இடதுசாரி நரிகளின் அமைதி ஓலம் – 3

-அரவிந்தன் நீலகண்டன், முரளி சீதாராமன், பி.ஆர்.மகாதேவன்

வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான் மீது பாரத ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ அந்நாட்டைப் பந்தாடிவிட்டது. இந்நிலையில் நமது ராணுவத்தினரின் தியாகத்தையும் அரசின் உறுதியையும் கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இடதுசாரி கருத்தியல் சார்ந்த சிலர், எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த கழிசடைக் கும்பலைக் கண்டிக்கும் நேர்மையாளர்களின் முகநூல் பதிவுகள் தொகுக்கப்பட்டு, நமது தளத்தில் பதிவாகின்றன… இது மூன்றாம் பகுதி…

காண்க: 

1. கையெழுத்திடாதவர்களுக்கு வணக்கங்கள்!

-அரவிந்தன் நீலகண்டன்

போர் என்பது எந்த நிலையிலும் விரும்பப்படும் ஒன்றல்ல என்பது உண்மை. போரைத் தவிர்க்கவே எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். இப்போதும் போர் நிற்க வேண்டுமென்பதே என் விருப்பம்.

ஆனால் இப்போது பாரதம் செய்வது போரல்ல. நியாயமான தற்காப்பும், கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதும்தான்.

2008 இல் மன்மோகன் சிங் அரசு நடந்தது போல மோடி அரசு நடந்திருக்கலாம். ஆனால் அப்படி நடந்திருந்தால், தொடர்ந்து பயங்கரவாதச் செயல்கள்  – குறிப்பாக அது போன்ற பெரும் தாக்குதல்கள்- நடந்து கொண்டே இருந்திருக்கும். 2008 முதல் 2014 வரை அப்படித்தான் நடந்தன. யூரி தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் பதிலடியால் மட்டுமே 2019 வரை அது போன்ற பெரும் தாக்குதல்கள் நடந்தேறவில்லை. பின்னர் புல்வாமா. அதன் பிறகும் இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது. அதன் பிறகு 2025 இல் பஹல்காம் தாக்குதல்.

மன்மோகன் அரசு போன்ற நிலைபாட்டை மோதி எடுத்திருந்தால், உண்மையில் இன்னும் அதிக அப்பாவி இந்திய உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும். அவர்களுக்கு நீதியும் கிட்டியிருந்திருக்காது. எனவே மோதியின் அரசின் இந்த வெளிப்படையான பதிலடி, உயிரிழப்புகளைத் தவிர்த்துள்ளது.

பயங்கரவாதம் மூலம் அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் நடத்தும் இந்த மனிதத்தன்மையற்ற போரில், மோடி அரசின் பகிரங்க பதிலடியே மிகவும் யதார்த்தமான அகிம்சை.  அந்தப் போரை நிறுத்தச் சொல்வதே உண்மையில் மனிதத்தன்மையற்ற வக்கிர வன்முறை;  மனித நேயமற்ற ரத்ததாகம்.

போருக்கான சூழலை உருவாக்கியது, போரை உருவாக்குவது பாகிஸ்தான். பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத மையமாகச் செயல்படும் நாட்டையும் பாரதத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பேச ஆரம்பிக்கும் எவரும் தம் பாரத வெறுப்பையும் பாகிஸ்தானிய ஆதரவையும் காட்டிவிடுகிறார்கள். அதற்கு மேல் அங்கே இருப்பதெல்லாம் வெறும் மேனாமினுக்கிப் பூச்சுகள் மட்டும்தான்.

எனவே அந்த பெயரளவிலான போர் நிறுத்த அறிக்கை என்பது ஹிந்து விரோத, பயங்கரவாத ஆதரவு மட்டுமேதான். அதில் கையெழுத்திட்ட ஒவ்வொருவரும் பயங்கரவாத ஆதரவு வக்கிரத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள் அவ்வளவுதான்.

ஆனால் இவர்களில் கணிசமானவர்கள் தமிழ்நாட்டின் பெயரறிந்த இலக்கியவாதிகள், கலை ஆர்வலர்கள், கலை-இலக்கியச் செயல்பாட்டாளர்கள்; பாலூற, தேனூற, மானுட நேயத்தைப் பேசுகிறவர்கள்;  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு முதல் நேற்று தோன்றிய விஷ்ணுபுரம் வரை என எல்லா இலக்கிய அமைப்புகளின் முகங்கள், தோள்கள், கால்கள், இன்ன பிற அவயங்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் மனிதநேயத் தோல் போர்த்திய ஓநாய்கள். மனித சாவுகளை ரகசியமாக ரசிப்பவர்களென்றே கருத வேண்டியுள்ளது – இறப்பவர்கள் ஹிந்துக்கள் என்றால். மத அடையாளம் கேட்டுக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்றால், இறந்தவர்களின் மத அடையாளம் தெரிந்தே மகிழ்வதையும் மாரடிப்பதையும் கொள்கையாகக் கொண்டு வாழும் இந்த இலக்கியவாதிகளை என்னவென்று சொல்ல?

இலக்கியத்தை இடதுசாரிகள் என்றுமே உள்ளார்ந்த மதிப்புக் கொண்ட ஒன்றாகக் கண்டதில்லை. அது பிரசார ஆயுதம். அவ்விதத்தில் அதனை அவர்கள் உதாசீனப்படுத்தவும் இல்லை. அவர்கள் அதன் ஆயுத முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள். உளவியல் வியூக வகுப்பில் இலக்கியம் பெரும் ஆயுதமென கசடறத் தெரிந்து கொண்டவர்கள். எனவே இயக்க ரீதியாக இலக்கியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் உக்திகளை உயிரைக் கொடுத்து வளர்த்தார்கள்.

கலை இலக்கிய பெருமன்ற நிகழ்வுகளுக்கு சிறுவயதிலிருந்தே சென்றிருக்கிறேன். உண்மையில் கல்லூரி இளங்கலை மாணவனொருவன்  ‘வாரமலர் துணுக்கு கவிதை’ தரத்தைத் தாண்டி ஒரு கவிதை எழுதினால் அதனை வாசிக்க நல்ல தளமாக அவனுக்கு அன்று இருந்தது இடதுசாரி தளம் மட்டும்தான். எனக்கு நன்றாக நினைவிருப்பது ஆரல்வாய்மொழியில் ஒரு சிறிய கூடமொன்றில் நடந்த கலைஇலக்கிய அமைப்பின் கூடுதல். செந்தீ நடராசன் ஐயா அவர்கள் அதில் பங்கு கொண்டிருந்தார். அங்கே கல்லூரி இளங்கலை மாணவர்கள் சிலர் கவிதைகளை வாசித்தார்கள். அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கின்றன:  

‘ரொம்ப படிமத்துக்கும் தனிப்பட்ட உணர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்குறீங்க. இது சுந்தர ராமசாமி பாணி கவிதை. நல்லா இருக்கு. நல்ல சாத்தியங்கள் தெரியுது. ஆனால் மானுட முன்னேற்றத்துக்கான கவிதைன்னு சொல்ல முடியாது.’ பின்னர் ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது. அது கோல்வல்கரையும் ஹிட்லரையும் ஒப்பிட்டு. அதை வாசித்த பிறகும் செந்தீ நடராசன் சொன்னார், ‘கோல்வால்கர் அவரளவில் சிந்தனையாளர். அவர் சொன்னவற்றை அவரது வார்த்தைகளிலேயே ஆதாரபூர்வமாகச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் கட்டுரைக்கு மதிப்பிருக்காது.’ அந்த மாணவrகள் இப்போது எங்கிருக்கிறார்கள் தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட எண்ணற்ற கொள்கை ஆற்றுப்படுத்துதல்களை இடதுசாரிகள் பல பத்தாண்டுகளாகச் செய்தார்கள்.

மெல்ல மெல்ல இதுதான் கலை, இதுதான் இலக்கியம் என்கிற மன மண்டலத்தை உருவாக்கி அதனைப் பரப்பினார்கள். மக்கள் பிரச்னைகளையும் கலைவடிவங்களையும் ஒருங்கிணைத்தார்கள். அதே நேரத்தில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மூலம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அவர்களுக்கு வலுவான அதிகார வலைப்பின்னல்களும் இருந்தன.

விரைவில் மற்றொரு மாற்றமும் நிகழ்ந்தது. வர்க்க ரீதியான தங்கள் நிலைப்பாட்டை திராவிட இயக்கம் போன்ற ‘வெற்றிகரமான’ வெகுஜன இயக்கங்களுடன் இணைக்க ஆரம்பித்தார்கள். இந்த இருள்- உரு மாற்றம் 1990களின் நடுவில் ஆரம்பித்தது எனலாம்.

திராவிடம் ஏற்புடையதாயிற்று. உண்மையில் உலகமெங்கும் அதிகாரத்தில் மார்க்சியமானது இனவாதக் கோட்பாடுகளை தழுவியே செயல்படுகிறது.

‘நாஸிகளை எதிர்த்ததில் முன்னணியில் இருந்த மார்க்சியமா இனவாதத்தை ஆதரிக்கிறது என நீ சொல்கிறாய்?’ என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் அது ஒரு விதி விலக்கென்றே சொல்லலாம். அங்கும் ஸ்டாலின்-  ஹிட்லர் ஒப்பந்தம் நீடித்திருந்ததென்றால் ஜெர்மனியின் தனிப்பட்ட மார்க்சிய செயல்பாட்டாளர்கள் நாஸி இனவாதத்தை எதிர்த்தது திரிபுவாதமாயிருக்கக் கூடும்.

சோவியத் யூனியனில் யூத வெறுப்பும், செஞ்சீனத்தில் ஹான் இனவாத கோலோச்சலும் திபெத்திய இன- பண்பாட்டு அழிப்பும் எடுத்துக்காட்டுகள். எனவே திராவிட இனவாதக் கோட்பாட்டுடன் மார்க்சியம் தன்னை இணைத்துக் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எப்படி இத்தனை காலம் இணையாமல் இருந்தார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

வலதுசாரி இன வெறுப்புக்கும் இடதுசாரி இன வெறுப்புக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு. எந்த இனவெறுப்பும் அருவெருக்கத்தக்கவை. ஆபத்தானவை. வலதுசாரி இனவெறுப்பு எளிதாக தன்னை வெளிக்காட்டிவிடும். நாம் அதனை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்; எதிர்க்க முடியும். ஆனால் இடதுசாரி இனவெறிக் கோட்பாடு அப்படியல்ல, அது சமத்துவம், சமூக நீதி என பல பூச்சுகளுடன் வரும். சுருக்கமாக, வெற்றிகொண்டானின் பேச்சில் இனவாத வெறுப்பை நீங்கள் எளிதாக இனம் காண முடியும். சு.வெங்கடேசனின் பேச்சில் அதை இனம் காண்பது கடினம். (ஆனால் அந்த இடைவெளி சுருங்கி வருவது மற்றொரு விடயம்).

எனவே இப்போது சிறு பத்திரிகைகள் மூலமும் எண்ணற்ற முற்போக்கு கலை இலக்கிய பயிற்சி முகாம்கள் மூலம் பல பத்தாண்டுகளாக வளர்க்கப்ப்ட்ட இலக்கிய ஆயுத மனமண்டலம் திராவிட அதிகார அரசியலுடன் கச்சிதமாக இணைக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் சிறு பத்திரிகைகளாக இருந்தவை பெரும் இலக்கிய அதிகார நிறுவனங்களாக மாறின; வன்முறைக்கு தயங்காதவையாக மாறின; சர்வதேசத் தொடர்புகளுடன் இலக்கிய டைரனோசரஸுகளாகப் பிளிறின. சுந்தர.ராமசாமி போன்றவர்களும் அவர்களின் வாரிசு ஸ்தாபனங்களும் கூட இந்த மாற்றத்தில் ஐக்கியமாகத் தயங்கவில்லை. இன்னும் சொன்னால் காலச்சுவடே இந்த மாற்றத்தை வழிநடத்தியதில் ஒரு முன்னோடியாக விளங்கியது எனச் சொல்லலாம்.

இன்று நீங்கள் காணும் மேல்பூச்சில் போரெதிர்ப்பும், உள்ளே கனன்று வடியும் சீழ் பிடித்த திராவக வெறுப்பும் கொண்ட அறிக்கையில் இத்தனை இலக்கியவாதிகள் கையெழுத்திட்டிருப்பதன் பின்னணி இதுவே.

இவர்கள் இலக்கிய உக்திகள் கைவரப் பெற்றவர்கள்; கலைவடிவங்களில் செய்நேர்த்தி உடையவர்கள். திரைப்பாட்டுக் கூலிகளான வைரமுத்துவும் வாலியும் எழுதும் பல்லாயிரம் குப்பை ஆபாச வரிகளிலும் கூட ஓரிரு நல்ல வரிகள் அமைந்துவிடுவது போல, இவர்களின் படைப்புகளிலும் நல்ல படைப்புகள் உண்டு.

இது போக, உண்மையிலேயே நல்ல படைப்பாளிகளுக்கு இடதுசாரிகளே மதிப்புமிகுந்த மேடைகளை அளிப்பார்கள். இத்தகைய படைப்பாளிகளுக்கு இடதுசாரிப் பார்வையே அனைத்து பிரச்னைகளிலும் கிடைக்கும். அவர்கள் தம் கலை இலக்கிய செயல்பாடுகளைத் தாண்டி பிற விடயங்களில் ஸோம்பிகளாக இருப்பார்கள்.  ‘வெள்ளையா இருக்கவன் சொன்னா உண்மை’ என்பதைப் போலவே ‘சிவப்பு சித்தாந்தக்காரன் சொன்னா உண்மை’ என நம்புகிறவர்கள்.

இவற்றையெல்லாம் தாண்டி இந்த ரத்தவெறி மானுட விரோத அறிக்கையில் கையெழுத்திடாத இலக்கியவாதிகள் சிலர் உண்டு. தாம் இலக்கியவட்டத்தில் முக்கியமான தொடர்புகளையும் நட்புகளையும் இழக்க நேரிடும் என தெரிந்தும் கையெழுத்திடாதவர்கள். அவர்களுக்கு வணக்கங்கள்.

ஹிந்துத்துவர்கள்? விடுங்கள். அவர்களின் அறிவுசார்ந்த செயல்பாடுகளைக் கண்டறியும் அளவுக்கான நுண்ணோக்கிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உண்மையில் மனிதநேயமும் தேசபக்தியும் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் என்ன செய்யலாம்? பகவத் கீதையில் சாங்கிய யோகத்தின் 47 ஆவது சுலோகத்தை ஒருமுறை சொல்லிக் கொள்ளுங்கள்.

$$$

2. முக்கால் அறிவுஜீவிகளின் மனிதநேயப் புலம்பல்

-முரளி சீதாராமன்

அது எப்படியடா உங்களுக்கு 26 அப்பாவியான, நிராயுதபாணியான ஹிந்துக்கள் – துப்பாக்கி முனையில் – அவர்கள் ஹிந்துக்கள் என்ற ஒரே காரணத்துக்காக – இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட போது பொங்கி வராத மனிதநேயம்…

அதற்கு பதிலடியாக அரசு ராணுவ நடவடிக்கை எடுக்கும்போது மட்டும் எப்படியடா இப்படிப் பொங்குகிறது?

எவன் அடிவாங்கித் துடித்து – பழி வாங்கும் வேகத்தில் இருக்கிறானோ அவன் கையையே பற்றிப் பிடித்து தடுத்து –  ‘சண்டை போடாதே, சண்டை போடாதே!’- என்று மொண்ணை மத்தியஸ்தம் பேசுவது போல இப்போது எங்கிருந்தடா வந்தது போர் குறித்த  ‘மனித நேயப்’ பொங்கல்?

என்னடா பாவம் செய்தார்கள் அந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள்?

கண்ணெதிரே கணவனைச் சுட்டவனிடம் –  ‘எங்களையும் சுட்டுவிடு’- என்று தன்னையும் குழந்தைகளையும் காட்டிக் கதறினாளே அந்த மனைவி?

அதற்கு அந்த இஸ்லாமிய பயங்கரவாதி அந்தத் தாயை சுடாமல் விட்டுவிட்டு –  ‘போய் மோடியிடம் சொல்!’- என்றானே அதைக் கூட  ‘மனித நேயம்’ என்பீர்களோ முற்போக்கு வெண்ணைகளா?

“பாருங்கள் அந்த அம்மா தன்னையும் தனது குழந்தைகளையும் சுடச் சொல்லிக் கேட்டும் – பெண்களையும் குழந்தைகளையும் சுடாமல் – மோடியிடம் போய்க் கூறுமாறு கண்ணியமாக அனுப்பி வைத்த மனிதநேயம் மிக்க அந்த இஸ்லாமியர்!”- என்று வாதாடினாலும் வாதாடுவீர்கள், உங்களைப் போன்ற முக்கால் அறிவுஜீவிகள்!

ஏதடா உங்கள் பார்வையில் மனிதநேயம்?

இன்றைக்கு  ‘போர் கூடாது – போர் என்பது மனித நேயத்துக்கு முரணானது!’- என்று  ‘மனிதநேயக்’ கஞ்சியை வடித்து சப்பும் நீங்கள்…

பழந்தமிழ் மன்னர்களின் வீரத்தையும், போரில் அவர்கள் காட்டிய சாகசங்களையும் பேசியே வளர்ந்தவர்கள்தானே?

‘கனக விஜயனின் முடித்தலை எரித்து கல்லினை வைத்தான் சேரமகன்! இமயவரம்பில் புலிக்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!’

‘கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை – களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை!’

(அச்சம் என்பது மடைமையடா – அஞ்சாமை திராவிடர் உடைமையடா – பாடல்)

இப்படிப் பாடிப் பாடியே – பழந்தமிழ் மன்னர்களின் வீரத்தைப் பேசிப் பேசியே வளர்ந்தவர்கள் தானேடா நீங்கள்?

இன்று எங்கே போயிற்று அந்த வீர உணர்வு?

புறநானூற்றை மெச்சிப் புகழ்ந்த உங்கள் வாய்கள், இப்போது ஏன் திடீர் என்று மனிதநேய வடிகஞ்சியை சப்புகின்றன?

ஜோஸஃப் ஸ்டாலின் இரண்டாம் உலகப் போரில்- சோவியத் யூனியனை வழி நடத்தி ஒரு கோடி ரஷ்ய உயிர்களின் தியாகத்தால் நாஜிக்களின் பிடியிலிருந்து உலகத்தையே மீட்டார் – என்று முழங்குகிறீர்களே – அப்போது உங்களுடைய  ‘மனிதநேய’ வடிகஞ்சி ஊறவில்லையா?

அதே ஜோசஃப் ஸ்டாலினும் – ஹிட்லரும் உலகப் போருக்கு முன்பாக ஆகஸ்டு 1939இல் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு – போலந்தின் கிழக்குப் பகுதியை சோவியத் ரஷ்யாவும், மேற்குப் பகுதியை ஹிட்லரின் நாஜிக்களும் பங்கு போட்டுக் கொண்டார்களே…

நீங்கள் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடும் ஜோசஃப் ஸ்டாலின் – ஹிட்லருடன் செய்து கொண்ட அந்த ஒப்பந்தம் – இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் பெயரால்  ‘மாலட்டோவ் – ரிப்பன்ட்ராப் ஒப்பந்தம்’- என்று பிரபலமாயிற்றே!

அதன்படி ஹிட்லரும் – ஜோசஃப் ஸ்டாலினும் பால்டிக் நாடுகளையும் போலந்தையும் சூறையாடி நரவேட்டை ஆடினார்களே…

அதைப் படிக்கும்போது உங்களுக்கு  ‘மனிதநேய’ வடிகஞ்சி ஊறி உடையை நனைக்கவில்லையா?

சீனாவில் GANG OF FOUR எனப்பட்ட மா-சே- துங்கின் அடிவருடிகள் நால்வர் நடத்திய  ‘கலாசாரப் புரட்சி’ கொடுமைகளின் போது உங்களுக்கு ஊறாத மனிதநேய வடிகஞ்சி – ஹிந்துக்கள் பதிலடி தரும்போது மட்டும் ஊறி வாய் முழுவதும்   நிறைகிறது!

சீனாவில் தியானென்மென் சதுக்கத்தில் போராடிய ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கொன்று குவித்த போது – உங்களுக்கு மனிதநேய வடிகஞ்சி சுரக்கவில்லை! அப்போது உயிர்களின் வலி – உயிரிழப்பின் கொடூரம் – இவை போன்ற மனிதநேய வடிகஞ்சி சுரந்து வழியாமல் சுரப்பு வாசலை செங்கொடியைக் கொண்டு இறுக்கி மூடிவிட்டீர்கள்!

இப்போது அப்பாவி ஹிந்துக்கள் கொல்லப்பட்டதற்கு நியாயம் தீர்க்கும் நடவடிக்கையை ஒரு பொறுப்புள்ள அரசு எடுக்கும் போது மட்டும்….

உங்களுக்கு மனிதநேய வடிகஞ்சி எங்கோ ஒரு சுரப்புவாசலில் சுரந்து அதை நீங்கள் சப்பியபடி – பிறரையும்  உறிந்து சப்பச் சொல்கிறீர்கள்!

நீங்கள் மனிதநேய வடிகஞ்சியை ஒரு ஓரமாக உட்கார்ந்து துளி விடாமல் உறிந்து கொள்ளுங்கள் – அது உங்கள் உரிமை.

ஆனால் இந்த தேசத்தையும் அதன் மாண்பையும் நேசிக்கும் பலருக்கும் தேவை அரசின் திடமான எதிர் நடவடிக்கைதானே தவிர – உங்களுடைய திடீர் ஞானோதய மனிதநேய வடிகஞ்சி அல்ல!

$$$

3. கறிக்கடைப் புறாக்களைப் பறக்கவிடும் தோழர்கள்!

-பி.ஆர்.மகாதேவன்


கூட்டறிக்கை கும்பல்களே,
உங்களுடைய அறச்சீற்றங்கள் எல்லாம்
சிவப்பு விளக்கு விடுதிப்பெண்ணின்
செல்ல பத்தினிச் சிணுங்கல் போலவே இருக்கிறது.

*

எத்தனைக் காலம் தான்
ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே?
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறீர்…
சமயம் பார்த்துப் பல வழிகளில் கொள்ளையும் அடிக்கிறீர்…
கிறிஸ்தவ, இஸ்லாமிய
சமயம் பார்த்துப் பஞ்சமா பாதகங்களும் புரிகிறீர்….
புத்தனைப் போலவே பொய் வேஷம் கட்டி
புரட்டுகள் பல செய்து திரிகிறீர்…
ஊருக்கே தெரிந்த உண்மைகள் எல்லாம்
உமக்கு மட்டுமே தெரியாததுபோல,
எத்தனை காலம் தான்
ஏமாறுவீர் இந்த நாட்டிலே?

*

உங்களில்
சுற்றுலா மையத்தில் படுகொலை செய்யப்பட்ட
ஹிந்து, இந்தியர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள் எவரோ
அவர்கள் மட்டுமே
போர் நிறுத்தக் கறிக்கடைப் புறாக்களைப் பறக்கவிடுங்கள்.

    உங்களில் யார்
    ஹிந்து தர்மத்தின் நல்லிணக்க நல்லம்சங்களைப் புகழ்ந்து
    ஒரே ஒரு வார்த்தை பேசியிருக்கிறீர்களோ,
    அவர்கள்
    ஹிந்து அரசியல் கட்சிகள் மீது
    ஒன்பது விமர்சனங்களைச் சுமத்துங்கள்.

    உங்களில் யார்
    பாரதத்தின் கலாசாரத்தைப் புகழ்ந்து
    ஒரே ஒரு வார்த்தை பேசியிருக்கிறீர்களோ,
    அவர்கள் மட்டும்
    இந்திய அரசுகளின் மீது
    ஒன்பது விமர்சனங்களைச் சுமத்துங்கள்.

    உங்களில் யார்
    யாழ்ப்பாண முஸ்லிம்களை அடித்து விரட்டிய…
    காட்டாங்குடி மசூதியில் தொழுகையில் இருந்தவர்களைக் கொன்று குவித்த…
    அப்பாவி ஹிந்துக்களை ஆதியிலிருந்தே கேடயமாகப் பிடித்த
    விடுதலைப் புலிகளின் வன்முறையை விமர்சித்து
    ஒரே ஒரு வார்த்தை பேசியிருக்கிறீர்களோ,
    அவர்கள்
    அஹிம்சை வழியிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு
    அழைப்புவிடுங்கள்.

    உங்களில் யார்
    வடகிழக்கு மாநில கிறிஸ்தவத்தின்
    ஹிந்து மத அழிப்புத் தீவிரவாதம் பற்றிப் பேசியிருக்கிறீர்களோ,
    அவர்கள்
    ஸ்டெய்ன்ஸ் பாதிரி படுகொலை பற்றிப் பேசுங்கள்.

    உங்கள் யார் கம்யூனிஸ ஓநாய்கள் மீது
    ஒரே ஒரு சிறு கல் எறிந்திருக்கிறீர்களோ,
    அவர்கள் ஹிந்துத்துவ காவல் பைரவர்கள் மீது கல்லெறியுங்கள்.

    உங்களில் யார்
    காந்தியார் படுகொலையைத் தொடர்ந்து
    காந்திய காங்கிரஸ் ரெளடிகளால்
    தேடித் தேடிக் கொல்லப்பட்ட
    சித்பவன பிராமணர்களின் கண்ணீர் குறித்து
    ஒற்றைச் சொல் பேசியிருக்கிறீர்களோ,
    அவர்கள் கோட்ஸேயைக் குறை சொல்லுங்கள்.

    உங்களில் யார்
    தேசத்தைத் துண்டாடி
    மதத்தின் பெயரால் ஒரு பகை நாட்டை உருவாக்கி
    அத்தனை மாவட்டங்களிலிருந்த ஹிந்து, சீக்கியர்களை அடித்து விரட்டிய
    முஹமதிய மத வெறியன் முஹம்மது அலி ஜின்னாவை
    ஒரே ஒரு வார்த்தை விமர்சித்திருக்கிறீர்களோ,
    அவர்கள்
    பதில் தாக்குதல் நடத்திய
    சீக்கிய, ஹிந்துத்துவர்களை பழித்துப் பேசுங்கள்.

    குறைந்தபட்சம்
    500 சொச்ச சமஸ்தானங்களில்
    அமைதியாக இருந்த ஹிந்துக்களைப் புகழ்ந்து
    ஒற்றை வார்த்தையேனும் பேசிவிட்டு,
    உங்கள் உளுத்துப் போன அஹிம்சை அறம் பற்றிப் பேசுங்கள்.

    உங்களில் அந்நிய சித்தாந்த கள்ள புருஷருக்குப் பிறக்காதவன் எவனோ, எவளோ
    அவர்கள் மட்டுமே
    ஆதி ஹிந்து தர்மத்தின் குறைகள் பற்றிப் பேசுங்கள்.

    உங்களில் திராவிட பிளாஸ்டிக் சேர் பற்றிப் பேசும்
    திராணியிருப்பவர்கள் எவரோ
    அவர்கள்
    இடுப்பில் துண்டு கட்டி நிற்கச் சொன்ன
    ஹிந்து தர்மம் பற்றி விமர்சியுங்கள்.

    பார்ட் டைம் உண்ணாவிரதம் செய்து போரை நிறுத்தி
    முள்ளிவாய்க்கால் ரத்தக்கறை காயும் முன்னே
    சக்கர நாற்காலியில் இலாகா பிச்சை எடுத்து,
    ராஜ பக்ஸேவுக்குப் பின்னாடையும் போர்த்தி,
    படுத்த படுக்கையாக சிகிச்சை வந்த பார்வதி அம்மாளை
    திராவிட மண்ணில் கால் ஊன்ற விடாமல்
    திருப்பி அனுப்பிய கும்பலை விமர்சித்துவிட்டு,
    போர் நிறுத்தம் பற்றியும்
    பக்கத்து நாட்டு நோயாளிக்குத் தரவேண்டிய
    மனிதநேய சிகிச்சை பற்றியும் பேசுங்கள்.

    உங்களில்
    கருணாநிதியை கருணாநிதி என்று
    உரிய பெயர் சொல்லி ஒழுங்காக அடையாளப்படுத்தியவன் எவனோ,
    அவன்
    கொத்தடிமைத்தனம் பற்றி குறை சொல்லுங்கள்.

    உங்களில்
    மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்படும் ஹிந்துக்களுக்கு ஆதரவாக
    மெழுகுவர்த்தி ஏந்தியவர்கள் எவர்களோ,
    அவர்கள்
    மணிப்பூர் அரசுக்கு மனிதநேயப் பாடம் எடுங்கள்.

    இந்த உலகில் மிக மிக அதிசயமான விஷயம்
    கண் முன்னே தினமும் மரணம் நிகழ்ந்தபோதும்
    காலமெல்லாம் வாழ்வோம் என்ற மனித எண்ணமே என்றாராம்
    சான்றோர் ஒருவர் அன்று.
    இன்றிருந்தால்
    அத்தனை முறை அம்பலப்பட்டும்…
    தாம் அனுதினமும் அறச்சீற்றம் கொள்வதாகவும்,
    அதை அகில உலகமும் நம்புவதாகவு,ம்
    தனக்குத்தானே நம்பிக்கொள்ளும் இந்தத்
    தற்குறிக்கூட்டத்தின் தன்னம்பிக்கையே
    தாங்கவே முடியாத அதிசயம் என்று சொல்லக்கூடும்.

    மானுட குலத்தின்
    அதி கேவலமான
    அதி அசிங்கமான விஷயமும் அதுவே
    என்றும் சொல்லக்கூடும்.

    $$$

    Leave a comment