லோகமாதா ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கர்

-வ.மு.முரளி

இந்திய வரலாற்றில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசாட்சி புரிந்திருக்கின்றனர். இதற்கான அண்மைக்கால உதாரணம் தான், முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்து, ஹோல்கர் சமஸ்தானத்தை ஆண்ட ராணி அஹில்யாபாய் ஹோல்கர்.

மராட்டியப் பேரசின் பேஷ்வா இரண்டாவது பாஜிராவ் ஆட்சிக்கு உள்பட்ட சமஸ்தானமான  இந்தூரின் சுபேதார் மல்ஹர்ராவ் ஹோல்கரின் மருமகளாக வந்த ஒரு கிராமத்துச் சிறுமி, அந்த சமஸ்தானத்தின் ராணியாக மாறியதும் அவர் நிகழ்த்திய சாதனைகளும் வியக்கச் செய்பவை. கட்டிய கணவனும் பெற்ற பிள்ளையும் செய்திருக்க வேண்டிய அரசாட்சியை, அவர்களது இழப்பைத் தாங்கிக்கொண்டு அற்புதமாக நிறைவேற்றியவர் அஹில்யாபாய்.

அது மட்டுமல்ல, மராட்டியப் பேரரசுக்கு தடையாக இருந்த ராஜபுத்ரர்கள், மொகலாயர்கள் ஆகியோருடன் தேவையான நேரத்தில் மோதவும், சமரசம் செய்துகொள்ளவும் அவர் தயங்கவில்லை. அவரது போர் வியூகங்களும், மராட்டியப் பேரரசின் பல்வேறு பகுதிகளை நிர்வகித்த சர்தார்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவும் வியக்க வைக்கின்றன.

இவை அனைத்தையும்விட, நாடு முழுவதிலும் அந்நியர்களால் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட புனிதத் தலங்களை புனர் நிர்மானம் செய்வதிலும், புனித யாத்திரீகர்களுக்கான வசதிகளைச் செய்வதிலும்  அவர் காட்டிய அக்கறை, அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.  இதற்காக தனது அரசு செல்வாக்கையும் சொந்தப் பணத்தையும் அவர் பயன்படுத்தினார்.  

அரசு நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரம், மக்களை நேசித்த தன்மை என பல அம்சங்களிலும் ராணி அஹில்யாபாயின் ஆட்சி  தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கியது. படிக்க மிகவும் சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ள அவரது வாழ்க்கை வரலாற்று நூல் இது. ராணி அஹில்யாபாயின் முன்னூறாவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டம் நிகழும் தருணத்தில் இந்நூல் வெளியாகி இருப்பது சிறப்பு.

***

லோகமாதா ஸ்ரீ அஹில்யாபாய் ஹோல்கர்
ஆசிரியர்: சின்மயி மூல்யே
தமிழில்: பி.ஆர். மகாதேவன்.
184 பக்கங்கள்; விலை: ரூ. 200-

வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், சென்னை.
தொடர்புக்கு: 89391 49466

$$$

Leave a comment