உருவகங்களின் ஊர்வலம் – 73

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #73...

73. கீரிக் கும்பலும் பாம்புக் கும்பலும்

வித்தை காட்டுபவனுக்கு
கீரியும் பாம்பும்
இரண்டுமே செல்லப் பிராணிகள்தான்.

பாம்பைச் சில நேரம் வெல்லவிடுவான்…
கீரியைச் சில நேரம் வெல்லவிடுவான்…
பாம்புக்கு சில நேரம்
அனைவர் முன்பாகவும் இரையிடுவான்…
கீரியைச் சில நேரம்
அனைவர் முன்பாகவும் மடியிலிட்டுக் கொஞ்சுவான்…

பாம்புக்கு உணவிடும்போது கீரிக்குக் கோபம் வரும்.
கீரியைக் கொஞ்சும்போது பாம்புக்குக் கோபம் வரும்.
இரண்டும் கோபத்தை தமக்குள் காட்டிக்கொள்ளும்.

கீரிக்கு அருகம்புல் படுக்கை செய்திருப்பான்.
பாம்புக்கு கீரியின் அசைவுகளைத்
தன் காலால் தரை மிதித்துக் காட்டுவான்.
கீரி தளரும்போது பாம்பை விலகி நிற்க வைப்பான்…
பாம்பு தளரும்போது கீரியை இறுக்கிப் பிடிப்பான்….
எந்த ஒன்றையும் இறுதி வெற்றி பெறவிட மாட்டான்.

அப்படி ஒன்று நடந்தால்
அதன் பின் அந்த விலங்கு
அவன் பக்கம் பாயும் என்பது அவனுக்குத் தெரியும்.

*

கூட்டத்தினரை மயக்க, கையில் ஒரு மகுடி வைத்திருப்பான்.
அதை அவன் அதி அற்புதமாக இசைப்பான்.
பரம வைரிகளான
கீரியையும் பாம்பையும் தன் வித்தைப்பிராணிகளாக
அவன் தேர்ந்தெடுத்ததில் அவனுடைய
அத்தனை வெற்றியும் அடங்கியிருக்கிறது.

எனினும்
காதில்லாத பாம்புக்கு அவன் இசைக்கும் மகுடி
அந்த வெற்றிக் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல்.
அது வேடிக்கை பார்க்கும் கும்பலை மயக்கவே இசைக்கப்படும்.
அவர்களுக்கு அது ஒருபோதும் தெரியவும் செய்யாது.

பாம்புக்கு என்று ஒரு கும்பல் அணி திரளும்…
கீரிக்கு என்று ஒரு கும்பல் அணி பிரியும்…
கீரிக்கும் பாம்புக்குமான சண்டையைவிட
பாம்புக் கும்பலுக்கும் கீரிக் கும்பலுக்குமான சண்டை
படு ஜோராக இருக்கும்.

பாம்புதான் ஜெயிக்கும் என்று
வித்தைக்காரனின் வேலையாள்
தொடங்கிவைப்பான் சூதாட்டத்தை.
இலையுதிர்க்காலச் சருகுகள் போல
ஆலங்கட்டி மழைத் துளிகள் போல
சில்லறைகள் எல்லையற்று பொழியும்
விரித்திருக்கும் துணியில்.

விழும் சில்லறைக்கு ஏற்ப
வித்தையின் வேகம் கூடும்.
பாம்பு ஜெயிப்பதாக அத்தனை பேரும் நம்பும்போது கீரி ஜெயிக்கும்.
கீரி ஜெயிப்பதாக அத்தனை பேரும் நம்பும்போது பாம்பு ஜெயிக்கும்.

எது ஜெயித்தாலும்
இறுதி வெற்றி வித்தைக்காரனுக்கே.
அது தெரியாமலிருப்பது
பாம்பும் கீரியும் மட்டுமேயல்ல.

*

மகுடியின் அலைகள்
மெள்ள மெள்ள
போதைபோல
வேடிக்கை பார்ப்பவர்களின் உடம்பெல்லாம் ஏறும்.
பாம்புக் கும்பலும் கீரிக் கும்பலும்
வித்தை நடக்காதபோதும் மோதிக்கொள்ள ஆரம்பிப்பார்கள்.
விவசாயம் மறப்பர்…
வணிகம் மறப்பர்…
கைத் தொழில்கள் மறப்பர்…
ஆலயம் தொழுதல் மறப்பர்…
ஆநிரை காக்க மறப்பர்…
அல்லது
அத்தனை செயலையும் வாழ்வையும்
அணி பிரிந்து மோதவே என்றாக்கிக் கொள்வர்.

வித்தைக்காரன் இரண்டுக்கும்
அவ்வப்போது அற்ப வெற்றிகளைக் கொடுத்தும் விடுகிறான்.
இரண்டும் மரபணுவில் பொதிந்த பகைமையுடன்
தன்னியல்புடன்
தன் அடையாளம் காக்க பெரும் ஆவேசத்துடன் போரிடுகின்றன.
மகுடி ஒலி முடிவற்றுக் கேட்கிறது.

வித்தைக்களத்துக்கு அப்பாலும்
தொடர்கிறது வித்தை.
மாய மகுடி ஒலி கேட்கும் இடங்களெல்லாம்
வித்தைக் களமாகின்றன.
திறந்துவிடும்போதெல்லாம் சீறுகிறது நாகக் கும்பல்.
அவிழ்த்துவிடும்போதெல்லாம் பாய்கிறது கீரிக் கும்பல்.

$$$

Leave a comment