-திருநின்றவூர் ரவிகுமார்
தேசியக் கொடி குறித்த மகாகவி பாரதியின் சிந்தனைகளை அலசுகிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

அண்மையில் ஒரு சுவையான பத்தியைப் படித்தேன். கடந்த மாதம் ‘அந்த 15 நாட்கள்’ (பிரசாந்த் போள் – விஜயபாரதம் பிரசுரம்) என்ற நூலைப் படித்தது பற்றி எழுதியது நினைவிருக்கலாம். அதில் என் கவனத்தை ஈர்த்த விஷயம் ஒன்று இருந்தது. பல விஷயங்கள் இருந்தன அதில் இது ஒன்று என்பதுதான் சரி.
மகாத்மா காந்தி ‘மூவர்ணக் கொடியை வணங்க மாட்டேன்’ என்று சொல்லியுள்ளார். இப்போதுள்ள தேசிய கொடியில் மூவர்ணத்தின் மையத்தில் 24 ஆரங்கள் கொண்ட தர்மச்சக்கரம் இருக்கிறது. இதுதான் 1947 ஆகஸ்ட் 15 ஏற்றப்பட்டது. காந்திஜி இந்தக் கொடியை வணங்க மாட்டேன் என்று சொல்லியது அந்த நூலில் குறிப்பிடப் பட்டிருந்தது.
மகாத்மா காந்தி சொன்ன காரணம், ‘ராட்டை சின்னம் இல்லாத கொடியை நான் ஏற்க மாட்டேன் வணங்க மாட்டேன்’ என்பதாகும். இது நடந்தது 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பு. அந்த நூல் ஆகஸ்டு 1 முதல் 15 வரை நடந்த நிகழ்வுகளின் சிறு தொகுப்பு. ஆனால் கூரிய பார்வை உடையது.
அண்மையில் நான் படித்தது ‘பாரதி : சில பார்வைகள்’. தொ மு சி ரகுநாதனின் எழுத்து. அதில் ‘தாயின் மணிக்கொடி’. இது ஒரு ஆய்வுக் கட்டுரை.
இதில், ‘இந்தியப் புரட்சியின் தாய்’ எனப்படும் (மேடம்) காமா அம்மையார் 1907 இல் ஜெர்மனியில் நடந்த முதல் சர்வதேச சோஷலிஸ்ட் மாநாட்டில் இந்திய கொடியை அறிமுகம் செய்தார். அதற்கு முன்பு சகோதரி நிவேதிதை தேசியக் கொடியின் தேவையை உணர்ந்து, அதை வடிவமைத்து, கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் (1906) காட்சிப் படுத்தினார். இந்தக் கொடி பற்றி விவரங்கள் உள்ளன. சகோதரி நிவேதிதைக்கு ‘நமது தேசக்கொடியின் தாய்’ என்று புகழாரம் சூட்டுகிறார் ரகுநாதன்.
சகோதரி நிவேதிதை உருவாக்கிய கொடியில் வஜ்ராயுதம் இருந்தது. வந்தேமாதரம் எந்த எழுச்சியூட்டும் வாசகம் இருந்தது. அதில் பிறைச் சந்திரன் இல்லை. இந்தக் கொடியை இயற்பியல் அறிஞர் ஜெகதீஷ் சந்திர போஸ் போன்ற இன்னும் பலரும் பயன்படுத்தினார்கள். என்றாலும் அது பிரபலம் அடையவில்லை.

காமா அம்மையார் சர்வதேச அரங்கில் உயர்த்திய கொடியில் ‘வந்தே மாதரம்’ இருந்தது; வஜ்ராயுதம் இல்லை, சூரியனும் பிறை சந்திரனும் இருந்தது.
கொடியில் இருந்த இந்த வேற்றுமையை பாரதி கண்டு கொண்டார்.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் ஹிந்து எழுச்சியே தேச எழுச்சியாக இருந்தது. இதை முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் மதரீதியாக வங்கப் பிரிவினையை ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய பிறகு சமுதாயத்தில் பிளவு ஏற்பட்டது.
வீரம், தியாகம், ஞானம், உறுதி ஆகியவற்றின் தொன்மையான அடையாளமாக இருந்த வஜ்ராயுதம் ஹிந்து அடையாளமாகப் பார்க்கப்பட்டது. பிறை நிலவு இஸ்லாமியர்களின் அடையாளமாக மாறிப்போனது. வங்கப் பிரிவினைக்குப் பிறகு ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை என்ற பேச்சு அரசியல் களத்தில் வலுப்பெற்றது.

இங்குதான் பாரதியின் ‘தாயின் மணிக்கொடி’ வருகிறது. தனது குருமணியான நிவேதிதை வடிவமைத்த வஜ்ராயதத்துடன் கூடிய கொடியை கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் பாரதியார் பார்த்திருக்க வாய்ப்புகள் அதிகம். அதன் பிறகு சர்வதேச அரங்கில் காமா அம்மையார் முன்னிலைப்படுத்திய பிறைச்சின்னம் இடம்பெற்ற கொடியை பற்றி வவேசு ஐயர் (லண்டன் நிருபர்) மூலம் பாரதியார் தெரிந்து கொண்டிருந்தார்.
தன் குருமணியை விட்டுக் கொடுக்காமல், அதே வேளையில் அக்கால அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, பாரதியார் காமா அம்மையார் வடிவமைத்ததில் இருந்த விஷயங்களையும் சேர்த்து ஒரு கொடியை உருவகித்துள்ளார். அதை அவர் நடைமுறையில் தூலமாகச் செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அதை தன் பாடலில் வடித்து விட்டார்.
கொடியைப் பற்றி மட்டுமே அந்தப் பாடலில் பாரதியார் சொல்லவில்லை. ‘ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்’ என்று கொடிக்கம்பம் உயர்ந்து இருக்க வேண்டும் என்று குறிப்போடு தொடங்குகிறது அந்த பாடல்.
துணி வகைகளில் உயர்ந்தது பட்டு. கம்பம் மட்டுமல்ல, கொடியின் துணியும் உயர்ந்தது. அதன் பிறகு தான் இந்திரனின் வஜ்ஜிர ஆயுதமும் ‘எங்கள் துருக்கர் இளம்பிறை ஒர் பால் மந்திரம் ஒரு புறத் தோன்றும்’ என்ற வரிகள் வருகின்றன.
முஸ்லிம்கள் துருக்கிய தேச மத சட்டங்களுடன் நெருக்கமானவர்கள். அதே வேளையில் இங்குள்ள முஸ்லிம்கள் துருக்கியர்கள் கிடையாது. இங்கு பாரம்பரியமாகவே பிறந்து வாழ்ந்து பின்பு ஏதோ காரணத்தால் மதம் மாறியவர்கள். எனவே தான் ‘எங்கள்’ சொல்லைப் போட்டார் போலும்.
கம்பத்தின் மேல் உயர்ந்த கொடி. அதன் கீழ் நிற்பவர்கள் என்று பஞ்சாப், செந்தமிழ் நாட்டு வீரத்தமிழ் மறவர் கூட்டம் , சேரர்கள், தெலுங்கர்கள், கன்னடியர்கள், மராட்டியர்கள், துளுவர், ரஜபுத்திரர்கள் என்று பாரத தேசமே ஒன்றுபட்டு நிற்பதைக் காட்டுகிறார்.
இவ்வளவு வீரர்கள் கூட்டமும் ‘தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்’ என்று கட்டியம் கூறுகிறார் . இதைப் படிக்கும்போதே கொடி காத்த குமரன் ஒரு கணம் நினைவில் வந்து செல்கிறார்.
அடுத்த விஷயத்திற்கு செல்லும் முன்பு பாரதியின் தாயின் மணிக்கொடி பாடலை ஒரு முறை படித்துவிடுங்கள்…
***
தாயின் மணிக்கொடி
-மகாகவி பாரதி
(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)
தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு
பல்லவி தாயின் மணிக்கொடி பாரீர்! – அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்! சரணங்கள் ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே பாங்கின் எழுதித் திகழும் - செய்ய பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்) பட்டுத் துகிலென லாமோ? - அதில் பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று மட்டு மிகுந்தடித் தாலும் - அதை மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்) இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில் எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன் மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்) கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும் காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர். (தாயின்) அணியணி யாயவர் நிற்கும் - இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ? பணிகள் பொருந்திய மார்பும் - விறல் பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்) செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந் தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர் சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்) கன்னடர் ஓட்டிய ரோடு - போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும் பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்) பூதலம் முற்றிடும் வரையும் - அறப் போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும் மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில் மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்) பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார், துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத் தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்) சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க! தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத் தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)
***
இந்த நிலையில்தான் மகாத்மா காந்தியின் தாக்கம் காங்கிரஸில் அதிகரிக்கிறது. அவர் தேசக்கொடி அவசியம் என்று உணர்ந்து மூவர்ணக் கொடியை ஏற்படுத்துகிறார். ஆரம்பத்தில் அது வெள்ளை நிறத்தை மேலேயும் சிவப்பைக் கீழேயும் இடையில் பச்சை கொண்டதாகவும் இருந்தது. குணங்களை (வெள்ளை = அறிவு) சுட்டிக்காட்டுவதாக நிறத்திற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
பிறகு அதுவும் மாற்றப்பட்டு மேலே காவி, இடையில் வெள்ளை, இறுதியில் பச்சை கொண்ட கொடி வடிவமைக்கப்பட்டது. நிறத்துக்கு மதச்சார்புடன் (காவி = ஹிந்து, பச்சை = முஸ்லிம்கள், வெள்ளை = இதர மதத்தினர்) விளக்கம் அளிக்கப்பட்டது.
கொடியின் மையத்தில் ராட்டை சின்னம் இடம் பெற்றது. காந்திஜி இதை தனது அகிம்சைப் போராட்டத்தின் அடையாளமாகவும் சுதேசியின் அடையாளமாகவும் விளக்கினார்.
மூவண்ணத்துடன் ராட்டை சின்னம் பதித்த கொடிதான் தேசியக் கொடியாக முன்னிறுத்தப்பட்டது. ஆனால் 1947 ஆகஸ்ட் 15 ராட்டைக்கு பதிலாக சக்கரம் சின்னம் கொண்ட கொடி என்றதும் மகாத்மா காந்திஜி அதிர்ச்சி அடைந்தார். அதை ஏற்க மறுத்தார். வணங்க மாட்டேன் என்று சொன்னார். இதை பிரசாந்த் போள் உரிய சான்றுகளுடன் ‘அந்த 15 நாட்’களில் குறிப்பிடுகிறார்.
காந்திஜி தேசியக்கொடி பற்றி சொன்னதைப் படித்த போது, எனக்கு வேறு ஒரு விஷயம் மனதில் பட்டது. காந்திஜி சொன்னதை அப்போதும் சரி அதன் பின்னும் யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. விமர்சிக்கவில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மூவர்ணக் கொடியை மதிப்பதில்லை என்ற விமர்சனத்தை கிளப்பினார்கள்.
இத்தனைக்கும் சுதந்திரப் போராட்ட வீரரான பண்டித ஜவஹர்லால் நேரு தான் கொடியின் அளவு விவரங்களையும், அதை யார் ஏற்றலாம் யார் ஏற்றக்கூடாது, எங்கு எப்போது ஏற்றலாம், என்றெல்லாம் வரையறை செய்து (Flag Code) நடைமுறைப் படுத்தினார். அவர் செய்த வரையறையின்படி கொடியைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்த திருப்பூர் குமரனின் வாரிசுகளான தேசத்தின் குடிமக்கள் கொடியேற்றக் கூடாது; குமரனை அடித்துக் கொன்ற போலீஸ் கமிஷனர் கொடியேற்றலாம் என்று ஆனது.
கட்சி அலுவலகங்களிலும் நிறுவனங்களின் அலுவலகங்களிலும் கொடி ஏற்றலாம் என்ற விதித் தளர்வு பின்னாளில் வந்தது. அப்போது தான் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலும் கொடி ஏற்ற முடிந்தது. ஆனால் அவதூறு செய்ய இதெல்லாம் தேவையில்லை. எனவே சேறு அள்ளி வீசப்பட்டது. இப்போது அது அடங்கிவிட்டது.
சுதந்திரத்தின் பவள விழாவை (75 ஆண்டை) முன்னிட்டு பொதுமக்களும் ஆகஸ்ட் 15 வீடுகளில் கொடி ஏற்றலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். குடிசைகளிலும் சாதாரண வீடுகளிலும் கொடி பறந்ததைப் பார்க்க முடிந்தது. கட்சி அலுவலகங்களில் கொடி ஏற்றப்பட்டது. ஆனால் எத்தனை தலைவர்களின் வீடுகளில் கொடி ஏற்றப்பட்டதை பார்த்தீர்கள்? குறிப்பாக தமிழகத்தில்?
தொ.மு.சி. ரகுநாதனின் கட்டுரை மூலம் தேசியக் கொடி வடிவமைப்பில் தமிழரான சுப்பிரமணிய பாரதியார் தனக்கேவுரிய வகையில் பங்களித்து உள்ளார் என்பது தெரிகிறது. இது மனதுக்கு நிறைவளிக்கிறது . பாரதி அறிஞரான ரா.அ. பத்மநாபனை மேற்கோள் காட்டி (இந்தியன் ரிவ்யூ , 1978 மார்ச் மாத இதழ்) ‘தாயின் மணிக்கொடி’ வெளியானது 1908 ஜூலை மாதம் 11 தேதி இந்தியா பத்திரிகையில் என்று உறுதிப்படத் தெரிவிக்கிறார் தொ மு சி ரகுநாதன்.
பாரதியாருக்கு பல பரிமாணங்கள் உண்டு. அரசியல்வாதி என்ற முகம் இந்த பாடலில் (தாயின் மணிக்கொடி -1908) வெளிப்படுகிறது என்று கருத முடியும். 1947 தேசப் பிரிவினைக்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. மகாகவி பாரதியார் உயிரோடு இருந்தால் என்ன எழுதி இருப்பார்? என்று சிந்திக்கத் தூண்டுகிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சி மாறவில்லை. அதிகாரத்தை அடைய அது எதை வேண்டுமானாலும் செய்யும் என்பது, பிரிவினையை ஏற்றுக் கொண்டதில் மட்டுமல்ல, கடந்த வாரம் ரமலானுக்காக முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு மட்டும் வேலை நேரத்தில் சலுகை (கர்நாடகா, தெலுங்கானா) அறிவித்ததன் மூலம் வெளிப்பட்டுள்ளது.
இதை எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டுமென அகிலேஷ் யாதவ் வழி மொழிந்ததை பார்க்கும்போது, பாஜகவைத் தவிர மற்ற எல்லோரும், தேசத்தை விட வாக்கு அரசியல், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
$$$