ஹிந்துக்களின் உயிர்ப்பு எது? -1

-கருவாபுரிச் சிறுவன்  

சைவ இலக்கியங்களில் தோய்ந்த திரு. கருவாபுரிச் சிறுவன், ஹிந்துக்களின் உயிர்ப்பு எதில் பொதிந்திருக்கிறது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார்...

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ நான்முகன் படைப்பு,
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்!
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்,
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்!
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்,
கலசமோ புவியில் சிறுமண்!
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்,
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்!
உமையோ இறைவன் பாகத்து ஒடுக்கம்,
இறைவரோ தொண்டர் உள்ளத்துள் ஒடுக்கம்!
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!

-ஔவையார்

இதன் பொருள்:

வெம்மை பரவிய வேலோனே! உலகமோ மிகவும் பெரியது. அது நான்முகனால் படைக்கப்பட்டது. 

நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்பூழ்) பிறந்தவன். திருமாலோ பாற்கடலில் பள்ளி கொண்டவன். 

பாற்கடல் குறுமுனியின் உள்ளங்கையில் அடக்கம். குறுமுனியோ கலசத்தில் பிறந்தவன். 

கலசமோ புவியிலுள்ள சிறிதளவு மண்ணில் உருவானது. புவியோ ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷனுக்கு ஒரு தலைச்சுமை. 

ஆதிசேஷனோ உமையவள் சிறுவிரலின் மோதிரம். உமையோ பரம்பொருளின்  ஒரு பாகத்துள்  ஒடுக்கம். 

பரம்பொருளோ  தொண்டர்கள் உள்ளத்துள்  அடக்கம். அதனால், தொண்டர்களின் பெருமை தான் சொல்லினும் பெரிதே!

-இந்த  நம்முடைய  ஒளவைப் பிராட்டியாரின் அருள் வாக்கினை மூலதனமாக வைத்து  விஸ்வரூபமாய் எழுந்த பெரிய புராணம் பற்றி கோடிட்டுக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.  

திருவருளும் குருவருளும் துணை செய்யட்டும். 

தில்லை வாழ் அந்தணரே       
       முதலாகச் சீர்படைத்த 
தொல்லையதாம் திருத் தொண்டத்
      தொகையடியார் பதம் போற்றி,
ஒல்லையவர் புராணக்கதை  
       உலகறிய விரித்துரைத்த 
செல்வ மலி குன்றத்துார் 
       சேக்கிழார் அடி போற்றி! 

      -உமாபதி சிவாசாரிய சுவாமிகள் 

ஹிந்துக்களின் உயிர்ப்பு  

ஒவ்வொருவருடைய நாவிற்கு அணிகலனாகத்  திகழும் ஐந்தெழுத்து மந்திரத்தை முதல் உபதேசமாகக்  கொண்டு இலங்கும் தேனினும் இனிய திருவாசகத்தைத்  தந்தவர் திருவாதவூராகிய மாணிக்கவாசகர். 

திருநீற்றின் ஒளி விளங்க நல்லாட்சி நடாத்திய மங்கையர்க்கரசி, நின்றசீர் நெடுமாறன் அரசசபையில் வீற்றிருந்தவர் மணமேற்குடி குலச்சிறையார். 

மந்திரமாகிய ஐந்தெழுத்து, அடியார்களுக்கு காப்பாகிய திருநீறு, இவன் சைவன் என அடையாளப்படுத்தும் ருத்திராக்கம் இவற்றின் பெருமைகளைப் பேச வந்த திருநூற்களில் முதன்மையான  பெரியபுராணத்தை அருளிச் செய்தவர்  தெய்வச்சேக்கிழார் சுவாமிகள். 

இம்மூவரும் நாட்டை நிர்வகித்த  நல்லமைச்சர்கள் என, அருள்மொழி அரசர் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அடிக்கடி தன் சொற்பொழிவில் குறிப்பிடுவார்கள்.

அமைச்சர்கள் என்றால் இவர்களன்றோ அமைச்சர்!

அமைச்சர் இப்படித் தான் இருக்க வேண்டும் என தெய்வப்புலவர் திருவள்ளுவ தேவ நாயனார்  வகுத்த இலக்கணத்திற்கு முழுக்க முழுக்க சொந்தக்காரர்கள்  இம்மூவர் தான். 

நேசம் நிறைந்த வுள்ளத்தால் நீலம்
      நிறைந்த மணிகண்டத்து 
ஈசன் அடியார் பெருமையினை எல்லா 
      உயிரும் தொழ எடுத்துத் 
தேசம் உய்யத் திருத் தொண்டத் 
       தொகைமுன் பணித்த திருவாளன் 
வாச மலர்மென் கழல் வணங்க 
       வந்த பிறப்பை வணங்குவாம்! 

    -தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் 

அம்பலவாணனின் அருள்

மூவொன்பது நட்சத்திரங்களில் திரு என்னும் சிறப்பினையுடையவை திருவாதிரை, திருவோணம். முன்னது நடராஜாவிற்குரியது. பின்னது ரெங்கராஜாவிற்குரியது. ‘இவ்விரண்டு நட்சத்திரத்தில் பிறந்த ஆன்மாக்கள் பரம்பொருளின் ஆசியை பிறக்கும் போதே பெற்றவர்கள். இவ்வுலகில் சாதனை செய்வதற்கென்றே பிறந்தவர்கள் இந்த நட்சத்திரக்காரர்கள். பிறந்த குடியை பெருமைப்படுத்தக் கூடியவர்கள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். 

சமயக்குரவர்களில் முதல்வராகிய திருஞானசம்பந்தப் பெருமான் இந்த நட்சத்திரத்தில் தான் அவதாரம் செய்யப்போகிறார் என்பதை அறிந்த நவ கோள்களும் தன் இருப்பிடத்திற்கு தாமே  சென்று அழகாக அமர்ந்து கொண்டது என்கிறார் குன்றை வாழ் முனிவர்.

அருக்கன் முதல் கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல் ஓரை எழத்
திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத்
தருக்கு ஒழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க.

தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி
எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க,
அண்டர் குலம் அதிசயிப்ப, அந்தணர் ஆகுதி பெருக,
வண் தமிழ் செய்தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல் வாய்ப்ப.

திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற,
மிசை உலகும் பிறலகும் மேதினியே தனி வெல்ல,
அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல,
இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக.

தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற
நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க
வாள் உடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ
ஆள் உடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக.

அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப்
பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும்
தவம் பெருக்கும் சண்பையிலே தாம்இல் சராசரங்கள் எலாம்
சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்.

      -பெரிய புராணம் - திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் 22 - 26)

நம் ஹிந்து மக்களின் உயிர்ப்பாகத் திகழும் திருத்தொண்ட மாக்கதை என்னும் பெரிய புராணத்தை தில்லைப்பதியில் சித்திரை திருவாதிரை நாளில் தொடங்கி அடுத்த சித்திரை திருவாதிரை நாளில் நிறைவு செய்தார் சோழ சாம்ராஜ்யத்தின் ஒப்பற்ற அமைச்சர் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் என்பது திருமுறை கண்ட புராணம் கூறும் செய்தி. 

திருவாதிரை நட்சத்திரத்திற்கு அவ்வளவு சிறப்பு.  

சைவத் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகம்.  சாதாரண குடிமக்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என வழிமொழியும்  சட்ட வரைவு, உத்தம அடியார்களின் உள்ளத்தில்  ஜோதிப்பிழம்பாய் ஜொலிக்கும் ஈசனை கண்முன் காட்ட வல்ல அருள் நூல். 

தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி வாழ்பவருக்குரிய மூல பண்டாரம் அது. 

பெரியபுராணத்தை ஒருவர் திரும்பத் திரும்ப தலபாராயணமாக எழுதினாலோ, தொடர் சொற்பொழிவு செய்தாலோ அல்லது பதிப்பித்தாலோ அவர் இவ்வுலகில் சிறந்து நூறாண்டு வாழ்வார் என்பது கண்கூடு.  நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள். 

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நின்றும் இந்நூல் சிவபரத்துவம் பேசியும் சைவமகத்துவம் வீசியும் நிலைத்து நிற்பதற்கு காரணம் ஜீவ முக்தர்களாகிய அறுபத்து மூவரின் வாழ்க்கை சரிதமாகிய இந்நூலை திருக்கோயில்களில் மட்டுமின்றி கிராமங்கள் தோறும் பிரசங்கம் செய்தவர்களும் ஒரு முக்கிய காரணம் ஆவார்கள்.

தூக்கு சீர்த்திரு தொண்டர் தொகை விரி 
வாக்கினால் சொல்ல வல்ல பிரான் எங்கள் 
பாக்கியப் பயனாப்பதிக் குன்றை வாழ் 
சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்.

    -சிவஞான யோகிகள்

புராணப் பிரசங்கம்

ராமாயணம், மகாபாரதம், அரிசந்திர புராணம் போன்றவை காலந்தோறும் எப்படி மக்கள் மத்தியில் பிரசங்கம் செய்யப்பட்டதோ அதைப்போலவே திருத்தொண்டர் மாக்கதை என்னும் பெரியபுராணம் தெய்வச் சேக்கிழார் காலத்திற்குப் பின்பும் மிகப் பெரிதான முறையில்  புராணப் பிரசங்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

அதனால்தான் அதன் நீட்சியாக  இன்றும் இந்நூல் பற்றி பலரும் சொற்பொழிவு  செய்து பெரிய புராணம் என்னும் தேன் மழையில் நனைந்து  திருவருள் என்னும் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு இருக்கிறார்கள்.

தொட்டவரைத் திருவாக்கும் தன்மை உடைய பெரிய புராணம் தேவலோகத்தில் இருக்கும் கற்பக விருட்சத்தையும், அங்கு வாழும் காமதேனுவையும் விட மேலானது என நினைத்தவர்கள் பாரம்பரியமாக பெரிய புராணச் சொற்பொழிவினை தன்னுடைய இல்லத்திலும் , பொதுச்சத்திரங்களிலும், திருக்கோயில் வளாகங்களிலும் நடாத்தி வந்தனர். 

அதனைக் கேட்ட  மக்களிடையே அன்பும் அருளும், பண்பும்,பக்தியும், ஒழுக்கமும்  பல்லாற்றிலும் பெருகிக் காணப்பட்டன. 

ஆனால் இன்றைய நிலையோ வேறு. சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

 கடந்த 80 ஆண்டுகளில்  ஏற்படுத்தப்பட்ட   போலி சமூகநீதி, போலி சுயமரியாதை, போலி பெண்விடுதலை போன்ற நவீன அரசியல் மாற்றங்கள் இத்தகைய தெய்வீகப் பணி செய்பவரை காரணமின்றி  வேண்டுமென்றே புறம் தள்ளியது; தள்ளிக் கொண்டு இருக்கிறது. 

தெய்வத்தன்மை உணர்ந்து நெகிழ்ந்து சொற்குற்றம், பொருட் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை முதன்மை காரணமாகக் கருதிய  கற்றறிந்த சான்றோர்கள் இந்நூலை  பயபக்தியோடு சொற்பொழிவு செய்து சிரத்தையுடன் ஆய்வும் செய்தார்கள். அதனால் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள். 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஹிந்து மத நூற்களை தன் மனம் போன போக்கில், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்கிற மனப்பான்மையில் சில தகுதி தரமற்ற ஆய்வுகள் தொடர்கின்றன.  

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் நிலை உருவாக்கி பழக்கமாகி வழக்கமாகி விட்டன. இதற்கான ஆதாரங்கள் இணையவெளியில் கொட்டிக் கிடக்கின்றன. தேடிப் படித்து தெரிந்து, வருந்துக.  

தொகையா நாவலூராளி 
       தொடுத்த திருத் தொண்டப் பெருமை 
வகையால் விளங்க வுயர் நம்பி 
       யாண்டார் வகுப்ப மற்றதனைத் 
தகையா வன்பின் விரித்துலகோர் 
      தம்மை யடிமைத் திறப்பாட்டி(ன்)
உகையா நின்ற சேக்கிழான் 
       ஒளிர்பொற் கமலத்தாள் பணிவாம் 

    -கச்சியப்ப முனிவர் 

புகழ் பரப்பும் புண்ணிய சீலர்கள்

கொங்கு மண்டலத்தின் இருதயஸ்தானமாக விளங்கும் கோயம்புத்துார் சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்களின் பெரிய புராண விரிவுரை தமிழ்ச் சைவர்களுக்குக் கிடைத்த மற்றொரு மாபாஷ்யம். 

துறைசை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆதினங்கள் பல்வேறு காலகட்டங்களில் பெரிய புராணம் உட்பட திருமுறை, சித்தாந்த நூற்கள் பதிப்பில் முழுமையாக்கி அர்ப்பணிப்போடு அப்பணியைச்  செய்தது, செய்கிறது  என்பதனை,  பார்த்தவர்கள், படித்தவர்கள் நன்கு உணர்வார்கள். 

(பெரியபுராணத்திற்கு ஆதினங்கள், சி.கே.எஸ். ஐயாவும்  ஆற்றிய அரும்பெரும் பணியை மற்றொரு இடத்தில் விரிவாகச் சிந்திப்போம்) 

தமிழகத்தில் ஞானப்பயிர் வளர இப்புண்ணிய பூமியில்  தோன்றிய சைவ சமயக்கழகங்கள், சங்கங்கள், அமைப்புகள், பல்வேறு அடியார்களுள் இருக்கும்  ஆளுமைகள் யாவரும் தத்தம் வாழ்ந்த காலகட்டங்களில் பெரிய புராணம் என்ற  திவ்வியமான காவியத்தை மக்களிடம் அதன் அருள் தன்மை  மாறாமல் அப்படியே  கொண்டுசென்று சேர்த்து, அதற்கு எவ்வித எதிர்ப்புமின்றி  சம்பாவணை வாங்காமல் சொற்பொழிவு செய்தார்கள். 

ஆனால் இன்றைய சூழலில் இது போன்ற பண்பு சார்ந்த அரியவர்களைக்  காண்பது அரிதாகி விட்டது.  

நாகரிக உலகில் ஆன்மிகச் சொற்பொழிவு வியாபாரமாகி சக்ககைப் போடு போடுகிறது என்பதையும் யாரும் மறுத்து விட முடியாது. சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட… 

செயற்கரிய செயலைச் செய்த பெரியவர்கள் அறுபத்து மூவர் பெருமக்கள். அப்பிரபுக்களின் வரலாற்றை அறிந்துணர்ந்த நம்மவர்களில் சிலர்  நாளும் புகழ் பரப்பி திருநாமம் செப்பி சற்குருவாய்த் திகழ்கிறார்கள். 

அவர்களைப் பற்றி  அன்பர்கள் சொல்லிக் கேட்டும், நூற்கள் வாயிலாகப் படித்ததனாலும்  ‘என்கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற திருநாவுக்கரசு தேவ நாயனாரின் திருவாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்கிறார்கள். அத்தகைய   நான்கு ஆளுமைகள் பெரிய புராணத்தின் மீது அத்யந்தமான முறையில் தீவிர சிவபக்தியில் வாழ்ந்து காட்டினார்கள். அவர்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வது அவசியம். 

வன்தொண்ட நாராயணச் செட்டியார் 

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் ஒருவர் வன்தொண்ட நாராயணச் செட்டியார். 

இவர் தேவக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர்.  

தனது  வழிபாட்டில் நாள்தோறும் முறையாக விநாயகப் பெருமானுக்கு சதம் தோப்புக்கரணம் இடுவதை வழக்கமாகக் கொண்டவர். 

தெய்வச் சேக்கிழாரின் தீவிர பக்தர். 

பெரியபுராணத்தை உயிரினும் மேலாக மதிப்பவர். 

தேவக்கோட்டை வாழ் சைவப் பெருமக்களும், குருநாதரான பிள்ளையவர்களின் ஆலோசனைப்படி  தான் சொந்த  ஊரில் புதிதாக எழுப்பப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் தெய்வச் சேக்கிழாருக்கு தனிச் சன்னிதியும்  எழுப்பி ஆனந்தப்பட்டவர்.

இன்றும் நியமமாக தெய்வச் சேக்கிழாருக்கு பூஜை வழிபாட்டு முறைகள் சிறப்புற நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தனி மனித பக்தியால் தெய்வச்சேக்கிழாருக்கு எழுப்ப பட்ட முதல் கோயிலை  இன்றும்  நாம் தரிசித்து வருகிறோம்.  

ஸ்ரீ  சரவண மாணிக்கவாசக சுவாமிகள். 

கொங்குமண்டலத்தில் கோவைச் சேக்கிழார் என அனைவராலும் அன்போடு  புகழப்பெற்ற கூனம்பட்டி மாணிக்க வாசக மடாலயத்தின் 55 வது ஆதின கர்த்தா சரவண மாணிக்க வாசக சுவாமிகள். 

மற்றொருவர் நடமாடும் மடாலயமாகத் திகழ்ந்த சென்னிமலை காசிவாசி  பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள்.

இருவரும் கூனம்பட்டி ஆதினம் 54 வது ஆதின கர்த்தா நாகரத்தின மாணிக்க வாசக சுவாமிகளிடம் சிவதீட்டை பெற்றவர்கள். 

மாணிக்கவாசக மடாலயத்தில் சரவண மாணிக்க வாசக சுவாமிகள் தன்னிடம் வரும் அன்பர்களின் வாட்டம் போக்கி குறையைத் திருத்தி  ‘திருத்தொண்டத் தொகையை திருவிளக்கு முன் பாராயணம் செய்யுங்கள். எல்லாவற்றையும்  நாயன்மார்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என வழி வகை செய்து வரமருளி  பிரியா விடை கொடுப்பார்களாம். 

வயது முதிர்ந்தாலும் இளவயது உள்ளத்தோடு வாரந்தோறும் கோயம்புத்துாருக்கு  ரயிலில் தனியொருவராகச் சென்று தவறாமல் பெரிய புராண தொடர் பிரசங்கம் செய்வார்களாம். மேலும் அன்பர்கள் அழைக்கும் கோயில் விழா, சபை ஆண்டு விழாக்களுக்கும் சென்று அருளுரை வழங்கி வந்தார்கள் என்பார் அப்பெருமானைப் பற்றி  அறிந்த அன்பர்கள்.

சுவாமிகள் தன் மடத்து வாயிலில் எப்போதும் குடிநீர்க் குழாய் ஒன்றை அமைத்து, வருவோரும் போவோரும்  தாகம் தீர பொது தர்மத்தையும் வழுவாமல் காத்து நின்றார்கள். 

கூனம்பட்டி மடாலயத்தின் குருமகா சன்னிதானங்கள் பெரியபுராணம் என்னும் காமதேனுவைக் கண்டு கொண்ட கருணையாளர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.  

காசிவாசி  பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள்

ஆதி சைவர்களின் குல தெய்வமாகப் போற்றப்படும் பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள்.  

நாயன்மார் குருபூஜை  நாட்களில்  தாமே முன்னின்று புராணப் பிரசங்கம் செய்வார்கள். 

மேலும் தன்னுடைய சிஷ்யர்களின்  வேண்டுகோளுக்கு இணங்க தேவக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பெரிய புராணத் தொடர் சொற்பொழிவினை நிகழ்த்தி நிறைவு விழாவும் நடாத்தியுள்ளார்கள். 

அவர் தம் எழுதிய கட்டுரைகளில் ஆங்காங்கே  தெய்வச் சேக்கிழாரின் தெய்வநலம் பொதிந்து இருப்பதைக் காணலாம்.

 கோயம்புத்துார் திருப்புகழ் சபை மாநாட்டில் தூத்துக்குடி ச.குழந்தையம்மாள் என்னும் சிறுமி  “தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்”  என்று சொல்லி பேச ஆரம்பித்த போது  ‘இது போன்ற பண்பட்ட பக்குவம் அடியேனிடம் இல்லையே’ என சொல்லி தேம்பித் தேம்பி ஆனந்தக்கண்ணீர் விட்டதாகச் சொல்லுவார் தன் வரலாற்றுக் குறிப்பில் வாரியார் சுவாமிகள். 

சுவாமிகளை எங்கு அருளுரை வழங்கப் பணித்தாலும்  பெரிய புராணத்தில் இருந்து பாடல் ஒன்றைப் பாடுவதை முதன்மையாக வைத்திருந்தார்கள் என்பார் மதுரை தி.சு.கோவிந்த சுவாமி பிள்ளையவர்கள். 

திருத்தொண்டர் புராணத்தில் இடம் பெறுகிற நாயன்மார்கள் அனைவரும் சிவதீட்சை பெற்று சைவ ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த சான்றோர்கள். 

சிவாகமங்களில் விதிப்படி சிவதீட்சை பெற்றவர்களுக்கே முத்தி சித்திக்கும் என்று சொல்லப் பெறுவதால் அம்முத்திக்குச் சாதனமான சிவதீட்சையை நாயன்மார்கள் பெற்றுள்ள உண்மையைத் திருத்தொண்டர் புராணத்தில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் காண்பிக்கப்படுகிறது. 

சான்றாக, சுந்தர மூர்த்தி சுவாமிகள் வரலாற்றில் மணம்வந்த புத்துாரில் அவர் தடுத்தாட் கொள்ளப்பெற்ற போது கிழ வேதியராக வந்து இறைவன் அவருக்கு  நயன தீட்சை முறையில் சமய தீட்சையும், 

பின்னர் திருதுறையூரில் ‘வேண்டிக் கொள்வேன் தவநெறியே’ என்று சுந்தரர் பெருமானை வேண்ட மானச தீட்சைமுறையில் விசேஷ தீட்சையும்,

அதன் பின்னர் திருவதிகை வீரட்டானத்தில் திருவடி சூட்டலாகிய சாம்பவ தீட்சை மூலம் நிர்வாண தீட்சையும் செய்தருளினார்  – என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் நமக்கு உணர்த்துகிறார். 

திருத்தொண்டர் புராணத்தைக் காப்பிய உணர்வுடன் படிப்பதை விட தத்துவ சாத்திர உணர்வோடு படிப்பது தான் நமக்கு சைவ உண்மைகளை உணர்த்தும் என அருளுரை வழங்கியுள்ளார்கள். 

இது இப்போதும் நமக்காகவே அருளிச் செய்ததைப் போல  உள்ளது. 

பிரெஞ்சு அன்பர் ப்ரான்ஸிஸ் குரோ.

தி.வே.கோபாலையர் ஒரு தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர் மற்றும் பேராசிரியர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்டவர். திருப்பனந்தாள், திருவையாறு கல்லுாரிகள், பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்துப் புதுவை மையம் முதலானவற்றில் பணிபுரிந்தவர். 

தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியம், சமயநுால்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க புலமையுடையவர்.  

தஞ்சை சரசுவதி மகால் நுாலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

தி.வே.கோபாலையரைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 

திருமுறை என்று ஒருவர் சொன்னாலோ, பேசினாலோ அதைக் கேட்டாலோ  கோபாலையரைத் தெரிந்திருக்க வேண்டும்.  

அவருடைய திருஞானசம்பந்தர் தேவார நூலிற்கு  ஒரு முன்னுரை கொடுத்துள்ளார் பிரெஞ்சு அன்பர் ப்ரான்ஸிஸ் குரோ. 

அவர்கள் வழங்கிய ஒரு சில செய்தியில்…

பெரிய புராணம் என்பது ஒரு தன்னிகரற்ற நினைவுச் சின்னம். அதனுடைய பன்முகத்த  நுண்மான்  நுழைபுலம் இந்தியச் சான்றாண்மையின் சிகரத்தை எட்டிப்  பிடித்திருக்கிறது. இதில் அற்புத கிரந்தங்கள் நேர்த்தியாக நினைவூட்டப் பட்டிருக்கின்றன. 

மேலும் புராணக்காதைகள், உண்மை நிகழ்ச்சிகள், பாத்திரப் படைப்புகள் ஆகிய அனைத்துமே ஒரு புனிதமான பணிக்கென்று பயன்படுத்தப்பட்டுள்ளன. 

தேவாரப் பாடல்களைத் தம் பாக்களின் இழையாகவும் அவற்றில் இருந்து சற்றும் பிறழாமல் சேக்கிழார் அடிகள் பயன் கொண்டிருப்பது அவருடைய வலிமையைக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு இழைகளின் ஊடு வரலாறு, புராணக் காதைகள், புனைவு ஆகியவை ஊடு இழைகளாகப் படர்ந்து உள்ளன. முடிவாக உன்னத உண்மை, தேவாரப் பாடல்களில் கருத்தோட்டம் என்பன பின்னிப்பிணைந்து, பிரிக்க முடியாதபடி சேக்கிழார் அடிகளின் படைப்பில் படர்ந்திருக்கின்றன.

 அடிகள் முற்றுமாகத் தேவாரத்தில் தோய்ந்து அத்துவிதப்பட்டு இருக்கிறார். தேவாரப் பனுவல்களை சேக்கிழார் அடிகளுக்குப் பின்னர் வந்த அனைவரும் அவர் காட்டிய வழியே தான்  சென்று அறிய முடியும். 

சேக்கிழார் அடிகள் சென்னி தீண்டும் சிவன் சேவடி போற்றி! போற்றி!  

வன்தொண்டர் நாராயணச் செட்டியார்,  சரவண மாணிக்க வாசக சுவாமிகள், பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகள், பிரெஞ்சு அன்பர் ப்ரான்ஸிஸ் குரோவைப்போல எத்தனையோ அருளாளர்கள், அடியார்கள்  தெய்வச் சேக்கிழார் வாக்கில் திளைத்து சிவானந்த தேனை அனுபவித்தும்,  அனுபவித்துக் கொண்டும், அனுபவிக்கவும் தயாராக இருப்பார்கள். 

சிவகாமியம்பிகை சமேத ஆனந்த நடராஜப் பெருமான் அருளால் ஹிந்து மக்களின் உயிர்ப்பாகிய பெரிய புராணத்தினை தக்கவரைக் கொண்டு  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் உளமுருகப் படித்து உணர்ந்து நெகிழ்ந்து இன்புற  வேண்டும் என்கிற விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கின்றேன். 

தமியேன் வேண்டுவது இது மட்டுமே.

திருச்சிற்றம்பலம். பொன்னம்பலம். தில்லையம்பலம்.

சிவ சிதம்பரம். ஹர ஹர. சிவ சிவ.

$$$

Leave a comment