-கருவாபுரிச் சிறுவன்
சைவ இலக்கியங்களில் தோய்ந்த திரு. கருவாபுரிச் சிறுவன், ஹிந்துக்களின் உயிர்ப்பு எதில் பொதிந்திருக்கிறது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார்... இது கட்டுரையின் இறுதிப் பகுதி….

- காண்க: பகுதி-1
பரவும் அடியார் மேன்மை பாட வல்லவர் என்று எங்கள்
குரவருள் ஒருவர் அன்பில் குறிக் கொண்டு துதித்தல் கண்டும்
தரமிகு சிறப்பு வாய்ந்த தன்மையார் சேக்கிழாரைக்
கரவறத் துதியே மென்னில் கடும்பிழை யாகுமன்றே
-மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் பெரிய புராணத்தைப் படிக்க வேண்டும்.
கூட்டுக் குடும்பமாக இருப்பின், பெரியவர்கள் சொல்ல மற்றவர்கள் சிரத்தையுடன் கேட்க வேண்டும்.
தனிக்குடும்பமாக இருப்பின் இலங்கை ஜெயராஜ், சொ. சொ.மீ., ஆதின வித்துவான்கள் உபதேசித்த பெரிய புராணத்தைக் கேட்க வேண்டும்.
தமிழ் இலக்கியம், சைவ நூல், பக்தி நூல் என்பதைக் காட்டிலும், இது ஒரு தேசிய இலக்கியம்.
சங்க இலக்கியத்தில் தொடங்கி தற்கால பாம்பன் சுவாமிகள் வரை வாழ்ந்த சமயப் பெரியோர்களின் திருநூற்களின் கருத்துக்கள் பெரிய புராணத்தில் பொதிந்து காணப்படுவதை பரக்கக் காணலாம்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள மக்களின் இதயங்களில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒரு திருநூல்.
அதுமட்டுமல்லாது தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் என்னும் முதலமைச்சர் இயற்றிய முத்தாய்ப்பான நூல்.
இது வரைக்கும் அவருக்கு பின்வந்த எந்த முதலமைச்சரும் சுவாமிகளுடைய திருநூலுக்கு நிகராக நூல் செய்ததாக வரலாறு இல்லை.
சுவாமிகளின் நாடி,நரம்பு, ரத்தம், சதை எல்லாவற்றிலும் மக்கள் நலன்! மக்கள் நலன்! மக்கள் நலன் மட்டுமே ஊறிப்போய் இருந்தது என்பதை, படிப்பவர்கள் இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப அனுபவித்து உணரலாம்.
சான்றிற்கு…
மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் தெய்வச் சேக்கிழார் என்பதற்கு அவருடைய பெரிய புராணத்தில் உள்ள அத்துனை செய்யுளையும் எழுத்து எண்ணி ஆராய்ச்சி செய்தால் அனைத்திலும் மக்கள் நலனே பொதிந்து இருக்கும்.
அக்கருத்தினை மெய்ப்பிக்கும் விதமாக, ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல எந்த உயிருக்கும் மனதாலும் வாக்காலும் செயலாலும் தீங்கு செய்யக்கூடாது என்னும் ஸ்ருதி வாக்கியத்தை நன்கு கற்றறிந்தவர் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
அதனால்தான் திருநாட்டுச்சிறப்பு, திருக்கூட்டச் சிறப்புக்கு நடுவில் திருநகரச் சிறப்பு என்னும் பகுதியை இணைத்து, மனுநீதி சோழன் வாயிலாக மக்கள் நலன் பற்றி இன்றும் நீதி மன்றங்கள் மூலம் நம்மிடையே பேசிக் கொண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
2000 ஆண்டுகளுக்கும் மேலாக, கால, தேச, வர்த்தமான, மத, மொழி எல்லைகளைக் கடந்து, மனுநீதிச் சோழனுடைய வரலாறு இன்றும் நிலைத்து நின்று வருகிறது.
இவருடைய வரலாற்றை கூர்ந்து ஆராய்ந்தால், ஒரு தலைவருக்கு நிலைத்த புகழ் என்பது, தன்னலம் கருதாமலும், தன்னைச் சார்ந்தவர் நலம் கருதாமலும், மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு சேவை செய்வதை உணர்த்தும்.
முன்னோர் மொழிந்த மொழிகளை அப்படியே ஏற்றியும் போற்றி செய்யும் சுவாமிகள் ஒரு இடத்தில் கூட அத்துமீறுவது, சட்டத் திருத்தம் செய்வது, அமங்கல வார்த்தையை உபயோகிப்பது போன்ற தாழ்ந்த செயல்களை தன் படைப்பில் ஓரிடத்திலும் காட்டினார் இல்லை.
மன்னனுக்கு உண்டான மாண்பு, மக்களுக்கு உண்டான பண்பு, பெரியோராயினும் சிறியோராயினும் அவர்களுக்குரிய பக்குவ நிலை போன்றவற்றை படம் பிடித்துக் காட்டுவதில் தெய்வச்சேக்கிழார் சுவாமிகள் இம்மியளவு கூட தவறியதில்லை.
பெரிய புராணத்தில் நன்றியுணர்வும், கடமையை செய்வதில் தீவிரமும், பரம்பொருளின் விஸ்வரூபக் காட்சி அடியேனும், தாங்களும் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் குறிப்புகளோடு குறித்திருப்பார்.
“சைவ சமயத்தில் பதினொரு திருமுறைகளுக்கும் பொருள் காண வேண்டுமென்றால், பனிரெண்டாம் திருமுறையான பெரிய புராணத்தைப் படியுங்கள். பாராயணம் செய்யுங்கள். பரம்பொருள் வெளிப்படுவார்” என்பது கூனம்பட்டி மடாலய 56 வது ஆதினகர்த்தா ஸ்ரீ ராஜலிங்க மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாக்கு.
பிறந்த பிறப்பின் நோக்கம் தனக்கு தானே புரியும். வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறும்.
உங்களைச் சுற்றி ஆனந்த அதிர்வலைகளை உருவாக்கிக் கொள்ளலாம்.
பெரிய புராணத்தைப் படித்தாலோ, அதனைக் கேட்டாலோ, அதன் படி நடக்க முயற்சித்து ஏதேனும் ஒரு வகையில் அதை பின்பற்றினாலும், வாழையடி வாழையென வளரும் தங்களது சந்ததிகள் சகல செல்வங்களில் திளைத்து மகிழ்வதை நீங்களே வாழும் காலத்திலேயே பார்க்கலாம்.
ஒங்கு சைவத்துயர் பரிபாடையும்
வீங்கு பேரொளிப் பத்திசெய் மேன்மையும்
தேங்கு பேறுந் தெரித்தருள் சேக்கிழான்
பாங்கு சேர்மலர்ப் பாதம் பரவுவாம்!
-மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
ஏற்றம் பெறுமா… ஏற்புடைய கருத்துரைகள்?
- பெரிய புராணம் தொடர்புடைய செயல்களை மென்மேலும் நடை முறைப்படுத்த முன்னெடுக்க வேண்டிய நிகழ்வுகளில் கீழ்க்கண்டவை முக்கியமானதாக இருக்கலாம் என நினைக்கிறோம்:
- சொற்பொழிவு பேசக்கூடிய பெருந்தகையாளர்கள் உயரிய பண்பினை மையமாக வைத்தே பேசப்படும் போது கேட்பவர்கள் ஆயிரம் நபர்கள் இருந்தாலும் நூறு நபர்கள் அக்கருத்தில் தீவிரமாக பற்று கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம்.
- திருக்கோயில் விழாக்களில் நடை பெறும் சிந்தனை அரங்குகளில் முழுக்க முழுக்க பெரிய புராணம் தொடர்புடைய தலைப்புகளிலே சொற்பொழிவு நடத்தப்பெற வேண்டும்.
- சமய மன்றங்களில் வாரந்தோறும் அல்லது இருவாரத்திற்கு ஒரு முறை குறிப்பிட மணிநேரங்களில் தொடர் வகுப்பு சிந்தனையை அதிகப்படுத்த வேண்டும்.
- சமய ஆளுமைகள் எங்கு சென்று உரை நிகழ்த்தினாலும் அதனோடு பெரிய புராணத்தையும் இணைத்துப் பேச வேண்டும்.
- பெரியபுராணம் – தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் பெயரில் இயங்கும் சமய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு நல்லுறவினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- ஆதின வெளியீடுகள், ஆன்மிக இதழ்களில் நாயன்மார்கள் குருபூஜை தினங்களை முன்னிட்டு பெரிய புராண சிந்தனைகள் தொடராகவும், சிறப்புத் தொடராகவும் வெளியீடு செய்ய வேண்டும்.
- தாங்கள் வசிக்கும் ஊர்களில் உள்ள சிவாலயங்களில் அணி செய்யும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் குருபூஜை நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொண்டு 5 மணித்துளிகளாவது சிவச்சிந்தனை செய்ய வேண்டும். அவ்வாறு அங்கு நிகழ்த்தப் பெறுமாயின் அதில் பங்கேற்க வேண்டும்.
- தெய்வச் சேக்கிழாரின் அவதாரத் தலங்கள், அவர்கள் ஆட்சி செய்த இடங்கள், பெரிய புராணத்தில் பெரிதும் விரும்பிப் பேசப்பட்ட தலங்கள், அவருக்காக மற்றவராலும் இன்ன பிற அமைப்புகளாலும் கொண்டாடப்பட்ட மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள் போன்றவற்றிற்கு விடுமுறை காலங்களில் குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பித்து, தெய்வச் சேக்கிழாரின் திருத்தொண்டினை குழந்தைகளுக்குத் தெரியப்படுத்தி அவர்களுக்கு ஹிந்து சமயத்திலுள்ள சைவத்தில் இப்படியொரு முதலமைச்சர் இருந்தார் என உணர்விக்க வேண்டும்.
- பள்ளி, கல்லுாரி பாடத்திட்டத்திலுள்ள பெரிய புராண பாடப்பகுதிகளைத் தெரிந்து கொண்டு, மாணவர்கள் இளைஞர்களிடம் அவர்கள் பெற்றோர்கள் இது பற்றி கேட்கும் போது இயல்பாகவே, அவர்களுக்குள் பெரிய புராணம் படிக்க வேண்டும் என்கிற ஆர்வமும், உற்சாகமும் துாண்டப்பட வேண்டும்.
- பெரிய புராணம் பற்றி சிரத்தையுடன் ஆய்வு செய்தவர்கள், செய்பவர்களை அழைத்து நேர்காணல் செய்து இவர்களைப்போல முன்மாதிரியாகத் திகழுங்கள் என சமய அன்பர்கள் மத்தியில் அவர்களை கௌரப்படுத்தல் வேண்டும்.
- பல மொழிகளில் பெரியபுராணம் மொழி பெயர்க்கப்பட்டாலும் மொழி பெயர்க்கப்படாத மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்கிற விண்ணப்பத்தினை முறையாக மத்திய, மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
- பெரிய புராணத்திற்குப் பிறகு பின்னாளில் அதனோடு தொடர்புடைய எழுந்த நூற்கள் யாவும் ஒன்று திரட்டப்பட வேண்டும்.
- சைவத்தமிழில் தீவிரப் பற்றுள்ள பெருந்தன்மையும் தாராள மனம் படைந்த ஒரு தெய்வீக ஆளுமை முன்வந்து சோழ தேசத்தில் தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின் பெயரில் ஒரு பிரமாண்ட ஆய்வரங்கம் ஒன்றை நிறுவ வேண்டும்.
- அது முழுக்க முழுக்க பெரிய புராணம், தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் தொடர்புடைய நூல்கள், அரசு ஆவணங்கள், செப்பேடுகள், நினைவுச் சின்னங்களின் வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுச் செய்திகள், இன்று வரை தெய்வச் சேக்கிழாரின் திருவடியைப் பற்றி வாழ்ந்தவர்களின் வரலாறுகள் இன்னும் இது தொடர்புடைய பலதரப்பட்ட செய்திகள் யாவும் மக்களைக் கவரும் விதத்தில் வண்ணமயமாக்கப்பட்டு கணினித் தொழில் நுட்ப உதவியுடன் செயலாக்கம் செய்து, இப்பணி பற்றிய செய்திகள் யாவும் பட்டி தொட்டி எங்கும் பரவச் செய்ய வேண்டும்.
- இதில் எள்ளளவு கூட அரசியல்வாதிகளின் தலையீடும் முறையீடும் இருக்கக் கூடாது என்பது அடியேனின் பணிவான கருத்து.
- தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின் திருவாக்கு, பெரிய புராண அமுதம் என பல்வேறு தலைப்புகளில் அல்லது தங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் ஸ்டிக்கர் அச்சடித்து அன்பர்கள் இல்ல, திருமண விழாக்களில் வழங்க வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை கையடக்கப் பிரதியாக அச்சிட்டு பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
- பெரிய புராணமே உற்சாகம் தான். இருந்தாலும் அதில் இருந்து பார்த்தால், படித்தால் உற்சாகம் தரும் வாக்குகள், சிறப்புச் செய்திகள் யாவற்றையும் தேர்ந்துதெடுத்து நாட்காட்டி, டைரி போன்றவற்றில் செய்யுள் எண்களோடு அச்சிட்டு பொக்கிஷம் என நினைப்பவருக்கு வழங்க வேண்டும்.
சான்றிற்கு... # புற இருளை நீக்குவது செங்கதிரவன். சிந்தையில் பொங்கிய இருளை நீக்குவது திருத்தொண்டர் தொகை -10 # ஓதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தான் அஞ்சும் - 84 # முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ - 132 # ஈர அன்பினர் யாதும் குறைவிலார்! வீரம் என்னால் விளம்பும் தகையதோ - 144 # தீது அகன்று உலகம் உய்ய திருஅவதாரம் செய்தார் - 149
- பரம்பொருளின் திருவருளால் புதியதாக கட்டிய வீட்டிற்கு சேக்கிழார் இல்லம், குடும்பத்தில் வந்துதித்த மழலைக்கு சேக்கிழார்(ன்) என்று திருநாமம் சூட்டப்பட்டிருந்தால் அவர்களுக்கு நன்றி பாராட்ட வேண்டும்.
- நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருளாளர்களைப் பற்றி அவதூறு பரப்புவோருக்கு சாட்சியுடன் கண்டனங்களையும் நமது எதிர்ப்பினையும் கொடுப்பதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். (பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் அம்மையாரைப் பற்றி அவதூறு பரப்பிய செய்தியைக் கண்டித்து தென்காசியில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு அண்ணன் இசக்கி செல்வத்துடன் அடியேன் இளம்பிரயாயத்தில் சென்றேன்). எங்காவது யாராவது அடியார்கள் மேற்கண்ட விஷயங்களைப் பின்பற்றி நடை முறைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவரின் திருவடியை சிரமேற்கொள்கிறேன்.
இவற்றையெல்லாம் ஒவ்வொரு ஹிந்து மக்களும் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தனிமனித ஒழுக்கமும், உயர்பண்பும், உன்னத நோக்கமும் ஒவ்வொருவரிடமும் அருகு போல் வேரூன்றி ஆல் போலத் தழைக்கும் என்பதில் ஐயமேது மில்லை.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை யெனலால் - ஆளுமருட்
சேக்கிழார் பொற்கமலச் சேவடியைத் தாழ்தல்பெரும்
பாக்கியமா(ம்) நெஞ்சே பணி.
-க.தொ.சுப்பையா முதலியார்
நிறைவாக,
சேக்கிழார் அடிப்பொடி, பாரதி அன்பர் என அனைவராலும் அழைக்கப்பெற்ற தஞ்சை டி.என்.ராமசந்திரன் அவர்கள் பெரிய புராணத்தை எப்படியெல்லாம் போற்றி மகிழ்கிறார் என்பதை அறிந்து அவர்களுடன் நாமும் வணங்கி வந்திப்போமாக.
* பெரிய புராணம் என்பது ஓர் பேராலயம்.
* சிவபெருமான் கொண்ட அருள் நூல் வடிவம்.
* பெரிய புராணம் மோக்ஷ காரிகை
* வாழயைடி வாழையென வளர் அருள் திருக்கூட்டத்திற்கு அமைந்த சிவப்பிரசாதம் பெரியபுராணம்.
* அடியேனின் சற்குருநாதர்களில் தெய்வச் சேக்கிழார் பெருமான் ஆத்ம ரத்னம்.
* அடியார்களுக்குச் சரண்புகக் கிடைத்த சிவனார் ஸ்ரீ பாதம்.
* பதிஞானக் கருவூலம்.
* உவமையில்லா கலை ஞானம்.
* உணர்வரிய மெய்ஞ்ஞானம்.
* எல்லாப் புராணங்களின் அரசு.
* திருமுறைகளின் மணிமுடி; முடிமணி .
* உயிர்த்து நிற்கும் சைவ சித்தாந்தம்.
* உயிரோடு உறவு கொள்ளும் சைவ வேதாந்தம்.
* ஆகமங்களின் பீடபூமி.
* முனிபுங்கவர்களின் இருதயக் கமலம்.
* சைவ சமயத்தின் சஞ்சீவி.
* முத்தமிழ்ப் பேழை.
* என்றும் நின்று அருளும் கற்பகத் தரு.
* சிவபுண்ணியச் செல்வம்.
* களவு படாத மொழி கொண்டு அமைந்த தெய்வ மாக்கதை.
* செவிக்கு இனிமை பயந்து அந்தக்கரணங்களைத் துாய்மையாக்கி உயிராம் ஆன்மாவிற்கு உறுதி நல்கும் திவ்வியக்கிரந்தம்.
* ஓதுவாரையும் ஓதக் கேட்பவரையும் சாயுஷ்யத்திற்கு இட்டுச் செல்லும் வேதாகமப் பனுவல்.
* சிவஞான பெட்டகம்.
* ஆகமாந்த சாரம்.
* அம்பலவன் அருள்.
* அம்பிகையின் கருணை.
* அனைவரும் அருந்தி மகிழ நமக்குக் கிடைத்த ஞானப்பால்.
* தேமதுரத் தமிழின் பக்திக்கிரந்தம்.
* சாஸ்வதப் பெருஞ்செல்வம்.
* அந்தமில் பேரின்பம்.
* நூல் வடிவில் சச்சிதானந்தம்.
இக்கட்டுரையை படித்தவர்கள் வீட்டிலுள்ள புத்தக அலமாரியில் தாத்தா, தந்தையார் பயன்படுத்திய பெரிய புராணத்தை தேடி எடுத்து மேஜையின் மீது வைத்து படிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போலவே…
இன்னும் சிலருக்கு வாரியார் சுவாமிகள் எழுதிய பெரிய புராணம் படிக்க எளிமையாக இருக்குமே என நினைத்து ஆன் லைனில் ஆர்டர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்குமே…
மற்றொரு நண்பரோ, அருகில் இருக்கும் சிவபெருமான் கோயிலில் வாரம் ஒரு முறை நடக்கும் பெரிய புராணச் சொற்பொழிவினை தவறாமல் கேட்கச் செல்லும் எங்கள் குடும்ப வழக்கத்தினை இக்கட்டுரையின் கருத்தின் வழி அப்படியே காண்பித்து விட்டீர்களே… நன்று.. நன்று.. என சேக்கிழான் அவர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க ஆயத்தமாகி விட்டீர்கள் போலவே…
ஆமாம்…
எல்லோருக்கும் தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின் குருவருள் கிடைத்தால் மகிழ்ச்சி தானே…
குணத்தால் செயலால் பயிலும் தவமும் குலமுடைய
வணத்தால் நலனுறு பத்தி வரம்பும் வரமதுவும்
தணத்தா றிலாவழி நோன்பும் தயையும் தருமுறைநூல்
மணத்தா றிவைதரும் சேக்கிழார் தாளை வழுத்திடினே.
-தணிகைவேள் பாரதியார்.
***
திருத்தொண்டர்களையும் தெய்வச் சேக்கிழாரையும் போற்றும் திருநூற்கள்:
திருத்தொண்டர் தொகை – சுந்தர மூர்த்தி சுவாமிகள்
திருத்தொண்டர் திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பிகள்
திருத்தொண்டர் மாக்கதை என்னும் பெரிய புராணம் – தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.
திருமுறை கண்ட புராணம் – உமாபதி சிவாசாரிய சுவாமிகள்
திருத்தொண்டர் புராண சாரம் – உமாபதி சிவாசாரிய சுவாமிகள்
திருத்தொண்டர் திருநாமக்கோவை – சிவஞான யோகிகள்
திருத்தொண்டர் மாலை – குமார பாரதி
திருத்தொண்டர் சதகம் – மலைக்கொழுந்து நாவலர்
பெரிய புராண கீர்த்தனைகள் – சிதம்பர பாரதி சுவாமிகள்
திருத்தொண்டர் கீதம் – கே.எம்.பாலசுப்பிரமணியம்
பெரிய புராண பெண்டிர் போற்றிக் கலிவெண்பா – வே. ரமணன்
பெரிய புராணத்திற்கு மாபெரும் விரிவுரை – சி.கே.சுப்பிரமணிய முதலியார்
பெரிய புராண ஆராய்ச்சி, சேக்கிழார் – மா.ராசமாணிக்கனார்
பெரிய புராண அரும்பதவுரை – திரு.வி.க.
பெரிய புராண விளக்கம் – கி.வா.ஜ
பெரிய புராண விரிவுரை – வாரியார் சுவாமிகள்
திருக்குறளும் பெரியபுராணமும் – சிதம்பர. ராமலிங்கம் பிள்ளை
பெரிய புராணத்து மன்னர்கள் – ஆதினவித்துவான் ச.ரத்தின வேலன்
பெரிய புராணமும் பல்சுவை செய்திகளும் – குன்றத்துார் ஆர்.பார்த்திபன்
பெரிய புராணச் சிறப்புப் பெயரகராதிகள் – த.வே.வீராச்சாமி
பெரிய புராணத்து பெண்மணிகள் – வித்துவான் ஆ.சிவலிங்கனார்
பெரிய புராணம் திருமுறைகளின் கவசம் – டி. என்.ராமசந்திரன்
சேக்கிழார் வெண்பா மாலை – திருப்பணி பேட்டை க.தொ.சுப்பையா முதலியார்
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
சேக்கிழார் திருநூற்றந்தாதி – தணிகைவேள் பாரதியார்
சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும் – கா.சுப்பிரமணிய பிள்ளை
சேக்கிழாரும் சேயிழையார்களும் – சம்பந்த சரணாலய சுவாமிகள்
சேக்கிழாரும் திருக்கண்ணப்பரும் – தொ.பொ.மீ.
சேக்கிழார் தந்த செல்வம் – அ.ச.ஞானசம்பந்தன்
சேக்கிழாரும் இசைத்தமிழும் – மா.ஆ.பாகீரதி
(பார்க்க, படிக்க, பாராயணம் செய்ய மட்டுமே இத்தொகுப்பு இது முழுமையன்று. மேலும் பெரிய புராணத்தோடு நாயன்மார்களின் தனித்துவத்தை இணைத்து ஆய்வு நூற்களும், நாயன்மார்கள் மீது இயற்றப்பட்ட சிற்றிலக்கியங்களும் ஏராளமாக உள்ளன )
அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருநாமத்தினைச் சொன்னவர்கள். என்னென்ன பேற்றினை அடைகிறார்கள் என்பதை சிவஞான யோகிகள் அறுதியிட்டுச் சொல்லுகிறார். அதை மட்டும் படித்து விடுங்கள்… இச்சிந்தனையை நிறைவு செய்வோமாக.
மந்திரமாகக் கொண்டு மயிர் சிலிர்த்து - நைந்துருகி மெய் அன்பால் என்றும் விளம்பப் பெறுவார்கள் கைத்தவமும் புல்லறிவும் கற்பனையும் - மையலும் தீர்ந்து அத்துவிதா னந்த அகண்ட பரி பூரணத்தின் நித்தியமாய் வாழ்வார் நிசம்.
ஹர ஹர நம பார்வதி பதையே … ஹர ஹர மகா தேவ!
சித்ஸ பேசா சிவ சிதம்பரம்…
வாழ்க திருத்தொண்டர்கள்! வளர்க அவரது புகழ்!
வாழ்க பாரதம்! வளர்க மணித் திருநாடு!
$$$