-திருநின்றவூர் ரவிகுமார்
குலபதி கே.எம்.முன்ஷி அவர்கள் எழுதிய ‘ஜெய் ஸோம்நாத்’ என்ற புதினம் குறித்த நூல் அறிமுகம் இங்கே...

சோமன் என்றால் சந்திரன். சந்திரனுக்கு 27 (நட்சத்திரங்கள்) மனைவிகள். அவர்களின் ரோஹிணியிடம் அதிக நெருக்கம் காட்டியதால் வெகுண்ட சந்திரனின் மாமனார் தக்க்ஷ பிரஜாபதி அவனை சபிக்க, ஒளி மங்கத் தொடங்கியது.
ஒளி இழந்த சந்திரன் பிரம்ம தேவரின் ஆலோசனைப்படி சிவனை நோக்கி தவம் இருந்து தன் ஒளியை மீண்டும் பெற்றான். மாமனாரின் சாபத்தால் அமாவாசை வரை சந்திரனின் ஒளி மங்க, சிவனாரின் ஆசியால் பௌர்ணமி வரை ஒளி துலங்கிற்று என்கிறது புராணம்.
புராணத்தின்படி சிவபெருமானுக்கு கோயில் கட்டி சந்திரன் வழிபட்டது குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயம். சோமன்+ நாதர், சந்திரனுக்கு அருளிய தலைவர் என்று பொருள்.
சைவ சமயத்தில் ஜோதிர் லிங்கத்திற்கு பெரும் மதிப்பு உண்டு. 12 ஜோதிர் லிங்கங்கள் பாரதத்தில் உள்ளன. அதில் முதலிடம் பெறுவது குஜராத்தில் உள்ள சோமநாத்.
சோமநாதர் ஆலயம் புராணத்தின்படியும், சமய கண்ணோட்டத்திலும் சிறப்பு பெற்றது என்பதுடன் வரலாற்றின்படியும் முக்கியத்துவம் பெற்றது.
நவீன இந்திய வரலாற்றில் மறக்க முடியாத படையெடுப்பாளன் கஜினி அமீர் முகமது. கஜினி என்பது ஊரின் பெயர், அமீர் என்றால் தலைவன். 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்து வந்து கோயில்களையும் வழிபாட்டு விக்கிரகங்களையும் உடைத்தெறிந்து அங்கிருந்து செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்றான். நகரங்களை சிதைத்து சூறையாடினான். அதில் முக்கியமானது சோமநாதர் ஆலயம் என்று வரலாறு சொல்கிறது.
‘தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆப் சுல்தான் முஹம்மத் ஆப் கஸ்னா’ என்ற நூல் சொல்கிறது , சோமநாதர் ஆலயத்தை தகர்த்துக் கொள்ளையிட்டதில் கஜினி முகமதுக்கு மட்டுமே 20 லட்சம் தினார்கள் கிடைத்தது. அது மொத்தக் கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. அன்று , தினார் என்பது 4.2 கிராம் எடை கொண்ட தங்க நாணயம்.
தனி நபர்களிடம் இருந்ததை விட அரசர்களிடம் அதிகம் செல்வம் இருந்தது. அதைவிட அதிகம் கோயில்களில் இருந்தது. அந்தக் காலத்தில் மிகவும் பணக்காரக் கோயில் சோமநாதர் ஆலயம். கஜினிக்கு முன்பும் அந்தக் கோயில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. ஆனால் அது கொள்ளை மட்டுமே. கஜினி செய்தது இஸ்லாமிய மத அடிப்படையிலான தகர்ப்பு. அதைப்பற்றிப் பேசுகிறது ‘ஜெய் ஸோம்நாத்’ என்ற இந்த நாவல்.
இதை எழுதியவர் ‘குலபதி’ கே எம் முன்ஷி (கன்னையாலால் மனேக்லால் முன்ஷி). வடமொழியில் குலபதி என்றால் தலைவர் என்று பொருள். இவர் இந்திய விடுதலைப் போராளி. காந்தி, படேலுக்கு நெருக்கமானவர், வழக்கறிஞர்,கல்வியாளர். பன்மொழி அறிஞர். இலக்கியவாதியாகத் தடம் பதித்தவர். குறிப்பாக குஜராத்தி மொழியில்.
விடுதலைக்கு பின் மத்திய அமைச்சராக, மாநில ஆளுநராக இருந்தவர்; சோமநாதர் ஆலயப் புனரமைப்புக் குழுவின் தலைவராக இருந்தவர்; பாரதிய வித்யா பவன் என்ற கல்வி அமைப்பை ஏற்படுத்தியவர். ராஜாஜியுடன் இணைந்து சுதந்திரா கட்சியை நிறுவியவர் என்று பன்முகம் கொண்டவர்.
முன்ஷி எழுதிய நூல்கள் பல. அதில் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது ஜெய் ஸோம்நாத் . 1940இல் வெளியானது இந்த நூல் . அதை மொழி பெயர்த்து தொடராக வெளியிட்டது இலக்கிய மாத இதழான ‘காவேரி’ என்கிறார் அல்லயன்ஸ் சீனிவாசன் . பிறகு அது நூல் வடிவம் பெற்றதாகத் தெரிகிறது.
மாணவப் பருவத்தில் இதனை நூல் வடிவில் படித்ததாகக் கூறுகிறார் மதுரை பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். தமிழில் மொழியாக்கம் செய்தவர் கீழையூர் தி சேஷாத்திரி. இந்த நூலை நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போது (2024) அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது.
பிரதியைக் கொடுத்து உதவியவர் _ஞானாலயா_ கிருஷ்ணமூர்த்தி என்கிறார் பதிப்பாளர் சீனிவாசன். நூலாசிரியரை ப் பற்றி கிருஷ்ணமூர்த்தி சிறப்பான அறிமுக உரை எழுதியுள்ளார். இந்த நாவலைப் பற்றி பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அழகிய முன்னுரை வடித்துள்ளார்.
நாவலின் மையம் சோமநாதர் ஆலயமும் கஜினி அமீர் முகமதுவின் படையெடுப்பும் . ஆலயமும் , அதை சுற்றி உள்ள அமைப்பும், வசிக்கும் மனிதர்கள், வருகை தரும் பக்தர்கள் என்ற விவரிப்போடு நாவல் தொடங்குகிறது.
சோமநாதர் ஆலயத்தை ஒட்டி இருந்த பைரவர் கோயிலில் காபாலிகர்களும் காளாமுகர்களும் வழிபட்டு, நரபலி இட்டதாகவும் நாவல் கூறுகிறது. கதாநாயகியான தேவதாசி சௌளா நரபலிக்காக காளாமுகரான கங்கையோகீஸ்வரர் என்பவரால் பைரவர் கோவிலுக்கு தூக்கிச் செல்லப்படும் போது கதாநாயகனாக பட்டண் அரசன் பீமதேவன் இடைமறித்து அவளைக் காக்கிறான். கங்கையோகீஸ்வரர் கொல்லப்படுகிறார்.
பைரவர் கோவில் வலப்புறம் என்றால் இடப்புறம் இருந்தது திரிபுரசுந்தரி கோயில். அது போக வழியே மோட்சத்திற்கான வழி என கருதிய வாமாச்சார முறையை பின்பற்றுபவர்களின் மையம். கதாநாயகியை இந்த இடத்தில், இந்த வழிபாட்டு முறையில் அடைய நினைக்கிறான் சிவராசி. அவன் சோமநாதர் ஆலயத்தின் குருவாக இருந்த கங்க சர்வக்ஞரின் சீடன். கதாநாயகி சௌளாவை அடைய முடியாத ஆத்திரத்தில் கஜினி முகமதுக்கு ரகசிய வழியை காட்டி சோமநாதர் ஆலயத் தகர்ப்புக்கு வித்திடுகிறான்.
கஜினியின் மாபெரும் படையை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு மாண்ட ரஜ புத்திர வம்சத்தைச் சேர்ந்த மூத்தவர் கோகா ராணா, கஜினியின் படையை பாலைவனத்தில் அலைக்கழித்து மணற்புயிலில் சிக்க வைத்து பெரும் அழிவை ஏற்படுத்திய கோகா ராணாவின் மகன் சஜ்ஜன் , கஜினியின் கூடாரத்திற்கே சென்று அவன் நெஞ்சில் கூர்வாளைப் பதித்த சஜ்ஜனின் மகன் சாமந்தன் என சோமநாதர் ஆலயத்தை காக்க போரிட்ட ரஜபுத்திர வம்சம் பற்றி நாவல் பதிவு செய்கிறது.
அதே வேளையில் தங்களுக்குள் பொறாமையாலும் கர்வத்தாலும் சண்டையிட்டுக் கொண்டு, கஜினி முகமதுவின் படையெடுப்பு வெற்றி பெற வழி வகுத்த அரச வம்சங்களையும் நாவல் குறிப்பிடுகிறது.
‘ கடைபுத்தியும் ஒற்றுமை தெரியாத வீண் கர்வமும் கொண்டு குதிக்கும் ராஜபுத்திரர்களை அழிக்கவே பினாகபாணி இந்த அமீரைச் சிருஷ்டித்து அனுப்பினார் போலிருக்கிறது’ என்று சாமந்தன் பேசுவது (பக்கம்- 151) ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத நிலையை தெளிவாக படம் பிடிக்கிறது.
விடாமுயற்சியுடன் பெரும் இழப்புக்குப் பின் சோமநாதர் ஆலயம் வரும் கஜினி அதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அப்படியே பிரமித்து நின்று விடுகிறான். எவ்வளவு வேண்டுமானாலும் செல்வத்தைத் தர முன் வந்த போது ‘மகமூத் விக்ரஹங்களை விற்கின்றவன்னல்ல. அவன் விக்ரஹம் உடைப்பவன்’ என்று சொல்லி ஆயிரக்கணக்கான வீரர்களின், பக்தர்களின் பிணங்களின் மீதேறிச் சென்று, அந்தரத்தில் நிலை கொண்டிருந்த சிவலிங்க மூர்த்தியை உடைத்துத்தெறிகிறான். (பக்கம் 239)
போரில் படுகாயம் அடைந்து தப்பிச்சென்ற பீமதேவன் மீண்டெழுந்து மற்ற அரசர்களையும் ஒருங்கிணைத்து போராடி வெற்றி பெறுகிறான். ஓராண்டு காலத்தில் சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்புகிறான்.
“கோயில்களுக்குப் பிறகு கோயில்கள் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்டன. ஆனால் அலை கடந்த சிறிது நேரத்திலேயே கோயிலின் கோபுரம் மீண்டும் எழுந்தது. தென்னிந்தியாவின் பழைய கோயில்களில் சிலவும் குஜராத்தின் சோமநாதர் போன்ற கோயில்களும் உங்களுக்கு அளவற்ற ஞானத்தை கற்றுத்தரும். எண்ணற்ற புத்தகங்களை விடவும் இந்திய வரலாற்றை இவை உங்களுக்கு சிறப்பாக உணர்த்தும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
ஹிந்துக்களிடையே ஒற்றுமை இன்மையே அழிவுக்குக் காரணம். படையெடுப்பாளர்கள் கொள்ளையர்கள் மட்டுமல்ல, வேறு நோக்கம் உடையவர்கள். ஹிந்து ஒற்றுமையே இந்த நாட்டின் மண்ணையும் மாண்பையும் பண்பாட்டையும் காப்பாற்றும் வழி. இந்த மூன்று விஷயத்தை இந்த நாவல் மூலம் கே எம் முன்ஷி கூறுகிறார்.
விடுதலைக்குப் பிறகு சோமநாதர் ஆலயத்தை பிரம்மாண்டமாகப் புனரமைக்க விரும்பினார் சர்தார் வல்லபபாய் படேல். மகாத்மா காந்தி அதற்கு ஆசி கூறியதுடன் அதை அரசு செய்யாமல் மக்கள் ஒருங்கிணைத்து செய்ய வேண்டும் என்றார்.
அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்து, நிதி திரட்டி, புனரமைத்து இன்றுள்ள பிரம்மாண்டமான கோயிலை ஏற்படுத்தியவர் கே.எம்.முன்ஷி.
நாவலில் கூறியதை நடைமுறைப்படுத்தி வழிகாட்டிய வல்லவர் குலபதி முன்ஷி . அவர் இயற்றிய இலக்கியம் இது.
நூல் விவரம்:
ஜெய் ஸோம்நாத்!
-கே.எம்.முன்ஷி
விலை: ரூ. 300-
வெளியீடு: அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை
தொடர்புக்கு: +91 92892 81314
$$$