-ஆசிரியர் குழு
மாநில ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு எதிராகத் தீர்ப்பளித்திருப்பது நாடு முழுவதும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நமது வாசகர்கள் அறிவதற்காக, இது தொடர்பான செய்திகளும், இரு விமர்சனங்களும் (திருவாளர்கள் பா.பிரபாகரன், துக்ளக் சத்யா) இங்கே அளிக்கப்பட்டுள்ளன…

1. தமிழக அரசு வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
புது தில்லி, ஏப். 8: தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் கடந்த ஏப். 8ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடுயீ அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடா்ந்திருந்தது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, அரங்க.மகாதேவன் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை (ஏப். 8) வந்தபோது, தமிழக அரசின் 10 மசோதாக்களை நிலுவையில் வைத்ததும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும். தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டத்துக்கு எதிரானது. மசோதா மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. ஆளுநருக்கென பொதுவாக தனி விருப்புரிமை இருக்க முடியாது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஆளுநருக்கு காலக்கெடு:
ஒரு சட்டத்திருத்த மசோதாவை மாநில அரசு, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும்போது, அது உயிர்ப்புடன்தான் இருக்கும். ஆனால், அதனை அந்த மாநில ஆளுநர் பெற்றுக்கொண்டு நிலுவையில் வைத்துவிட்டால், அது எலும்புக்கூடாக அல்லது வெறும் காகிதமாக மாறிவிடும்.
எனவே, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளித்து விட வேண்டும். ஒருவேளை, மசோதாக்களை திருப்பி அனுப்பிவைப்பதாக இருந்தால், இரண்டு மாதத்துக்குள் அனுப்பி வைத்து விட வேண்டும். ஆனால், ஒரு மாதத்துக்குள், மாநில அரசு அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கிறேன் அல்லது திருப்பி அனுப்பிவிடுவேன் என்பதை ஆளுநர் மாநில அரசுக்கு அறிவித்துவிட வேண்டும்.
தன்னிச்சை அதிகாரம் இல்லை:
ஆளுநர்களுக்கான அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 200-இன் கீழ் முழுமையான தன்னிச்சை அதிகாரம் என்பது அனுமதிக்கப்படவில்லை. அதாவது, மசோதா மீதான ஒப்புதலை நிறுத்திவைப்பதாக ஆளுநர் அறிவிக்க எந்த வாய்ப்பும் சட்டத்தில் இல்லை. ஆனால், இந்த அதிகாரத்தை வீட் டோ அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. அதேசமயம், ஒரு மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை.
ஒரு மசோதா ஆளுநருக்குக் கிடைக்கப்பெற்றதும், அவர் முன்பு மூன்று வாய்ப்புகள்தான் இருக்கும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது. ஒருவேளை, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்காக கிடப்பில் வைத்திருந்தால், அது பற்றி 3 மாதத்துக்குள் தெரிவித்திருக்க வேண்டும். பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது. எனவே, ஆளுநர் திருப்பி அனுப்பி மாநில பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வாய்ப்பே ஆளுநருக்கு இல்லை.
‘மாநில அரசின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். ஆளுநர் என்பவர் முட்டுக்கட்டை விதிப்பவராக இருக்கக் கூடாது’ என்று பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பைக் கூறியுள்ளது. ஒரு மாநிலத்தின் அமைச்சரவை அளிக்கும் ஆலோசனைப்படியே ஆளுநர் செயலாற்ற வேண்டும். ஆளுநருக்கு என தனி விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஆதாரம்: பத்திரிகை செய்திகள்
$$$

2. முதல்வருக்கு கொடுக்கப்பட்ட தவறான ஆலோசனை
-பா.பிரபாகரன்
தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் துணைவேந்தர் நியமனம் பற்றிய மசோதாக்களின் மீது, கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தி.மு.க.,வை பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாநில உரிமையை தாங்கள் நிலைநிறுத்திவிட்டதாகப் பறைசாற்றி வருகின்றனர். ஒரு படி மேலாக, ‘முதல்வர் மற்ற மாநில முதல்வர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார்’ என்றும் விளம்பரம் செய்கின்றனர்.
அதே நேரம், ‘இது கவர்னருக்கு எதிரான தீர்ப்பு; கவர்னர் தன் கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டு ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லை என்றால் தலைகுனிவோடு செல்ல நேரிடும்’ என்று தி.மு.க.,வினர் கவர்னரை சீண்டுகின்றனர்.
கவர்னர் ஆதரவு தரப்போ, ‘கவர்னருக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் அரசு நிர்வாகத்தில் எல்லை மீறி தலையிடுகின்றன’ என்றெல்லாம் குரல் கொடுத்து வருகின்றனர்.
பரிசீலனை
‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற நிலையில் இருந்து இதை அணுகினால், உண்மை முற்றிலும் வேறாக இருப்பதை உணரலாம்.
தமிழக அரசும் சரி, அதற்கான ஆதரவுக்குரல்களும் சரி, உச்ச நீதிமன்றமும் சரி, அரசியல் அமைப்பின் பிரிவு – 200 என்ற குறுகிய நோக்கில் மட்டும் அணுகி உள்ளன.
பிரிவு – 200ன்படி மாநில அரசு கொண்டு வரும் ஒரு மசோதாவை, கவர்னர் மூன்று விதமாகப் பரிசீலனை செய்யலாம். முதலாவதாக மசோதாவை ஏற்கலாம்; இரண்டாவதாக அதை ஜனாதிபதிக்கு அனுப்பலாம்; மூன்றாவதாக சட்டசபைக்கே திருப்பி அனுப்பலாம். இதுவரை சட்டம் தெளிவாக இருக்கிறது.
‘திருப்பி அனுப்பிய மசோதா மீண்டும் வந்தால், அதை கவர்னர் ஏற்க வேண்டும்; அவருக்கு வேறு வழியில்லை. இந்த சமயத்தில் அதை ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது’ என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்து; அதுவே, தமிழக அரசின் கருத்து. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின் கருத்து என்ன என்ற கேள்வி வரும்போது, இதில் ஒரு நுட்பம் உள்ளதை நாம் உணரலாம்.
மசோதாக்கள் மூன்று வகைப்படும்.
நிதி மசோதா; முழுக்க மாநிலப் பட்டியலில் உள்ள விஷயம் தொடர்பான மசோதா; மத்திய – மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் உள்ள விஷயம் தொடர்பான மசோதா என மூன்று வகைகள்.
நிதி மசோதாவை கவர்னர் ஒன்றும் செய்ய முடியாது; அப்படியே ஏற்க வேண்டும்.
மாநில பட்டியல் விஷய மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பலாம்; மறுமுறை வந்தால் ஏற்க வேண்டும்.
பொதுப்பட்டியல் விஷய மசோதாக்களுக்கு, அரசியலமைப்பின் பிரிவு – 200 பொருந்தாது; அது, பிரிவு – 254ன் கீழ் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும்.
இதன்படி வரும் ஒரு மசோதாவில், மாநில அரசு இயற்றும் சட்டம், மத்திய அரசின் சட்டத்தோடு மோதுவதாக அமைந்தால், மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும்.
இப்படிப்பட்ட விஷயத்தில், மாநில அரசு கொண்டுவந்த மசோதாவை, கவர்னர் ஏற்க வேண்டிய அவசியமில்லை. அறிவுறுத்தி, திருப்பியும் அனுப்பலாம்; அது மீண்டும் வந்தால், அதை ஜனாதிபதிக்கும் அனுப்பலாம். இது, சட்டசபையில் இரண்டு முறை நிறைவேறியதே என்ற கேள்விக்கே இடமில்லை. இது, நடைமுறை மீறலும் ஆகாது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள 10 மசோதாக்களும் உயர்கல்வி சம்பந்தப்பட்டவை. அதாவது, பொதுப்பட்டியல் சார்ந்த மசோதா. எனவே, பிரிவு – 200 செல்லாது; பிரிவு – 254ன் அடிப்படையில் மட்டுமே பார்க்க வேண்டும்.
தவறான ஆலோசனை
பல்கலைக் கழகங்களில் கவர்னரை வேந்தர் பதவியில் இருந்து நீக்குவது மற்றும் துணைவேந்தர்களை நியமிக்கும் குழுவில், யு.ஜி.சி., உறுப்பினரைச் சேர்க்க முடியாது என்பதுதான், இந்த 10 மசோதாக்களின் சாராம்சம்.
மாநில கவர்னர் வேந்தராக இருப்பார் என்பது மத்திய அரசின் சட்டம்; யு.ஜி.சி., உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் சட்டம். இவை இரண்டையும் இந்த 10 மசோதாக்களும் மீறுவதால், அவற்றுக்கு எப்போதுமே உயிர் இல்லை.
உயிர் இல்லாத மசோதாவை, கவர்னர் எத்தனை காலம் வைத்திருந்தாலும் நஷ்டம் என்ன? ஒருவேளை ஜனாதிபதி, விதிவிலக்காக அனுமதி அளிக்கக்கூடும் என்ற நிலையில் அதை எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அனுப்பலாம் என்பது, சட்டப்பிரிவில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்… ‘குஜராத் போன்ற மாநிலங்களில், மாநில முதல்வரே வேந்தராகவும் இருக்கிறாரே… அவர்களுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமா? இதுவும் யு.ஜி.சி., விதிமுறைக்கு மீறியது ஆகாதா?’ என்ற சந்தேகம் எழலாம்.
பொதுப்பட்டியல் தொடர்பான ஒரு மசோதாவில், ஒரு மாநில அரசு, தனக்கு விதிவிலக்கு வேண்டுமென்றால், நிறைவேறிய மசோதாவுக்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அப்படித்தான் குஜராத் அரசு, இந்த சலுகையை பெற்றுள்ளது. பல வடகிழக்கு மாநிலங்களும் பல்வேறு விதிவிலக்குகளை ஜனாதிபதியிடம் பெற்றுள்ளன. ஜனாதிபதி நிராகரித்துவிட்டால், அந்த மசோதா நீர்த்துப்போகும்.
எனவே, தவறான ஆலோசனை, முதல்வருக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரம் இல்லாத ஒன்றை, இருப்பது போல் பாவித்துக் கொண்டாடுகிறார். மேல்முறையீட்டுக்குப் போனால், மொத்தமும் காலியாகிவிடும். அதுவரை ஆடுவார் ஆட்டமும், பாடுவார் பாட்டும் விமரிசையாக நடைபெறும்.
- நன்றி: தினமலர் (10.04.2025)
$$$

3. புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள்
-துக்ளக் சத்யா
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் பல இருக்கின்றன.
“மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் தர வேண்டும், அல்லது திருப்பி அனுப்ப வேண்டும். ஒப்புதல் அளிக்க முடியாத நிலை இருந்தால், மூன்று மாதத்திற்குள் ஜனாதிபதிக்கு அனுப்பி விட வேண்டும். திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் எப்படி இருந்தாலும், இரண்டாம் முறை அரசிடமிருந்து பெறப்படும்போது, கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். அந்த நிலையில், ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை” என்று அரசியல் சட்டம் கூறுவதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சரி, ஏற்போம்.
முதல் முறை திருப்பி அனுப்பப்பட்ட மசோதா தொடர்பாக கவர்னர் கேட்கும் விளக்கங்களைத் தெளிவு படுத்தாமல், அரசு அப்படியே திருப்பி அனுப்பினாலும் கவர்னர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்பது சரியா? பின், விளக்கம் கேட்டு என்ன பயன்?
ஒப்புதல் அளிப்பதுதான் கவர்னரின் வேலை என்பது அப்பதவியை சிறுமைப்படுத்துவது போல இல்லையா? அரசியல் சட்டம் கவர்னரை அப்படித்தான் நடத்துகிறதா?
‘கூடிய விரைவில்’ என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை ‘ஒருமாதம், மூன்று மாதம்’ என்று மாற்றி நிர்ணயிப்பதற்கு அரசியல் சட்டத் திருத்தம் தேவை இல்லையா? அதை சுப்ரீம் கோர்ட்டே செய்ய முடியுமா? புரியவில்லை.
கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை, ஒப்புதல் அளிப்பதுதான் வேலை என்றால், சும்மா ஒப்புதல் கையெழுத்து போடுவதற்கு ஒருமாதம், மூன்று மாதம் என்று அவகாச நிர்ணயம் எதற்கு? அதுவும் புரியவில்லை.
குறிப்பிட்ட 10 மசோதாக்கள் முதல் முறை விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டு, விளக்கம் ஏற்புடையதாக இல்லாத நிலையில் ‘சரி, ஜனாதிபதியே முடிவு செய்யட்டும்’ என்று கவர்னரால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டவை என்று தெரிகிறது. அப்படி அனுப்பியது தவறு என்பதால் அவை அனைத்தும் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்களாகக் கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது வியப்பைத் தருகிறது.
இந்த பத்து மசோதாக்களும் ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்தவை. கவர்னர் செய்த தவறு என்ற அடிப்படையில், இவை எல்லாவற்றுக்கும் சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதல் தகுதியை வழங்கியிருப்பது – ஜனாதிபதியின் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட் எடுத்துக் கொண்டதாக ஆகி விடாதா?
அரசியல் சட்டப்படி , இதுவரை கவர்னர்கள்தான் பல்கலைக்கழக வேந்தர்களாக இருந்து வந்தனர். இனி, மாநில முதல்வர்களே வேந்தர்கள் என்பது அரசியல் சட்டத்துக்கு உடன்பாடான விஷயமா? இது பற்றி நாடாளுமன்றம் விவாதித்து முடிவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லையா?
எதுவுமே புரியவில்லை.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்தால்தான்-அதன் பின் நடக்கும் விவாதங்களை வைத்து ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.
- நன்றி: முகநூல் பதிவு
$$$
One thought on “மாநில ஆளுநரின் அதிகாரம் என்ன? உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு”