படைவீரர்களைப் பாராட்டும் கோவை படைப்பாளர்கள் சங்கமம்!

-ஆசிரியர் குழு

கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள்  ‘கோவை படைப்பாளர்களின் சங்கமம்’ என்ற பெயரில் 25.05.2025 அன்று கோவையில் கூடி, ஒருமித்த குரலில் வெளியிட்ட தீர்மானம் இது…

நமது தேசத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட அண்டைநாடாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. இந்திய விரோதமே அந்நாட்டை அரசியல்ரீதியாக ஒருங்கிணைத்து வருகிறது என்பது வேதனைக்குரிய விஷயம். இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடத்திய மனிதத்தன்மையற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

அதிலும், சுற்றுலாப் பயணிகளின் மதம் கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது, நாட்டு மக்களிடையே மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்தவே என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், மத அடிப்படைவாதிகள் எண்ணியதற்கு மாறாக, இந்திய மக்கள் மத வேறுபாடின்றி பஹல்காம் படுகொலையைக் கண்டித்ததுடன், நிதானம் காத்து, தேசிய ஒருமைப்பாட்டுக்கு வலுவான அரணாகவும் திகழ்கிறார்கள். அந்த நாசகாரச் செயலைச் செய்த கயவர்களுக்கு இந்திய அரசு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, எவ்வித மத பேதமுமின்றி எதிரொலித்த ஒற்றைக் குரலாக இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, அந்த பயங்கரவாதச் செயலைக் கண்டித்ததுடன், அதனை ஆதரிப்போருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானைக் கண்டிக்கும் வகையில், சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் ரத்து, இரு தரப்பு தூதரக உறவுகள் குறைப்பு, விசா நிறுத்தம் உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. என்றபோதும், பஹல்காம் படுகொலைக்குக் காரணமான ‘லஷ்கர்-இ-தொய்பா’ உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை.

எனவே, பயங்கரவாதிகளின் சதிச்செயலுக்கு உடந்தையாக இருக்கும் பாகிஸ்தானுக்கு படிப்பினை அளிக்கும் வகையில் தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டது. அந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ (குங்குமத் திலக நடவடிக்கை) என்ற பெயரும் சூட்டப்பட்டது. அதன்படி, பாகிஸ்தானுக்கு நமது ராணுவம் தகுந்த பதிலடியை கடந்த மே 7- 10 தேதிகளில் அளித்தது.

மே 7ஆம் தேதி அதிகாலையில், பாக். எல்லைக்குள் ஊடுருவிய நமது விமானப்படை விமானங்கள் பயங்கரவாதிகளின் 11 பயிற்சி முகாம்களை ஏவுகணைகள், குண்டுகளால் தாக்கின. இந்தத் தாக்குதலில் சாதாரண குடிமக்களோ, ராணுவத்தினரோ ஒருவர்கூடத் தாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால், அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இந்திய எல்லைகளில் பாக். தரைப்படையினர் பீரங்கித் தாக்குதல் நடத்தினர். அதில் வீரர்கள் உள்பட 16 இந்தியர்கள் பலியாகினர். எனினும், வான்வெளியில் பாக். ராணுவம் நடத்திய நூற்றுக் கணக்கான ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள், நமது வான்வெளி பாதுகாப்பு அமைப்பால் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டன.

மேலும் இந்தியாவின் பெரு நகரங்களைத் தாக்கிய பாகிஸ்தானுக்குப் பாடம் புகட்டும் விதமாக, அடுத்த நாட்களில் பாக். ராணுவ படைத்தளங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள், அந்நாட்டை நிலைகுலையச் செய்தனர். அதன்  விளைவாக, அந்நாட்டின் ராணுவப் பிரதிநிதி சண்டை நிறுத்தம் கோரி மே 10ஆம் தேதி அமைதிக் கொடி பிடித்தார். நமது அரசும் அதனை ஏற்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நிறுத்தியுள்ளது.

உண்மையில், இந்தியாவுக்கு அண்டைநாடு மீது போர் தொடுக்க விருப்பமில்லை. அதேசமயம், அந்நாட்டின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்தவும், அந்நாடு திருந்த ஒரு வாய்ப்பளிக்கவும் தான், அந்நாட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை சீனா, துருக்கி, அஜர்பைஜான் தவிர்த்த உலக நாடுகள் அனைத்தும் ஆதரித்துள்ளன.

பஹல்காமில் பலியான இந்திய சகோதரர்களின் ஆன்மா நற்கதி அடையவும், இனியொரு பயங்கரவாதத் தாக்குதலை பாரதம் பொறுத்துக் கொள்ளாது என்று காட்டவும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டிருக்கிறது.

இது போர் அல்ல. நமது ராணுவத்தின் துல்லியத் தாக்குதல் மட்டுமே. இந்த நடவடிக்கையில் பாக். ஆதரவு பெற்ற சுமார் 300 பயங்கரவாதிகள், நூற்றுக்கணக்கான பாக்.வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மிகவும் குறைந்த உயிர்ச்சேதத்துடன், அதிநவீனப் போர் முறையில், நான்கே நாட்களில் பாகிஸ்தானின் ராணுவக் கட்டமைப்பை நமது வீரர்கள் நிர்மூலம் செய்துள்ளனர். இந்த யுத்த நடவடிக்கை இந்திய ராணுவத்தின் வெற்றித் திலகமாக மிளிர்கிறது.

பஹல்காம் படுகொலையில் பலியானோருக்கு நீதி கிடைக்கும் வகையிலும், பயங்கரவாதிகள் என்றும் மறக்க இயலாதவாறு தண்டனை பெறும் வகையிலும், நமது படைவீரர்களின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சாகசம் படைத்திருக்கிறது. நமது ராணுவத்தின் தீரம் மிகுந்த வீரத்திற்கு நாடு கடமைப்பட்டிருக்கிறது. நமது ராணுவம் சுதந்திரமாகக் களமாட அனுமதித்த இந்திய அரசும் பாராட்டிற்குரியது.

பயங்கரவாதத்தால் உலக நாடுகள் பலவும் பெரும் நாசத்தைச் சந்தித்து வரும் வேளையில், அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பதை இந்திய ராணுவம் செயல்முறையில் நிரூபித்திருக்கிறது. இதற்கு நன்றி கூறுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். அதேபோல, நாட்டிற்குச் சவாலான இந்தக் காலகட்டத்தில் நமது அரசியல் வேற்றுமைகளை மறந்து, அரசுக்கும் ராணுவத்துக்கும் உறுதுணையாக நிற்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.

கலைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் ஆகியோர் சமூகத்தின் மனசாட்சியாகத் திகழ்பவர்கள். எனவே, நமது படைவீரர்களின் பராக்கிரமத்தை மெச்சி மகிழ்வது, நமது உரிமையும் கடமையும் ஆகும். அதன்படி, கோவையில் செயல்படும் படைப்பாளர்கள் அனைவரும், நமது அரசின் செயல்பாட்டையும், படைவீரர்களின் தீரத்தையும் மனமாரப் பாராட்டுகிறோம்.

இத்தருணத்தில், இந்தியா மீதான பகையைக் கைவிட்டு, சொந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்துமாறு நமது சகோதர நாட்டிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் சதிகள் எதுவும் எக்காலத்திலும் நிறைவேறாது என்பதை அந்நாட்டிற்கு உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பஹல்காமில் பலியான நமது சகோதரர்கள், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த நமது வீரர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

நமது முப்படைகளின் நிகரற்ற வீரத்திற்கும், மக்களாட்சியின் மாண்புக்குக் கட்டுப்பட்ட அதன் சீரிய செயல்திறனுக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திருநாடு!

$$$

One thought on “படைவீரர்களைப் பாராட்டும் கோவை படைப்பாளர்கள் சங்கமம்!

Leave a comment