கம்யூனிஸ்டுகளின் கோர முகங்கள்

-பி.ஆர்.மகாதேவன்

கம்யூனிஸ்டுகளைப் பற்றிய மிகவும் நுட்பமான அவதானிப்பு - திரு. பி.ஆர்.மகாதேவனின் அரசியல் ஞானத்தின் வெளிப்பாடு. படியுங்கள்… முற்போக்கு கோரமுகங்களின் முகமூடிகளைக் கிழியுங்கள்!

கம்யூனிஸ்ட்களுக்கு இந்தியாவில் இரண்டு முகங்கள் இருக்கின்றன. இரண்டும் கோரமானவையே.

முதல் கோரம்: அரசியல் முகம். 

இரண்டாவது கோரம்: அறிவுப்புல – அதிகாரவர்க்க ஆக்கிரமிப்பு முகம்.

கேரளா, வங்காளம், திரிபுரா போன்றவை நீங்கலாக பிற மாநிலங்களில் அரசியல் பிரதிநிதித்துவரீதியாக முழுமையாக ஓரங்கட்டப்பட்டிருக்கும் சித்தாந்தம்தான் கம்யூனிஸம்.

அரசியல் செல்வாக்கு இருக்கும் மாநிலங்களில் மட்டுமே நிஜ வன்முறை, அதிகார துஷ்பிரயோகம் என கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. ஆனால், எஞ்சிய மாநிலங்களில் அறிவுப்புலம் – கலை- இலக்கியம் – அதிகார வர்க்கம், ஊடகம் ஆகியவற்றிலான அறிவுஜீவி நக்ஸல் ஊடுருவல் மூலம் ஏற்படுத்திவரும் அழிவு அதைவிட மிக மிகக் கோரமானது.

கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு கருத்தியல் நியாயத்தை உருவாக்கித் தரும் இன்டலெக்சுவல் பயங்கரவாதியாகவே கம்யூனிஸம் தொடக்கத்திலிருந்தே இந்தியாவில் செயல்பட்டுவருகிறது. 

காங்கிரஸ், திராவிட இயக்கம், தலித் இயக்கங்கள் ஆகியவற்றைவிட கம்யூனிஸம் இந்த விஷயத்தில் கூடுதல் எஜமான விசுவாசத்துடனும் கல்விப்புல அங்கீகாரத்துடனும் அதிகாரத்துடனும் தேசம் முழுவதும் புரையோடிக் கிடக்கிறது.

அரசியல்ரீதியாக  ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்ற லட்சியத்தில் கிட்டத்தட்ட 90%க்கு மேல் வெற்றி பெற்ற நிலையிலும், ஹிந்து-இந்திய நலன் காப்பாற்றப்படாமல் போய்க்கொண்டிருப்பதற்கு கேஜ்ரி- மம்தா- ரெட்டி- திமுக என காங்கிரஸின்  ‘பி’ டீம்கள் அந்த இடத்தைப் பிடித்திருப்பது முதல் காரணம். 

இந்த கம்யூனிஸ்ட் முக்த் அதிகாரவர்க்கம் – கலைத்துறை – ஊடகத்துறை என்பது நடக்காமல் இருப்பது இரண்டாவது முக்கிய காரணம். 

ஒருவகையில் பார்த்தால், இந்த இரண்டாவது காரணமே பெரிய அபாயம்.

தேசம் முழுவதும் மக்கள் செல்வாக்கைப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜகவால் இந்த கம்யூனிஸ்ட் அபாயத்தை ஒன்றுமே செய்யமுடியவில்லை. பாஜகவின் லட்சியங்கள் வெறும் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி என்ற அளவில் இருப்பதை ஓர் எல்லைவரை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அந்த வளர்ச்சி தேச பக்த ஹிந்துக்கள்- இந்தியர்களுக்குக் கிடைக்காமல் போய்க் கொண்டிருப்பதற்கு கம்யூனிஸக் களையெடுப்பு நடக்காமல் இருப்பதுதான் முழு காரணம். இந்த அபாயத்தைக் கணக்கில் கொள்ளவில்லையென்பதால் வளர்ச்சி இலக்குகளிலும் தோற்றுக் கொண்டிருக்கிறோம்.

உண்மையான கம்யூனிஸ்ட் என்றால், காங்கிரஸ், திராவிட இயக்கம், தலித் இயக்கம் ஆகியவற்றை மட்டுமல்ல இஸ்லாமிய- கிறிஸ்தவ பயங்கரவாதத்தையும் எதிர்த்து நிற்பவராகவே இருப்பார்.

கோட்பாட்டு அடிப்படையில் கம்யூனிஸம் இவை அனைத்துக்கும் எதிரானதுதான். கம்யூனிஸம் மட்டுமல்ல; இந்த அணியில் இருக்கும் அனைத்து சித்தாந்தங்களும் தம் அளவில் ஒன்றை ஒன்று எதிர்க்கக்கூடியவையே. 

சீனாவில் இஸ்லாமியருக்கு இடம் கிடையாது. இஸ்லாமிய நாட்டில் கம்யூனிஸத்துக்கு இடம் கிடையாது. காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸத்துக்கு இடம் கிடையாது. கம்யூனிஸ ஆட்சி நடக்கும் மாநிலத்தில் காங்கிரஸுக்கு இடம் கிடையாது. திராவிட ஆட்சியில் கம்யூனிஸத்துக்கு இடம் கிடையாது. கம்யூனிஸ கட்சியில் தலித்துக்கு இடம் கிடையாது. 

இப்படியான பகை சக்திகள் அனைத்துமே ஹிந்துக்களையும் இந்தியாவையும் அழிக்கும் ஒற்றை நோக்கில் ஒரே அணியில் திரண்டு நிற்கின்றன. 

பாதிரி மாஃபியா தனது இன்டலக்சுவல் கையாளாக அதிகாரவர்க்க அடிமையாக கம்யூனிஸ்ட்களைப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது.

ஏழு மரங்களை ஒரே அம்பால் வீழ்த்துவதுபோல, இந்த பகை சக்திகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்த உகந்தவகையில் இவை ஒரே உடலாக ஒன்றாகி நிற்கின்றன. ஆனால், அந்த பிரம்மாஸ்திரம் இந்த உலகில் இன்று எங்குமே இல்லை. எந்த தெய்வத்தை எவ்வளவு கடுமையான வரம் செய்து அதைப் பெற முடியும் என்பதும் தெரியவில்லை. 

இப்போதைக்கு இந்த எதிரணியின் ஒற்றுமையைக் குலைப்பதுதான் இலக்காக இருக்க வேண்டும். இயல்பிலேயே பகை சக்திகளான அவை ஒவ்வொன்றும் தமக்குள் அடித்துக் கொண்டு அழிந்தால்தான் நாட்டு மக்களுக்கு நல்லது.

நேச சக்திகளின் ஒற்றுமையின்மையைவிட பகை சக்திகளின் ஒற்றுமையே பெரிய அபாயமாக இருக்கிறது. அனைத்து பகை சக்திகளையும் இணைக்கும் கருத்தியல் நூலாக இடதுசாரிப் பார்வையே இருந்துவருகிறது. அது அறுக்கப்பட்டாக வேண்டும். அதைக் கொண்டே பகை சக்திகள் ஒவ்வொன்றையும் கட்டிப்போட்டாக வேண்டும்.

திராவிட கார்ப்பரேட்டை எதிர்க்கும் ஒரு சொரணை உள்ள கம்யூனிஸ்டை உருவாக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்க்கும் வீரமுள்ள கம்யூனிஸ்டை உருவாக்க வேண்டும்.

பாதிரிகளுக்குக் கையாளாக இருக்கும் போலி கம்யூனிஸ்டுகளை  ஹிந்துத்துவக் கையாளாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையான கம்யூனிஸ்டாக ஆக்கினாலே போதும். சைமனிஸத்துக்குத் தரும் ஆதரவைவிட அதுவே கூடுதல் பலனைத் தரும். 

எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாரவர்க்க – கலை – இலக்கிய – ஊடகப் புலங்களில் இருக்கும் இடதுசாரி வல்லாதிக்கத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவந்தாக வேண்டும்.

காங்கிரஸை வீழ்த்திவிட்டோம் என்ற மமதையால் ஏற்படும் வீழ்ச்சியைவிட கம்யூனிஸத்துக்கு இங்கு இடமே இல்லை என்ற கர்வத்தால் ஏற்படும் அழிவு அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இதைத் தடுக்க வேண்டுமென்றால் சர்வாதிகாரக் கருத்தியல்களை ஜனநாயகக் கருவிகள் கொண்டு முடக்கவே முடியாது என்பதை முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்.

நாம் எடுக்கவேண்டிய ஆயுதம் எது என்பதை, எதிரி தொடர்ந்து தீர்மானித்த வண்ணம்தான் இருக்கிறான். நாம் தான் அதைப் புரிந்து கொள்வதே இல்லை.

$$$

Leave a comment