ஆட்சி மாற்றமல்ல, அரசியல் மாற்றமே தீர்வு

-துக்ளக் சத்யா 

தமிழகத்தில் ஓர் அமைதியான அரசியல் மாற்றம் தொடங்கிவிட்டது என்று அவதானிக்கிறார் பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யா.

தமிழகத்தில் பாஜக நடத்தும் கூட்டத்துக்கு (திருச்சியில் 23.03.25 அன்று நடந்த கூட்டம்) இத்தனை மக்கள் திரண்டு வருவதெல்லாம் சமீப காலமாகத்தான் நடக்கிறது. திராவிடக் கட்சிகளே பேட்டாவும் பிரியாணியும் கொடுத்து சேர்க்கும் கூட்டம்,  பாஜகவுக்கு தன்னிச்சையாக வருவது ஆச்சரியம் அளிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை. சரளமாக,  சலிப்பு ஏற்படாத  வகையில்  ஒரு மணி நேரம் பேசவும் அவரிடம் எப்போதும் விஷயம் இருக்கிறது.

அவருக்கு ஆதரவாக அடியேன் அவ்வப்போது எழுதுவதற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. அவருடன் எந்த விதத் தொடர்பும் இல்லை. அவரால் எனக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை.  அவரை விரும்பாதவர்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அடியேன்  விருப்பு வெறுப்பில்லாத  பத்திரிகையாளனாக உண்மை நிலையைக் கூறுகிறேன். அவ்வளவுதான்.

மக்களிடையே பொதுக்கருத்தை ஏற்படுத்தும் பேச்சாற்றல் கொண்டவர்தான் தலைவராக விளங்க முடியும். அண்ணாமலை அத்தகையவர் என்று நிரூபித்து வருகிறார்.

ஒரு பக்கம், வசதி படைத்தவர்கள் சி.பி.எஸ்.இ. மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கல்வி கற்கும் நிலையில், மற்றொரு பக்கம் கல்வித்தரமும் இல்லாமல் வசதியும் இன்றி அரசுப் பள்ளி மாணவர்கள்  கஷ்டப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்?  ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் அவர்களை முன்னேற விடாமல் தடுக்கலாமா என்ற கேள்வியை தன் தொடர் பேச்சால்  மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளார் அண்ணாமலை.

மாணவர்கள் நாட்டின் எதிர்காலம். கல்வி அவர்களது வாழ்வின் மூலதனம். அதன் தரம் உயர வேண்டும் என்ற கருத்தை மக்கள் ஏற்கத் தொடங்கியுள்ளனர்.

அரசுப் பள்ளிகள் மட்டுமல்ல, அரசு மருத்துவ மனைகளும் தரத்திலும் வசதியிலும் மிக மிகப் பின் தங்கியுள்ளன. எளிய மக்கள் இதைத்தான் அனுபவிக்க வேண்டும் என்று என்ன தலையெழுத்து? 

அவை எந்த அரசாலும் உரிய முறையில் கவனிக்கப் படுவதில்லை என்பதே காரணம். அதனால்தான், எந்த அரசியல் தலைவரும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதில்லை. அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில்லை. அதற்கான பதிலையும் சொல்வதில்லை. வசதியுள்ளவர்கள் சமாளித்துக் கொள்ளலாம். மற்றவர்கள்? 

ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அரசியல் மாற்றமே இதற்குத் தீர்வு என்றே தோன்றுகிறது.

அறுபதாண்டு கால திராவிடக் கட்சிகளின் பிடியில் இருக்கும் தமிழகம், தேசிய உணர்வுள்ளவர்களால் ஆளப்பட வேண்டும் என்று விரும்பினார் சோ. அதனால்தான் ரஜினியை தமிழக அரசியலில் முன்னிலைப் படுத்த பல ஆண்டுகள் முயன்றார். அது நடக்கவில்லை. இன்று அவர் இருந்திருந்தால், அண்ணாமலையை ஆதரிக்க முன் வந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

திராவிடக் கட்சிகள் இல்லாத ஆட்சியில் எல்லாம் சீர்திருந்தி விடும் என்று சொல்லவில்லை. பாஜக,  அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றி  அக்கறையாகப் பேசவாவது செய்கிறது. மற்ற கட்சிகள் பேசுவது கூட இல்லை. அந்த நம்பிக்கைதான்.

  • திரு. துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்; இது அவரது முகநூல் பதிவு.

$$$

Leave a comment