாத் தாகூர் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது, உங்கள் உபதேசங்களை வெளியுலகிற்குக் கொண்டுசெல்ல ஏன் வெளியே வருவதில்லை எனக் கேட்டார் தாகூர். அதற்கு பதில் அளித்த அரவிந்தர் “உண்மை தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று பதிலளித்தார். இதுவே ஒரு சத்தியவானின் தன்னம்பிக்கை.
நாட்டின் அறிவுத் துறையில் ‘பாரதீய விசார் கேந்திரம்’ போன்ற வேறு அமைப்புகள் எதுவுமில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், பிற அமைப்புகள் (இடதுசாரி அமைப்புகள்) தெளிவான கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதில்லை. அவர்களின் பார்வை, வெறும் கற்பனாவாத அனுமானங்களின் அடிப்படையிலேயே இருப்பதுதான் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணம்.
குறிப்பாக, அவர்கள் உலகளாவிய மதவெறி, வகுப்புவாதத்தின் பிரதிநிதிகள் போலச் செயல்படுகிறார்கள். அவர்களின் பிரதிநிதிகள் நடத்தும் சில அமைப்புகளும் தங்கள் கற்பனையில் உள்ள குறிக்கோளை அடைவதற்காகவே சிந்தனை அமைப்புகளை நடத்துகிறார்கள். தாங்கள் முன்கூட்டியே முடிவு செய்துகொண்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த அமைப்புகளை உருவாக்கி, தங்கள் கற்பனைக்கேற்ற அச்சில் வார்த்து, அனைத்தும் இப்படித்தான் நடைபெறவேண்டும் என்று திணிக்கும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தச் செயல்பாடு அறிவியல் அடிப்படை கொண்டதல்ல.
முன்கூட்டியே தேர்வுசெய்த அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டு, எதனையும் ஆய்வு செய்து உண்மை என்று திணிக்கக் கூடாது. அதேசமயம், ஆராய்ச்சித் தீர்மானங்கள் உண்மையின் அடிப்படையிலான மலைத்தொடர்ச்சி போல இயற்கையாக உருவாக வேண்டும். பாரதீய விசார் கேந்திரத்துக்கு இயல்பான தத்துவ ஈர்ப்பு உண்டு. ஏனென்றால், ‘கற்பனையான பார்வை’ என்பதற்கு இங்கு இடமே இல்லை. உண்மையை நோக்குவதும், அதை ஆராய்ச்சி செய்வதுமே இங்கு நடைபெறும். உண்மையின் அடிப்படையில்தான் இங்கு தீர்மானங்கள் உருவாகும். இங்கு, பாரபட்சம், முரண்பாடு, வெறுப்பு ஆகியவற்றுக்கு சற்றும் இடமில்லை. உண்மையை ஆராதிப்பதே நமது பாரம்பரிய சிந்தனை (விசார்) ஆகும்.
அண்ணல் மகாத்மா காந்தியின் அழகான பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. சத்தியம், அகிம்சை ஆகிய இரண்டையும் காந்திஜி தன் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். ஒருமுறை அவர் “நமது மக்கள் ‘இறைவனே உண்மை’ என்று கூறுகின்றனர். நானோ ‘உண்மையே இறைவன்’ என்றே கூறுவேன்” என்றார். அது அவரது உறுதியான நம்பிக்கையைக் காட்டுகிறது.
இப்பொழுது, இந்த உண்மையின் தேடுதலைப் பற்றி பல்வேறு நிலைகளில் நாம் ஆராய வேண்டும். எண்ணற்ற பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்கான தேடுதலையும் ஆராய வேண்டும். நோய்க்கான பாதி சிகிச்சை, அதன் மூலகாரணத்தை அறிவதிலேயே முடிந்துவிடுகிறது என்ற பழமொழி உண்டு. ஒரு பிரச்னையின் காரணத்தை- அதற்கான அடிப்படையை சரியாகத் தீர்மானிக்கும் போதே, அதற்கான தீர்வுக்கும் வழி கிடைத்து விடுகிறது.
பல்வேறுவிதமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் நாம் பல்வேறு நிலைகளில் சத்தியத்தை ஆராய வேண்டும். பிரச்னைகள் பல நிலைகளில் உருவாகின்றன. தனி நபர், தேசம், உலகம் ஆகிய இம்மூன்று வகையிலும், போருக்கும் அமைதிக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இதுபோல பிரம்மாண்டத்திலும், அதன் உண்மை வடிவம் பற்றியும் பிரச்னை எழுகிறது. பல்வேறுவிதமான பிரச்னைகளின் ‘உண்மைத்தன்மை’ வரை சென்றடைவதற்கு, தீர்வுக்கான பல்வேறு முயற்சிகளின் ஒருங்கிணைப்பு ஏதாவது ஒரு இடத்தில் நடைபெற்றாக வேண்டும். இந்த ஒருங்கிணைப்பால் பிரச்னைக்குரிய தீர்வுக்கான ஞானம் நமக்குக் கிடைக்கிறது. எனவே கூட்டு முயற்சி நல்ல பலனைத் தருகிறது. இந்த அடிப்படையிலேயே பாரதிய விசார் கேந்திரத்தின் தோற்றத்துக்கான சிந்தனை முகிழ்த்திருக்கிறது.
இப்பொழுது விசார் கேந்திரத்தின் அடிப்படை அம்சம் சரியானது தான். ஆனால் அந்தச் சொல்லுக்கு முன்னால் ‘பாரதீய’ என்ற சொல்லைச் சேர்ப்பது சரியா என்று சிலர் வினவக்கூடும்.
‘ஸத்யம்’ (உண்மை) எப்போழுதும் ஜாதி, மதம், மொழி, தேசம் போன்ற வரையறைகளைக் கடந்தது. அறிவு (ஞானம்) என்பது எப்பொழுதும் உலகம் முழுவதையும் தழுவியதாகும். அந்நிலையில் ‘பாரதீய’ என்ற அடைமொழிக்கு இங்கு என்ன தேவை வந்தது? இப்படிப்பட்ட கேள்வி சிலர் மனதில் எழக்கூடும். இதற்கு பதில் வேண்டுமானால், முதலில் பாரதீய நெறிமுறைகளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நமது பண்பாடு, தேசிய வளர்ச்சி, பாரம்பரியத் தொடர்பு, ஆகியவை குறித்த மேற்கத்திய சிந்தனையாளர்களின் கணிப்பு முரண்பாடாக உள்ளது. தேசியத்துக்கும், பன்னாட்டு நடைமுறைகளுக்கும் தொடர்பில்லை என்பது அவர்களின் பொதுவான கருத்தாகும். அதாவது தீவிரமான தேசியவாதிகள் பன்னாட்டு நடைமுறைகளை எதிர்க்கிறார்கள். அதேபோல தீவிர பன்னாட்டு நடைமுறையாளர்கள், தாய்நாட்டை மட்டுமே நேசிப்பவர்களை எதிர்கிறார்கள். கடந்த காலத்தில் இந்த விவாதங்கள் நிறைய நடந்து முடிந்துவிட்டன. நமக்கு அது பற்றியகண்ணோட்டமே வேறுவிதமானது. நம்முடைய தேசியப் பண்பாடும், சுபாவமும் உண்மையிலேயே வித்தியாசமானவை.
நாம் மனிதர்களின் புலனறிவு வளர்ச்சி பெறுவதில் நம்பிக்கை வைக்கிறோம். குழந்தை பிறக்கும் பொழுதே தனக்குத்தானே பெருமகிழ்ச்சி கொண்டதாக இருக்கிறது. புலனறிவு வளர்ச்சி அடைந்தவுடன் அது குடும்பத்துடனும், மெல்ல மெல்ல சமுதாயத்துடனும் இணைகிறது. பிறகு, முழுமையான தேசம் முதலியவற்றை அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறது. ஆனால் நமது பண்பாடு இத்துடன் முழுமையான முற்றுப்புள்ளி வைப்பதில்லை. அதனைக் காட்டிலும் இந்தப் புலனறிவை விரிவடையச் செய்து அத்துடன் ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மையைக் கருதக்கூடிய வகையில் ‘வசுதைவ குடும்பகம்’ (உலகமே ஒரே குடும்பம்) என்ற எல்லையை நோக்கி அழைத்துச் செல்கிறது.
இந்த உலகத்திலும் முழுமையான பிரபஞ்சத்திலும் பூரணத்தன்மையை நிலைநிறுத்த வேண்டிய பணி நம்முன் உள்ளது. நாம் ‘மூவுலகும் நம்முடையது’ (ஸ்வதேசோ புவனத்ரயம்) என்பதை நிலைநிறுத்தவேண்டும். அதாவது நம்மிலிருந்து பிரபஞ்சம் வரை பூரணமாக அறிந்துகொள்ளும் நீண்ட பயணத்தில் மனிதனின் புலனறிவை விரிவடையச் செய்வதில் ஒரு தொடர்ச்சி ஏற்பட வேண்டும். அனைவரையும் இணைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்; பிரிப்பவர்களாக இருக்கக் கூடாது. ‘பாரதீய’ என்ற சொல்லின் அடிப்படை இதுவே. இதனைப் பற்றிய சரியான புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
‘ஞானம்’ உலகளாவியது என வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. அறிவியலிலும் நடைமுறையிலும் உள்ள ஞானமானது உலகெங்கும் உள்ள மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். சில பெரிய நாடுகள் அவற்றை தங்கள் தனிப்பட்ட ரகசியங்களாக வைத்திருக்கக் கூடும். ஆனால் நாம் ‘பாரதீய’ என்று சொல்வதன் அடிப்படை என்னவென்றால், நாம் வெளிப்படையாக, பல்வேறு நிலைகளில் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். (இதில் எங்கும் ரகசியம் இல்லை). நம் எதிரில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்குத் தீர்வு காண நாம் அவற்றின் உண்மை நிலையை ஒன்றிணைக்க விரும்புகிறோம். பாரத அன்னையின் புதல்வர்களாகிய நாம் விரும்புவது என்னவெனில், உண்மை நிலையை அடையும் இம்முயற்சியில் நாம் முழுமையான கொள்கையை ஏற்க வேண்டும்.
பாரதீயர்களின் மனதில் 1934-லிருந்து தொடர்ச்சியாக ஆன்ம சந்தேகத்தையும், கீழ்த்தரமான எண்ணங்களையும் விதைக்கும் நோக்கில் திட்டமிட்ட முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாரத நாட்டில் நம்முடைய தத்துவம், சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை அனைத்தும் மோசமானவையாகவும், மேற்கத்திய நாடுகளின் சிந்தனையும் பொருள்களுமே சிறந்தவையாகவும் நம்பக்கூடிய எண்ணத்தை அவர்கள் நம் மீது திணித்துவிட்டார்கள். நம்முடைய சில பேரறிஞர்களும் பிரிட்டிஷ் பேரரசின் பளபளப்பில், பிரசாரத்தில் மதிமயங்கி, அந்தத் தாழ்வு மனப்பான்மைக் கருத்துகளை வியந்து பாராட்டத் தொடங்கினார்கள். இந்த சிந்தனையானது நம்முடைய மக்கள் மனதில் தன்மீதே சந்தேகத்தையும் கீழ்த்தரமான எண்ணங்களையும் விதைத்து, கரையான்கள் மரத்தை அரிப்பது போல நமது பெருமிதங்களை அழிக்கத் துணை புரிந்திருக்கிறது. இந்த தாழ்வு மனப்பான்மையால், நம் நாட்டு எளிய மக்கள் உண்மையை அறிய இயலவில்லை.
இன்றைய எளிய மனிதன், தற்போதைய சூழ்நிலையில் (1982) ஏமாற்றத்தாலும், அவநம்பிக்கையாலும் பீடிக்கப்பட்டுள்ளான். நமக்கு எந்தத் தகுதியும் இல்லை என அவன் நம்ப ஆரம்பித்துவிட்டான். இன்றைய சூழ்நிலையில் நம் உள் மனதின் பலவீனமே நம் கீழ்நிலைக்குக் காரணம் என தீர்மானித்துவிட்டான். உண்மையில் எந்த ஒரு நாட்டையும் உயர்நிலைக்குக் கொண்டுசெல்லத் தேவையான அனைத்து வளங்களும் நம்மிடத்தில் உள்ளன. ஆனால், இந்த நினைவே அவனுக்கு இல்லை.
மேற்கத்திய நாட்டினர் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் நம்மைவிட முன்னேற்றி உள்ளனர் என்பது நிதர்சனம். ஆனால், நம் பேரறிவு வெளிப்படுத்தப்படாமல் மறைந்திருப்பதன் காரணமாகவே, அறிவியலார் கூட்டத்தில் நம்மை நம்மால் தகுந்த முறையில் வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் மாபெரும் அறிவியல் சமூகத்தில் நாம் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். அதாவது, நம்மிடத்தில் பேரறிவு, செயல் திட்டங்கள், மக்கள் சக்தி ஆகிய அனைத்தும் போதுமான அளவு இருந்தபோதும், நாம் மற்றவர்களைவிடப் பின்தங்கி உள்ளோம்.
இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனியும் ஜப்பானும் மாபெரும் தோல்வியைத் தழுவிய போதும், மீண்டும் துளிர்த்தெழுந்து, பலம் பொருந்திய நாடுகளுடன் போட்டியிடத் தொடங்கிவிட்டன. குறுகிய நிலப்பரப்பும் மக்கள் தொகையும் கொண்டு உருவான இஸ்ரேலை இன்று உலகம் முழுமையும் கொண்டாடுகிறது. ஆனால் பழம்பெரும் நாடான பாரதத்தின் மக்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை குடிகொண்டுவிட்டது. நாட்டின் எளிய குடிமகன், நாம் மாபெரும் தேசத்தை உருவாக்கத் தகுதியற்றவர்கள் என நினைப்பதால் நாம் பின்தங்கி இருக்கிறோம்.
நாட்டின் உயர்வுக்காக எவை தேவையோ, அவை அனைத்தும் நம்முள்ளே பரவி இருக்கின்றன என்பது அவனுடைய எண்ணத்தை எட்டவில்லை. 1947க்குப் பிறகு திறமைக்கும் பேரறிவுக்கும் இடமளிக்கும் ஆராய்ச்சித் துறையில் நம்மிடையே எந்தக் குறைபாடும் இருக்கவில்லை. ஒரு தெளிவான உயர்நோக்கம் இல்லாததே நம்முடைய குறைபாடு. தேசத்தை உயர்நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற விழைவு நம்முடைய தலைவர்களிடம் இல்லாமல் போனதால்தான் ஆய்வுத் துறையில் நம் நாடு பின்தங்கிவிட்டது.
மேற்கத்திய நாடுகளின் உலகாயத உயர்வு, சிறப்பான தொழில் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட வளர்ச்சி நம்முடைய கண்களைத் திறந்துவிட்டது. தொழில் புரட்சியின் தொடக்கம், ஏற்கனவே எங்கோ திட்டமிட்டு சில இடங்களில் தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ளவில்லை. உண்மையில் அந்த நாட்களில் நாம் (பாரதம்) வாழ்வா-சாவா போராட்டத்தில் சிக்கி இருந்தோம் என்ற உண்மையை நாம் அறியவில்லை. போர் நிகழும் நாட்களிலும், கலவரச் சூழலிலும் எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. சாதாரணமான, அமைதியான காலத்தில் மட்டுமே முன்னேற்றம் நிகழ முடியும்.
பழங்காலத்தில் நம்முடைய சமூக, வர்த்தகத் தொடர்பு வெளி உலகத்தோடு இருந்ததை நாம் அறிவோம். நமது நாட்டின் பல கலைகளும், கணித, அறிவியல் திறனும் பாரசீக, அரபு நாடுகளின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றடைந்து மலர்ச்சியுற்றன என்பது உலக வரலாற்றை அறிந்தவர்கள் கூறுவதாகும். அதாவது, வெளி உலகுடன், குறிப்பாக ஐரோப்பியர்களுடன் நம்முடைய தொடர்பு நமக்குப் புதியதல்ல. அதேசமயம், அவர்கள் வளர்ச்சி அடைந்த காலத்தில் நாம் இங்கு வாழ்வா-சாவா என்ற போராட்டத்தில் சிக்கி இருந்தோம், அவ்வளவே. இந்த இரண்டு விஷயங்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றதால், நம்மிடத்தில் ஐரோப்பாவின் மறுமலர்ச்சியைக் காண்பதற்கோ, சிந்தனை செய்வதற்கோ நேரம் இல்லாது போனது. நமக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க நம்மிடம் வேறொரு சக்தியும் அப்போது (1500- 1900 காலகட்டம்) இல்லவே இல்லை. அதனால்தான் அவர்களுடைய உலகாயத வளர்ச்சி பற்றி நாம் அறிந்துகொள்ள முடியவில்லை. நம்முடைய தற்போதைய அறிஞர் கூட்டம் இத்தகைய உண்மைகள் அனைத்தையும் அலட்சியம் செய்துவிட்டது. தேச வளர்ச்சியில் பிற நாடுகள் நம்மை விட உயர்ந்திருக்கிறார்கள் என்ற எண்ணமும், மற்றவர்களை விட நாம் பின்தங்கி இருக்கிறோம் என்ற எண்ணமும் மட்டுமே நம்மிடம் இருக்கவேண்டும் என்பதுதான் லார்ட் மெக்காலே பிரபுவின் விருப்பம். அதையே நமது அறிஞர் பெருமக்கள் நிறைவேற்றினார்கள்.
நாம் பாரத நாட்டின் பெருமித உணர்வைத் தாழ்த்தும் எண்ணங்களில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அதேசமயம், இத்தகைய சூழ்ச்சிகளில் இருந்து விடுபட நமக்கு ஏதேனும் ஒரு ‘ஆலோசனை மையம்’ (விசார் கேந்திரம்) தேவைப்பட்டுவிட்டது. தாழ்வு மனப்பான்மையோ, உயர்வு மனப்பான்மையோ இன்றி, இயல்பான மனநிலையில் நிதர்சனமான உண்மையைத் தேட வேண்டும். இப்பொழுது நம்முடைய பண்பாடும், இயல்பான பழக்கவழக்கங்களும் பல தருணங்களில் முரண்படுகின்றன. எதிர்காலத்தில் நமது பண்பாட்டின் தொடர்ச்சியானது முறியாமல் இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம்.
நம்முடைய தர்மத்தில் தீர்க்கதரிசனம் வாய்ந்த நமது முன்னோர் அனைத்து நாடுகளின் நடைமுறைகளையும் கவனத்தில் கொண்டு, சமுதாய, பொருளாதார மாற்றங்களை நிகழ்த்தி வந்திருக்கிறார்கள். மாற்றங்கள் ஏற்பட்டே தீரும்; ஏற்படவும் வேண்டும். நமது பழக்கவழக்கங்களில் சில பழமையாகவும், அதேசமயம் பயனுள்ளதாகவும் இருக்கும். அவற்றை நடைமுறையில் இயல்பாகச் செயல்படுத்த வேண்டும். அதேபோல, பிறரது பழக்கவழக்கங்களில் எது உயர்வானது, எது தாழ்ந்தது என்பதையும் ஆராய வேண்டும். மற்ற கலாசாரங்களில் உள்ள உயர்வான விஷயங்களை ஏற்றுக் கொள்வதில் நாம் சிறிதளவும் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. அவற்றை நம்முடைய பண்பாட்டோடு இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளவும் கூடாது.
பாரதம் மிக உயர்வான கருத்துகளை உலகத்திற்கு அளிக்க வேண்டும். அதற்காக அது வெளி உலகிலிருந்தும் மிக உயர்வான கருத்துகளை ஏற்றுக்கொண்டு அது தன்னுடைய பண்பாட்டோடு இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும், இவ்வாறு பண்பாட்டு ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அது பாரதப் பண்பாடு அல்ல என்பதை மட்டுமே வெளிப்படுத்தி, குருட்டுத்தனமாக ஒதுக்கக் கூடாது என்பதையும் நாம் உணர வேண்டும்.
இந்த நாட்டில் மதச்சார்பின்மை பேசும் சர்வதேசியவாதிகள் பரவி உள்ளனர். அவர்கள் தங்களின் கற்பனை நோக்கில் மக்களை திசைதிருப்பி, புரட்டுகளைத் திணித்து விடுகிறார்கள். பிரிட்டிஷாரின் திட்டமிட்ட கல்விக் கொள்கை மூலமாக மக்களின் மனதில் நிராசையை அவர்கள் நீடிக்கச் செய்துவிட்டார்கள்.
இந்த உண்மைகளைக் கவனத்தில் கொண்டுதான், பாரதீய கொள்கைகளைக் கடைபிடிப்பதற்கான பாரதீய சிந்தனை மையம் தேவைப்பட்டுள்ளது. இன்று நம்முன் உள்ள தலையாய பிரச்னை, நாம் ஒவ்வொரு துறையிலும் ஆரம்பநிலை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதே. இல்லாவிடில் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உண்மையைத் தரிசிக்க முடியாது.
இந்தப் பிரபஞ்சத்தின் பிரச்னைகளை ஒவ்வொரு நிலையிலும் நாம் ஒருங்கிணைந்து ஆராய்வோம். பிரதேச நிலையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கேரளத்திலோ அதற்கே உரித்தான சில தனித்தன்மையான சமுதாய கொள்கைகள் உள்ளன . இங்கு நீண்ட காலமாக மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் (மருமக்கள் வழி மான்மியத்தை குறிப்பிடுகிறார்) உள்ளது. இப்பொழுது இந்த வழக்கம், இன்றைய சமுதாய, பொருளாதாரக் கொள்கையில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? கேரளத்தின் இந்த வழக்கம் நிகழ்கால பொருளாதார, சமுதாய நிலையில் எப்படிப்பட்ட பங்களிப்பை அளித்துள்ளது என்பதை ஆராய வேண்டும்.
இதேபோல தேசிய, பன்னாட்டு அளவிலும் பல்வேறுவிதமான பிரச்னைகள் உள்ளன. அவற்றைப் பற்றி ஒருங்கிணைந்த ஆராய்ச்சி தேவைப்படுகிறது. சில அடிப்படையான பிரச்னைகள் பன்னாட்டு அளவில் அமைந்துள்ளதை நாம் அறிவோம். அவை சுற்றுச்சூழல் மாசுபாடு, அணு ஆயுத உற்பத்தி போன்றவை. சில நாடுகளில் தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளன. அமெரிக்காவில் ‘நீக்ரோ மக்கள்’ பிரச்னை, பாரதத்தில் தீண்டாமை பிரச்னை போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவை அனைத்தையும் பற்றி முழுமையாக நாம் ஆராய வேண்டும்.
சீனாவும் ரஷ்யாவும் மார்க்சிய தத்துவத்தின் பிதாமகர் காரல் மார்க்ஸுக்கு தாசர்களாக இருந்தாலும், அதனை முழுமையாக ஏற்கவில்லை. சீனாவின் மா ஸே துங், ‘மேற்கத்திய நடைமுறைகள் அனைத்தும் நவீனமயம் அல்ல’ என்று கூறினார். அதைச் சொல்ல அவருக்குத் துணிவு இருந்தது. நாமும் அவ்வாறு சொல்வதற்கு துணிவு வேண்டும். அதாவது நவீனமயம் என்பதற்காக மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக நகலெடுக்க இயலாது.
நம்முடைய தேசிய முன்னேற்றம் தொடர்பான அடிப்படைப் பிரச்னை, எப்படிப்பட்ட முன்னுதாரணமான குறிக்கோள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே. இதற்காக நம்முடைய சக சிந்தனையாளர்கள் இணைந்து ஆலோசித்து, தங்களுடைய சிறப்பான திறமையை ஒருங்கிணைத்து, சிறந்த கருத்துகளைத் தேர்வு செய்து, ஒவ்வொரு நிலையிலும் உண்மையைப் பற்றி ஆராய்ச்சி செய்து, இறுதி உண்மையை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்ற தேவை ஏற்பட்டுள்ளது. அந்த முடிவு கற்பனையில் விளைந்ததாக இருந்துவிடக் கூடாது. அதாவது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நன்கு விவாதித்து, முடிவுகளை இயல்பான முறையில் தேர்வு செய்ய வேண்டும். இந்தச் செயல் திட்டத்தின் அடிப்படையில் நமது சிந்தனையாளர்கள் ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் குறிக்கோளை கவனத்தில் கொண்டே ‘பாரதீய விசார் கேந்திரம்’ இங்கு உருவாகி உள்ளது. ஒருகாலத்தில் கேரளத்தில் (விசார் கேந்திரத்தில்) வெளிநாட்டு அறிஞர்கள் குழுமும் நிலை உருவாகும். அப்போது, பண்டைய தக்ஷசீலம், விக்ரமசீலம் போன்ற பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களின் உயர்ந்த பரம்பரையை நிச்சயமாக நினைவில் கொண்டு வருவார்கள் என்பது எனது நம்பிக்கை.
பிள்ளைப் பருவத்திலிருந்தே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பண்பாட்டோடு பின்னிப் பிணைந்து உருவாகிய சமூக விஞ்ஞானிகள், இதுவரை பரப்பப்பட்டுள்ள மெக்காலேயின் மாயக் கனவைத் தவிடுபொடியாக்குவார்கள்; நம்மை சதிவலையில் தள்ளும் அந்நிய ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டறிந்து துடைத்தெறிவதில் அவர்கள் சற்றும் தளர மாட்டார்கள் என்பது உறுதி.
பாரத அன்னை வெல்க!
.
மலையாள மூலத்தில் இருந்து தமிழாக்கம்: சு.விஸ்வநாதன், தென்பாரத அமைப்புச் செயலாளர், பிரக்ஞா பிரவாஹ் (கேரளம், தமிழ்நாடு), சென்னை. குமார.சுப்பிரமணியன், ஸ்ரீமுஷ்ணம்.
$$$