-திருநின்றவூர் ரவிகுமார்

.
உலகப் போருக்கு இணையான உயிரிழப்பும், சொத்து இழப்பும், பெண்கள் மீது வன்முறையும் நிகழ்ந்தது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது என்று சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்த இஸ்லாமிய சமயத்தினர், அவர்களுக்கு ஆதரவான முஸ்லிம் லீக் கட்சி, பக்கச் சாய்வு கொண்ட ஆங்கிலேயர்கள் என கூட்டாக, இயல்பாகவே ஒருங்கிணைப்பு இல்லாத ஹிந்துக்கள் மீது கட்டமைத்து விடப்பட்ட கொடுமைகள்.
தேசம் துண்டானாலும் பரவாயில்லை, தங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் போதும் என ஹிந்துக்களைக் கைவிட்டு ஓடிய காங்கிரஸ். முஸ்லிம் லீக் உடன் சேர்ந்து கொண்டு பிரிவினையை ஆதரித்து ஹிந்துக்களை சூறையாட வழிவகுத்த கம்யூனிச துரோகிகள். ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் பாதுகாத்து, இந்தியாவுக்கு அழைத்து வந்து, நிவாரண உதவிகளைச் செய்த ஆர்எஸ்எஸ்… என பிரிவினை நேரத்தில் நடந்தவற்றை உள்ளதை உள்ளவாறே ஆவணப்படுத்தி உள்ளார்கள் நூலாசிரியர்கள்.
பாகிஸ்தானில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியா வந்த ஹிந்துக்களாலும் சீக்கியர்களாலும் ‘கருப்பு தொப்பி அணிந்த தெய்வங்கள்’ என்று போற்றப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பிரிவினையின் போது களத்தில் நின்று நடத்திய போராட்டத்தையும் தியாகத்தையும் பற்றி விவரிக்கிறது இந்த நூல்.
அந்தக் காலத்தில் வந்த நாளேடுகளின் பதிவுகள், பின்னாளில் வந்த நூல்கள் மட்டுமல்லாமல் , பிரிவினையின் போது பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 4000 பேரின் பேட்டிகள் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டு உருவானதே இந்த நூல்.
பல ஆண்டுகள் கடினமான உழைப்புக்கு பிறகு வெளிவந்த இந்த நூலைப் பற்றி, அவற்றை சரியான வார்த்தைகள் மூலம் தொகுத்து முறைப்படுத்தித் தந்ததே தனது பணி என்று தன்னடக்கத்துடன் கூறுகின்றனர் நூலாசிரியர்கள். 1990 களின் இறுதியில் வெளிவந்த இந்த நூல் ஆர் எஸ் எஸ் நூற்றாண்டுக் காலத்தில் தமிழில் வெளிவந்துள்ளது.
இந்த நூலில் உள்ள வீர நாயகர்கள் சிலரை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர்களுடன் சில நாட்கள் உடனிருந்து பேசி பழகி பணிபுரிந்துள்ளேன். ஆனால் அப்போது அவர்களின் தீரத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர்களைப் பற்றி அவர்களிடமே கேட்ட போதும் அவர்கள் தங்களைப் பற்றி விவரமாகச் சொல்லவில்லை. பிறகு வந்த இந்த நூலைப் படித்த பிறகு தான் புரிந்து கொண்டேன். ஏன் இப்படி என்று கேள்விக்கு பதில் இந்த நூலில் உள்ளது. ‘நல்லது செய், செய்துவிட்டு மறந்துவிடு’ என்பதே அந்த தேச பக்தர்களின் இயல்பாக இருந்தது.
அண்மையில் நடந்த வயநாடு நாடாளுமன்றத் தேர்தலின் போது கம்யூனிஸ்டுகள் தங்கள் சிவப்பு நிறத்தைக் கைவிட்டு பச்சை நிறத்தில் தங்கள் சின்னத்தைப் பதித்து தோரணமாகக் கட்டியிருந்ததை பலரும் பார்த்திருக்கலாம். இந்தப் பச்சோந்திகளின் நிறமாற்றம் இப்போதல்ல பிரிவினைக்கு முன்பே தொடங்கிவிட்டது. வங்காளத்தில் துர்கா பூஜையின் போது துர்கையின் கையில் தேச பக்தர்கள் மூவண்ணக் கொடியை வைத்தால், அதை எடுத்துவிட்டு தங்களது சிகப்புக் கொடியை அல்ல பச்சைநிற பிறைக்கொடியைச் செருகி ‘பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக் கொள், இந்தியாவை சுதந்திரமாக ஆக விடு’ என்று பிரிவினைக்கு ஆதரவாக ஊர்வலம் போனவர்கள் கம்யூனிஸ்டுகள் . இன்று புனிதராகச் சித்தரிக்கப்படும் ஜோதிபாசுவின் ஹிந்து விரோதச் செயல்களை ஆதாரத்துடன் கிழித்தெறிகிறது இந்த நூல்.
பிரிவினைக்கு வித்திட்டது ஹிந்து மகாசபாவும் ஆர்எஸ்எஸும் என்று இன்று அவதூறு செய்யும் காங்கிரஸ், அன்று ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பாதுகாப்பில் ஹிந்து மகா சபா உடன் சேர்ந்து கொண்டு அகண்ட பாரதம் கோரி பொதுக்கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தியதை அம்பலப்படுத்துகிறது இந்த நூல்.
வங்காளத்தில் அகண்ட பாரதம் கோரிக்கை, பிஹார், ஒடிசாவில் ஹிந்து- முஸ்லிம் சமரசம், பஞ்சாப்- சிந்து பகுதிகளில் ஹிந்துக்களை நிர்கதியாக விட்டு ஓடிய தலைவர்கள் என்று காங்கிரஸின் முகமுடிகள் ஊருக்கு ஊர் மாறுபட்டதையும், அதிகாரத்திற்காக பிரிவினையை ஏற்றுக் கொண்டதையும், இன்று அதிகாரம் இல்லை எனும் போது நாட்டுக்கே எதிராகச் செயல்படும் காங்கிரசின் கீழ்மையையும் புரிய வைக்கிறது இந்த நூல்.
பிரிவினையைப் பற்றி, கடந்த காலத்தைப் பற்றி இன்று பேசுவதால் என்ன பயன் என்று சிலரும், சமுதாயத்தில் மோதல் இருந்தால் தான் ஆர்எஸ்எஸ் பாஜக வளரும் என்று குற்றச்சாட்டாக அரசியல் தலைவர்கள் சிலரும் பிதற்றுவதைப் பார்க்கிறோம். உண்மை என்ன ?
‘நீங்கள் பிறப்பதற்கு முன் என்ன நடந்தது என்பதை அறியாமலேயே இருப்பது, குழந்தையாகவே நிரந்தரமாக இருக்க செய்துவிடும்’ என்கிறார் மார்கஸ் சிர்கோ என்ற அறிஞர். இந்த தேசத்தை பற்றி அறியாமலேயே இருப்பது இந்த நாட்டை வளர்ச்சி அடையாமல் பிறரைச் சார்ந்தே, குழந்தையாகவே, நிரந்தரமாக இருக்கச் செய்து விடும். எனவே வரலாறு படைக்க வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்-அது எவ்வளவு கசப்பாக இருந்த போதிலும்.
தேசப் பிரிவினை கால கட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வளர்ச்சி பின்னடைவைக் கண்டது. ஆர்எஸ்எஸ் தன் வழக்கமான பணிகளை நிறுத்திவிட்டு, மக்களைப் பாதுகாக்கும் பணியிலும் நிவாரணப் பணியிலும் தன் சக்தியைச் செலவிட்டது. அமைதியான காலகட்டத்தில் தான் ஆர்எஸ்எஸ் வேகமாக வளர்கிறது என்கிறார் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரர் தத்தோபந்த் தெங்கடி. இவர் டாக்டர் அம்பேத்கரின் வலதுகரமாகச் செயல்பட்டவர்.
1989இல் பஞ்சாப் மாநிலம், மோகாவில் ஆர் எஸ் எஸ் ஷாகாவை (கிளையை) காலிஸ்தான் பிரிவினைவாதிகள் நேரடியாகத் தாக்கினர். காரணம் பிரிவினைக்கு எதிரான ஹிந்து – சீக்கிய ஒற்றுமைக்குப் பாடுபடுகிறது ஆர்எஸ்எஸ். 1999 இல் திரிபுரா மாநிலத்தில் இருந்த ஆர்எஸ்எஸ் தலைவர்களை வங்கதேசத்திற்கு கடத்திச் சென்று கொன்றார்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள். காரணம் அங்கு ஹிந்துக்களை ஜாதிகளை கடந்து ஒற்றுமைப்படுத்தி வருகிறது ஆர்எஸ்எஸ்.
இன்றல்ல, அன்றும், பிரிவினையின் போதும், தேசத்திற்காக ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் தலைவர்களும் ஏற்ற அவமானத்தையும் , செய்த தியாகத்தையும் இந்த நூல் ஆவணமாக்கி உள்ளது. தேச பக்தர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
***
நூல் விவரம்:
பெயர் : தேசப்பிரிவினை நாட்கள் ஆசிரியர்கள் (ஹிந்தியில்): மாணிக் சந்திர வாஜ்பாயி, ஸ்ரீதர் பரட்கர் தமிழில்: ஆனந்த் வெங்கட் விலை : ரூ. 600/- வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், சென்னை. சேத்துப்பட்டு, சென்னை – 31 தொடர்புக்கு: +91 89391 49466
$$$