-ச.சண்முகநாதன், முரளி சீதாராமன்
தமிழின் சிறப்புக்கு சிகரமான கம்ப ராமாயணத்தில் இரு திவலைகளை எடுத்து முகநூலில் விதந்தோதுகின்றனர், திருவாளர்கள் பெங்களூர் ச.சண்முகநாதனும், சேலம் முரளி சீதாராமனும். நீங்களும் இந்தத் தமிழ்ச் சுவையில் திளையுங்கள். அனைவருக்கும் ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்!

1. ஸ்ரீராமனின் கால் வண்ணம்
-ச.சண்முகநாதன்.
ஸ்ரீ ராமஜெயம்.
ஸ்ரீராமனை திறங்கொள் கோசலை திருவுறப் பயந்ததும், அவன் கச ரத துரக மாக் கடல்கொள் காவலன், தசரதன் மதலையாய் பிறந்ததும், அறம் தழைப்பதற்க்காகவும் அறவோர்கள் காக்கப்படவும். இதுவே அவதார நோக்கம் என்றாலும், இன்னும் இரண்டு ஜீவன்கள் ராமனின் வருகைக்காகக் காத்திருந்தன. ராமாவதாரத்தின் புனித மஹிமை வெளிப்படும் விதமாக இரண்டு முக்கியமான நிகழ்வுகள் அவை.
- ஒன்று: அகலிகை.
“கல் இயல் ஆதி” (கல்லாய் மாறிவிடு ) என்று சாபம் விடுத்தான் கெளதம முனிவன், தன் பத்தினி அகலிகையை நோக்கி. காரணம் இந்திரன் அவளை ஏமாற்றிய தருணத்தில், உடனிருப்பது இந்திரன் என்று தெரிந்தும், இது தவறு என்று மனதில் தோன்றாமல் இன்பம் அனுபவித்தாள்.
“உணர்ந்தனள். உணர்ந்த பின்னும், 'தக்கது அன்று' என்ன ஓராள்”
கல்லாய் மாறிவிடும் முன்னர் அகலிகை தன் கணவனை வேண்டுகிறாள். “பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே”. நான் செய்தது பிழை. இந்த சாபம் எனக்குத் தகும். என்றாலும் “முடிவு இதற்கு அருளுக!” என்று இந்த சாபத்தில் இருந்து விடுபட விமோக்ஷணம் இருக்கிறதா என்று வேண்டுகிறாள்.
அதைக் கேட்ட கெளதம முனிவன்
“தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன் என்பான் கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி” என்றான்.
“வண்டுகள் மொய்க்கும் குளிர்ந்த மாலையணிந்த உத்தமன் தசரத ராமன் இவ்விடம் வந்து அவன் பாத துளிகள் பட இந்த கல்லுருவில் இருந்து மனித உரு பெறுவாய்” என்று சாப விமோக்ஷணத்தின் சூத்திரம் சொல்லிவிடுகிறான்.
இது சாபமா, இல்லை வரமா?
ராமனின் பாதத் துகள்கள் நம் தலை மீது படுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வோமே நாம்! இப்படி ஒரு சாப விமோக்ஷணம் கிடைக்குமென்றால் கல்லாய்க் கிடப்பதும் சுகமே. அகலிகைக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. Real Blessing in disguise.
பின்னொரு நாள் விஸ்வாமித்ரனுடன் வேள்வியைக் காக்கும் பொருட்டு வனம் வந்த இடத்தில் கல்லாய் கிடந்த அகலிகை மேட்டைக் காண்கிறான் ராமன்.
“மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார்.”
(மாதவன் பன்னி = முனிவன் பத்தினி)
கண்டமாத்திரத்தில் ஸ்ரீ ராமனின் பாதத் துகள் அந்தக் கல்லின் மீது பட, சாப விமோக்ஷணம் பெற்று, அகலிகை மனித உருவில் தோன்றுகிறாள்.
“கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,- உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம் கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,- பண்டை வண்ணமாய் நின்றனள்”
How blessed Akalikai was!
கடல் தாண்டி பாதம் வைத்து நடந்து இலங்கை சென்று, கொடுமை செய்யும் அரக்கர் சாம்ராஜ்யத்தை நிர்மூலமாக்கியவன் ராமன். ஆனால் அவன் அன்பு செய்தால் அவன் பாதம் கல்லையும் மனிதராய் மாற்றிவிடும்.
நம் மழை வண்ணத்து அண்ணலின் கை வண்ணம் கால் வண்ணம் என எல்லா வண்ணமும் எண்ணி எண்ணி இன்பமுற வேண்டும். அதற்கு ஸ்ரீ ராமனே யாரும் புரிய வேண்டும். நம் தலை மீதும் அவன் கழல் துகள் கதுவ வேண்டும். அகலிகைக்கு அருள் புரிந்தவன் நம்மைப் போன்ற அடியவர் யாவருக்கும் அருள் புரிய வேண்டும்.

- இரண்டு: சபரி
ஸ்ரீ ராமனின் வருகைக்காக காத்திருந்த இன்னொரு ஜீவன் சபரி.
ஸ்ரீ ராமனின் பார்வை படக் கொடுத்து வைத்தவள் சபரி.
ராமனையே மனத்தில் நினைத்து, அதன் பயனாக, ராமனைக் கண்ணாரக் கண்டு முக்தி அடைந்தவள் சபரி.
ராமனைக் கண்ணால் காணும் பேறு கிடைக்குமா என்று ஏங்குபவர் மத்தியில், அந்த ஸ்ரீராமனே தன்னைப் பார்க்க வந்து, தான் கொடுத்த பழங்களை ஏற்றுக் கொள்வது எப்பேர்ப்பட்ட புண்ணியம்!
இதை தியாகராஜ ஸ்வாமிகள் “எங்ஙனம் நான் வருணிப்பேன் சபரியின் பேற்றினை?” என்று பாடுகிறார். “எந்தனி நே வர்ணிந்துனு சபரி” என்று முகாரி ராகத்தில்.
“கண்ணார சேவித்து, இனிய பழங்களையளித்து, மெய்ச்சிலிர்க்க, திருவடி இணையினுக்கு வணங்கி, பரிதி குலத் தலைவனின் முன்னிலையில், மறு பிறப்பற்ற பதத்தினையடைந்த, தியாகராசனால் போற்றப் பெற்றவளின் புண்ணியத்தினை எங்ஙனம் நான் வருணிப்பேன், சபரியின் பேற்றினை?”
அகலிகைக்கு நேரெதிர் சபரி. “அளவு இல் காலம், ராமனையே நினைந்து நோற்றவள்” சபரி. துறவு மேற்கொண்டவள். ராமனையே நினைத்து தவம் செய்தவள். ராமன் அவளுக்கு அருள் செய்வதில் வியப்பேயில்லை.
ராமன் சபரியின் இடம் சென்று அவளை கண்ணனுக்கு நேர் நோக்கி இன்னுரை அருளுகிறான். “தீது இன்று இருந்தனைபோலும்”என்று நலம் விசாரிக்கிறான். யாருக்குக் கிடைக்கும் இந்தப் பேறு!
எந்தனி நே வர்ணிந்துனு சபரி! ராமனின் சொல் நேரடியாக செவியில் விழுகிறது. ராமனின் திரு உருவை அவள் கண்கள் நேரடியாக காண்கிறது. ராமனின் சமீபம் அவளை முக்தி நிலைக்கு அழைத்து செல்கிறது. ஒரு நிமிடம் நம்மை சபரியாக நினைத்துக்கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அளவில்லாதது. சபரிக்கு எப்படி இருந்திருக்க வேண்டும்!
கண்களில் அருவி போலக் கொட்டுகிறது சபரிக்கு.
“மாண்டது என் மாயப் பாசம்; வந்தது, வரம்பு இல் காலம் பூண்ட மா தவத்தின் செல்வம்; போயது பிறவி”
-என்று மகிழ்கிறாள்.
ராமனைக் கண்ட கண்கள் வேறெதுவும் காண விரும்புமோ?
ராமன் பேசக்கேட்ட செவிகள் வேறெதையும் கேட்க விரும்புமோ?
ராமனைத் துதித்த நா வேறெந்த சொல்லையும் சொல்ல விரும்புமோ?
சபரி, “நான் காலமெல்லாம் செய்த தவப்பயன் இந்த தருணம். இனி எனக்கு பிறவியே கிடையாது” என்று மகிழ்ச்சி கொள்கிறாள்.
ராமனும் மனம் கனிந்து, சபரி கொடுத்த பழங்களை உண்டு பசியாறுகிறான். பசியாற்றியதற்கு மாதரசி சபரிக்கு மனம் நிறைந்த நன்றிகளை சொல்லிக் கொள்கிறான்.
“அருந்தவத்து அரசிதன்னை அன்புற நோக்கி,‘எங்கள் வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மானை! வாழி’ என்றான் ராமன்”.
ராமனின் பசி தீரச் செய்தவள் சபரி. எந்தனி நே வர்ணிந்துனு சபரி!
இப்பொழுது சபரி முக்தியடையும் நேரம். ராமனைக் கண்ணாரக் கண்டது மட்டுமல்லாமல் அவன் பசி தீர்க்கும் பேறு யாருக்கு கிடைக்கும்! தன் உடல் துறந்து முக்தி அடைகிறாள் சபரி எனும் மாதரசி.
“பின், அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே, தன் உடல் துறந்து, தான் அத் தனிமையின் இனிது சார்ந்தாள்;”
ராமபக்தி சாம்ராஜ்யம். அதில் பக்தி செய்பவர் ஒவ்வொருவரும் சக்கரவர்த்தி. அனுமன், குகன், சபரி, அங்கதன் விபீஷணன் என்று அவன் அன்பு செலுத்தி பல பக்திச் சக்கரவர்த்திகள் உண்டு. நாம் அந்த சாம்ராஜ்யத்தில் நாமும் ஒரு குடிமகனாக இருக்க அவன் அருள் புரியட்டும்.
அனைவருக்கும் ஸ்ரீ ராம நவமி நாள் வாழ்த்துக்கள்.
$$$

2. ஒரு சொல், ஒரு வில்: பல பொருள், பல அம்புகள்!
-முரளி சீதாராமன்
ஒரேயொரு சொல்லில் பல அர்த்தங்களைப் பொதிந்து சொல்வதில் வல்லவன் ராமன்.
கிருபானந்த வாரியாரின் கம்பன் கவிநயம் – அற்புதமான பொக்கிஷம்.
மாரிக்காலம் முடிந்துவிட்டது!
படை அனுப்புகிறேன் என்று சொன்ன சுக்ரீவன் இன்னமும் பதில் ஏதும் தரவில்லை.
அவனுக்கென்ன? அவன் வேலை முடிந்தது – வாலிவதம் முடிந்தது – மண்ணாட்சி மனையாட்சி இரண்டும் திரும்பக் கிடைத்தாயிற்று.
ராமன் தனது இளவல் இலக்குவனிடம் – சுக்ரீவனிடம் போய் என்ன, ஏது என்று விசாரித்துவிட்டு வா என்று கூறி – சுக்ரீவனிடம் பேச இலக்குவனை அனுப்புகிறான்.
இது சற்று மிரட்டல் கலந்த நினைவூட்டல்தான்!
“நஞ்சமன்னவரை நலிதல் என்பது - வஞ்சமன்று மனு வழக்கு ஆதலால்...”
இங்கேயே நுட்பமான எச்சரிக்கை தொடங்கிவிடுகிறது.
“விஷம் போன்ற கொடியவர்களை (நஞ்சம் அன்னவரை) மரணதண்டனையால் கொல்வது (நலிதல் என்பது) வஞ்சகம் அன்று! அது மானிட வழக்குதான்!”
அது சாதாரண மனிதர்களாகிய கொடியவர்கள் மட்டுமல்ல – மன்னனாகவே இருந்தாலும் தண்டிக்கலாம்!
“நஞ்ச மன்னவரை நலிதல் என்பது வஞ்சமன்று – மனு வழக்கு ஆதலால்…”
நஞ்சம் அன்னவரை, நஞ்ச மன்னவரை – சிலேடையில் கம்பன் விளையாடுவான்.
இதற்குப் பிறகுதான் ராமனின் பல பொருள்களை உள்ளடக்கிய நுட்பமான தகவல் தொடர்கிறது!
ஆதலால் – “அஞ்சிலம்பதில் ஒன்றறியாதவன் நெஞ்சில் சென்று நிலை நிறுத்துவாய்!”
இங்குதான் தமிழ்க் கடல் கிருபானந்தவாரியாரின் தமிழ்ப் புலமை வெளிப்படுகிறது!
எவ்வளவு நயம் பாருங்கள்!
1) அம் சிலம்பு – அழகான மலை – அதன் மீது அமர்ந்து கொண்டுள்ளான் – நமக்கு இன்னும் பதில் ஒன்று அறியாதவன்! (சுக்ரீவன்)
“அம்சிலம் பதிலொன்று அறியாதவன்”
2) அஞ்சு இல் அம்பு – அதில் ஒன்று அறியாதவன்.
நமது அம்பு எவருக்கும் அஞ்சாது! தாடகையை ஒரே அம்பு வீழ்த்தியது! கரணை வீழ்த்தியது! ஏழு மரங்களைத் துளைத்துச் சென்று வாலியை வீழ்த்தியது.
அப்படி ஒரு அம்பு எப்படி இருக்கும் என்பது அவனுக்குத் தெரியாது – போய்ச் சொல்!
“அஞ்சிலம்பதில் ஒன்று அறியாதவன்!”
3) அஞ்சு இல்! அம்பது இல்! ஒன்றறியாதவன்!
நம்மிடம் இருக்கும் அம்புகளின் எண்ணிக்கை ஐந்து இல்லை! ஐம்பது இல்லை! ஆயிரக்கணக்கில் உள்ளன! ஒன்றும் தெரியாத அவனிடம் போய்ச் சொல்!
4) அஞ்சில் அம்பதில் ஒன்று – அறியாதவன்.
ஐந்து ஐம்பது ஒன்று சேர்ந்தால் ஐம்பத்தி ஆறு!
ஐந்தும் ஐம்பதும் ஐம்பத்தி ஐந்து!
நான் ஐம்பத்தாறு தேசங்களுக்கும் ராஜாவான தசரதன் புதல்வன் – சக்ரவர்த்தித் திருமகன் நான்! என் தேசம் உட்பட 56 தேசங்களின் சக்ரவர்த்தி!
மீதி என் ஆளுமைக்குட்பட்ட 55 தேசங்களின் ஒன்றின் அரசன்தான் அவன்! அதை அறியாமல் இருக்கிறான்! போய்ச் சொல்!
(நான் 56 தேசங்களின் தலைவன் – நீ அதற்கு உட்பட்ட 55 அரசர்களில் ஒருவன் – ஒழுங்காக நடந்து கொள்!)
“அஞ்சில் அம்பதில் ஒன்றறியாதவன்!”
5) அஞ்சு இல் அம்பு – அதில் ஒன்றறியாதவன்
‘அம்பு’ – என்றால் கண்ணீர் என்றும் பொருள் உண்டு.
(விழி அம்பு ஒழுக மெத்திய மாதரும் வீதிமட்டே – இறந்தபிறகு மார்பில் அடித்துக் கொண்டு அழும் மனைவியின் உறவும் வீதிவரை!)
அங்கே எனது இல்லாள் (சீதை) எங்கோ கண்ணீரோடு இருக்கிறாள்! இவனுக்கு இவன் மனைவி கிடைத்து விட்டாள்!
அரக்கியர் குழாம் இடையில் அஞ்சி நடுங்கியபடி கண்ணீரோடு இருக்கிறாள் என் இல்லாள்! அந்தக் கண்ணீர் (அம்பு) எப்படி இருக்கும் என்பதை சுக்ரீவன் உணரவில்லை – போய்ச் சொல்.
அஞ்சு இல் (அஞ்சியபடி உள்ள இல்லாள்) அம்பு (அவளுடைய) கண்ணீர்! அதில் ஒன்று அறியாதவன்!
இதில் கம்பன் அஞ்சுகின்ற மனைவியின் கண்ணீர் என்று சொல்லியிருக்கலாம்! ஆனால் ஏன் இல்லாள் (இல்) என்றான்?
ராமனே எல்லாம் என்று இருப்பவள் சீதை! அவனைப் பிரிந்த போது – அவன் அருகில் இல்லாத போது அவளும் ‘இல்லாள்’ – இல்லாதவள் ஆகிறாள்!
“அஞ்சு இல் அம்பு – அதில் ஒன்றறியாதவன்”
ஞானத்தின் உச்சமாகிய ராமன் – தனது அளப்பரிய பெரும் மதிவன்மையால் – பல விஷயங்களை உட்பொதிந்து – இலக்குவன் மூலம் சுக்ரீவனுக்கு செய்தி விடுக்கிறான்.
அதைக் கம்பன் அழகுத் தமிழில் வடித்துக் கொடுக்க, தமிழ்க்கடல் வாரியார் அதற்கு நயம் சொல்லி விளக்க…
ஸ்ரீராமன் அவதரித்த திருநாளில் – ‘நடையின் நின்றுயர் நாயகனாம்’ ராமபிரானின் பொற்பாதங்களை வணங்குவோம்!
அனைவருக்கும் ஸ்ரீராமனின் பேரருள் கிட்டுவதாக!
ஜெய்ஸ்ரீராம்!
$$$