துர்க்கை என்பவள் யார்?

-லக்ஷ்மி மணிவண்ணன்

தற்காலத்திய படைப்பிலக்கியவாதிகளில் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன், சனாதன மரபைக் கைவிடாமல் போற்றும் தனியொருவர். மாறுபாடான கண்ணோட்டத்தில் மரபைக் காணும் இவரது கட்டுரை இது...

பெண் இந்து சனாதன தர்மத்தைப் பொறுத்தவரையில் அவள் பகவதியின் அம்சம். எல்லா பெண்களும் பகவதியின் அம்சமே. துர்க்கையும் அவளே. தொந்தரவுக்கு ஆட்பட்ட பெண் வடிவம் துர்க்கை. துர்க்கை எதனால் தொந்தரவுக்கு ஆட்பட்டாளோ அதனைப் போரிட்டு வென்று அமைதியாபவள் அவள்.

இப்படி அகத்திலும் புறத்திலும் அமைபவள் எல்லோருமே துர்க்கையின் அம்சங்களே. குணமும் தன்மையும் ஒருவர் அடைந்த தொந்தரவுகளால் ஆனவையே அன்றி உள்பொருள் ஒன்றே. எனவேதான் சாந்த சௌரூபிணிக்கு உரிய முக்கியத்துவங்கள் அனைத்தும் ரௌத்திரிக்கும் உண்டு.ரௌத்திரம் மூலப் பொருள் அல்ல. அது உபப் பொருள்

குணாதீசயங்களை அதிகம் உணர்ந்தவரும் எழுதிப் பார்த்தவரும் தஸ்தேவெஸ்கி எனலாம். ஆனால் அதற்கு நேர் எதிராக இந்திய மனம் குணாதீசயங்களை பொருளாகக் கருதுவது கிடையாது. அதனை உபப்பொருளாகவே கருதக் கூடியது. மூலப் பொருள் அதுவன்று. உபப் பொருள் மூலப்பொருளின் ஒரு வெளிப்பாடு.

வெளிப்படுவதால் ஒன்று மூலப்பொருள் ஆகி விடாது. உதாரணமாக ஒரு குழந்தையே பின்னாட்களில் திருடனாகிறது என வைத்துக் கொள்ளுங்கள். இங்கே மூலப் பொருள் குழந்தையா திருடனா? மூலப் பொருள் குழந்தை தான். அதில் விலகி திருடனாக வெளிப்பட்டது. வெளிப்பட்டதன் கர்மங்களையும் ஒருவர் சுமந்தே தீர வேண்டும் என்பது இந்து மதத்தில் தவிர்க்க இயலாத விதி. தெய்வங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

மூலப்பொருள் பெருகும்; கூடுவிட்டு கூடு பாய்வதில்லை. பகவதி பெருகுவாள். துர்க்கை கூடுவிட்டு கூடு பாய்வாள். தன்னுடைய பிள்ளைகளின் சக்தி மண்டலம் ஆவாள் துர்க்கை. வாரிசுகளின் மூல அறிவுடன் இணைதலே கூடு பாய்தல். வாரிசு என்பதற்கு பெற்று பேணியது என்று பலன் கிடையாது. உணர்ந்தது உணர்வில் கலந்தது என்று பொருள்.

ஐரோப்பா பொதுவாக குணங்களைக் கருதக் கூடியது. அதனால் அதற்கு குறையும் வெறுப்பும் அருவருப்புணர்ச்சியும் அதிகம். இந்திய மனம் எதனைக் காணும் போதும் அதன் மூலப் பொருளையே நோக்கி இருக்கிறது. ஊர்வேசைகளையும் குற்றவாளிகளையும் அழைத்து துள்ளி வரும் சாமியாடிகள் “உனக்கு நானிருக்கிறேன் கவலைப்படாதே” என்று அருள்வாக்கு சொல்வது இதன் காரியமாகத்தான். ஒரு ஐரோப்பியனுக்கு இது பெரிய முரண்பாடு போலத் தோன்றும்.

துர்க்கையை நீங்கள் கோயிலில் சென்று வழிபடலாம். நல்லதுதான். நவகிரக நாயகி என அவள் சொல்லப் பட்டிருக்கிறாள். துன்பத்தை வென்று அகற்றக் கூடியவள் அவள். அதுபோல உங்கள் அருகில் தொந்தரவுக்கு ஆட்பட்டு விடுவிக்க எழுந்து கொண்டிருப்பாள் ஒருத்தி. அவளுக்கும் உதவலாம். முன்னது சற்று சுற்றி வளைத்து சென்றடைவது. இது நேரடியானது.

அன்பால் நம்பிக்கையால் ஏமாற்றப்பட்டோர் இசக்கி அம்மை சூழப்பெற்றவர்கள். திருப்பாதம் தொழுதல் நலம்.

$$$

Leave a comment