-சு.சத்தியநாராயணன்
“இனியாவது, ஹிந்துக்கள் என்ற அடையாளம் தாங்கி நிற்கத் தயங்கக் கூடாது. அடையாள மறுப்பும் மதச்சார்பற்ற தன்மையும் நாளை நம் சந்ததிக்கு இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் செய்து விடும்”- என்கிறார் திருப்பூர் அறம் அறக்க்கட்டளையின் செயலாளர் திரு. சு.சத்தியநாராயணன். இதோ அவரது கட்டுரை…

சநாதன தர்மம் என்றால் அழிவற்ற பண்பாடு என்று பொருள். சநாதனம் என்றும் மாறாதது. இந்த தர்மத்தில் அடிப்படையாக மாறாமல் இருப்பது எது? ஒட்டுமொத்த சமூக நலன். இந்தச் சமூகத்தில் உள்ள மனிதன் மட்டுமல்ல, அனைத்து உயிர்கள், மண், மலைகள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தின் நலன்; ஐம்பூதங்களின் நலன். இந்த நலனுக்காக சட்டங்கள் (ஸ்மிருதி) காலச் சூழல்களுக்கேற்ப மாறி அந்த அடிப்படை தர்மத்தினைப் பேணிக் காக்கும்.
சாதாரண ஒரு இந்திய மனிதனின் மனநிலை காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தர்மத்துக்காக இயங்குவதாகத்தான் இருக்கும். அந்நியக் கல்வி முறை அதில் சிதைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மாபெரும் உண்மை.
நீதித் துறையில் இருப்பவர்களும் இந்த அந்நியக் கல்வி முறையால் தங்களது கலாச்சாரம், பண்பாடு குறித்த சிதைந்த அறிவுடன்தான் செயல்படுகிறார்கள். மிகச் சாதாரண கிராமத்து மனிதனிடம் மட்டுமே நாம் சநாதன தர்மத்தின் கூறினை உணர இயலும். அதில்தான் கருணையும் கண்டிப்பும் இருக்கும்; தண்டனையும் இருக்கும். சீரற்றதாகக் காணப்படும் அதுதான் மிகச் சிறந்தது என்பதை உணர்வாளாரகளால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும்.
வாகனங்களே இல்லாத சாலையில் ஒற்றை வாகனம் சிக்னலுக்காக நில்லாமல் சாலையைக் கடந்து போகும். அதனை இயக்குபவன் அழுக்கு வேட்டி, தலையில் கட்டிய முண்டாசு, வண்டியின் முன்னால் ஆட்டுக்கோ மாட்டுக்கோ தீவனம், இப்படி ஏதாவது இருக்கும். ஜெர்மனியின் தெருக்களில் இதற்கு நேரெதிரான காட்சியினை நான் கண்டு இருக்கிறேன். சிக்னலுக்காக நின்றிருக்கும் ஒற்றை வாகனம்.
அந்த நொடி தோன்றியது, ஆஹா… இங்கே எவ்வளவு சட்டத்தை மதித்து ஒழுக்கமாக வாழ்கிறார்கள் என்று. நம்மூரிலும் இருக்கிறார்களே என்று அங்கலாய்த்திருகிறேன். அகமதாபாத் நகரத்தில் குறுக்கும் மறுக்குமாக எந்த சிக்னலைப் பற்றியும் கவலைப்படாமல் போகும் வாகனங்கள். போக முடியாத சூழல் ஏற்படும்பொழுது அதனை யார் சரி செய்வதில் என்பதில் முந்துதல் இருப்பதையும் கண்டிருக்கிறேன். இது ஜெர்மனியில் சாலையில் நடந்து சென்ற பொழுது நினைவுக்கு வந்தது.
ஆனால் பல கால சிந்தனைகளுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டது, சாதாரண கிராமத்து மனிதனுக்கு சட்டத்தை மீற வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லை. சூழலுக்கேற்ப இயங்குகிறான்- யாருக்கும் பாதிப்பு இல்லை என்கிற கவனத்தோடு. இன்று அந்நியக் கல்வியில் பயின்ற, சநாதனத் தர்மத்தினை அறியாத இளஞ்சிங்கங்கள், சாலையில் வளைந்தும் படுத்தும் பறந்தும் வாகனத்தை இயக்குவதனை இந்திய மனநிலையோடு ஒப்பிடுவது சரியாக இருக்குமா?
நிர்வாகத்திலும், நீதித் துறையிலும் இந்த இந்திய சநாதன மனநிலை இருக்கிறதா என்றால் எங்கோ அத்தி பூத்தது போல இருக்கலாம்.
காஷ்மீர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு பயங்கரவாதம் என்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டு இருந்தது ஆர்டிகிள் 370. இது பட்டியலினத்தவர் முன்னேற அம்பேத்கர் கொண்டு வந்த இடஒதுக்கீட்டைத் தடுத்த ஒன்று. ஆனால் இந்த ஆர்டிகிளை ஆதரித்தவர்கள் திருமாவளவன், சீமான், திராவிட சிந்தனை கொண்டவர்கள், காங்கிரஸ் என அனைத்துத் தரப்பும். காஷ்மீரில் ஏன் இட ஒதுக்கீடு அமலில் இல்லை என்றால், அனைத்து இந்தியாவிற்குமான நலத்திட்டங்கள் சட்ட வரைமுறைகளை அங்கு செயல்படுத்த விடாமல் அந்த ஆர்டிகிள் 370 தடுத்ததனால்தான்.
2019ஆம் ஆண்டில் அந்த ஆர்டிகிள் நீக்கப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. சொல்லப்போனால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஜம்முவும் கூட ஒரு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டு இருக்கலாம்.
பின்னர் பயங்கரவாதச் செயல்கள் குறைக்கப்பட்டு, மக்களின் நல்வாழ்வாதாரத்திற்கான சூழல் ஏற்படுவதற்கான அனைத்துச் செயல்களும் மிக வேகமெடுத்தன. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரு அமைதிச் சூழல் ஏற்படாத வரை, எல்லை பாதுகாப்பு மேம்படாதவரை இங்கு எந்நேரமும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழலாம் என்பதுதான் சூழல். ஆனால் இந்தச் சூழல் உச்ச நீதிமன்றத்தால் கருத்தில் கொள்ளப்படவில்லை. சட்டம் மட்டுமல்லாது அந்நியக் கல்வியின் லிபரல் மனோநிலை, இந்தியத் தன்மையின் புரிதலில்லாமை இவை அனைத்துமே இதற்குக் காரணமாய் இருந்திருக்கக் கூடும்.
அதனால்தான் அங்கு தேர்தல் நடத்தவும் கெடு விதித்தது உச்ச நீதிமன்றம். இப்பொழுது மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் மதத்தின் பெயரால். இப்பொழுது நாம் நினைக்கிறோம்- இன்னும் கொஞ்சம் காலம் கூட ஜனாதிபதி ஆட்சியில் இருந்திருக்கலாமோ என்று. எனவே, சட்டமும் லிபரல் மனப்போக்கும் மட்டுமே தீர்வாகாது. சூழலும் தொலைநோக்குப் பார்வையும் அவசியமாகிறது.
உச்ச நீதிமன்றம், ஜனாதிபதி, நாடாளுமன்றம், மாநில அரசுகள் இவற்றிற்கான அதிகாரங்களை யாரிடமும் ஒட்டுமொத்தமாக வழங்காமல் ஒவ்வொன்றையும் மற்றது கேள்வி கேட்குமாறு அமைத்துள்ள இந்திய அரசியல் சாசனத்தின் நோக்கம், மக்கள் நலன் எந்த விதத்திலும் அதிகாரக் குவிப்பினால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதனால்தான்.
ஆனால் அங்கு ஏதாவது ஒன்று தன்னுடைய அதிகாரத்தைத் தவறான புரிதலில் பயன்படுத்தி விட்டால் கூட ஆபத்துதான். க்ரோக் சுட்டுவதாக முகநூலில் ஒருவரின் பதிவு: “2024இல் மாணவர் போராட்டமும் அதன் தொடர்ச்சியான நீதிமன்றத் தீர்ப்பும் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தினை நிகழ்த்தின. 2023இல் மணிப்பூர் விவகாரத்தில் இட ஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்குப் பிறகு ஏற்பட்ட அசாதாரண சூழலில் 250 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன.” இது நீதிபதிகள் இதனை விரும்பி தீர்ப்பளித்ததாகக் கருத கிஞ்சித்தும் இடமில்லை. அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்திருக்கிறார்கள். அதனைத் தாண்டி சூழலைக் கருத்தில் கொண்டு இயங்கும் ஒரு வழிவகையை அரசியல் சாசனம் ஏற்படுத்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
ஹிரண்யன் தன்னைத் தானே கடவுள் என அறிவித்துக் கொண்டான். இதில் மக்களுக்கு எந்தப் பிரச்னையுமில்லை. பின்னர் அவன் தன்னைத் தவிர பிற கடவுளர் எவரையும் வணங்கக் கூடாது என்கிற பொழுதுதான் மக்களுக்குப் பிரச்னை. தாடகியாகட்டும், இன்ன பிற புராணங்கள் சுட்டும் அசுரர்களாகட்டும் இவர்கள் பிறரது நம்பிக்கையைச் சிதைக்கப் பார்க்கிறவர்கள்.
இன்று இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் பயங்கரவாதிகள் அனைவருக்கும் இது போல பிறரது நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லை. இதனால்தான் அவர்களால் இன்ன பிற இஸ்லாத்தின் பிரிவுகளையும் பழங்குடிகளையும் கூட ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதனால்தான் சிரியாவிலும் பாகிஸ்தானிலும் இதர இஸ்லாமிய மக்களை அழித்தொழிக்கிறார்கள். காஸாவில் இருக்கும் பயங்கரவாதிகள் இதர பாலஸ்தீன மக்களிடமிருந்து வேறுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் அமைதியையும் ஜனநாயகத்தையும் விரும்புகையில், இவர்கள் பயங்கரவாதத்தைக் கையில் எடுக்கிறார்கள்.
ஆனால் ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், இந்திய லிபரல்களும்- அனைத்தையும் சமமாகப் பாவிக்கின்ற ஹிந்துக்களுக்கு மட்டும் மதச்சார்பற்ற தன்மையைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறர் அவர்கள் மதத்தினைப் பின்பற்ற எந்தத் தடையுமிருக்கக் கூடாது; அதே நேரம் ஹிந்துக்கள் மதம் சார்ந்து இயங்கக் கூடாது என்பதாகப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் சாசனம் அனைத்து மக்களுக்கும் வழிபாட்டு உரிமையைக் கொடுத்திருக்கும்பொழுது ஹிந்துக்களை மட்டும் அதிலிருந்து விலகி நிற்கச் சொல்வதால், இன்று பலரும் அதிலிருந்து விலகி பெயரளவில் ஹிந்துவாக நிற்கிறார்கள்.
இப்படி நிற்கிறவர்கள் என்ன சூழல் என்றே புரியாமல் காஸா பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறாற்கள். அதே நேரம் சீனாவில் வழிபாட்டுரிமை மறுக்கப்படும் உய்குர் இஸ்லாமியர்கள் குறித்து எவரும் ஏதும் பேசுவதில்லை.. அதேசமயம், இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற தோற்றத்தினை ஏற்படுத்துகிறார்கள்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? கேரள மாப்ளா கலவரத்தில் ஹிந்துக்கள் தேடித் தேடிக் கொல்லப்பட்டது குறித்தும், காஷ்மீரில் பண்டிட்கள் 1989களில் வேட்டையாடிக் கொல்லப்பட்டது குறித்தும், யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் இன்று அது குறித்து திரைப் படம் வந்தால் அது பொய் என்று பிரசாரம் செய்கிறார்கள்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் கடந்த 75 வருடங்களாகத் தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹிந்துப் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் ஹிந்துக்களின் எண்ணிக்கை தேய்ந்து கொண்டிருக்கிறது. அப்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் இங்கெல்லாம் பாதிக்கப்பட்டு இந்தியா வந்தடைந்த ஹிந்துக்கள் , கிறிஸ்தவர்கள், என பலருக்கும் இந்தியக் குடியுரிமை கொடுக்க அரசு முன்வந்தபொழுது, “அது இஸ்லாமியர்களுக்கு எதிரானது; அவர்களது இந்தியக் குடியுரிமையைப் பறிக்கும்” என அனைத்து லிபரல்களும் எதிர்க்கட்சிகளும் மிகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டு அரசுக்கெதிரான போராட்டங்களைத் தூண்டினர். ஆனால் இன்றுவரை ஒரு இஸ்லாமியரும் கூட பாதிக்கப்படவில்லை என்பது, இந்திய இஸ்லாமியர்களே அறிந்த உண்மை.
சமீபத்தில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த பிறகு ஹிந்துக்களின் மீது தொடர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மிகச் சமீபத்தில் ஒரு ஹிந்துத் தலைவர் வங்கதேசத்தில் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் லிபரல்களும் அவர்களின் ஊடகங்களும் கள்ள மௌனம் காக்கின்றன.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக எப்படிச் செயல்பட்டார்களோ அது போலவேதான், இப்போது வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராகவும் லிபரல்களும் எதிர்க்கட்சிகளும் செயல்படுகின்றன. மேற்கு வங்கம்- முர்ஷிதாபாத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி ஊரை விட்டே துரத்தப்பட்ட பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் காவல் துறை அதனைக் கண்டும் காணாமல் இருக்கிற அவலம், இந்த உலகின் எந்த தேசத்திலும் நடக்காது. எந்தத் தேசத்திலும் பெரும்பான்மையினர் மீது இப்படி தாக்குதல் நடப்பதை அரசு இப்படி வேடிக்கை பார்க்காது.
கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண்ணை பலரும் சேர்ந்து, ஷரியத் சட்ட முறைப்படி அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். மேற்கு வங்கத்தில் ஒரு பெண் அரசுக்கு எதிராகவும் ஹிந்துக்களுக்கு எதிராகவும் மிரட்டல் விடுகிறார். தமிழகத்தில் ஒருவர் முன்னாள் முதல்வரை மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார். ஒரு பெண் ஒவைசி போல ”ஒரு மணி நேரம் கொடுங்கள்” என்று மிரட்டல் விடுக்கிறார். இது அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறோம். எந்த தமிழக ஊடகமும் இதனை விவாதிக்கவில்லை.
ஜெர்மனியில் யூதர்கள் வேட்டையாடப்பட்டார்கள். அது அவர்கள் நாடு இல்லை என்று கூட சொல்லலாம். அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் வேட்டையாடப்பட்டார்கள். அதுபோல வங்க தேசத்தில் அவர்கள் சொந்த மண்ணில் ஹிந்துக்களைக் கொல்வதும், சொத்துக்களைச் சூறையாடுவதும், பெண்களைக் கற்பழிப்பதும் லிபரல்களுக்கும், இந்திய எதிர்க்கட்சிகளுக்கும் நியாயமான ஒன்றாக இருக்கிறதா?
காஸாவில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பும் இந்திய இஸ்லாமியர்கள் எவராவது, இந்திய மண்ணில் ஹிந்துக்களுக்கு எதிராக இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்குக் கண்டனங்கள் தெரிவித்துக் கண்டதுண்டா?
வங்கதேசத்தில் கொல்லப்படுபவனும் கொல்பவனும் ஒரு காலத்தில் சகோதரர்களாக இருந்தவர்கள். கத்தி முனையில் மதம் மாற்றப்பட்ட அந்த சகோதரர்கள் அதே செயலை, மதம் மாற்றப்படாத தங்களது உறவுகளுக்கு எதிராக தங்களது கத்தியையும் அழுக்கான புத்தியையும் நீட்டுகிறார்கள்.
வக்பு போர்டால் ஹிந்துக்களின் சொத்துக்கள் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தினை நாடிய 67 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக ஒரு வழக்குரைஞர் தெரிவிக்கிறார். அவரே சொல்கிறார், “பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாக கொண்டுவரப்பட்ட திருத்த சட்டத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட 27 மனுக்களை உடனே உச்ச நீதிமன்றம் ஏற்கிறது”.
ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் நேரக் கெடு விதிக்கிறது உச்ச நீதிமன்றம், ஆனால் ஹிந்துக்கள் மீது மோசமான தாக்குதல் நடக்கும் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுவுக்கு, “ஏற்கனவே நாங்கள் நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுகிறது” என நழுவுகிறது உச்சநீதிமன்றம். இது அவர்கள் பிழையல்ல. அவர்களுக்கு சூழலுக்கு ஏற்ப மக்கள் நலனுக்காகச் செயல்படும் சநாதன தர்மப் புரிதல் இல்லாமையும், அதற்கான வழிகள் சட்டத்தில் இல்லாததுமே.
இதோ தமிழகத்தில் திருச்செந்துறைக்கு அடுத்து வேலூர் கள்ளக்கொல்லை கிராம மக்கள் தங்களது பாரம்பரிய சொத்துக்கள் வக்பு போர்டால் பறிக்கப்படுவதாகப் போராடுகிறார்கள். வக்பு சட்டத் திருத்தத்தை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்கிறது தமிழக ஆளும் தரப்பு. அப்படியானால், ‘எந்தவித ஆதாரமும் இல்லாமல், அரசு, நீதிமன்றம் இவற்றிற்கு கட்டுக்குள் வாராத வகைஅயில், தான் விரும்பும் சொத்துக்களை வக்பு உடமையாக்கிக் கொள்ளலாம். அதனை எதிர்த்து அரசிடமோ நீதிமன்றமோ செல்ல முடியாது’ என்றொரு சட்டம் இயற்றினீர்களே 2013இல், அது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதா?
திருச்செந்துறை, கள்ளக்கொல்லை, திருப்பரங்குன்றம் (இன்னும் வெளிவராதது பல) எல்லாவற்றையும் வக்பு உடமையாக்கிக் கொள்ள வேண்டும். ஹிந்துக்களுக்கு அதனை எதிர்ந்து கேள்வி கேட்கக்கூட எந்த உரிமையும் இல்லை என்பதெல்லாம் நியாயமா?
ஜனநாயகத்தில் எண்ணிக்கை என்பதுதான் வெற்றி- தோல்வியினைத் தீர்மானிக்கிறது. வெறும் 40 சதவிகித ஆதரவு கொண்ட ஒரு கட்சி ஆட்சியினைப் பிடித்து விடுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? சிறுபான்மையினர் அனைவரும் தங்களது வாக்குகளை ஒன்றிணைத்து ஒரு கட்சிக்கே வாக்களிக்கின்றனர். ஆனால் ஹிந்துக்களை சீக்கியம், பௌத்தம், ஜைனம் – இது போதாதென்று ஜாதி வாரியாகப் பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதி வேண்டாம் என்கிறவர்கள் தான், ஜாதிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இன்னொரு புறம் கோஷமிடுகிறார்கள்.
இவர்களின் ஆட்சி அதிகாரத்திற்காகவே தங்களை பிரித்து வைத்துச் செயல்படுகிறார்கள் என்பதனை ஹிந்துக்கள் இன்னமும் முழுதாக உணரவில்லை. லிபரல் அந்நியக் கல்வி அவர்களுக்கு தெளிவு ஏற்படாமல் தடுக்கிறது. நாடெங்கும் நிகழும் ஹிந்துக்களுக்கெதிரான சம்பவங்களை ஊடகங்களும் மறைக்கின்றன.
ஹிந்து தெளிந்து தனது வாக்குகளை ஒன்றிணைக்காமல் அவனுக்கு நியாயம் கிடைக்காது என்பது மட்டுமல்ல, வாழ்வதே கேள்விக்குறிதான். திருபுவனம் ராமலிங்கம் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்தான். ஆனால் அவரின் மகன் கண்முன்னே அவரது உயிர் பறிக்கப்பட்ட பின்னும், அவர்கள் அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்தும், அவர்களிடமிருந்தே எதிர்ப்புக் குரல் எழவில்லை. காரணம் அவர்கள் ஜாதி வாரியாக இல்லாமல், கட்சி வாரியாகவும் பிரிந்து கிடக்கிறார்கள்.
இனியாவது ஹிந்துக்கள் என்ற அடையாளம் தாங்கி நிற்கத் தயங்கக் கூடாது. அடையாள மறுப்பும் மதச்சார்பற்ற தன்மையும் நாளை நம் சந்ததிக்கு இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் செய்து விடும்.
அப்படி ஒரு வாழ்வினை நமது சந்ததிக்கு அளிக்க வேண்டுமா என்பதை ஒவ்வொரு ஹிந்துவும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இதனைச் செய்யாமல் தவிர்த்து, மாபெரும் தவற்றினை இழைத்து நமது சந்ததிகளின் வாழ்வினை வீணாக்கி விட வேண்டாம்.
$$$