சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டம் – ஒரு பார்வை

– லக்ஷ்மி மணிவண்ணன்

தமிழகத்தில் தீண்டாமையை திராவிடமும் கம்யூனிஸமும் ஒழித்துவிட்டதாக ஒரு மாயையான தோற்றம் உண்டு. இந்தக் கானல்நீர்த் தோற்றம் உண்மையல்ல என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் நிறுவுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்… இது இவரது முகநூல் பதிவின் மீள்பதிவு….
டாக்டர் எம்.ஈ. நாயுடு

பிற ஆலய நுழைவுப் போராட்டங்கள் அத்தனைக்கும் முன்மாதிரியாக அமைந்தது சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டம். ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கும் மேலாக காந்திய சத்தியாகிரகிகளால் முன்னின்று நடத்தப்பட்ட போராட்டம் அது.

இப்போராட்டத்தின் பெருங்காலப் பகுதியை காந்தியின் ஆணைகளுக்கு உட்பட்டு எம்.ஈ. நாயுடு (டாக்டர் மீனாட்சி எம்பெருமாள் நாயுடு) ஒருங்கிணைக்கிறார். நாடு விடுதலையடைவதற்கும் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாகவே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. களத்தில் ஹிந்து வெள்ளாளர்களே இந்தப் போராட்டத்தை எதிர்ப்பவர்களாக இருந்தார்கள். பிராமணர்கள் ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை; அமைதி காத்தார்கள். அதே சமயத்தில் காங்கிரஸ் காந்திய சத்தியாகிரகிகளில் குமரிமாவட்டத்தில்  அதிகமான எண்ணிக்கையில் இருந்தவர்களும் ஹிந்து வெள்ளாளர்களே. அடுத்தபடியாக சத்தியாகிரகிகளில் பறையர்கள் இருந்தார்கள். ஹிந்து நாடார்களும் உண்டு.

நாடு விடுதலை அடைவதற்கும் முன்னரே, அதிலும் சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னரே ஹிந்து வெள்ளாளர்கள், பறையர்கள், ஹிந்து நாடார்கள் ஆகியோரை எப்படி காந்தியால் ஒருங்கிணைக்க முடிந்தது என்பது இன்றுவரையில் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எந்த சக்தி அவர்களை ஒன்று சேர்ந்து இயங்க வைத்தது? காந்தியெனும் சக்தியே அது.

ஹிந்து வெள்ளாளக் குண்டர்களே இந்தப் போராட்டத்தில் எதிர்நிலையெடுத்து சத்தியாகிரகிகளைத் தாக்குகிறார்கள். தாக்குதல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. ஒருசமயம் மட்டும் கக்கன்புதூர், காடேற்றி பகுதிகளைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட பறையர்கள் தாக்கப்படுகிறார்கள். அதன் பின்னர் ராஜாங்கமங்கலத்தைச் சார்ந்த ஹிந்து நாடார்கள்  பறையர்களின் கிராமங்களுக்கு காவல் தருகிறார்கள். சாத்தியகிரகிகள் மீது தாக்குதல் தொடுப்பது பின்னர் குறைகிறது. அல்லது இல்லையென்றாகிறது.

தாக்குதல் தொடுக்கும் ஹிந்து வெள்ளாளக் குண்டர்களுக்கு படித்த ஹிந்து வெள்ளாளர்கள் மறைவில் இருந்து ஆதரவு தருகிறார்கள். பிராமணர்களில் ஒருவர் கூட இவ்வாறு மறைந்திருந்து ஆதரித்ததில்லை.

படித்த வெள்ளாளர்களுக்கு  ‘மொட்டைக் கடுதாசி’ பழக்கம் உண்டு. பக்கத்து வீட்டுக்காரன் சரியில்லை என்று எமனுக்கும்கூட மொட்டைக் கடுதாசி போட்டுவிட்டு, திருவாசகம் படித்தபடி ஏகாந்தமாக திண்ணையில் அமர்ந்திருப்பார்கள். அதனாலேயே சாதாரண நாட்டுப்புற மக்களிடம்  ‘படித்தவன் மொட்டைக் கடுதாசி போடுவான்’ என்றோரு நம்பிக்கை இங்குண்டு.

பிராமண எதிர்ப்பில் அதிக நாட்டம் கொண்ட  ‘நெல்லைக் கண்ணன்’ வகையறா ஹிந்து சைவ குக்கிராமங்களுக்குள் செருப்பணிந்தோ,தலையில் முண்டாசு கட்டியோ கன்னியாகுமரி மாவட்டத்தில்  பிற சாதிகள் முப்பதாண்டுகளுக்கு முன்பு வரையில் செல்ல முடிந்ததில்லை என்பதே உண்மை. கட்டி வைத்து சுற்றியிருந்து வெற்றிலை போட்டு முகத்தில் எச்சில் துப்பும் பழக்கம் அவர்களிடமிருந்து. இந்த பழக்கம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்ட தெங்கம்புதூர் வெள்ளாளக் குடியிருப்புப் பகுதியில் தான் மாணவர்களை சாதியால் புறக்கணிக்காத சாஸ்தாங்குட்டி பிள்ளை போன்றவர்களும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கட்ட சத்தியாகிரகிகளின் போராட்டத்தின் போதும் ஏராளமான மொட்டை கடிதாசிகள் காந்தியைச் சென்றடைகின்றன. கடிதங்களின் சாராம்சம் ஒன்றுதான். சத்தியாகிரகிகள் அத்துமீறல்களில் வன்முறையிலும் ஈடுபடுகிறார்கள் என்கிற பொய்யான குற்றச்சாட்டு ஒன்றே அனைத்து கடிதங்களிலும் அடிநாதம். மேலதிகமாக  ‘இதனை நீங்கள் ஆதரித்தால் உங்கள் நன்மதிப்பு கெடும்’ என்கிற உபதேசம். காந்தி என்கிற ராக்ஷஸனுக்கு இந்தக் கடிதங்கள் எல்லாம் எந்த நோக்கத்தின் அடிப்படையில் எங்கிருந்து வருகின்றன என்பது புரியாமலா இருந்திருக்கும்? எனினும் அனைத்தையும் நாயுடு அவர்களுக்கு அனுப்பி ஆய்வு செய்து அறிக்கை தருமாறு பணிக்கிறார். இதில் ஏராளமான ருசிகரத் தகவல்கள் உண்டு.

வெள்ளாள ஹிந்து குண்டர்களுடன் இணைந்து பறையர் பகுதிகளில் தாக்குதல்களுக்கு ஒரு காவல் ஆய்வாளர் உடந்தையாக இருப்பதாக நாயுடு அவர்கள் காந்திக்கு எழுதிய பதிலில் குறிப்பிடுகிறார். காந்தி அந்த ஆய்வாளரை சந்திப்பதற்காக சுசீந்திரம், அதாவது நாகர்கோயில் வருகிறார். இந்தியா முழுமைக்கும் விடுதலைக்கான வரலாற்று நாயகனான ஒருவர் தன்னைப் போன்ற ஒரு எலியைப் பார்க்க வருவதை, அந்த காவல் ஆய்வாளர் எப்படி எதிர்கொண்டிருப்பான்?  யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

காந்தியின் முன்பாக எழுந்தே நிற்கிறான் அந்த காவல் ஆய்வாளன். காந்தி அமருமாறு சொல்கிறார். மதிப்பின் காரணமாகவும், பணிவின் காரணமாகவும் அப்படி நின்று கொண்டிருப்பதாக காந்தியிடம் அவன் கூறுகிறான். காந்தி  தான் அவனிடம் சில விஷயங்களைப் பேச வந்திருப்பதாகக் கூறி, அவன் அமராமல் நின்று கொண்டிருந்தால், தன்னால் அதனை அவனிடம் பேச முடியாமற் போய்விடும் என்று சொல்லிய பின்னர் அமருகிறான். காந்தி அறையில் இருந்த நாயுடு தவிர்த்து பிறர் அனைவரையும் வெளியேறச் சொல்கிறார்.  பின்னர்,  ஏறத்தாழ ஒரு மணிநேரம் அந்த ஆய்வாளரிடம், அவன் எப்படியொரு நாகரிக மனிதனாக இல்லாமல் காட்டுவாசியாக இருக்கிறான், பின்னாட்களில் வரலாறு முழுவதிலும் இதற்காக அவனுடைய சொந்த பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட எல்லோரிடமும் எப்படி வசை வாங்க வேண்டியிருக்கும் என்பதை காந்தி அவனிடம் விளக்கிச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்.

காந்தி அவ்விடம் விட்டு எழுகையில் ஆய்வாளரின் இருக்கை முழுதும் நனைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். காந்தி இதற்கெல்லாம் எந்த அவசியமேனும் உண்டா? என்று புன்னகைத்தவாறு வெளியேறியிருக்கக் கூடும். பின்னர் போலீஸ் அதிகாரிகள் ஒருவருக்கும் துணிவு இவ்விஷயத்தில் ஏற்படவில்லை. பின்னர் காந்தி ராணி சேது லெக்குமி பாய் அவர்களை சந்தித்துப் பேசியதெல்லாம் தனிக்கதைகள்.

இப்படி முப்பதாண்டுகாலம் நடைபெற்ற சத்தியாகிரகிகளின் சுசீந்திரம் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் மதராஸ் காங்கிரஸ் பிரதிநிதியாக ஒருநாள் அரைமணிநேரம் ஈ.வே. ராமசாமி கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். கூடங்குளம் போராட்டத்தில் ஒருநாள் அரைமணிநேரம் விஜய்காந்த் கலந்து கொண்டு  “மக்லே உங்களை ஒன்றும் செய்யமுடியாது”  என்று பேசிவிட்டுச் சென்றார் பார்த்தீர்களா, அப்படி…

கம்யூனிஸ்டுகளுக்கு இந்தப் போராட்டத்திலும் பங்கில்லை. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த போராட்டத்தையும் இதற்கு இணையான போராட்டமாகக் கொள்ளலாம். அதிலும் அவர்களுக்குப் பங்கில்லை.

யோசித்தால் ஒன்றிலும் இங்கே அவர்களுக்குப் பங்கில்லை என்பதே உண்மை. ஆனால் எல்லோரும் தின்று சப்பிப் போட்ட நொங்கை கையில் எடுத்து வைத்துக் கொண்டு  ‘தாங்களே பனை வளர்த்து மரமேறி நொங்கு பறித்து தின்று கொண்டிருப்பதாக’ செல்ஃபி போட்டு கொள்வதில் அப்போதிருந்தே சமர்த்தர்கள் இந்த கம்யூனிஸ்டுகள்.

‘ஹரிசனன்னு பேரு வைக்க நீ யாரடா நாயே?’ என காந்தியை ரேடிக்கல் கம்யூனிஸ்டுகள் கேள்வி கேட்கும் பாடல்கள் இவர்களுக்குத் தாலாட்டுகள். எப்படி வம்சம் விளங்கும்?

$$$

Leave a comment