பிரதமர் உரைக்குப் பெருகும் ஆதரவு

-ஆசிரியர் குழு

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றிய உரை குறித்து முகநூலில் வெளியான சில பதிவுகள், இங்கே ஒரு பானை சோற்றுக்கு சில சோறுகள் பதமாக…

1. நமது வலிமையை உணர்த்தும் பேச்சு

-ஆர்.வெங்கடேஷ்

நான் பிரதமர் மோடியின் பேச்சைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவர் வெளிப்படையாக பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்தியதில்லை. இன்று, தனது உரையில் வெளிப்படையாக பாகிஸ்தானையும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அதன் நடவடிக்கையையும் கண்டித்துள்ளார்.

இரண்டு, டொனால்டு டிரம்ப்  ‘போர் நிறுத்தம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பிரதமர் மோடியோ,  ‘ஆபரேஷன் சிந்தூர்  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று மட்டுமே சொன்னார்.

பாகிஸ்தான் டிஜிஎம்ஓ, இந்திய ராணுவத் தலைவரிடம் பேசிக் கேட்டுக் கொண்டதாலேயே இந்த ஆயுதப் பயன்பாடு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தது முக்கியமானது. அதிபர் டிரம்ப்பும், ஜே.டி. வான்ஸும் இதரரும் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது என்று பரப்பப்படும் பொய்ப் பிரசாரத்துக்கு பிரதமர் கொடுத்திருக்கும் மறைமுகமான, ஆனால் தெளிவான பதில் இது.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் தொடர்பாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும் என்று அவர் தெரிவித்திருப்பது இன்னொரு முக்கியமான முன்னேற்றம். அதாவது, ஜம்மு, காஷ்மீர் பிரச்னை இன்னும் தொடர்வது போலவும், அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று பாகிஸ்தான் கோரி வருவதன் பின்னேயுள்ள அரசியலை பிரதமர் மோடி, முற்றாக நிராகரித்துள்ளார்.

மிகவும் வலிமையான பேச்சு. நமது வலிமையை உணர்த்தும் பேச்சு.

$$$

2. இரு பிரதமர்களின் பேச்சுகளில் என்ன வேறுபாடு?

-காலச்சக்கரம் நரசிம்மா

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் பேச்சுக்கும், நம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுக்கும் என்ன வேறுபாடு?

பாகிஸ்தான் மக்களுக்கு தாங்கள் வாங்கிய மரண அடி தெரியும். தலைவர்கள் அநாட்டின் நாடாளுமன்றத்தில் கதறி அழுததையும் உலகமே பார்த்திருந்தது. அதனால்  பொய் மேல் பொய் சொல்லி, தங்களுக்கு வெற்றி என்றெல்லாம்  பேசி, ஷெபாஸ் ஷரீப் தங்கள் மக்களை  சமாதானம் செய்ய முயன்றார்.

நம் மக்களுக்கு நாம் பாகிஸ்தானுக்குக் கொடுத்த மரண அடி பற்றித் தெரியும். சிரித்த முகத்துடன் உட்கார்ந்த இடத்தில் இருந்து தீவிரவாதிகளை வேரறுத்ததையும், பாகிஸ்தான் கண்களில் விரலை விட்டு ஆட்டி, ராணுவம் செயலாற்றியதையும் பார்த்திருந்தார்கள். அதனால் பிரதமர் மோடி நடந்தவற்றை மட்டும் மக்களிடம் பேசினார்.

மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற தலைவராக, துணிவுடன் உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில் பேசினார் மோடி .

எந்த நிமிஷம் என்ன நடைபெற்று, பதவிக்கு ஆப்பு வைக்கப்படுமோ  என்கிற பயத்துடன், கண்விழிகளை இடதுபுறமும், வலதுபுறமும் உருட்டி, தான் என்ன பேசுகிறோம் என்று  தெரியாமல் பேசினார், ஷரீப் .

எந்த உலக நாட்டு தலைவர் பெயரையும் மோடி சொல்லவில்லை . .

டிரம்ப், சீனா வுக்கு நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று ஷெரிப் அவர்களைக் காக்காய் பிடித்துக் கொண்டிருந்தார்.

$$$

3. கப்ரிஸ்தான் ஆகுமா பாகிஸ்தான்?

-வெங்கட்ராமன் ஸ்ரீநிவாசன்

 “பயங்கரவாதிகளுக்கு இப்போது குங்குமத்தை அழித்ததன் பாதிப்பு புரிந்திருக்கும்”

 “தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது”

 “வர்த்தகமும் பயங்கரவாதமும் ஒரே நேரத்தில் செயல்பட முடியாது”

 “அணுகுண்டு வீசும் அச்சுறுத்தல்களை இந்தியா சகித்துக் கொள்ளாது. அணுகுண்டு வீசும் நிலைகள் எங்கிருந்தாலும் அவற்றை இந்தியா தாக்கி அழிக்க முடியும்.” (கவனிக்க – எங்கிருந்தாலும்)

 “இனி பாகிஸ்தானுடன் பேசுவதாக இருந்தால் அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும்”

 “இனி ஏதாவது பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவில் நடந்தால் அதற்கு மிக வலுவான, சற்றும் மன்னிப்பற்ற பதில் தரப்படும்”…

பாரதப் பிரதமர் நரேந்திர மோதியின் தீர்க்கமான உரை.

இறுகிய முகம், வார்த்தைகளில் தகித்த உறுதி, கூர்மையான வெளிப்பாடுகள் – இதுவரை இவ்வாறான ஒரு கலவையை எவரிடமும் கண்டதில்லை.

மனதில் எழும் உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டுவர இயலவில்லை. பாகிஸ்தான் இனியாவது திருந்தினால் பிழைக்கும், இல்லையென்றால் மொத்த தேசமே கப்ரிஸ்தான் தான்.

$$$

4. பாக். திருந்தாவிட்டால், திருத்தப்படும்

-செல்வநாயகம்

டிரம்ப்புக்கு நோபல் பரிசு வாங்கணும்னு ஆசை வந்திருக்கிறது போல. யுக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – காஸா, பாரதம் – பாகிஸ்தான் என அத்தனையிலும் தன்  ‘பங்கு’ இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் ஓவராக ஆர்வம் காட்டுகிறார்.

என்றாலும் ரசிக்கவில்லை!

இன்று பிரதமர் மோதி  பேசும் போது ஒரு வார்த்தை கூட அமெரிக்கா – டிரம்ப்பின் பங்கு பற்றி எதுவும் பேசவில்லை.   “பாகிஸ்தான் எங்களிடம் கதறி அழுதது. அதனால் இந்த தற்காலிக நிறுத்தம். ஒழுங்காக நடந்தால் பாகிஸ்தானுக்கு பிரச்னை இல்லை. அடங்க மறுத்து அத்துமீறினால், மீண்டும் தாக்குவோம்” என்று சொல்லியிருக்கிறார் பிரதமர்.

 “எங்கள் பெண்களின் சிந்தூரில் கை வைத்தால் என்ன ஆகும் என்று இப்போது தெரிந்து கொள்” என்று பாகிஸ்தானிடம் எச்சரித்திருக்கிறார்.

 “இனி பாகிஸ்தானிடம் பேசினால், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவது பற்றியும், பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைப்பது பற்றியும் மட்டுமே பேசுவோம்”- என்று இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளியும் வைத்திருக்கிறார் பிரதமர்.

பாகிஸ்தான் திருந்தாவிட்டால், திருத்தப்படும்.

ராணுவத்தைப் பாராட்டியிருக்கிறார்.

விஞ்ஞானிகளைப் பாராட்டியிருக்கிறார்.

குறிப்பு: பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாதக் கூட்டத்தில் மட்டும் 10 லட்சம் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். இது போக ஜெய்ஷ் இத்யாதிகள் எனப் பல உண்டு. அந்த நாட்டின் 24 கோடி மக்களில் ஒரு கோடியாவது பயங்கரவாதத்தை  ‘தொழிலாக’க் கொண்டிருப்பவர்கள். பயங்கரவாதிகளுக்கு  ‘ஓய்வூதியம்’ கொடுக்கும் ஒரே நாடு பாகிஸ்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

சிக்கலின் தீவிரம் புரிந்திருக்கும்…

$$$

5. வாஜ்பாய் சொன்னார்… மோடி செய்கிறார்!

-ரவிசந்திரன் ஸ்ரீநிவாசன்

இன்றைய நம் பிரதமரின் உரை, ஒரு விஷயத்தை உலகுக்கு அம்பலப்படுத்தி விட்டது. உலகில் எங்கு பயங்கரவாத சம்பவம் நடந்தாலும் அதில் பாகிஸ்தானின் பங்கு உண்டு என்று சொல்லிவிட்டார். பேச்சின் தொடக்கமே பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் இந்தியா அதை அழித்தொழிக்கும் என்பதுதான். ஆக, இனிமேல் தினமும் பாகிஸ்தானில் பட்டாசு சத்தம் தான்.

அமெரிக்க அதிபர் தலையீடு, சீன சமாதானம், ரஷ்யப் பஞ்சாயத்து என்று எதையும் பொருட்படுத்தாமல், ஒரே இலக்கு பயங்கரவாத உற்பத்தித்தலம்  பாகிஸ்தான் தான் என்பதை சொன்னது சூப்பர்.

காஷ்மீரில் தாக்குதல் நடந்தது முதல் பாகிஸ்தான் என்று ஒரு முறை கூட பேசாத பிரதமர், இன்று நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் தெளிவாகச் சொல்லிவிட்டார் – பாகிஸ்தான் பயங்கரவாத உற்பத்தி நாடு என்று. தன்னுடைய உரையில் பல முறை பாகிஸ்தானைக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஒன்று மட்டும் நிச்சயம், இத்துடன் பாகிஸ்தான் அடங்கும் என்றால் அவர்களுக்கு நல்லது, மீண்டும் வாலாட்டினால், வாஜ்பாய் சொன்னதை அவரது சிஷ்யன் மோடி செய்து காட்டிவிடுவார்.

அன்று கார்கில் யுத்தத்தின்போது அன்றைய அமெரிக்க அதிபரிடம் வாஜ்பாய் சொன்னது இது:  “பாகிஸ்தான் அணு ஆயுதத்தை எங்கள் மீது பயன்படுத்தினால் எங்களுக்கு சிறு பகுதி மட்டும் பாதிக்கும், ஆனால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானே அதன் பிறகு இருக்காது” என்றார் வாஜ்பாய். ஆனால் இப்போது அவரது சிஷ்யன் மோடி நிரூபித்து விட்டார்,  “நம் நாட்டில் சிறு பகுதி கூட பாதிக்காது, அதேசமயம், மொத்தமாக உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது” என்று உலகுக்கே காட்டிவிட்டார்.

பக்தன் வேண்டுதல் தான் கேட்டது கிடைக்கும். ஒரு தேச பக்தனின் பிரார்த்தனை உலகுக்கே வழிகாட்டும். தேசத்தைத் தாண்டி எதுவும் இல்லை என்ற வாஜ்பாய், இன்றைய பிரதமர் மோடி .

$$$

Leave a comment