சங்கர மடத்தின் இளைய பீடாதிபதிக்கு வாழ்த்துகள்!

-பிரம்மரிஷியார், காலச்சக்கரம் நரசிம்மா, முரளி சீதாராமன்

அக்‌ஷய திருதியை நாளன்று (ஏப்ரல் 30) காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றிருக்கிறார். தமிழகத்தில் வழக்கம்போல சில தற்குறிகள் இந்நிகழ்வை விமர்சித்திருக்கின்றனர். அவர்களுக்கு முகநூலில் ஆன்மிக அன்பர்கள் மூவர் அளித்த பதிலடி சாலப் பொருத்தம்., அவை இங்கே நினைவுப் பதிவுகளாக…
இளைய பீடாதிபதிக்கு தீட்சை அளிக்கிறார், காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

1. சந்நியாசியின் பெற்றோருக்கு கோடி நமஸ்காரம்!

-பிரம்மரிஷியார்

தங்கள் மகன் முதல்வராக வேண்டும், அமைச்சராக வேண்டும், இன்னும் எங்கெல்லாமோ கொடிநாட்டி உச்சத்தில் இருக்க வேண்டும், அவன் பெற்றோராக தாங்கள் செல்வாக்காக வலம் வரவேண்டும் என பலர் விரும்பும் நாட்டில், சந்நியாச வாழ்வுக்கு ,  ‘இனி தனக்கும் தங்கள் மகனுக்கும் பந்தமில்லை’ என உறவறுத்து அனுப்புவதெல்லாம் எல்லாராலும் முடியாத செயல்.

தன் பிள்ளைதான் தனக்கான அடையாளம், குல அடையாளம், தன் வம்சத்தைப் பெருக்கி தன்னை கடைசி காலத்தில் விழுதுபோல காக்கும் அடைக்கலம் என்பதையெல்லாம் தாண்டி, வாழவேண்டிய வயதில் அவனை கடும் சந்நியாசம் அனுப்புவதெல்லாம் எல்லா பெற்றோராலும் முடியாத செயல்.

அது ஒரு வலி, ஒருவகை தானம், அழவேண்டிய இடமும் அதுதான்; ஆனால் சொட்டு கண்ணீர் வரக்கூடாத இடமும் அதுதான்.

அந்த வலி ஆதிசங்கரின் பெற்றோருக்கு உண்டு ,பட்டினத்தாரின் தாய்க்கு உண்டு, ரமணர், மகாபெரியவரின் பெற்றோரின் வலியும் இன்னும் பல மகான்களைப் பெற்றவர்களின் வலியும் அதுதான்.

விவேகானந்தரின் குடும்பத்தார் நிலையும் அதுதான்.

கோசலைக்காவது தன் மகனை மணக்கோலத்தில் கண்டுவிட்ட நிறைவு இருந்தது; 14 வருடத்தில் அவன் மீண்டு இல்லம் திரும்புவான் எனும் நம்பிக்கை இருந்தது.

ஆனால் இங்கே?

அந்தப் பெற்றோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து, காலமெல்லாம் இச்சமூகம் உங்களைக் காக்கும் எனும் நம்பிக்கையினைக் கொடுக்க வேண்டிய தருணமிது.

ஆதிசங்கர் தன் தாயிடம் அழுத ஸ்லோகம் ஒன்று உண்டு.

‘குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம/’

என் தாயே, ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்தாய், வந்து உன் கனவில் நான் சந்நியாஸம் பூண்டதாகக் கண்டு உறக்க அழுதாயே, அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே, அப்படியான‌ உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்.

சங்கரமடத்தில் அந்த புதிய சந்நியாசி தீட்சை பெறும் நேரம் காதில் ஒலிக்கும் ஸ்லோகம் அதுதான்; அந்த தாயின் மனநிலையும் அதுதான்.

அந்தத் தாய்க்கும் தகப்பனுக்கும் எல்லா பலமும் அருளும் பகவான் அருளட்டும், தேசமும் தேச மக்களும் அவரைச் சூழ இன்று காக்கட்டும்.

$$$

2. சங்கரமடம் என்ன தி.மு.க.வா?

-காலச்சக்கரம்  நரசிம்மா

இன்று பிறந்தவனுக்கு நேற்றைய வரலாறு தெரியாது;  நேற்று பிறந்தவனுக்கு சென்ற வாரம் இருந்த பூகோள  ரீதியான  அமைப்பு தெரியாது. 

கண்ணால் காண்பதை வைத்தும் ,  காதால் கேட்பதை வைத்தும்    பேசுவதே  இன்றைய  உலகம் .  ஏன்,  எதனால்,  எப்படி,  என்று ஆராய்ந்து பேசுவது இல்லை.  

ஆந்திராவின் அன்னவரம் பகுதியைச் சேர்ந்தவரை காஞ்சி மடத்தின் தலைமைப் பீடத்தில் அமர்த்திவிட்டார்களாம் .  ஒரே கூப்பாடு!

10,000 வருடங்களுக்கு முன்  ரஷ்யா கிடையாது;  சீனா கிடையாது .  சைனாவின்  இப்போதைய Goh   mountain (கோசிக மலை) என்று   இருந்தது .  ரஷ்யா கிடையாது .  ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பைகால்  ஏரி  மட்டுமே இருந்தது. 

அப்போது எல்லாமே பாரத வர்ஷ பரத கண்டம்தான். உத்தரம் ,  தட்சிணம் என்று தான் நிலம் பிரிக்கப்பட்டது .  காந்தாரம்  என்கிற ஆப்கானிஸ்தான்,  கேகயம் என்கிற கேசாக்ஸ்தான்,   காம்போஜம் என்கிற கம்போடியா, கலிங்கம் என்கிற  ஒரிசா,  ஸ்ரீவிஜயம் என்கிற மலயா -அனைத்துமே ,  பரத கண்டத்தின் ஒரு பகுதி தான். 

இன்று நமக்கு தலைவலியாக இருக்கும் பாகிஸ்தானும்,  நம்முடன் இருந்த பாஞ்சாலம் பகுதிதான். அசாம் பகுதி காமரூபம்.  பரத கண்டம் முழுவதற்கும் ,  கல்வியின் ஊற்றுக்கண்ணாக இருந்தது ,  நீல்நாகம் என்கிற காஷ்மீர் பகுதி . 

கால ஓட்டத்தில்,  விண்கற்கள் பூமியைத் தாக்கியதால்,  பிறகு படையெடுப்புகள் , கலாசார பாதிப்புகள் ஏற்பட்டதால்,  பரத கண்டத்தின் பூகோள எல்லைகள் மாறி விட்டன.   

இன்று பூகோள எல்லைகள் மாறி விட்டதால்,  சரித்திரம் மாறி விடுமா என்ன?

தெலுங்கானா மாநிலம்    ஐந்து வருடங்களுக்கு முன் இல்லை.  ஆந்திரா, கர்நாடகா,  கேரளா,  தமிழ்நாடு போன்ற  மாநிலங்கள்  70 வருடங்களுக்கு முன் இல்லை.  

அப்போது இருந்தது, உத்தர நாடு, தட்சிண நாடு  என்கிற கரை நாடு.  மூன்று புறம் கடற்கரைகள் இருந்ததால்  கரை நாடு  என்று பெயர் .  

வெள்ளைக்காரன்  ‘மதராஸ் மாகாணம்’ என்று  பெயர் வைத்தான்.  அதற்காக தொன்மையான கரை நாடு பெயர் காணாமல் போய்விடுமா என்ன ?  கரை நாடுதான் வெள்ளைக்காரனால்  ‘கர்நாட்’  என்று உச்சரிக்கப்பட்டு  ‘கர்னாடிக்’ என்று மாறியது. 

பெரியார் மாவட்டம் ,  அண்ணா மாவட்டம் என்றெல்லாம் பெயர் வைக்கிறோம் .  அவர்கள்   பிறப்பதற்கு முன் அந்த மாவட்டங்கள்  இல்லையா?

மொழி ரீதியான மாநிலங்கள் உருவானதே 1947 சுதந்திரத்திற்குப் பிறகுதான் .  அப்படி இருக்க,  1917இ ல் பிறந்த எம்.ஜி.ஆர். மலையாளி,  1948இல் பிறந்த ஜெயலலிதா கன்னடக்காரி என்று எப்படி கூறுகிறார்கள்? 

சுதந்திரத்திற்கு முன்பாக எல்லாமே ஒரே நிலப்பரப்புதான்.  யார் எங்கே வேண்டுமானாலும் வாழலாம் . எந்த மொழி வேண்டுமானாலும் பேசலாம்.

காலடி, ஸ்ரீபெரும்புதூர், உடுப்பி ,  மந்த்ராலயம், கலவை எல்லாம் கரை நாட்டின் பகுதிகள். அதனால்தான் அங்கே பிறந்தவர்கள் அனைவருமே ஆச்சார்யார்களாக இன்றும் திகழ்கிறார்கள். அவையெல்லாம்,  தமிழகம்,  கேரளா, கர்நாடகா என்று இன்று அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்தாலும்,  அந்த ஆச்சாரியர்களின் காலத்தை மாற்ற முடியாது.  

அரசியல் காரணங்களுக்காக பூகோள எல்லைகள் மாறலாம்.  ஆனால் வரலாறு மாறாது .  

எதற்கு இவ்வளவு விளக்கங்கள்?  ஆந்திராவில் உள்ள அன்னாவரம்  பகுதியைச் சேர்ந்தவர் எப்படி காஞ்சி மடத்தில்  தலைமை பீடத்தில் அமரலாம்?  தமிழ்நாட்டில் ஆள் இல்லையா என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள்.  

இது என்ன தி.மு.க.வா? ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் பதவியில் அமர்வதற்கு? 

பீடாதிபதிகள் சநாதன தர்ம நியதிகளைக் கரைத்துக்  குடித்திருக்க வேண்டும் .  பீடாதிபதியை,  ஒரு குடும்பம்,  ஒரு கட்சி,  ஒரு வட்டம், ஒரு மாவட்டம் என்றெல்லாம் தேர்ந்தெடுக்க முடியாது .

ஞானம் தான் பீடாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல். சநாதன ஞானம் எங்கே இருக்கிறதோ, அங்கே இருந்துதான் பீடாதிபதியைத் தேர்தெடுக்க முடியும்..  

பள்ளிப் படிப்பே அறியாத அரசியல்வாதிகள் எல்லாம் இன்று திருவேங்கடவனை தெலுங்கு கடவுள், குருவாயூரப்பனை மலையாள கடவுள் என்று சொல்லித் திரிகிறார்கள்.  

ஆந்திரா,  கர்நாடகா,  கேரளா,  தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்,  70 வருடங்களுக்கு முன்னர் தான் அமைந்தன .  

‘வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை   தமிழகத்தின் எல்லைகள்’  என்று சங்க இலக்கியங்கள் கூறும்போது ,  திடீரென்று திருவேங்கடவனை தெலுங்கு  கடவுள் என்று எப்படி முத்திரை குத்துகிறார்கள்?  அறிவை பிரயோகம் செய்வதில்லை. 

 சநாதனம் அறியாவிட்டால் பரவாயில்லை… .  பள்ளிப் படிப்பு கூடவா படிக்கக் கூடாது?  

அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது:   பீடாதிபதி என்பது அரசியல் பதவி  அல்ல;   ஒரு குடும்பம்,  ஒரு கட்சி ,  ஒரு மொழி   என்று வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க …

அரசியல்,  குடும்பம், கட்சி, மொழி  போன்றவற்றை எல்லாம் கடந்து ,  சநாதன ஞானம், கட்டுப்பாட , தியாக மனப்பான்மை ஆகியவை மட்டுமே ,  பீடாதிபதி பதவிக்குத்  தேவையான குணங்கள்.  

அரசியலுக்கு ஞானம் தேவையில்லை;  குடும்பம் , கட்சி அவசியம்  தேவை .  

பீடாதிபதிக்களுக்கு ஞானம் தேவை; குடும்பம், கட்சி  தேவை இல்லை .  

பீடாதிபதி பதவியை, பூகோள ரீதியாக, மொழி ரீதியாகப் பார்க்க முடியாது .  எல்லாவற்றையும் கடந்து தொன்மையான ஞானம் ஒன்றே அந்த ஆச்சாரியார் பதவிக்கு  தகுதி .  

எப்படி லத்தீன் மொழி அறிதல்,  வாடிகன் போப் பதவியில் இருப்பவருக்கு அவசியமோ ,  அப்படி சமஸ்கிருத மொழி அறிதல்,  காஞ்சி பீடாதிபதிக்கு அவசியம்.

புதிய ஆச்சாரியாருக்கு எனது ப்ரணாமங்கள் .  

$$$

3. ஆதீனம் ஆகலாம், வாங்க முற்போக்கூஸ்!

-முரளி சீதாராமன்

காஞ்சி சங்கர மடத்தின் புதிய துறவியாக சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை செய்து வைக்கப்பட்டது பற்றி… 

அவர் பார்ப்பனர், தெலுங்கர், வந்தேறி என்றெல்லாம் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் திராவிடியாள், முற்போக்கு லிபரல்களே! 

கிளம்புங்கள் வாடிகனுக்கு! 

அடுத்த போப் ஆண்டவர் யார்? 

கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவரா? அல்லது இங்கே இருந்து மதம் மாறிச் சென்ற பட்டியல் இனச் சகோதரரா? அல்லது ஏதேனும் ஹிந்துப் பெயரில் – இட ஒதுக்கீடுச் சலுகைக்காக சாதிச் சான்றிதழ் வாங்கிவிட்டு சர்ச்சில் வேறு பெயரோடு உலாவரும் கிறிப்டோவா? 

கிளம்புங்கள் – வாடிகனுக்குப் போய் புரட்சி முழக்கங்களை எழுப்புங்கள். 

இங்கே சும்மா குட்டிச்சுவர் கண்ட இடமெல்லாம் பக்கத்தில் நின்று கருப்பு மையில் கோஷம் எழுதுகிறீர்களே…

“நான் கிறித்தவனாக இருந்தால் போப் ஆண்டவர் ஆகலாம்! முஸ்லிமாக இருந்தால் மேதினார் ஆகலாம்! ஹிந்துவாக இருந்தால் சங்கராச்சாரியார் ஆக முடியுமா?” 

இப்போதுதான் நல்ல சந்தர்ப்பம் – விடாதீர்கள் – விரையுங்கள் வாடிகனுக்கு! 

“எங்கள் தோழர்கள் கிறித்தவத்தைத் தழுவி உள்ளனர் – வெவ்வேறு திருச்சபைகளில் பாதிரியாராகவோ பிஷப் ஆகவோ உள்ளனர் – அவர்களில் ஒருவரை போப் ஆண்டவர் ஆக்குங்கள்!”- என்று அங்கே வாடிகனில் போய் போராடுங்கள். 

“கே.ஆர்.நாராயணன் ஜனாதிபதி ஆகலாம் – ஆனால் கோயில் குருக்களாக முடியுமா? ஜனாதிபதி மாளிகையில் அமரலாம் – கருவறைக்குள் நுழைய முடியுமா?” – என்றெல்லாம் இங்கே கோஷம் போட்டதைப் போல அங்கே போய்… 

“பாரக் ஓபாமா வெள்ளை மாளிகையில் அதிபராக நுழைய முடியும் – வாடிகனில் போப் ஆண்டவர் ஆக நுழைய முடியுமா?”- என்று   பொங்கி அழுங்கள், திராவிடியாள்ஸ்! லிபரல்ஸ்! முற்போக்கூஸ்!  

சங்கராச்சாரியாராக ஆவது அத்தனை எளிதல்ல! அவர் எத்தனை வயதில் இருந்து பயிலத் தொடங்கி நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்துள்ளார்? ஒரு துறவியாவதற்கான கடுமையான பயிற்சிகள் எத்தகையவை என்பதை அறியுங்கள். 

உனக்கு  ‘ஷ’னாவும் வராது –  ‘ஸ’னாவும் வராது – சமஸ்கிருதத்தை கேலி செய்ய மட்டும் வரும் – சமஸ்கிருதம் வராது! 

இன்னொன்றும் சொல்கிறேன் – கேளுங்கள் திராவிடியாள்ஸ்! 

மதுரை, திருப்பனந்தாள், குன்றக்குடி திருவாவடுதுறை, தருமபுரம் போன்ற ஆதீனங்கள் உள்ளன. 

அவை சைவத் தமிழ் பரப்பும் அமைப்புக்கள். 

அவற்றில் ஆதீனகர்த்தர் ஆவதற்கும் சைவ சித்தாந்த நூல்களில் ஆழ்ந்த பயிற்சி வேண்டும்;  பன்னிரு திருமுறைகளையும் பயின்று அவற்றின் ஞானத்தை முழுமையாக உள்வாங்க வேண்டும். 

சிவஞானபோதம் போன்றவற்றில் நல்ல தேர்ச்சி இருக்க வேண்டும்!

அதுபோக தமிழ் இலக்கணம், (தொல்காப்பியம், நன்னூல் சூத்திரம்) தமிழ் காப்பியங்கள் போன்றவை குறித்த ஞானமும் வேண்டும். 

உங்களுக்கோ பலருக்கு  ‘ழ’ வராது! ‘ல’ –  ‘ள’ –  ‘ன’-  ‘ண’ –  ‘ற’ –  ‘ர’ பேதங்கள் உங்களில் பலருக்குத் தடுமாற்றம். 

“ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும்!”- எங்கே பிழையில்லாமல் துண்டுச் சீட்டில் எழுதிப் படியுங்கள் பார்ப்போம்! 

‘பல்லிப் பில்லைகல்’-  ‘மலை காரணமாக பல்லிக்கு விடுமுறை’- இந்த லட்சணத்தில் தமிழை வைத்துக் கொண்டு… 

‘நான் தமிழண்டா!’- என்று  டி-ஷர்ட்டில் எழுதி அணிந்து, அதை  ‘நான் தமில் அண்டா!’- என்று படிக்கும் உங்களில் பலரால்…

சங்கராச்சாரியார் ஆவது ஒருபுறம் இருக்கட்டும் – தருமபுரம் ஆதீனம் ஆகவும் கூட முடியாது! 

எனவே இதை எல்லாம் விட்டுவிட்டு ‘இங்கில்பீசில்’ (ஓரளவு) தேர்ச்சிபெற்று போப் ஆண்டவர் ஆக முயற்சி செய்து போராடுங்கள்! 

ஆனால் அங்கேயும் உங்களில் பலருடைய ‘பா பா ப்ளாக் ஸீப்’ –  ‘இங்கில்பீஸ்’ எல்லாம் செல்லாது! அதற்கும் நல்ல இங்கிலீஷ் வேண்டும்! 

‘I SAY UNTO THEE’ – என்பான்! வாய்ப்பில்லை ராசா!

$$$

Leave a comment