‘ஆபரேஷன் சிந்தூர்’ விடுக்கும் செய்தி

-வானதி சீனிவாசன்

ஆபரேஷன் சிந்தூரின் உலகளாவிய செய்தி என்ன என்று,  ‘தினமணி’ நாளிதழில் வெளியான இக்கட்டுரையில் விளக்குகிறார் பாஜக மகளிரணியின் தேசியத் தலைவி திருமதி வானதி சீனிவாசன்…

பல நூறு ஆண்டுகள் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு, 1947இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இவ்வளவு பெரிய நாட்டை, இயற்கை வளம், அறிவாற்றல், ஆன்ம பலமுள்ள மக்களைக் கொண்ட நாட்டை, அப்படியே கொடுத்தால் உலக வல்லரசாகி விடுவார்கள் என இங்கிலாந்து அரசு நினைத்தது. அதனால்தான், முஸ்லிம்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற, ‘முஸ்லிம் லீக்’கின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவை இரண்டாகப் பிளந்தனர். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது.

இதனால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து பல கோடி ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதனால், ஆனந்த கண்ணீரோடு பெற வேண்டிய சுதந்திரத்தை, ரத்தக் கண்ணீரோடு பெற்றோம்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராக, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபபாய் படேலின் உறுதியான நடவடிக்கையால் இன்றைய இந்தியா கட்டமைக்கப்பட்டது. ஆனால், முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு செய்த சில அரசியல் பிழைகளால்,  ஹிந்து மன்னரின் ஆட்சியின்கீழ் இருந்த காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் அபகரித்துக் கொண்டது.

அதோடு நிற்காமல் இந்தியாவின் பிரிக்க முடியாததொரு அங்கமான காஷ்மீர் பள்ளத்தாக்கையும் அபகரிக்கும் நோக்கத்தில், பயங்கரவாதச் செயல்களை, பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.

‘இந்தியாவுடன் நேரடியாக மோதி ஒரு நாளும் வெல்ல முடியாது’ என்பது பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்திற்கும் தெரியும். அதனால்தான், பல பயங்கரவாதக் குழுக்களுக்கு பணம். ஆயுதம், பயிற்சி கொடுத்து அவர்கள் வாயிலாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது.

இப்படி பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம், இந்திய அரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிடம், பாகிஸ்தானின் பயங்கரவாதப் பின்னணியை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தும். உலகின் பல முக்கிய நாடுகளிடமும், பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்களுக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களை வழங்கும்.

ஆனால், இவையெல்லாம்,  ‘கிணற்றில் போட்ட கல்லாக இருக்குமே’ தவிர, பாகிஸ்தானுக்கு ஐ.நா.வோ, மற்ற உலக நாடுகளோ ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்க மாட்டார்கள். மாறாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவையும், பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்ட பாகிஸ்தானையும் ஒரே தட்டில் வைத்து, இருவரும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டும்; சமாதானம் செய்ய வேண்டும் என போதனை செய்வார்கள். இதுதான் காலங்காலமாக நடந்து வந்தது.

1999இல் இந்தியாவின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அப்போதும், அமைதி பேச்சு நடத்துமாறு உலக நாடுகள் போதித்தன. ஆனால், யாருக்கு என்ன மொழி தெரியுமோ, அதே மொழியில் பதிலடி கொடுக்க வேண்டும் என, அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முடிவெடுத்தார். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியால், கார்கில் போரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

கடந்த 2008 நவம்பர் 26இல் கடல் வழியாக இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் மஹால் பேலஸ் நட்சத்திர ஹோட்டல் உட்பட பல இடங்களில் நடத்திய தாக்குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர். அப்போது இருந்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் – திமுக கூட்டணி அரசு, வழக்கம்போலவே, கடும் கண்டனம், உலக அரங்கில் பாகிஸ்தான் தொடர்புக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தல் என அமைதி நடவடிக்கைகளோடு நிறுத்திக் கொண்டது.

கடந்த 2019 பிப்ரவரி 14இல் ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 இந்திய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். அப்போதும் இந்தியா கடும் கண்டனம், உலக நாடுகளுக்கு பாகிஸ்தானை தனிப்படுத்த கோரிக்கை என வழக்கமான நடவடிக்கைகளையே எடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், பதிலடி கொடுப்பதில் உறுதியாக நின்றார் பிரதமர் மோடி. அதன் விளைவாக நமது ராணுவம், பாகிஸ்தான் நாட்டுக்குள் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இந்தியாவின் இந்த துல்லியத் தாக்குதலைக் கண்டு உலகமே அதிர்ந்தது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அங்கு இயல்பு நிலை திரும்பியது. இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் மாதந்தோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரின் இயற்கை அழகைக் காண வரத் தொடங்கினர். இதனால், காஷ்மீர் மக்களின் பொருளாதாரம் மேம்பட்டது. இப்படி காஷ்மீர் இயல்புக்குத் திரும்பியதை பாகிஸ்தானால் பொறுக்க முடியவில்லை.

இந்நிலையில்தான், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எப்போதுமே ஆயுதங்கள் இன்றி இருக்கும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்துத் தான் கொல்வார்கள். அதுதான் பஹல்காமிலும் நடந்தது. இந்த முறை சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் மதத்தைக் கேட்டு, அவர்கள்  ‘ஹிந்து மதத்தினர்’ என்பதை உறுதிப்படுத்திய பிறகு சுட்டுக் கொன்றுள்ளனர்.

140 கோடி இந்தியர்களையும் உலுக்கிய இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பிரதமர் மோடியின் உத்தரவின்பேரில், மே 7ஆம் தேதி  ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் எதிர்த் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை துல்லியமாக குறி வைத்து நமது விமானப்படை, ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவித் தாக்கியது. இதில் 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது விமான தளங்கள், ஓடு பாதைகள், வெடிமருந்துக் கிடங்குகள், வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.

பயங்கரவாதிகளையும், அவர்களது முகாம்களையும் அழிப்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. அதனால்தான், பாகிஸ்தான் ராணுவ நிலைகள், பொது இடங்கள், குடியிருப்புகளை குறிவைத்து இந்திய ராணுவம் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. தனது சொந்த நாட்டின் குடிமக்கள் கொல்லப்பட்டால், எந்தவொரு நாடும் பதிலடி கொடுக்கும். அதைத்தான் நமது மோடி அரசும் செய்தது.

ஆனால், பாகிஸ்தான் ராணுவம், அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பத்திண்டா, சண்டிகர், உத்தராலி, புஜ் உள்ளிட்ட இந்திய ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள், டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயன்றது. அவை அனைத்தையும் இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இதற்கு நமது தொழில்நுட்பமும், தொலைத்தொடர்பு வசதிகளும் பெரிதும் கை கொடுத்தன.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் மிக முக்கியமான 9 முகாம்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது.

பாகிஸ்தானின் இதயப் பகுதியான பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் உள்ளிட்ட பகுதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதன் வாயிலாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மட்டுமல்லாது, பாகிஸ்தானின் எல்லைகளும் பாதுகாப்பட்டவை அல்ல என்பதை இந்திய ராணுவம் உலகிற்குப் புரிய வைத்தது.

ஆபரேஷன் சிந்தூர் வாயிலாக, பயங்கரவாதம் என்பது ஒரு அரசின் கொள்கையாக இருந்தால், அதற்கு நேரடி கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்பதே இந்தியாவின் கொள்கை என்பதை உலகத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிக்கும் பாகிஸ்தான் அரசையும் ஒரே நேரத்தில் தாக்கி, பாகிஸ்தானின் பயங்கரவாத கோர முகத்தை இந்தியா அம்பலப்படுத்தியது. பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய, வான் பாதுகாப்புக் கட்டமைப்புகளை, இந்திய ரஃபேல் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஹம்மர் குண்டுகளைப் பயன்படுத்தி, வெறும் 23 நிமிடங்களில் இந்திய ராணுவம் செயலிழக்கச் செய்தது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.

இதுதொடர்பாக, அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தலைவர்கள் தங்களது சுயநலத்தை வெளிப்படுத்தினாலும், ஒட்டுமொத்த இந்தியாவும் ராணுவ வீரர்களுக்கு ஊக்கமளித்தது. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக நின்றது. எத்தனை நெருக்கடிகள், சோதனைகள் வந்தாலும் நம்மைக் காக்க பிரதமர் மோடி இருக்கிறார் என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.  ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாயிலாக இந்திய ராணுவத்தின் வலிமை, தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவற்றில் இந்தியாவின் வலிமையை உலகம் அறிந்து கொண்டது.

ரஃபேல் போர் விமானங்கள், ஹார்பி டிரோன்கள், ஸ்கால்ப், ஹம்மர் ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தியது. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்களை துவம்சம் செய்தன. வானில் தாக்கக் கூடிய எஸ் – 400 ஏவுகணை, டிரோன்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என, இந்தியாவின் ராணுவத் தளவாடங்களால் பெரும் அழிவை பாகிஸ்தான் சந்தித்தது. அதனால்தான், உடனடி போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகளை அணுகியது.

2014 முதல் பிரதமர் மோடி அவர்கள் உலக நாடுகளுக்கு பயணம் செய்து ஏற்படுத்திய நல்லுறவும், இந்தியாவைப் பற்றி ஏற்படுத்திய புரிதலும், இந்த ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கை கொடுத்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள் கூட புரிந்து கொண்டுள்ளன.

இப்போது நான் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். இங்கு ஆஸ்திரேலியா அரசு அதிகாரிகள் பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் இந்தியாவின் எதிர்த் தாக்குதலைப் புரிந்து கொண்டு ஆதரவளித்ததை என்னிடம் தெரிவித்தனர். இது பிரதமர் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை, ராஜ தந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி என்பதை அனுபவபூர்வமாக என்னால் உணர முடிந்தது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் மீது தொடுக்கப்படும் எந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலையும், இந்தியா போராகக் கருதும்; பதிலடி கொடுக்கும் என்பதையும்,  ‘தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது. இனி பாகிஸ்தானுடன் பேச்சு என்றால், அது பயங்கரவாதம் பற்றியும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியும் மட்டுமே இருக்கும்’ என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

சில நாட்கள் நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்கே தாக்குப் பிடிக்காமல் பாகிஸ்தான் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.  ‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்தியாவின் ராணுவ வலிமையை மட்டுமல்ல, பொருளாதார வலிமையையும் உலகுக்குப் பறைசாற்றியுள்ளது.

  • நன்றி: தினமணி (19.05.2025)

$$$

Leave a comment