– கருவாபுரிச் சிறுவன்
சைவ, வைணவ சமயச் சின்னங்களை கேவலமாகப் பேசிய மாநில அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இத்தகைய கழிசடைகளுக்கு தண்டனை கொடுத்த சத்தி நாயனாரை நினைவு படுத்துகிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்...

கழல் சத்தி வரிஞ்சையர் கோன் அடியார்க்கும் அடியேன்...
-சுந்தர மூர்த்தி நாயனார்.
கிரிவில்லவர் தம் அடியாரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன
திருவில்லவரை அந்நாவரிவோன் திருந்தாரை வெல்லும்
வரிவில்லவன் வயல் செங்கழு நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைகமழும் தென் வரிஞ்சைத் திகழ் சக்தியே.
-நம்பியாண்டார் நம்பிகள்
.....இருளின் மிடறுடைய பிரான் அடியார் தம்மை
இகழ்வார் நாத்தண்டாயத் திடுக்கி வாங்கி
அரியுமது திரு தொழிலா உடையார் .....
-உமாபதி சிவாசாரிய சுவாமிகள்
சிவனடியார்கள் பெருமையினை நற்றமிழால் பாடி நமக்கு அருளிச் செய்தவர் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
அவரால் ‘பெரிய புராணம்’ என்னும் பெருமை மிகுந்த தேசியக் காவியம் ஹிந்து மக்களுக்கு கிடைத்தது பெரும் பேறு.
இதில் திருக்கூட்டச் சிறப்பினை பதினொரு பாடல்களில் சொல்லி பெரிய புராணத்தில் இடம் பெறும் அடியார்களின் மகத்துவத்தையும், இவர்கள் இப்படிப் பட்டவர்கள் என முன்கதைச் சுருக்கம் சொல்லுவது போலச் சொல்லி விடுவார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
அதில்…
பூதம் ஐந்து நிலையில் கலங்கினும் மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணிஅலது ஒன்றிலார் ஈர அன்பினர் யாதும் குறைவிலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ?
-என ஆச்சரியப்படும் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள், சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய வண்ணம் இந்நூலைச் செய்கிறோம் என்பார்…பெரிய புராணம் பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கத்தில்… சக்தி நாயன்மாரை ஏழாவதாக அறிமுகம் செய்து ஏழு செய்யுள்களில் அவரது வரலாற்றை விரித்துரைப்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
நாவினை அறுக்கும் நாயன்மார்
காவிரி பாய்ந்தோடும் சோழதேசத்தில், கடலருகே இருப்பது நாகப்பட்டினம். இம் மாவட்டத்தின் கீழ் அமைந்துள்ளது கீழ்வேளூர். இதன் அருகில் உள்ளது தேவூர். இவ்வூருக்கு 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வரிஞ்சையூர். இது மருவி இரிஞ்சியூர் என்று தற்போது அழைக்கப் பெறுகிறது.
ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியின் தலைவராக விளங்கியவர் சைவ வேளாளர் குலத்தைச் சார்ந்த சக்தி என்னும் திருநாமம் கொண்ட சிவனடியார்.
இப்பெருமகனார் சிவநிந்தனை செய்பவர்களையும், சிவனடியார்களை இகழ்பவர்களையும் பிரத்யேகமாகச் செய்த கொறடினைக் கொண்டு நாக்கினை இழுத்து ‘சக்தி’ என்னும் கத்தியால் அறுந்துவிடுவார்.
ஒரு ஐப்பசி பூசம் நன்னாளில் சிவபதம் அடைந்தார் சக்தி நாயனார்.
இவருடைய பணியே சீரிய திருப்பணி என்றும், ஆண்மைத்திருப்பணி என்றும், அதுவே அரிய திருப்பணி என்றும் நம் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் போற்றி பரவுவார்கள்.
இங்குள்ள வேதநாயகி வேதபுரீஸ்வரர் திருக்கோயிலை கோவை கற்பகம் பல்கலைக்கழக நிறுவனர், திரு வசந்தகுமார் திருப்பணி செய்து குடமுழுக்கினை நிகழ்த்தியுள்ளார்கள். மேலும் சக்தி நாயனாருக்கு தனிச் சன்னிதி அமையப்பெற்று வழிபாடு நடத்தப்படுகிறது.
ஆண்மையாளின் பணி
இணைய தளத்தில் இலவசமாக வெளியாகும் ஆன்மிக மலர் ஒன்றில் சக்தி நாயனார் வரலாற்றினை ஒரு பக்கத்திற்கு அச்சிட்டு அட்டைப்படத் தலைப்பாக… ‘இந்த நாயனார் இருந்திருந்தால் நாக்கு இல்லாமல் பல தலைவர்கள் திரிந்திருப்பார்கள்’ என வெளியீடு செய்த சக்தி நாயனார் வழி வந்த ஆன்மிக மலரின் ஆசிரியரை மனமாரப் பாராட்டுகிறது ‘பொருள் புதிது’ இணையதளம்.
தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்குதண் டாயத்தி னால் வலித்து
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்
-சக்தி நாயனார் புராணம்: 4
நிறைவாக,
ஹிந்து விரோதக் கட்சிகள் தொடர்ந்து ஹிந்துக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டுவரும் சூழல் இனியும் தொடருமானால், ஹிந்துக்களைக் காப்பாற்ற அந்த சக்தி நாயனார் மீண்டும் பிறப்பு எடுத்து வந்தாலும் முடியாது.
அமெரிக்காவில் ஹிந்து மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிர்வினையாக வட அமெரிக்க ஜார்ஜியா மாகாணத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டதை வரவேற்கிறோம்.
அதேபோல இந்தியாவிலும் எம்மதமாக இருந்தாலும், குறிப்பாக ஹிந்து மதத்தைப் பற்றி இழிவு செய்வோருக்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறோம்.
ஹிந்துக்களுக்கு ரோஷம் வர வேண்டும். ஆட்சி மாற்றத்தை உண்டாக்க வேண்டும்! இதைச் செய்வார்களா ஹிந்துக்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.
வாழ்க பாரதம்! வளர்க தாய்த்திருநாடு!
$$$