-கருவாபுரிச் சிறுவன்
சங்கரகோவிலில் உள்ள வேலப்ப தேசிகர் ஜீவ சமாதி குறித்த அரிய கட்டுரை இது...

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும்!
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே!
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடிசெய்த அதிதீரா!
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் பெருமாளே.
இரட்டைப் பிள்ளையார் தரிசனம்
சற்குரு அருணகிரிநாதப் பெருமான் அருளிய ‘கைத்தல நிறைகனி அப்பமோடு அவல் பொரி…’ எனத்தொடங்கும் திருப்புகழ் பாடலில் ஒற்று நீக்கிப் பார்த்தால் 200 மெய்யெழுத்துக்கள் வரும். இத்திருப்புகழைப் பாடி இரட்டைப் பிள்ளையாரை வழிபட்டால் இரட்டிப்பான நன்மை உடனே கிடைக்கும் என்கிறார் தவத்திரு கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
(பழைய நில அளவுகளில் இதுவும் ஒன்று: 7 மா – 1 ஹெக்டேர், 3 மா – 100 சென்ட் அதாவது ஒரு ஏக்கர், 20 மா – 1 வேலி, 1 மா – 100 குழி என்பர். இப்போதெல்லாம் இவ்வளவுகள் வழக்கொழிந்து போய் விட்டன. இதில் கவனிக்கப்பட வேண்டிது 1 மா என்றால் 100 குழி. செட்டிநாடு பகுதியில் 100 என்பதற்கு 1 பிள்ளையார் என சொல்வார்கள். இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். செஞ்சொற் கொண்டல் ஏன் அத்திருப்புகழுக்கு மட்டும் அப்படி விரிவுரை செய்திருக்கிறார் என்பது புரிந்திருக்கும்).
சங்கரன்கோவில், மேலரதவீதியில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதின கிளைமடத்து நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அங்கு ஞானத்தின் ராஜாவான நடராஜப் பெருமானின் தரிசனம். மேலும் சன்னிதி நோக்கி அடி எடுத்து வைத்தால் குருமுதல்வர் வேலப்ப தேசிகரின் திருக்காட்சி. அவரை வலம் வரலாம் என்று திரும்பும் போது வலது பக்கத்தில் அர்த்த மண்டபத்திற்கு முன்பே இரட்டைப் பிள்ளையார் சன்னிதி அமைந்துள்ளது.
இவரை தரிசனம் செய்வதால் திருவருள், குருவருள் எல்லாம் ஒருங்கே இங்கே கிடைக்கிறது என்பதில் அளவில்லா ஆனந்தம்.
வாருங்கள்! வேலப்ப தேசிகரின் திருமடாலய வரலாற்றினை தெரிந்து கொள்ளலாமே…
கயிலாய பரம்பரையில் சிவஞான
போத நெறி காட்டும் வெண்ணெய்
பயில் வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர்
மெய்ஞ்ஞான பானுவாகிக்
குயிலாரும் பொழிற்றிருவா வடுதுறைவாழ்
குரு நமச்சிவாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு
நீடுழி தழைக மாதோ!
-சிவஞான யோகிகள்
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவாவடுதுறை ஆதினத்தின்கண் எழுந்தருளி அருளாட்சி செய்கிற குருமகா சன்னிதானங்கள் திருக்கயிலாய பரம்பரையைச் சார்ந்தவர்கள்.
இவர்கள் நந்தி மரபினை உடையவர்கள்; வேத நெறி தழைத்தோங்கி மிகு சைவத்துறை விளங்க அரும்பாடும் தவப்புதல்வர்கள். தற்போது அருளாட்சி செய்பவர் 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக சுவாமிகள் ஆவார்.
பூத உடல் எடுத்து தன்னை உணர்ந்து தாம் எடுத்துக் கொண்ட பணியை நிறைவு செய்த குருமகா சன்னிதானங்கள் தன் ஸ்துல உடலை நீக்கி ஜீவ சமாதி கொள்ளும் நாளை குருபூஜை தினமாகக் கொண்டாடி மகிழ்வர் நம்மவர்கள்.
திருவாவடுதுறையில் குருமுதல்வராகிய நமசிவாய மூர்த்திகள், திருவாலவாய் என்னும் மதுரையம்பதியில் 4வது சன்னிதானமாகிய ருத்திர கோடி தேசிகர், திருபுவனத்தில் 5 வது சன்னிதானமாகிய வேலப்ப தேசிகர், சங்கரன்கோவிலில் 10 வது சன்னிதானமாகிய வேலப்ப தேசிகர், திருவிடைமருதூரில் 17 வது சன்னிதானமாகிய அம்பலவாண தேசிகராகிய ஐவரும் கோயில் கொண்டு எழுந்தருளும் மூலஸ்தான இடத்தில், ஏனைய குருமகா சன்னிதானங்களுக்கு இருப்பது போன்று சிவலிங்கம், பீடம் இருப்பதற்கு பதிலாக திருமூர்த்தம் அமையப் பெற்றிருப்பது சிறப்பு.
அந்த வகையில் தென்தமிழகப் பகுதி சங்கரன்கோவிலில் வேலப்ப தேசிக சுவாமிகள் (1678 – 1700) திருமூர்த்தத்தில் எழுந்தருளி இன்றும் மக்களுக்கு அனுக்கிரகம் செய்து வருகிறார்.
இருதய நாப்பண் அஞ்செழுத் துருவின் இறைவனை உயிர்க்கொலை செய்யாமை அருள் பொறி அடக்கம் பொறை தவம் வாய்மை அன்பு அறிவு என்னும் எண்மலர் கொண்டு ஒருமையொரு அருச்சித்திடுக என்று அடியார்க்கு ஒள்ளிய தீக்கைசெய்து உணர்த்தத் திருஅமர் துறைசை உறையருள் குருவாம் திருநமச்சிவாயர் தாள் போற்றி!
-என குருமுதல்வரை பணிந்து ஏத்தி, யாவரும் சித்தாந்தத்தின் தெய்விக நிலையை உணர வேண்டும் என்கிறார் சைவர்களின் குல தெய்வம் ஸ்ரீமத் சிவஞானயோகிகள்.
நம் சிவஞான யோகிகளுக்கு தீட்சை அருளிய பேரூர் வேலப்ப தேசிகருக்கு குருவாக விளங்கியவர், சங்கரன்கோவிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பத்தாவது பட்டம் வேலப்ப தேசிக சுவாமிகள் ஆவார்கள்.
(இச்சிந்தனையில் தேசிகர் என்றே சிந்திப்போமாக).
இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்புகளை உடையது.
தென்தமிழக பஞ்சபூத ஸ்தலங்களில் பிருதுவிக்குரிய மண் தலம் இது. எண்ணற்ற அளவிட முடியாத மகிமை நிறைந்த இத்தலத்தில் பரம்பொருள் சங்கரலிங்க சுவாமியாகவும், கோமதியம்பிகையாகவும் சிறப்புத் திருநாமத்தில் சங்கர நாராயணராகவும் அருள் பாலிக்கிறார்கள்.
மூவர் சன்னிதியிலும் நாள்தோறும் கோடி ஜனங்கள் வந்து வந்தித்து வணங்கி தம் மனக்குறைகளை முறையிட்டு தீர்வு கண்டு நிறைவான மனதுடன் செல்வதற்கு காரணமாக இருக்கும் தெய்விக சாந்தித்தியம் நிறைந்த ஸ்தலம் இது.
இங்கு வாழும் மக்கள் எவ்வாறு தன் பக்தியை வெளிப்படுத்தி சமுதாய ஒற்றுமைக்கும், நகரின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இத்தலத்தில் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் ஆடி உத்திராடம் தவசு பெருந்திருவிழாவும், உக்கிர பாண்டிய மகாராஜாவால் ஏற்படுத்தப்பட்ட நாற்பத்தி எட்டு நாட்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவமும் ஆணித்தரமானஆதாரப்பூர்வமான சாட்சிகளாகும்.
துறைசை ஆதினத்திற்கு கிளை மடங்களாக முத்து வீரப்ப நாயக்கர், செவந்தியப்ப நாயக்கர் 1615ஆ ம் ஆண்டு ஏற்படுத்திக் கொடுத்த திருமடங்களில் இதுவும் ஒன்று. புன்னை வவனத்தில் உள்ள இத்தேசிகரின் அதிஷ்டானம் அமைந்த பிறகு இத்திருமடாலயம் மென்மேலும் சிறப்புற்று விளங்கியது என்பதை இங்கு நடைபெறும் வழிபாட்டின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.
இங்கு சுமார் 325 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தல யாத்திரையாக வந்தவர் திருவாவடுதுறை ஆதின கர்த்தா பத்தாவது பட்டம் வேலப்ப தேசிகர். இவ்விடமும், இங்குள்ள அன்பர்களின் வாழ்வியல் முறையை கண்ணுற்ற தேசிகர் இங்கேயே தங்கி இளைப்பாற திருவுள்ளம் கொண்டார்.
அதன்படியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சங்கர கோமதியம்பிகையைத் தொழுது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசியும் நல்கி வந்தார்.
அச்சமயத்தில் முதல் சுதந்திரப் போராட்ட வீரரும், பதினெட்டு பாளையக்காரர்களில் ஒருவருமான நெற்கட்டும்செவல் மன்னன் பூலித்தேவருக்கு தேசிகரின் அருமையும் பெருமையும் தெரிய வர தரிசனம் செய்வதற்காக வந்தார். பூலித்தேவருக்கு வந்திருந்த குன்ம நோய் தேசிகரின் திருப்பார்வை பட்டவுடன் சூரியனைக் கண்ட பனி போல விலகியது. திருவடியில் சரணடைந்தார்; ஆடினார்; பாடினார்.
துறைசை ஆதின பத்தாவது பட்ட பரமஹம்சரிடம் தன்னுடைய மனம் மொழி மெய்களை ஒப்புவித்தார். தன் நன்றியை புலப்படுத்தும் விதமாக, இம் மடாலயத்தில் நடைபெறும் சிவபூஜை, குருபூஜை, அடியார்கள் பூஜை போன்றவற்றிற்கு நாயக்க மன்னர்கள் ஏற்படுத்திய நிவந்தங்களை மென்மேலும் செம்மைப்படுத்திக் கொடுத்தார் மன்னர் பூலித்தேவர்.
மேலும் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணியை நீக்கும் பொருட்டு அன்னை கோமதியம்பிகையின் முன்பு ஸ்ரீ சக்கரக்குழியையும் உருவாக்கிய உத்தமர் தேசிகர்.
ஒரு புரட்டாசி மூலம் நன்னாளில் வேலப்ப தேசிகருக்கு சிவஞானம் கைகூட ஜீவசமாதி அடைந்தார்.

வேலப்பர் ஸ்துதி
நிறைமதி ஆதித்தர் உபராகத்தி ராகுவொடு நிழலாம் கேது மறைவின்றி விளங்குதல் போல்இறைவனைத் தம் மனமலரில் வருணம் ஐந்தின் முறைமையினில் காண்டலுறில் தோன்றிடும் அம் முதல்வன்என முதிர் பாகர்க்குத் துறைசைதனில் அறிவுறுத்து குருமுதல் வேலப்பன் மலர்த்துணைத்தாள் போற்றி!
மீண்டும் வந்தார்
அன்றைய கால கட்டத்தில் ரத வீதியில் வாழ்ந்த பலர் இங்கு சமாதி இருக்கக் கூடாது என கூச்சலிட்டனர். இதனால் தேசிகரின் அடியார் குழாமும் இம்மடாலயத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தனர். இது நாளைடைவில் வலுத்து இரு தரப்பினருக்கும் பகையை உண்டு பண்ணி சண்டைக்கு வழி வகுத்தது. அப்போது தேசிகர் அதிஷ்டானத்தில் இருந்து எழுந்து வந்து இருதரப்பினரிடமும் “சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக வாழுங்கள். நாம் இங்கு பூத உடலை மறைத்து என்றும் பரமஜீவனோடு வீற்றிருக்கிறோம்” எனச் சொல்லி அதிஷ்டானத்திற்குள் மீண்டும் புகுந்தார். அன்றுமுதல் அவர்களும் தேசிகருக்கு பக்தர்களாக ஆனார்கள்.
அன்றில் இருந்து ஆண்டுதோறும் அன்னாளில் குருபூஜை வைபவம் வெகு விமர்சையாகவும் சிறப்பாகவும் சைவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
செப்பேட்டுச் செய்திகள்
மதுரையை ஆண்ட முத்து வீரப்ப நாயக்கரின் காலத்தில் திருவாவடுதுறை ஆதின பண்டார சன்னிதியவர்களுக்கு சங்கரன்கோவில் திருவாவடுதுறை ஆதினக் கிளை மடத்திற்கு வழங்கிய நிலம் பற்றி செப்பேட்டு செய்தியாவது:
அச்சம்பட்டி வழிக்கு மேற்கு சங்கரநயினார் கோவில் பெரும்பத்து புஞ்சைக்குத் தெற்கு இதன் மேல் பெரும்பத்துப் புஞ்சைக்குக் கிழக்கு குட்டியாண்டான் குளத்திற்கு வடக்கு - இந்த நான்கு எல்லைகளுக்குள் பட்ட சகலமும் இதனில் நன் செய்ப் பயிர் செய்து களம் ஏற்றிய கார் பாசனம் வருடம் ஒன்றுக்கு விதைக் கோட்டை ஒன்றுக்குக் கபில பாட்டம் நெல் கோட்டைக்கு 1097 மரக்கால் வீதிம் நன் செய் மற்றும் புன்செய் விதைகள் கோட்டை ஒன்றுக்கு நன் செய் தீர்வைக்குப் பாதி தீர்வை வீதம் ஓரட்டு சங்கரநயினார் கோவில் கஸ்பாவில் இருக்கும் குளங்கள் இரண்டுக்கும் இவ்விதம் வசூலிக்க................ மேற்சொன்ன தர்மத்திற்கு சந்திர சூரியர் உள்ளவரை ஆதின பரம்பரையாய் நடத்தி வருவீர்களாக. இத்தர்மத்திற்கு யார் ஒருவர் வாக்குச் சகாயம் செய்கிறாரோ அவர் காசியில் கோடி சிவலிங்க பிரதிஷ்டை செய்த பலனை அடைவர். இத்தர்மத்திற்கு யார் ஒருவர் இடையூறு செய்கிறாரோ அல்லது பகையாய் பேசுகிறாரோ அவர் காசியில் ஆயிரம் கபில பசுக்களை கொன்ற பாவத்திலும் போவார்கள்
-என்றவாறு திருவாவடுதுறை ஆதினத்தின் திங்கள் இதழாக வெளிவரும் மெய்கண்டார் மலர் 15 இதழ் 4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிகப் பெருமானின் சிஷ்யராக விளங்கிய சாஸ்திரம் சாமிநாத முனிவர் திருவாவடுதுறை புராணம், திருப்பெருந்துறை புராணம், திருப்பெருந்துறை கலம்பகம் என்னும் மூன்று நுாற்களை இச்சைவத்தமிழ் உலகிற்கு அருளிச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் பக்தரிடம் பேசுவார்
இந்த இருப்பதியோராம் நுாற்றாண்டில் தேசிக ஸ்வாமிகள் நடாத்திய திருவிளையாடல். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மழை பெய்து கசிவு ஏற்பட்டு சுவாமியின் திருத்தோளின் மீது தண்ணீர் சொட்டுச் சொட்டாக ஒழுகியுள்ளது. மழை பெய்து நின்றால் மட்டுமே இதைக் கவனிக்க முடியும். இங்கு வரும் ஒரு ஆத்மார்த்த பக்தரின் கனவில் மடாலயம் தெரிந்து திருமேனி நனைகிறது என்ற அசரீரி கேட்டுள்ளது. அவரும் விழித்தெழுத்து தேசிகரின்அதிஷ்டானம் நோக்கி வணங்கினார்.
பின்னர் காலையில் சன்னிதிக்கு வந்து சுவாமியை தரிசித்து இருக்க தாழ்வாரத்தில் தேங்கிய தண்ணீர் சொட்டி வருவதைக் கண்ணுற்றார் அவர். அதன் பிறகு கருவறை மேல் தாழ்வாரத்திற்கு புதியதாக செங்கல் தள வரிசை பதிக்கப்பட்டன என சைவ சித்தாந்த சபை செயலர் ஆவுடையப்பன் ஒரு குருபூஜை தின சொற்பொழிவில் சிலாகித்து சொன்னதை அடியேன் கேட்டுள்ளேன்.
இப்பெருமானை யாராயினும் ஆத்மார்த்த குருவாக ஏற்று போற்றி வணங்கி வருபவர்களுக்கு சுவாமிகள் திருகாட்சி நல்குவார். அவர்களுடன் பேசுவார். அவர்களுக்கு வேண்டியதை நடத்தி வைப்பார் என்பது கண்கூடு.
மூலத்திற்கு மூலாதாரமானவன்
மூலஸ்தானத்தில் கருணை ததும்பும் திருமுகம். கண்டாரை வசப்படுத்தும் நேத்திரம். சிரம், கரம், கழுத்தில் அக்கமணி மாலை தன் வலக்கரத்தில் சின்முத்திரை தரித்தும் இடக்கரத்தில் சுவடி ஏந்தியும், சம்மணமிட்டும் திருக்காட்சி தருகிறார். பக்தர்கள் வேண்டியதை தருவதில் கற்பக விருட்சமாய் இருக்கிறார் வேலப்ப சுவாமிகள்.
சித்தாந்த பண்டித பூஷணம் பேட்டை ஆ. ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை, சைவநன்மணி ச. ரத்தினவேலன், சிவத்தொண்டுச்சீராளன் ஆவுடையப்பன் போன்றோர் பதினான்கு சித்தாந்த சாஸ்திரங்களை இச்சன்னிதியில் இருந்து தான் சைவ நன்மக்களுக்கு போதித்தார்கள்.
தற்போதும் சைவ சித்தாந்த சபையும், சைவ சித்தாந்த பேரவையும் அவ்வழியே தன் பணியை தொடர்கிறது.
அருளாசி வழங்கியவர்கள்
தென் தமிழக யாத்திரையில் பல்வேறு சமயங்களில் ஆதின கர்த்தாக்கள் பலரும் இங்கு வருகை புரிந்து வேலப்ப தேசிகரை தரிசித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார்கள். முடிந்தளவு அவர்களின் திருநாமங்களை இங்கு இணைத்துள்ளோம்:
திருவாவடுதுறை ஆதினம்
16 வது பட்டம் மேலகரம் சுப்பிர மணிய தேசிகர்
20 வது பட்டம் அம்பலவாண தேசிகர்
22 வது பட்டம் அம்பலவாண தேசிகர்
23 வது பட்டம் சிவப்பிரகாச தேசிகர்
24 வது பட்டம் அம்பலவாண தேசிகர்
திருப்பனந்தாள்
காசிமடத்து அதிபர் முத்துக்குமாரசாமி தம்பிரான்
மதுரை ஆதினம்
292 வது பட்டம் அருணகிரி நாத சுவாமிகள்
293 வது பட்டம் ஹரிஹர ஞான சம்பந்த தேசிகர்
செங்கோல் ஆதினம்
103 வது பட்டம் சத்திய ஞான சிவப்பிரகாச தேசிகர்
காஞ்சி காமகோடி பீடம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
ஸ்ரீ விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள்
கூனம்பட்டி ஆதினம்
55 வது பட்டம் சரவண மாணிக்க வாசக சுவாமிகள்
56 வது பட்டம் ராஜ லிங்க மாணிக்க வாசக சுவாமிகள்
57 வது பட்டம் சரவண மாணிக்க வாசக சுவாமிகள்
குன்றக்குடி மேல மடம் பரம்பரையினர்
நடுவூர் சுவாமி நித்தியானந்தா
ராயகிரி புவனகிரி சுவாமிகள்
நிறைவாக,
உடற்பிணி, உள்ளப்பிணி யாவற்றையும் போக்கும் வேலப்ப தேசிக சுவாமிகளின் தரிசனம் தீவினை அறுக்கும், நல்வினைக்கு வித்தாகும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். மங்களம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நியாயமான வேண்டுதல் நிறைவேறும். ஒவ்வொரு ஆன்மாக்களும் யார் என்பதை உணருவதற்கு ஒரு வாய்ப்பு அமையும். மொத்தத்தில் குருவருள் அனைவருக்கும் கிட்டும் என்று கூறி,
கீழ்க்கண்ட வேலப்ப சுவாமிகள் கீர்த்தனைப் பாடலை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் நாடு போற்றும் நல்லவராகவும் வல்லவராகவும் திகழ்வார்கள் என நினைந்து இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.
வேலப்ப சுவாமிகளின் கீர்த்தனை
அவன் அருளால் அவன் தாள் வணங்கி தினமும் நினைப்போம் குருநாதனை திக்கெல்லாம் பரப்புவோம் அவன் புகழை... பத்தாவது பட்டத்திற்கு சொந்தக்காரன் அவன் - பாரினில் பாமரரும் தொழுது உய்யும் துறைசைக்காரன் கொடிவழி தெய்வத்திற்கும் பெரியோன் அவன் - தண் கொன்றை சூடியோனுக்கு பிரியோன் அவன் சங்கை மாநகருக்கு திலகன் அவன் - மக்கள் சங்கடங்கள் தீர்ப்பதில் முதல்வன் அவன் கோமதியின் பாதம் தொழுபவனாம் - நித்தம் கோடி நன்மைகள் செய்பவனாம் உடற் பிணி நீக்கும் உத்தமனாம் - பக்தர் மனப்பிணி போக்கும் மாதவனாம் லட்சியத் தலைவர்களின் நாயகனாம் - நல் ஆட்சியில் உள்ளோரின் காதலனாம். மருத்துவர்களுக்கெல்லாம் மாதலைவன் அவன் - பவப்பிணி போக்கும் அருந்தவத்தோர்களுக்கெல்லாம் ஆதாரம் அவன் பெருநிதிக் கிழவர்களின் பித்து அவன் - உலக பேரின்ப வாழ்விற்கு வித்து அவன் கண் முன்னே நடமாடும் கருணையாளன் அவன் - காசினி மன்றில் வீற்றிருக்கும் திருக்கயிலை நாதன் மூலத்திற்கு மூலமானானன் - கல் ஆலமரச் செல்வராக அணியானான் குருஓரை தன்னில் வந்திடுவான் - யாவருக்கும் அருளாட்சி நல்கி காத்திடுவான் சீராசை நகரில் சிறந்தவன் அவன் - கொடும் பேராசை மிக்கோர்க்கு கூற்றன் அவன் நல்லோராய் வாழத் துணை புரிவான் - இந்த வேலப்பன் எல்லோர் மனதிலும் இருப்பவனாம். நந்தி மரபுடைய நாதன் அவன் - நாம் அவனை முந்திச் சென்று ஆராதிக்கலாம். சம தர்மம் நிலைக்க மீண்டு வந்தான் - அவனை எந்நாளும் சாத்வீகமாய் சென்று வழிபடலாம். வேலப்பன் என்னும் திருநாமத்தில் - சங்கரன் வெற்றி நல்கும் குருவானான். பல்லாண்டு காலம் அவன் இருப்பான் - இந்த பக்தர்களும் பல்லாண்டு பாடியே வாழ்த்துவோமே.
$$$