-கவிஞர் விவேக்பாரதி
ஆபரேஷன் சிந்தூரைப் பெருவெற்றி ஆக்கிய படைவீரர்களை வாழ்த்தும் விதமாக சென்னை படைப்பாளர்கள் சங்கமம் ஜூன் 15இல் நடத்திய நிகழ்வின் கவியரங்கில் கவிஞர் விவேக்பாரதி வாசித்த கவிதை இது...

பாரத நாட்டின் தாரக மந்திரம்
வந்தே மாதரம் – அந்த
வேரில் கிளைத்து விளைந்த அற்புதம்
வெற்றிச் சிந்தூரம்!
கோர வன்முறை ஆட்டம் பார்த்தது
காஷ்மீர் மாநிலம் – அதன்
ஈர ரணத்தில் போட்ட மருந்து
வெற்றிச் சிந்தூரம்!
இந்தியர் என்றால் அகிம்சை என்றே
எண்ணிக் கொண்டார்கள் – அதன்
எல்லை எதுவெனச் சோதிக்கத்தான்
எவரோ வந்தார்கள்!
வந்தவர் இந்தியப் பெண்கள் குங்குமம்
வலிந்தழித்தார்கள் – ஒரு
வன்முறை தவிர்த்துக் கிடந்த புலியை
வம்புக்கிழுத்தார்கள்!
அழிந்த குங்குமத் தடம் மறையுமுன்
ஆணை பிறந்தது – வந்த
ஆக்கிரமத்தார் புக்கிடம் நோக்கி
ஆயுதம் பறந்தது!
விழித்துக் கொள்ளும் முன்னே அவர்தம்
விதியே முடிந்தது – நம்
வீரர் அனுப்பிய ராம பாணம்
விஷத்தை முறித்தது!
உலக நாடுகள் பார்த்து வியக்க
உரிமை ஜெயித்தது – இங்கே
உயர்ந்த அறத்தின் ஆட்சி நடப்பதை
உரக்க ஒலித்தது!
கலகப் பூச்சியின் கூடுகள் நோக்கிக்
கணைகள் பறந்தன – அந்தக்
கனலைத் தாங்க முடியாத் தலைகள்
காலில் விழுந்தன!
பச்சைப் பகையை அழித்த சிவப்பு
படைகளின் சிந்தூரம் – அது
பாரதக் கொடியின் நிறங்கள் இணைந்து
படைத்த சிந்தூரம்!
அச்சந் தரவே எழுந்த சிவப்பு
அக்கினிச் சிந்தூரம் – அது
அன்பர்களுக்கோ அம்பிகைக் குங்கும
அழகுச் சிந்தூரம்!
வெற்றிச் சிந்தூரம் – வீர
வெற்றிச் சிந்தூரம் – இந்திய
நெற்றிக் குங்கும நெருப்பில் எழுந்த
நியாயச் சிந்தூரம் – பகைக்
கொற்றம் அடக்கி முற்றும் முடித்த
கொழுந்துச் சிந்தூரம் – மானம்
பற்றி படர்ந்து விறகாய் வெடித்த
பக்திச் சிந்தூரம் – குற்றம்
குற்றம் எனவே சீறிய சிவன்கண்
கோபச் சிந்தூரம்! – இதைப்
புகழ்வோம் தினந்தோறும் – புகழ்ந்து
அணிவோம் நுதல்தோறும் – அணியும்
அகங்களிலெல்லாம் இந்தியரென்ற
அடையாளம் தோன்றும்! – அந்த
அடையாளந்தான் இன்று நமக்கு
அவசியமாய் வேண்டும்!!
$$$