அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி: நூல் மதிப்புரை

-திருநின்றவூர் ரவிகுமார்

பாரதி கிருஷ்ணகுமார் எழுதிய நூல் குறித்த மதிப்புரை இது... மகாகவி பாரதி வாழ்வில் ஒரு சில ஆண்டுகள் கவிதை எழுதாமல் இருந்தார். அது ஏன் என்று ஆராய்கிறது இந்த நூல்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை 2022-இ ல் நடத்தத் தொடங்கிய போது, பிரதமர் மோடி, சுப்பிரமணிய பாரதியார் காசியில் வாழ்ந்ததைப் பற்றியும், அவர் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்படும் என்றும்,  ‘காசி பண்டிதர்களின் பேச்சை காஞ்சியில் இருப்போர் கேட்க கருவி செய்வோம்’ என்று பாரதியார் எழுதியுள்ளதையும் நினைவுகூர்ந்தார்.

காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டு விட்டது; நினைவிடம் ஆக்கி உள்ளார்கள். பாஷா என்ற மொழிபெயர்ப்பு அப்ளிகேஷனை உருவாக்கியதன் மூலம் பாரதியாரின் கனவை  மோடி மெய்ப்படுத்தி விட்டார் என்று கூற முடியும்.

பாரதியார் காசியில் எப்படி வாழ்ந்தார் என்பது பற்றியும், அங்கிருந்தபோது அவர் இயற்றிய கவிதைகள், பாடல்கள் என்ன என்பது பற்றியும், நமக்கென்ன தெரியும்  என்ற கேள்வி எழலாம். காசியில் இருந்தபோது அவர் தமிழ்நாட்டுப் பாணியில் தட்டு சுற்றி வேட்டி கட்டுவதை விட்டுவிட்டு வடநாட்டு பாணியில் கச்சம் வைத்து வேட்டி கட்டத் தொடங்கினார்; வட இந்திய பிராமணர்களைப் போல மீசை வைத்துக் கொண்டார்; கட்டுக் குடுமியை கத்தரித்துவிட்டு கிராப் வைத்துக் கொண்டார்; பின்னால் வால்விட்ட தலைப்பாகை அணிய ஆரம்பித்தார்; வடமொழியும் ஹிந்தியையும் நன்றாக கற்றுக் கொண்டார். 

அக்காலத்தில் கவிதை எழுதினாரா? வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் பற்றி பொதுவெளியில் ஒன்றும் தெரியவில்லை.

இந்த இடத்தில்தான் தன் கவனத்தைச் செலுத்தினார்  பாரதி கிருஷ்ணகுமார். பாரதியாரின் காசி வாழ்க்கையைப் பற்றி புறச்சான்றுகள் இல்லாத நிலையில்,  அகச் சான்றுகளில் ஆழ்ந்து தேடினார். அவர் கண்டடைந்ததுதான், இந்த நூலாக வடிவம் பெற்றுள்ளது.

பொதுவாக புராணங்களில் முனிவர்கள் மற்றவர்களுக்கு சாபம் இடுவார்கள். சிலவேளைகளில் முனிவர்களுக்கும் சாபம் கிடைக்கும். ஆனால் அவர்களுக்கு சாபம் கிடைக்கும் போதே சாபத்திலிருந்து விடுபட வழியும் சொல்லப்படும். புராணக்கதை ஒன்று உள்ளது. ஒரு ரிஷிக்கு, ஏதோ தவறுக்காக பன்றியாகப் பிறக்க வேண்டுமென சாபம் கிடைத்தது. அவரது சீடன்/ மகன் அந்த பன்றியைக் கொன்றால் ரிஷி சாபத்திலிருந்து விடுபடுவார் என்றும் சாப விமோசனம் சொல்லப்பட்டது.

ரிஷி அந்த விஷயத்தை  சீடனிடம்/ மகனிடம் சொல்லி,  ‘தயங்காமல் பன்றியை வெட்டிக் கொல். நான் சொல்லிச் செய்வதால் உனக்கு பாவம் வராது’ என்று சொல்லி பன்றியாய் மாறி ஓடி விடுவார். மகன்/சீடன் கத்தியை தீட்டிக்கொண்டு பன்றியைத் தேடுவார். பல மாதங்கள் கழித்து அந்த பன்றி ஒரு பெண் பன்றியோடும் சில குட்டிகளோடும் சேற்றில் ஆனந்தமாய்க் கிடப்பதைக் காண்பார். அதை வெட்டிக் கொல்லப் போக, அந்தப் பன்றி தான் சுக வாழ்க்கை வாழ்வதாகவும் தன்னை வெட்ட வேண்டாம் என்றும் எதையாவது வெட்ட வேண்டும் என்றால் உன்னை நீயே வெட்டிக்கொள் என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் தன் குட்டிகளுடன் ஓடி மறைந்து விடும்.

சுப்ரமணிய பாரதியார் தன்னை அந்தப் பன்றியோடு ஒப்பிடுகிறார். தான் வாழ்ந்த வாழ்க்கையை இழித்து பேசுகிறார். இது சாதாரண பன்றி அல்ல. ரிஷியாக இருந்தவன், மேலும் ரிஷியாக இருக்க வேண்டியவன் பன்றியாக வாழ்கிறான். எனவே இது  ‘அருந்தவப்பன்றி’ என்கிறார். பாரதியார் உருவாக்கிய புதிய சொல்லாடல் இது.

இந்நிலை மாற கவிதாதேவியின் அருளை வேண்டுகிறார். சிறு வயதிலேயே கவி பாடி  ‘பாரதி’ என்று பட்டம் பெற்ற சுப்ரமணிய பாரதியை விட்டு கவிதாதேவி பிரிந்தது ஏன்? பன்றியென தன்னையே கூறுமளவுக்கு அவர் வாழ்ந்த வாழ்க்கை இழிவானது என்று ஏன் கருதினார்?  கவிதாதேவி மீண்டும் அவரிடம் வந்து சேர்ந்த பிறகு நடந்த மாற்றங்கள் என்று நூலாசிரியர் பாரதியாரின் வாழ்க்கையை அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அகச்சான்றுகள் மூலம் விவரிக்கிறார்.

சுருக்கமாக அதைப் பார்ப்போம். சுப்பிரமணிய பாரதியாரின் தந்தை சுந்தர்ராஜன் என்று பெயரிடப்பட்ட சின்னசாமி ஐயர். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயந்திரத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அவர் திறமை பெற்றவர். தன் மகன் ஆங்கிலக் கல்வி பெற்று உயரதிகாரியாக அரசுப் பணியில் அமர்ந்து நிறைய பொருளீட்டவும் அதிகாரத்துடன் வாழ வேண்டும் எனவும் அவர் விரும்பினார். அதற்காக கண்டிப்புடன் வளர்த்த மகனை, ஆங்கிலம் கற்க, நெல்லையில் இருந்த பள்ளியில் சேர்த்தார்.

எட்டயபுர ஜமீன்தாரின் நிதி உதவியுடன் எட்டயபுரம் காட்டன் ஜின்னிங் ஆலையைத் தொடங்கினார். வெள்ளையர்களின் சதியால் ஆலை செயல்படாமலே முடங்கிப் போனது. அதனால் மனமுடைந்து, பின் நோய் வாய்ப்பட்டு சின்னசாமி ஐயர் காலமானார்; பாரதியாரின் படிப்பு நின்று போனது.

சின்னசாமி ஐயரின் தாய் பாகீரதி அம்மாள் சொத்துக்களை எல்லாம் விற்று கடனை அடைத்து விட்டு, சொற்பப் பணத்துடன், தன் பேரனை அழைத்துக்கொண்டு காசியில் வாழ்ந்த தன் மகள் வீட்டிற்குச் சென்றார்.

சிறுவயதிலேயே எட்டயபுர ஜமீன்தாரின் அரண்மனைக்குச் சென்று கவி பாடி,  ‘பாரதி’ என்று பட்டம் பெற்றவர். அவரது படிப்புக்கு தடைவந்த போது ஜமீன்தாரிடம் உதவி கேட்டு கவிதை எழுதினார். ஆனால் உதவி கிடைக்கவில்லை. படிப்பை விட்டுவிட்டு ஜமீனில் வேலைக்குச் சேர்ந்தார். எவ்வளவு மாதம்/ வாரம் வேலை செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் சில காலம் பணி புரிந்ததாக பாரதியே குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர் பாட்டியுடன் காசியில் இருந்த தன் அத்தையின் வீட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று.

ராணி விக்டோரியா இறந்த பிறகு ஏழாவது எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னரானார். 1903 ஜனவரி மாதம் அதற்காக தில்லியில் பெரிய விழா எடுக்கப்பட்டது. அதற்குச் சென்ற எட்டயபுரம் ஜமீன்தார், வரும் வழியில் காசிக்குச் சென்றார். அங்கிருந்த சுப்பிரமணிய பாரதியாரை தனது ஜமீனில் வேலைக்கு வருமாறு அழைத்தார். அதனால்  பாரதியார் எட்டயபுரம் திரும்பி வந்தார்; மனைவியுடன் வாழத் தொடங்கினார்.

தந்தை காலமானதும்  எட்டயபுரம் ஜமீனில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, கவிதா தேவி சுப்பிரமணிய பாரதியை விட்டுப் பிரிகிறாள். காசியிலும் அவருடன் அவள் இல்லை. மீண்டும் எட்டயபுரத்துக்கு வந்து பணியில் சேர்ந்தபோது அவள் அவருடன் இல்லை. ஓராண்டு காலத்திற்குப் பிறகு ஜமீன்தாருடன் கருத்து வேறுபாடு கொண்டு அவர் வேலையை விட்டு விடுகிறார்.  வேலையை விட்டுவிட்டு மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிகப் பணியிடத்தில் (Leave Place/Vacancy) மாதம் பதினேழு ரூபாய், எட்டணா சம்பளத்தில் பணிக்குச் சேர்ந்தார். மூன்று மாதங்கள் பத்து நாட்கள் வேலை செய்த பிறகு அதை உதறிவிட்டு சென்னை வந்து, ஜி. சுப்பிரமணிய ஐயரின்   ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணிக்குச் சேர்ந்தார்.

எட்டயபுர வேலையை விட்டு விலகிய பிறகுதான் கவிதா தேவி அவரிடம் வந்தாள் .அவள் வந்ததும் அவர் எழுதிய முதல் கவிதையே கவிதாதேவி தன்னைப் பிரிந்தது பற்றியே. அது ஸானெட் (Sonnet)  என்ற ஆங்கில கவிதை வடிவில் பதினான்கு வரிகளைக் கொண்டது. தலைப்பு  ‘தனிமை யிரக்கம்’. இது  ‘விவேகபாநு’ என்ற மாத இதழில் (ஜூலை – 1904) வெளியானது.

எட்டயபுரத்தை விட்டு நீங்கி காசி சென்று மீண்டும் எட்டயபுரம் வந்து மீண்டும் நீங்கி மதுரை – சென்னை வந்த பிறகு எழுதிய முதல் கவிதை இது. 1898 இல் எட்டயபுரத்தை விட்டு காசிக்குப் போனார் பாரதியார். தனிமையிரக்கம் என்ற கவிதை எழுதியது 1904 -இல். 1898 முதல் 1904 வரை ஆறாண்டுகள் அவர் எழுதவே இல்லை. அந்த ஆறாண்டு கால வாழ்க்கையைத்தான் பன்றியுடன் ஒப்பிட்டு இழிவாகச் சொல்கிறார் பாரதியார்.

1904 ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கி 1921 ஆம் ஆண்டு செப்டம்பரில் அவர் காலமாகிற வரையில் தொடர்ந்து எழுத்து வாழ்க்கையில் ஈடுபட்டு கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என பல நூறு பக்கங்களுக்கு மேல் எழுதி படைப்பிலக்கியத்திற்குப் பங்காற்றினார்.

பலரும்  ‘தனிமை இரக்கம்’ என்ற கவிதையை பாரதியாரின் இளமைக் காதல் பற்றியது என்று கருதுகின்றனர். மாறாக, பாரதியாரின் கவிதைகளிலேயே துயர் மிகுந்த கவிதை இதுவன்றி வேறில்லை. அவரது வாழ்வில் அவர் கடந்து வந்த ஓர் இருண்ட காலம் குறித்த துல்லியமான பதிவாக இப்பாடல் விளங்குகிறது என்கிறார், நூலாசிரியர் பாரதி கிருஷ்ணகுமார்.

ஏறத்தாழ ஆறாண்டு காலம் பாரதியார் கவிதை எழுத இயலாது  போனது குறித்தும், அவரது இருண்ட வாழ்க்கை குறித்தும் பாரதி வரலாற்றாசிரியர்கள் எவரும் எந்தப் பதிவும் செய்யவில்லை. அது பாரதியாரின் மீதான மதிப்புக்கு பெருமை சேர்ப்பதாகாது என்று கருதியிருக்கலாம்.

ஆனால் பாரதியாரின் மீதான மதிப்பை பல நூறு மடங்கு உயர்த்துவதாகவே இக்கவிதை அமைந்துள்ளது. வறுமை காரணமாக  தான் இழிவான தொழில் செய்ய நேர்ந்ததும், அதனால் கவிதாதேவி தன்னை விட்டு விலகியதையும் ஒளிவு மறைவின்றி உலகிற்குச் சொல்கிறார் பாரதியார். கவிதையின்றி வாழ்ந்த வாழ்க்கை ஒரு இழிந்த பன்றியின் வாழ்க்கைக்கு ஒப்பிட்டு, சுய விமர்சனம் செய்து கொள்ளும் – உண்மையின், நேர்மையின் தனிச் சிறப்புடன் ஒளிர்கிறது இந்தக் கவிதை என்கிற பாரதி கிருஷ்ணகுமார்.

அப்படியென்ன இழிந்த வாழ்க்கை அது? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை காண அவர் எழுதியுள்ள  ‘சின்ன சங்கரன் கதை’ என்ற பாதியில் நின்று போன கதை (நின்றுபோனதற்கு காரணம் ஆங்கிலேய காவல்துறை), சுயசரிதை கவிதை நூலான  ‘கனவு’ ஆகியவற்றின் மூலம் விடை தேடிக் கண்டுள்ளார் நூலாசிரியர்.

‘கனவு’ கவிதையில், சிறு வயது முதலே தனக்கு தமிழ் மீதும் கவிதை மீதும் இருந்த நாட்டம் , பிள்ளைப்பிராயக் காதல், ஆங்கில மற்றும் கணிதக் கல்வி மீதிருந்த வெறுப்பு, தன் வயதொத்தவர்களுடன் பழக விடாத தந்தையின் கண்டிப்பு, பால்ய விவாஹம் (அதை மணம் என்ற பேரில் நடந்த கொலை என்கிறார் பாரதியார்), ஆங்கிலேயர் சூழ்ச்சியால் தந்தையின் தொழில் முடக்கம், தந்தையின் மரணம், வறுமை, யாரும் உதவிட முன் வராதது, இருந்ததை விற்றுவிட்டு காசிக்கு போனது வரை கூறுகிறார். காசியில் இருந்ததைப் பற்றி ஏதும் அதிலில்லை.

‘சின்ன சங்கரன் கதை’யில் எட்டயபுர ஜமீன்தாரின் வாழ்க்கையும் அங்கு பாரதியார் பணி செய்தது பற்றியும் வருகிறது. மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஊரார் உழைப்பில் தின்று கொழித்து, காமக் கதைகளைப் பேசி வாழ்ந்த நபும்சகன்  (எட்டயபுர ஜமீன்தார்), அவனுக்கு துதி பாடி , காமக் கதைகளை சொல்லி, அண்டிப் பிழைக்கும் சின்ன சங்கரன் (பாரதியார்) என்று அந்தக் கதை செல்கிறது.

இரண்டும் சேர்ந்து, அதிலும் குறிப்பாக  ‘சின்ன சங்கரன் கதை’யில் வருவதைத் தான் மிக இழிந்த வாழ்க்கை என சுப்பிரமணிய பாரதியார் கருதி உள்ளார்.

‘தனிமை யிரக்கம்’ காதல் பிரிவு பற்றியது அல்ல; கவிதாதேவியின் பிரிவு பற்றியது. இந்த கவிதாதேவி எப்படிப்பட்டவள்? “தெய்வ மருந்துடைப் பொற்குடம்” (தேவ அமுதம் தாங்கிய குடம்) என்கிறார் பாரதியார்  ‘கவிதாதேவி அருள் வேண்டல்’ கவிதையில்.

கவிதாதேவி பிரிந்த பிறகு,  “பாதகீ,  நீ என்னை பிரிந்து மற்றகன்றனை . பேசொணா நின்னருள் இன்பம் அனைத்தையும் இழந்து நான் உழன்றேன்….. தருக்கெலாம் அழிந்து வாழ்ந்தனன்… கதையின் முனி போல் (அருந்தவப்பன்றி) வாழ்க்கை…, மாலுமி யில்லாத கலம் போல்” தான் அவதிப்பட்டதாக கூறுகிறார்.

இந்த இழிந்த வாழ்க்கையிலிருந்து தன்னை மீட்க வேண்டும் என்று கவிதாதேவியிடம்,  “வாராய் கவிதையா மணிப் பெயர்க் காதலி! வந்தெனக்கு அருளுதல் வாழி நின் கடனே!” என்று இறைஞ்சுகிறார்.

பாரதியாரின் வாழ்க்கையைப் பற்றி எழுதிய பலரில் இரண்டு பேர்  மட்டுமே கவிதாதேவி அவரைப் பிரிந்தது பற்றி எழுதியுள்ளனர் என்கிறார் நூலாசிரியர். ஒருவர் சீனி. விஸ்வநாதன் மற்றவர் கவிஞர் வைரமுத்து.

அதில்  ‘கவிதாதேவியிடம்  அருள் வேண்டல்’ நெடு நாட்களாகக் கவிதைப் பணியை விடுத்து மீண்டும் அதை தேசப் பணிக்காக மேற்கொள்ளும் போது பாடியது என்கிறார் சீனி. விஸ்வநாதன். பாரதியார் கவிதைப் பணியை தானே விடுத்தார் எனப் பொருள் தரும் விதத்தில் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. பாரதியாரை விட்டு கவிதாதேவி விலகிப் போனாள் என்பதே பொருத்தமானது என்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

‘சில ஆண்டுகளாய்
ஊடலாயிருந்த
கவிதாதேவி
வெள்ளைக் கொடி ஏந்தி
வீடு வந்தாள்’  

-என்று கவிஞர் வைரமுத்து தன்னுடைய  ‘கவிராஜன் கதை’யில் எழுதியுள்ளார். கவிதாதேவி பாரதியாரிடத்தில் ஊடலாக இல்லை. முற்றாக அவரை விட்டுப் பிரிந்து போயிருந்தாள். மீண்டும் கவிதாதேவி வெள்ளை கொடியேந்தி, தானே வரவில்லை. பாரதி இறைஞ்சி அழைத்த பிறகே வந்தாள் – என்கிறார் நூலாசிரியர் பாரதி கிருஷ்ணகுமார்.

தான் அறிவிக்கப்படாத ஆசிரியராக பொறுப்பு வகித்த  ‘இந்தியா’ பத்திரிகையில் 1909 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  ‘இலக்கிய பகுதி’ என்றொரு புதிய பகுதியை அறிமுகம் செய்கிறார் பாரதியார். அந்த பகுதியில்,  ‘கவிதா தேவியின் அருள் வேண்டல்’ என்ற கவிதையை 1909 ஜனவரி 10 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரண்டு பகுதிகளாக பிரசுரம் செய்தார். கவிதையின் முதல் பகுதி 85 வரிகளையும், இரண்டாம் பகுதி 87 வரிகளையும் கொண்டதாக, மொத்தம் 172 வரிகளில் அமைந்திருந்தது அந்தக் கவிதை.

  • காண்க: கவிதா தேவியின் அருள் வேண்டல்

கவிதையின் முதல் பகுதி மட்டும் அனைத்துப் பதிப்புகளிலும் இடம் பெற்றிருந்தன. எட்டயபுர ஜமீன்தாரைப் பற்றி சீற்றத்துடன் பாரதியார் குறிப்பிட்டுள்ள  இரண்டாம் பகுதி நீக்கப்பட்டிருந்தன. எனவே பெரும்பாலானோர் முதல் பகுதியை மட்டுமே படித்திருக்க முடியும்.

பாரதி நூற்றாண்டு விழாவை ஒட்டி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட  ‘பாரதி பாடல்கள் – ஆய்வு பதிப்பு’ நூலில் மட்டுமே இந்தக் கவிதை முதல் முறையாக முழுமையாக வெளியாகி இருந்தது. சீனி. விஸ்வநாதன் தொகுத்து, கால வரிசைப்படுத்தி வெளியிட்ட  பாரதி படைப்புகளில் இந்தக் கவிதையின் இரண்டு பகுதிகளும் எந்த வித மாற்றமுமின்றி முழுமையாக காணக் கிடைக்கின்றன என்று கூறுகிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

‘ஸ்வசரிதை’ பிரிவில் சேர்க்கப்பட வேண்டிய இந்தக் கவிதையை  ‘தனிப்பாடல்’ என வகைப்படுத்தி இருப்பது பொருத்தமற்றது என கூறும் இந்நூலாசிரியர்  இந்த நூலின் பின்னிணைப்பில் அந்தக் கவிதையை முழுமையாக வெளியிட்டுள்ளார். அந்த கவிதையைக் கொண்டு தன் ஆய்வைத் தொடங்கி, விரிவான தளங்களுக்குப் பயணித்து, பாரதியாரின் வாழ்வில் இதுவரை அறியப்படாத பகுதியின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளார்.

இந்த நூல் முதலில் 2011 டிசம்பரில் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலின் தலைப்பே வாசகர்களைத் திகைக்க வைக்கிறது; படிக்கையில் அதிர்ச்சியளிக்கிறது. இதை , நான்காம் பதிப்புக்கு மதிப்புரை வழங்கிய  தமிழருவி மணியன் மிகச் சரியாக சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ் சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கும் இந்த நூலுக்கு 2021 ஆம் ஆண்டு, ரொக்கப் பரிசுடன் கூடிய  ‘மகாகவி பாரதி’ விருதை வழங்கி பாரதி கிருஷ்ணகுமாரைச் சிறப்பித்துள்ளது தமிழக அரசு.

***

நூல் விவரம்:

நூல்:  அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி
ஆசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார் 
விலை: ரூ.  300/-

வெளியீடு:

The Roots,
M 20, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 
சிங்காநல்லூர்,
கோவை -5
போன்: 94442 99656

$$$

Leave a comment