-டாக்டர் மன்மோகன் வைத்யா
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் பிறந்த தினம் யுகாதி நன்னாள் (நாளை). அதனையொட்டி, ‘நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ்.’ அமைப்பின் நிறுவனர் குறித்த கட்டுரை இங்கே வெளியாகிறது....

ஆர் எஸ் எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை ஆரம்பித்த டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் பிறவி தேச பக்தர். சிறந்த அமைப்பாளர். நெடுநோக்குடன் செயல்பட்டவர். பார்ப்பதற்கு சாதாரணமானவராகத் தோற்றமளித்தாலும் அவரிடம் இருந்த இணையற்ற பண்புகளால் அசாதாரணமானவராகத் திகழ்ந்தார். பாரதத்தின் வரலாறு, பண்பாடு, தத்துவத்தில் ஆழ்ந்தவராக இருந்த அவர், அதே வேளையில், பாரதத்தின் எதிர்காலம் பற்றியும் சீரிய சிந்தனை கொண்டிருந்தார். எனவேதான் அவர் ஒரு தீர்க்கதரிசியாகக் கருதப்படுகிறார்.
விடுதலைப் போரில்…
பாரதத்தில் இருந்த பிரிட்டீஷாரின் ஆட்சிக்கு எதிரான அவரது உணர்வுகள் தீவிரமானது மட்டுமல்ல, அது சிறு வயதிலேயே வெளிப்பட்டது. சுதந்திரம் மகத்தான விஷயம். அதை எந்த வகையிலும் அடைந்தே ஆக வேண்டும் என்று அவர் கருதினார். அதனால் அவருக்குக் கிடைத்த எல்லா வழிமுறைகளிலும் – அகிம்ஸை சத்தியாகிரகம் முதல் ஆயுதப் போராட்டம், புரட்சிகர பயங்கரவாத செயல்கள் வரை – ஈடுபட்டார்.
அதே வேளையில், விடுதலை அடைவது மட்டுமல்ல, அதை நீடிக்கச் செய்ய வேண்டும் என்றால் விடுதலைப் போராட்டத்துடன் அதற்கு இணையாக சமுதாயத்தின் உளவியலிலும் ஆன்மிகத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமென அவர் கருதினார். எனவே, விடுதலை குறித்த இந்த நோக்கத்தோடு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒருங்கிணைக்க நீண்டகாலச் செயல்பாட்டை தொடங்கினார்.
1921 இல் நடந்த முதல் சத்யாகிரகப் போராட்டத்தில் அவர் பங்கேற்று சிறைப்பட்ட போதிலும், ‘சிறைப்படுவது மட்டுமே தேசபக்தியெனக் கூற முடியாது. ஒட்டுமொத்த சமுதாயத்தை விழிப்புணர்வு பெறச் செய்வதும், மறுமலர்ச்சிக்கான உத்வேகத்தை வீறுடன் எழுப்புவதும், சிறைப்படுவதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று அவர் அடிக்கடி கூறுவார்.
விவேகானந்தர் கூறியது…
சுவாமி விவேகானந்தர் பாரத தேசம் முழுவதும் இரண்டு ஆண்டுகள் சுற்றி வலம் வந்த பிறகு 1893 இல் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார். அமெரிக்கா, ஐரோப்பாவில் நான்கு ஆண்டுகள் கழித்த பிறகு 1897 இல் அவர் பாரதம் திரும்பினார். வந்ததும் பாரத நாட்டு மக்களுக்கு மூன்று முக்கிய விஷயங்களை அறிவுறுத்தினார்.
முதலாவதாக அவர் சொன்னது, “அமைப்பு. அமைப்பு ரீதியாகச் செயல்படுவது என்பதை நாம் மேற்கத்தியர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.”
இரண்டாவதாகச் சொன்னது, “மனிதனை உருவாக்கும் வழிமுறையை நாம் கண்டாக வேண்டும்.
மூன்றாவதாகச் சொன்னது, “பாரதீயர்களான நாம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு நம்முடைய வழக்கமான கடவுளர்களையும் வழிபாட்டையும் ஒதுக்கி வைத்து விட்டு, ‘பாரத மாதா’ என்ற ஒரே ஒரு தெய்வத்தை மட்டுமே வழிபட வேண்டும்.”
சங்கத்தின் பணி ஒட்டுமொத்த சமுதாயத்தை ஒருங்கிணைத்து தேசிய சிந்தனையை, கட்டுப்பாட்டை வளர்ப்பதாகும். ஷாகா எனப்படும் தினசரி சந்திப்பு அதற்கான வழிமுறை. இது, சுவாமி விவேகானந்தர் பாரதீயர்களுக்கு அறிவுறுத்திய விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது.
டாக்டர் அம்பேத்கரின் கருத்து:
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ‘ஜாதி அழிப்பு’ (Annihilation of Caste) என்றொரு நூல் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:
அரசியல் புரட்சிகள் ஏற்படுவதற்கு முன்பு, அதற்கு முன்னோடியாக அங்கு சமுதாய, சமய புரட்சி ஏற்படுகின்றன என்பதை வரலாறு நமக்குக் கூறுகிறது… லூத்தர் தொடங்கிய சமய சீர்திருத்த நடவடிக்கையால்தான் ஐரோப்பிய மக்களுக்கு அரசியல் மேம்பாடு கிடைத்தது. இங்கிலாந்தில் தூய்மை வாதம் எனப்படும் பியூரிட்டனிசத்தால் அரசியல் விடுதலை கிடைத்தது. பியூரிட்டனிசம் புதிய உலகைப் படைத்தது. பியூரிட்டனிசத்தால் அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. பியூரிட்டனிசம் என்பது ஒரு மத இயக்கம்… இது இஸ்லாமியப் பேரரசுக்கும் பொருந்தும். அரேபியர்கள் அரசியல் சக்தியாக வடிவெடுப்பதற்கு முன்பு முகமது நபி அங்கு சமயப் புரட்சியை ஏற்படுத்தினார். இந்திய வரலாறும் இந்த முடிவுக்கு வலு சேர்க்கிறது. புத்தர் ஏற்படுத்திய சமூக, சமயப் புரட்சியைத் தொடர்ந்தே சந்திரகுப்தர் அரசியல் புரட்சியை ஏற்படுத்தினார். சிவாஜியின் அரசியல் புரட்சிக்கு அடித்தளமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மகான்கள் பலரின் சமய, சமூகப் புரட்சி இருந்தது. குரு நானக்கின் சமூக, சமயப் புரட்சியே சீக்கியர்களின் அரசியல் புரட்சிக்கு வித்திட்டது… இன்னும் பல எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அரசியல் மேம்பாட்டிற்கு மக்களின் உளவியல் மற்றும் ஆன்மிக மேம்பாடு அடிப்படை தேவை என்பதை சுட்டிக்காட்ட மேற்சொன்ன உதாரணங்களே போதுமானவை.
-என்று டாக்டர் அம்பேத்கர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சித்தாந்தத்தை சிந்தையில் கொண்டுதான் டாக்டர் ஹெட்கேவார் பாரத சமுதாயத்தின் மனதையும் ஆன்மாவையும் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவும், அப்படி விடுவிக்கின்ற அதே வேளையில், விடுதலைப் போராட்டமாகிய அரசியல் இயக்கத்திற்கு வலு சேர்க்கவும் முடியுமெனக் கருதினார். வரலாறு குறித்த இந்த விழிப்புணர்வு அவருக்கு இருந்ததால் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்கினார்.
சுதேசி சமுதாயம் பற்றி ரவீந்திரநாத் தாகூர்:
உலக புகழ் பெற்ற கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் ‘சுதேசி சமாஜ்’ (சுதேசி சமுதாயம்) என்ற நூலை எழுதியுள்ளார். அதில் மக்கள் நல அரசு என்பது பாரதிய சிந்தனை, கருத்தியல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது:
தேசப் பாதுகாப்பு, உள்நாட்டுக் காவல், அயலுறவு , நீதித்துறை ஆகியவற்றைத் தவிர்த்து கல்வி, மருத்துவம், பொது சுகாதாரம், தொழில் துறை, வர்த்தகம், ஆலயம், சமுதாய பொது விழாக்கள், கலை மற்றும் அழகியல், இசை, நடனம், நாடகம், புனித பயணங்கள் போன்ற ஏனைய விஷயங்களில் சமுதாயம், அரசைச் சாராமல், தன்னிச்சையாகச் செயல்பட முறைமைகள் இருந்தன. பண்டைய பாரதத்தில் இது போன்ற செயல்களுக்கு சமுதாயம் அரசின் நிதி உதவியை / ஆதரவை நம்பி இருக்கவில்லை. சமுதாயத்தில் இதற்கென சில திட்டங்கள், வழிமுறைகள் இருந்தன. அவை தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தன. தர்மம் என்றால் சமயம் அல்ல. வழிபாட்டு முறை என்று பொருள் அல்ல. ஒருவர் தன் குடும்பத்தை எப்படி பாதுகாத்து வளர்க்கிறாரோ அப்படி சமுதாயத்தையும் பாதுகாக்க வேண்டும். அதுவே தர்மம் எனப்பட்டது.
சகோதரி நிவேதிதை சொன்னது:
சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதை எழுதுகிறார்:
சமுதாயத்தின் உறுப்பினர்கள் தாங்கள் சம்பாதித்தை தங்களுக்கு மட்டுமே என வைத்துக் கொள்ளாமல் பரந்துபட்ட சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ளும் போது , அப்படி உருவாகும் சமூக மூலதனத்தினால் ஒட்டுமொத்த சமுதாயமே செல்வ வளம் கொண்டதாக மாறிவிடும். அப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒவ்வொருவரும் செல்வந்தர்களாக மாறிவிடுவார்கள். ஆனால் இதற்கு மாறாக தான் இயற்றிய செல்வத்தை, சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்ளாமல், தனக்கென மட்டுமே பதுக்கிக் கொள்பவர்கள் இருக்கும் சமுதாயத்தில் அவர்கள் மட்டுமே பணக்காரர்களாக இருப்பார்கள். பெரும்பான்மையான சமுதாயம் ஏழ்மையில் துன்பப்படும்.
ஒரு கொம்பை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் கூடாரம் அந்தக் கொம்பு உடைந்து விட்டால் மொத்தமாக சரிந்து விடும். மூன்று நான்கு கொம்புகளைக் கொண்டு அமைக்கப்படும் கூடாரத்தில் ஒன்று உடைந்தால் பாதகம் இல்லை. அதை உள்ளிருந்தே சரி செய்து விட முடியும். பாரம்பரியமாகவே பாரதம் இப்படித்தான் செயல்பட்டு வந்துள்ளது.
பாரத சமுதாயம்:
எனவே, மக்கள் நல அரசு என்ற ஆட்சி முறையில் அரசைச் சார்ந்து மக்கள் இருந்த நாடுகள் மீது இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளும் கிறிஸ்துவ சிலுவைப் போர்களும் நடத்தப்பட்டு ஆட்சி கைமாறிய போது இயல்பாகவே அங்கிருந்த மக்கள் சமுதாயம் புதிய ஆக்கிரமிப்பாளர்களை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் பாரதத்தில் 500 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சியும் 150 ஆண்டுகள் ஆங்கிலேயர் அல்லது கிறிஸ்துவ ஆட்சியும் இருந்த போதிலும், அவர்களுடைய ராஷ்டிரத்தை (வாழ்க்கை முறை) இங்கு நிறுவ முடியவில்லை. மக்களில் 15 சதவீதத்திற்கு மேல் இஸ்லாமிர்களாகவும் மூன்று சதவீதத்திற்கு மேல் கிறிஸ்துவர்களாகவும் மாற்ற முடியவில்லை. பாரத சமுதாயம் அரசை மட்டுமே சார்ந்ததாக, ஒற்றைக்கொம்பை மையமாகக் கொண்ட கூடாரம் போல், இல்லாமல் வாழ்ந்ததே இதற்கு காரணம் ஆகும். ‘மக்கள் நல அரசு’ என்ற கற்பிதத்திலிருந்து விடுபட்டு சமுதாயம் தனக்கென பல அமைப்புகளை, முறைமைகளைக் கொண்டிருந்ததால் அந்நிய ஆக்கிரமிப்பைத் தாங்கி நின்றது.
ஆர்எஸ்எஸ்.ஸூம் அதே கொள்கைகளை தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது. சங்கப் பணி அரசின் ஆதரவு அல்லது பாதுகாப்பை நம்பி இல்லாமல், தற்சார்புடையதாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ்.ஸினால் ஊக்கம் பெற்ற ஸ்வயம்சேவகர்கள் சமுதாயத்தில் பல்வேறு களங்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட சேவைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றில் தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் அரசின் நிதி உதவியைச் சாராமல் நடைபெற்று வருகின்றன.
குஜராத் அனுபவம்:
நான் குஜராத்தில் பிராந்த பிரசாரக்காக (ஆர் எஸ் எஸ் மாநில அமைப்பாளராக) இருந்தபோது கேசுபாய் பட்டேல் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பழங்குடியினர் மேம்பாட்டிற்காக சங்க ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்படும் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற சேவைத் திட்டத்திற்கு அரசின் பழங்குடியினர் நலநிதியிலிருந்து சிறிது தொகையைக் கொடுக்கலாம் என்று பாஜக ஊழியர்கள் நினைத்தார்கள். ஆனால் வனவாசி கல்யாண் ஆசிரம நிர்வாகிகள்/ தொண்டர்கள் அரசு நிதி கோரி மனு அளிக்க மறுத்துவிட்டனர்.
சில ஆண்டுகள் கழித்து ஒரு ஸ்வயம்சேவகர் என்னிடம், ‘அரசின் உதவியை மறுத்தது ஏன்?” என்று கேட்டார். வினோபா பாவே சொன்ன பதிலை நான் அவரிடம் சொன்னேன். “அரசுக்கு நிதி எங்கிருந்து வருகிறது ? வரி விதிப்பின் மூலம் சமுதாயத்திடமிருந்து அரசுக்கு பணம் வருகிறது. அப்படியானால், மக்கள் ‘எஜமானர்கள்’. அரசு அவர்களுடைய ‘பணியாளர்’. பணியாளரிடம் பணம் கேட்பதைவிட எஜமானர்களிடம் நேரடியாக நாங்கள் கேட்கிறோம். அவர்களும் மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார்கள்”
நட்சத்திர மீனும் சிலந்தியும்
‘ஸ்டார் ஃபிஸ் அண்ட் ஸ்பைடர்’ (நட்சத்திர மீனும் சிலந்தியும்) என்ற நூலின் ஆசிரியர் தன்னூலில் பேராசிரியர் நவீனின் ஆய்வை மேற்கோள் காட்டியுள்ளார். பேராசிரியர் நவீன் லத்தீன் அமெரிக்க வரலாற்றில் நிபுணர். 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மற்றும் ஸ்பெயின் நாட்டு மிஷனரிகள் புதிய நிலத்தையும் தங்கத்தையும் தேடிச் சென்ற போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை நவீன் விவரமாகப் பதிவு செய்துள்ளார்.
1519 இல் வளமான வருங்காலத்தைத் தேடி ஸ்பெயின் நாட்டுப் படையினர் கடல் பயணத்தை மேற்கொண்டனர்; லத்தீன் அமெரிக்காவை அடைந்தனர். அவர்கள் சென்று சேர்ந்த நிலப் பகுதியில் ‘அஸ்டெக்’ என்ற பழங்குடியினர் வசித்தனர். ஸ்பெயின் நாட்டினர் அந்த பழங்குடியினரின் தலைவன் தலையில் துப்பாக்கியை வைத்து தங்கம் எங்கே உள்ளது என்று மிரட்டினர் . அவன் அதை உடனே சொல்லிவிட்டான். ஆனாலும் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 1521 இல், வெறும் இரண்டு ஆண்டுகளில், ஒட்டுமொத்த அஸ்டெக் பழங்குடி சமுதாயம் ஸ்பெயின் நாட்டு ஆட்சியின் கீழ் வந்து விட்டது.
1534 இல் இன்னொரு கடற்படைப் பிரிவு ‘இன்காஸ்’ பழங்குடியினர் வசித்த பகுதியை அடைந்தது. 1536 இல் அந்த பழங்குடியினரும் அவர்கள் பகுதியும் ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது. லத்தீன் அமெரிக்காவுக்கு அடுத்தடுத்து ஸ்பெயின் நாட்டுப் படைகள் வந்து ஒவ்வொரு பகுதியாக அங்கிருந்த பழங்குடியினர் ஆட்சியைக் கைப்பற்றினர். 1618 இல் ஸ்பெயின் நாட்டிற்கு சவாலாக அப்பாச்சி பழங்குடியினர் எழுந்தனர்.
அப்பாச்சி அனுபவம்:
வழக்கம் போல அப்பாச்சி பழங்குடியினரின் தலைவன் கொல்லப்பட்டான். அந்தப் பழங்குடியினர் செல்வ வளம் மிக்கவர்கள் அல்லர் . எனவே ஸ்பெயின் நாட்டினர் அவர்களை வழக்கம் போல மதம் மாற்றி, விவசாய வேலைகளில் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், தங்கள் குடித்தலைவன் கொல்லப்பட்ட போதிலும் அப்பாச்சி பழங்குடி மக்கள் ஸ்பெயின் நாட்டுக் காரர்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தார்கள். அந்த மோதல் 200 ஆண்டுகளாக நீடித்து இறுதியில் ஸ்பெயின் நாட்டினர் வெளியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது.
பேராசிரியர் நவீன் கூறுகிறார்: இன்காஸ் மற்றும் அஸ்டெக் பழங்குடியினரின் படையை விட வலிமையான படை அப்பாச்சிகளிடம் இல்லை. அதேசமயம், இன்காஸ் மற்றும் அஸ்டெக் பழங்குடியினரை வெற்றி கொண்ட நேரத்தில் இருந்ததைவிட மேலும் அதிக வலிமை கொண்டதாக ஸ்பெயின் நாட்டுப் படைகள் இருந்தன. அப்படி இருந்த போதிலும் ஸ்பெயின் நாட்டினரை அப்பாச்சிகள் வென்றது எப்படி?
அப்பாச்சிகள் வித்தியாசமானவர்கள் . அவர்கள் அரசனை/ ஆட்சியைச் சார்ந்து இல்லை. அவர்களது தலைவன் கொல்லப்பட்ட போதிலும் எல்லா அதிகாரமும் அவனிடம் குவிந்து கிடக்கவில்லை. எனவே அவர்கள் தலைவன் இல்லாமலும் தங்கள் அடையாளத்தை தக்க வைத்துக் கொண்டனர். அந்தச் சமுதாயம் தனக்கே உரிய வகையிலான, ஆட்சியைச் சாராமல், வழிவகைகளை வைத்திருந்தது. எனவே ஆட்சி தோற்கடிக்கப்பட்டாலும் சமுதாயம் பணியவில்லை. தொடர்ந்து ஸ்பெயினின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தது. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும் – என்று பேராசிரியர் நவீன் விளக்குகிறார்.
மூவர் கருத்தும் ஆர்எஸ்எஸ் வடிவில்…

எனவேதான், எந்தவொரு தேசமும் விடுதலை பெற வேண்டும் என்றால், முதலில் அந்த சமுதாயத்தின் உள்ளமும் ஆன்மாவும் விடுதலை பெற வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஒரு தேசமாக நாம் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். விடுதலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள ‘சுதேசி சமாஜம்’ அவசியம் என்றும் அதற்கு சமூகத் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ரவீந்திரநாத் தாகூர் தெரிவிக்கிறார்.
தன் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் தகுதி படைத்ததாக சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அதற்கு, தேசிய விழிப்புணர்வு வேண்டும். அம்மக்களிடம் தேசிய ஆன்மாவையும் பண்புகளையும் உயர்த்திப் பிடிக்கும் எண்ணம் வேண்டும் – என்ற சிந்தனைகளால் உத்வேகம் பெற்றார் டாக்டர் ஹெட்கேவார் . இந்த நோக்கத்திற்காகத் தான் அவர் ஆர்எஸ்எஸ்.ஸை ஆரம்பித்தார்.
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவர் டாக்டர் ஹெட்கேவார். அமைப்பை உருவாக்கும் அவரது திறன் போற்றுதலுக்கு உரியது . தன் சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்ள பாரத சமுதாயம் எப்படி இருக்க வேண்டுமென்ற அவரது நெடுநோக்கு சிந்தனைகள் சுதந்திர பாரதத்திற்கு மதிப்புமிக்க, பின்பற்றத்தக்க வழிகாட்டுதலாக விளங்குகின்றன.
- திரு. டாக்டர் மன்மோகன் வைத்யா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத இணை பொதுச்செயலாளர்.
- நன்றி: ‘ஆர்கனைசர்’ வார இதழ் (2019 ஆகஸ்ட் 14)
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$
சரியான நேரத்தில் சரியான கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரை. நன்றி!!
LikeLike