-சேக்கிழான்

வக்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுப் பெரும்பான்மையுடன் நிறைவேறியதை அடுத்து, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலமாக, வக்பு சொத்து என்ற பெயரில் நடந்துவந்த மோசடிகளுக்கு தற்போதைய மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வக்பு என்பது இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட எவராலும் மத நோக்கங்களுக்காகவும் தொண்டு நோக்கங்களுக்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் அசையும் அல்லது அசையாச் சொத்துகள் ஆகும். இந்த சொத்துகளை நிர்வகிக்க வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
வக்பு சொத்துக்களைக் கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி, 1954-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் 1958-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன. 1954-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம், 1995-ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் அவற்றை கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன. வக்பு சட்டம்- 1995 என்று அது குறிப்பிடப்படுகிறது.
வக்பு சட்டத்தை அரசு கொண்டுவந்திருந்தாலும், வக்பு வாரியத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட முடியாது. இதன் காரணமாக வெளிப்படையற்ற தன்மையும் ஊழலும் அதில் கோலோச்சுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வக்பு தொடர்பான சுமார் 120 எதிர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் விளைவாக தற்போது இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.
வக்பு சட்டத்தின் குறைபாடுகளை நீக்க, சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம், மத்திய அரசால் வக்பு திருத்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த்தால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு, 92.27 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நேரடியாகவும் இணையவழியிலும் குவிந்தன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்கள் மட்டுமல்லாது 284 குழுக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தன. அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் திருத்த மசோதா வடிவமைக்கப்பட்டது.
இந்த மசோதா ‘உமீது’ மசோதா என அழைக்கப்படும். (Unified Waqf Management Empowerment, Efficiency and Development (UMEED) Bill). இதுதொடர்பாக மத்திய அரசு கூறுகையில், “அனைத்து மத அமைப்புகளையும் அவற்றின் சுயாட்சியையும் அரசு மதிக்கிறது. அவர்களுடைய மத விவகாரங்களில் தலையிட அரசு முயற்சிக்கவில்லை. அதேநேரம், சொத்துகளை நிர்வகிக்கும் விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவரவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவுமே வக்பு திருத்த மசோதா நிறைவேற உள்ளது” என்று தெரிவித்தது.
2013இல் ஐ.மு.கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் 40-வது பிரிவின்படி, எந்த ஒரு நிலத்தையும் வக்பு சொத்து என வக்பு வாரியத்தால் தன்னிச்சையாக அறிவிக்க முடியும். இந்தக் கடுமையான பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இனிமேல் எவ்வித ஆதாரமும் இன்றி பிறரது சொத்துகளை வக்பு சொத்து என்று அறிவிக்க முடியாது. தவிர, இதுவரை, வக்பு சொத்து தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண வக்பு தீர்வாயமே சர்வ அதிகாரம் கொண்டதாக இருந்தது. அதுவும் மாற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியர் வசம் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்:
வக்பு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் 02.04.2025 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
அதையடுத்து, வக்பு சட்ட திருத்த மசோதா, ராஜ்யசபாவில் 03.04.2025 அன்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவால் தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
தற்போதைய மோடி அரசுக்கு லோக்சபாவில் தனிப் பெரும்பான்மை இல்லை. எனவே கூட்டணிக் கட்சிகளின் தயவில் தான் சட்டங்களை நிறைவேற்ற வேண்டி இருக்கும் என்று கேலி பேசி வந்த எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஏகமனதாக இந்த சட்டத்தை ஆதரித்திருக்கின்றன. கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்த மசோதாவை ஆதரித்துள்ளனர்.
மசோதாவை ராஜ்யசபாவில் அறிமுகம் செய்த அமைச்சர் கிரண் ரிஜ்ஜு பேசியது:
வக்பு வாரியத்திடம் ஏராளமான சொத்துகள் உள்ளன. ஆனால் இந்த சொத்துகளால் ஏழை முஸ்லிம்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. வக்பு சொத்துகள் தொடர்பாக கடந்த 2006-ஆம் ஆண்டில் சச்சார் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது. அப்போது வக்பு வாரியங்களிடம் 4.9 லட்சம் சொத்துகள் இருந்தன. அவற்றின் மூலம் ரூ.163 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டது. வக்பு சொத்துகளை முறையாக நிர்வகித்து இருந்தால் ரூ.12,000 கோடி வரை வருவாய் ஈட்டியிருக்க முடியும். தற்போது வக்பு வாரியங்களிடம் 8.72 லட்சம் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை முறையாக நிர்வகித்தால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். ஏழை முஸ்லிம்கள் பலன் அடைய வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டே வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, நேர்த்தி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் வக்பு சட்ட திருத்த மசோதா வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் 600 குடும்பங்களின் நிலங்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது. இதை எதிர்த்து கத்தோலிக்கப் பேராயர்கள், பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. நாடாளுமன்றக் கட்டடம் இருக்கும் இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றும் கூட சிலர் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணவே வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
-என்றார்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் தமிழகத்தின் திருச்செந்துறை கிராமம் முழுவதும்- குறிப்பாக அங்குள்ள கோயில் நிலங்கள் கூட வக்பு சொத்தாக அறிவிக்கப்பட்டிருப்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார். இதுபோல பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றுள்ள அத்துமீறல்கள் குறித்து உறுப்பினர்கள் பலர் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேறியதை அடுத்து, திருச்செந்துறை கிராம மக்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதா மீதான விவாத்தின் மீது பேசிய சிறுபான்மையின உறுப்பினர் ஒருவர், “வக்பு சட்டத் திருத்தத்தை நாட்டிலுள்ள இஸ்லாமியர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று பேசினார். அதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இது இந்திய நாடாளுமன்றம் உருவாக்கியுள்ள சட்டம். இதை ஏற்க இயலாது என்று எந்தக் குடிமகனும் கூற முடியாது” என்று உறுதிபடத் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
வக்பு சட்டத் திருத்த மசோதா 2025, ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலுடன் இப்போது சட்டமாகிவிட்டது. இனிமேல் (2025 ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு), வக்பு என்ற பெயரில் யாரும் மோசடிகளைச் செய்ய முடியாது. எனினும், இச்சட்டத் திருத்தம் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படவில்லை. இது ஒரு பெரும் குறையாகும். விரைவில் நீதிமன்றங்கள் இதற்கும் தீர்வு காணும் என்று நம்புகிறோம்.
வக்பு சொத்துகள் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கங்களும் நீதிமன்றங்களும் இதுவரை எந்த வகையிலும் தலையிட இயலாத நிலையை இதற்கு முந்தைய வக்பு சட்ட விதிகள் கொண்டிருந்தன. அது ஒருவகையில் நாட்டின் மதச்சார்பின்மையின் பெயரில் நிகழ்த்தப்பட்ட கொடூரமாக இருந்து வந்தது. அந்தக் கறை தற்போது ஜனநாயகரீதியாகவே நீக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:
- வக்பு வாரியத்துக்கு நிலத்தைக் கொடுப்பவர், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.
- வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்களுக்கும், ஷியா பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.
- வக்பு கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்பு வாரியத்திலும் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது.
- வக்பு நிலத்தை அளவீடு செய்யும் கூடுதல் ஆணையரின் அதிகாரம் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்படும்.
$$$