தைத்திரீய உபநிஷதமும் புறநானூற்றுப் பாடலும்

-ஜடாயு

அன்னம் குறித்த தைத்திரீய உபநிஷத சுலோகத்தை தமிழாக்கி, அத்துடன் புற நானூற்றுப் பாடல் ஒன்றின் ஒப்புமையை விளக்குகிறார் எழுத்தாளர் திரு. ஜடாயு. இது அவரது முகநூல் பதிவு…

அன்னத்தை இகழ வேண்டாம். அது விரதம்.
உயிர் அன்னம். உடல் அன்னத்தை உண்போன்.
உயிரினில் உடல் நிலைபெறுகின்றது.
உடலில் உயிர் நிலைபெறுகின்றது.
ஆதலின், அன்னம் அன்னத்தில் நிலைபெறுகின்றது.

அன்னத்தை வீணாக்குதல் வேண்டாம். அது விரதம்.
நீர் அன்னம். சோதி அன்னத்தை உண்போன்.
நீரில் சோதி நிலைபெறுகின்றது.
சோதியில் நீர் நிலைபெறுகின்றது.
ஆதலின், அன்னம் அன்னத்தில் நிலைபெறுகின்றது.

அன்னத்தை மிகுதியும் விளைவிப்பீர். அது விரதம்.
புவி அன்னம். வான் அன்னத்தை உண்போன்.
புவியில் வான் நிலைபெறுகின்றது.
வானில் புவி நிலைபெறுகின்றது.

ஆதலின், அன்னம் அன்னத்தில் நிலைபெறுகின்றது.
இங்ஙனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுகின்றதை அறிவோன்,
நிலைபெற்றவனாகிறான்.
அன்னம் உடையோன்
அன்னத்தை உண்போனாகிறான்.
பெரியோனாகிறான்.
மக்களும் பசுக்களும் பிரம்ம ஒளியும்
பெருமையும் புகழும்
உடையோனாகிறான்.

       -தைத்திரீய உபநிஷதம்: 3.7-3.9, யஜுர்வேதம்.

இதில் குறிப்பிடப்படும் ‘விரதம்’ என்பது உண்ணா நோன்பு அல்ல.  ‘புனிதமான செயலில் கொண்ட உறுதி’ என்பது பொருள் (தேவவிரதன் போல). உயிர் என்பது பிராணனையும், சோதி என்பது அக்னியையும் குறிக்கும்.

அன்னம் என்பது இங்கு சாதாரணமான உணவு என்ற பொருளில் மட்டும் அல்லாமல், தத்வார்த்தமாக உணவில் தோன்றி, உணவில் வளர்ந்து, உணவாகவே மறையும் பௌதிக பிரபஞ்சம், அதிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் குறிக்கிறது.

இந்த இடத்தில் ஒரு சங்க இலக்கியப் பாடல்:

“... நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே...”

     -புறநானூறு 18 
      (பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது).

பொருள்:

நீர் இன்றி அமையாத இவ்வுலகில் வாழும் உடம்பிற்கெல்லாம் உணவால் வளர்க்கப்பட்ட உடம்பு உணவையே பொறுத்து என்பதால்,

உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தோர் ஆவர். ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர். நீரில்லா இடத்தில் அந்நீரையும், நிலத்தையும் ஒன்றாக இணைத்துச் செயல்படுத்தியவர்கள் இவ்வுலகத்தில் உடம்பையும் உயிரையும் படைத்தவர்களாவர்…

இப்பாடல் வரிகளின் கருத்து, மேற்கண்ட உபநிஷதத்திலிருந்தே பெறப்பட்டது என்பதை பாடலைக் கற்போர் உணர்வர். இப்பாடலைப் பாடிய குடபுலவியனார் என்ற புலவர் உபநிஷத வாக்கையே அழகிய தமிழில் தந்திருக்கிறார்.

மூல சம்ஸ்கிருத உபநிஷத சுலோகங்கள்:

अन्नं न निन्द्यात् । तद्व्रतम् । प्राणो वा अन्नम् ।
शरीरमन्नादम् । प्राणे शरीरं प्रतिष्ठितम् ।
शरीरे प्राणः प्रतिष्ठितः । तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् ।
अन्नं न परिचक्षीत । तद्व्रतम् । आपो वा अन्नम् ।

ज्योतिरन्नादम् । अप्सु ज्योतिः प्रतिष्ठितम् ।
ज्योतिष्यापः प्रतिष्ठिताः । तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् ।
अन्नं बहु कुर्वीत । तद्व्रतम् । पृथिवी वा अन्नम् ।
आकाशोऽन्नादः । पृथिव्यामाकाशः प्रतिष्ठितः ।

आकाशे पृथिवी प्रतिष्ठिता ।
तदेतदन्नमन्ने प्रतिष्ठितम् ।
स य एतदन्नमन्ने प्रतिष्ठितं वेद प्रतितिष्ठति ।
अन्नवानन्नादो भवति । महान्भवति प्रजया
पशुभिर्ब्रह्मवर्चसेन । महान् कीर्त्या ॥

$$$

Leave a comment