-திருநின்றவூர் ரவிகுமார்

ஆர்.எஸ்.எஸ். மீதும் வீர சாவர்க்கர் மீதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.க, தி.மு.க.வினருக்கு தீராத வன்மம் உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு வீர சாவர்க்கர் மீதும் ஆர்.எஸ்.எஸ். மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது.
முத்துராமலிங்க தேவர் தமிழக அரசியலில் புறந்தள்ள முடியாத சக்தி. எனவே, தேவரை மதிக்கிறோம். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வல்கரை மதித்தார், வரவேற்றார் என்பதை மறுக்கிறோம் – என்று பொய் பிரசாரம் செய்கின்றனர் தி.க., தி.மு.க.வினர்.
சட்டமன்ற ஆவணங்கள், செய்தித்தாள்களில் வந்தவை, புகைப்படங்கள், அவரது எழுத்துக்கள், உரைகள், நூல்கள் என ஆதாரங்களுடன், அவர்களது பொய்களை அடித்து நொறுக்குகிறது இந்த நூல்.
‘காஷ்மீர் விவகாரம் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் பாகிஸ்தானியர்கள் ஆக்கிரமித்து விட்டதாக வெகுசுலபமாகச் சொல்லி விடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஆக்கிரமித்தது அவர்களின் சொந்த சக்தியால் மட்டுமல்ல, நமது இணக்கமும் சேர்ந்தேதான்’ என்று காஷ்மீர் பிரச்னையின் ஊற்றுக்கண்ணை சரியாக சுட்டிக்காட்டி, நேரு – காங்கிரஸ் – அப்துல்லாக்களை சாடுகிறார் பசும்பொன் தேவர்.
அண்மையில் நடந்த பஹல்காம் தாக்குதல் பற்றிப் பேசும்போது , ‘உள்ளூர் வாசிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த கொடூரத் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை’ என்று, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் இப்போதைய முதல்வரின் தந்தையுமான ஃபாருக் அப்துல்லா ஒப்புக்கொண்டுள்ளார்.
அரசின் மெத்தனம், புலனாய்வுத் துறையின் செயலின்மை, உள்ளூர் வாசிகள் பாகிஸ்தானிய இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தது, மதச்சார்பற்ற ஊடகங்களின் பசப்பு, என இவை அனைத்தையும் மீறி, ஒரு விஷயம் நெருடலாக உள்ளது. ‘அடையாளம் பார்க்க ஆடையை அகற்று’ என்றவுடன் எந்த விதமான எதிர்ப்பும் இன்றி ஆடையை அவிழ்த்து நின்ற ஹிந்துக்களின் செயல்.
1957 செப்டம்பர் 28 ஆம் தேதி மதுரையில் ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் , ‘அத்தனை பேருக்கும் ராணுவப் பயிற்சி கொடுக்கப்படாது போனால் இந்த தேசம் சுபிட்சமடைய மாட்டாது’ என்று பேசியுள்ளார்.
இஸ்ரேலைப் போல எல்லோருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி என்பது இந்தியாவில் இல்லை என்றாலும், குறைந்தபட்ச தற்காப்புப் பயிற்சிகள் எல்லோருக்கும் -குறிப்பாக ஹிந்துக்களுக்கு – அளிக்கப்பட வேண்டும் என்பதை முத்துராமலிங்க தேவரின் பேச்சு மட்டுமல்ல, பஹல்காம் சம்பவமும் வலியுறுத்துகிறது.
‘பாகிஸ்தான் இயற்கை உதயமல்ல. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட ஆங்கில அரசின் சூழ்ச்சிச் சின்னம்தான் பாகிஸ்தான். அது நிலைக்காது. நிலைக்கிற வரை உலகின் கீழ்க்கோடிக்கு குறிப்பாக இந்திய சுதந்திரத்திற்கு சோதனையாகவே இருக்கும்’ என்ற முத்துராமலிங்க தேவரின் தீர்க்கச்சொல்.
பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், காஷ்மீரை ஆக்கிரமித்தது தொடங்கி, காஷ்மீர் சட்டமன்றத்தின் மீது நடந்த இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல், 1990இல் காஷ்மீரில் ஹிந்து பண்டிட்கள் மீதான கொடூர வன்முறை வெறியாட்டம், நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல், மும்பை தாக்குதல், 2016 , 2019 இல் இந்திய ராணுவ தளங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அண்மையில் பஹல்காம் தாக்குதல் வரை நடந்த அனைத்தும் தேவர் பெருமகனாரின் கூற்றை நிரூபிக்கின்றன.
அவர் கூறிய ‘பாகிஸ்தான் நிலைக்காது’ என்ற கூற்றை நாம் மெய்ப்பிக்க வேண்டியுள்ளது.
***
நூல் விவரம்:
தலைப்பு: பசும்பொன் தேவர் போற்றிய ஆர்எஸ்எஸ் ஆசிரியர்: ம.வெங்கடேசன் 124 பக்கங்கள்; விலை: ரூ. 125/- வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், சென்னை. தொடர்புக்கு: 89391 49466
$$$