-திருநின்றவூர் ரவிக்குமார்
ஹிந்துத்துவம் என்றால் என்ன? நான்கு குருடர்கள் யானையை தடவிப் பார்த்த கதையாக இருக்கிறது, தமிழகத்தில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகளின் இது தொடர்பான புரிதல். அவர்களுக்காகவே வெளியாகியுள்ள சிறிய நூல் இது…

ஹிந்துத்துவம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். “5ஆயிரம் ஆண்டுகால நமது பாரம்பரியத்தின் பண்பாடே மதச்சார்பின்மைதான்” என்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி . இந்த மேற்கோளைக் காட்டுகிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்.
இங்கு குறிப்பிடத்தக்க , பொருத்தமான நிகழ்வு அது. அவருடைய நேரடி அனுபவம் மிகவும் சுவாரசியமானது.
மதம் மாறினால் தேசவிரோதிகளாகின்றனர்
பிரணாப் முகர்ஜி அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது முதன்முறையாக அவரைச் சந்திக்க இருந்தேன். அதற்கான அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது. ஆனால் சந்திப்புத் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் எட்டு நாட்கள் சிகிச்சை பெற்று அவர் திரும்பிய நிலையில் அனைத்து அப்பாயின்ட்மென்ட்களும் ரத்து செய்யப்பட்டன. எங்களது அப்பாயின்ட்மென்ட் ரத்து செய்யப்பட்டதா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக போன் செய்தோம். ஏனெனில் அன்றைய தினம் தில்லியில் எங்களுக்கு வேறு பணி இல்லை என்பதால், வேறு இடத்துக்குச் செல்லலாம்.
போன் செய்தபோது இதர அப்பாயின்ட்மென்ட்கள் எல்லாம் ரத்து செய்யப்பட்டிருந்தன. எங்களது அப்பாயின்ட்மென்ட் மாத்திரம் ரத்து செய்யப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் நாங்கள் சென்றோம்.
அப்போது நாடாளுமன்றத்தில் தாய்மதம் திரும்புதல் (கர் வாப்ஸி ) தொடர்பாக பலத்த அமளி நடந்து கொண்டிருந்தது. நாங்கள் மிகவும் தயார்படுத்திக் கொண்டு சென்றோம். கேள்வி எழுப்பினால் பதில் கூற வேண்டுமே என்பதற்காக. இந்த உரைக்கான தயாரிப்புகளை விட அதிக குறிப்புகளை தயார் படுத்திக் கொண்டு நான் சென்றேன். ஆனால் நாங்கள் பதில் சொல்வதற்கான தேவையின்றிப் போனது.
தொடக்கத்தில் பிரணாப் அவர்கள் எங்களை சிறிது திட்டினார். “அட, என்ன ஆளுங்கய்யா நீங்க ? நாலு பேரை இங்கே (நம்ம மதத்துக்கு) திரும்ப அழைச்சுட்டு வந்தீங்க. பிரஸ் கான்ஃபரன்ஸ் கொடுத்திருக்கீங்க. அதனால் அமளி. கடந்த 300 வருஷமா மிஷனரி இதைச் செஞ்சிட்டிருக்கு, யாரோட காதுலயும் இது விழல. ஆனா நீங்க ஒரே மூச்சா பிரஸ் கான்ஃபரன்ஸ் நடத்தி இருக்கீங்க. இப்போ விளைவைப் பாருங்க. எப்படிப்பட்ட அமளி நடக்குது. இதுதான் அரசியல். நானும் இப்ப, ஜனாதிபதியாக இல்லாமல், காங்கிரஸில் எம்.பி.யாக இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன்” என்றார்.
பின்னர் தன் குரலை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து அவர் கூறினார்… “ஆனா, உங்க ஆட்கள் மூலமா கர் வாப்ஸி நடைபெறாமல் போயிருந்தா, தேசத்தோட முப்பது சதவீத பழங்குடியினர்….” நான் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப்புரிந்து கொண்டேன். மகிழ்ச்சியோடு, “அவர்கள் எல்லாம் கிறிஸ்துவராகி யிருப்பார்கள் என்று சொல்ல வருகிறீர்கள்” என்றேன். ஆனால் அவரோ “தேச விரோதிகளாக மாறி இருப்பார்கள்” என்றார்.
“மதச்சார்பின்மை பற்றி நம் நாட்டுக்கு அமெரிக்கா அறிவுரை சொல்கிறது. உலகிலேயே நமது அரசமைப்பு சட்டம் தான் மிகவும் மதச்சார்பின்மை கொண்டது” என்றார். பிறகு ஒரு நொடி அமைதியாக இருந்துவிட்டு, “ஆனால் அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்துதான், நாம் மதச்சார்பற்றவர்கள் என்று அர்த்தமல்ல. நமது அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் அனைவரும் மதச்சார்பற்ற மனப்பான்மை கொண்டவர்கள். அதனால் தான் அரசமைப்பு சட்டம் இப்படி உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் மீண்டும் ஒரு நொடி நிதானித்து விட்டு, “நம் நாட்டில் மதச்சார்பற்ற மனப்பான்மை கொண்ட முதலாவது நபர்கள் அவர்கள் அல்ல. 5 ஆயிரம் ஆண்டுகால நமது பாரம்பரியத்தின் பண்பாடே மதசார்பின்மைதான்” என்றார்.
5 ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த நமது மதச்சார்பற்ற பாரம்பரியம் எது? அதனை முன்னே வைத்தால் உலகம் அதற்கு என்ன பெயர் வைக்கும் – ஹிந்து என்கிறார் டாக்டர் மோகன் பாகவத்!
‘தீண்டாமையை ஆதரிக்கிறது, சமூக சமத்துவத்துக்கு எதிரானது, பெண் உரிமையை மறுக்கிறது ஹிந்துத்துவம்’ என்கிறார்கள் திராவிட கட்சியினர். ஆனால், தீண்டாமையைத் தூக்கி எறி , வழிபாட்டு முறையில் வேற்றுமை, மொழி, உணவு, உடை, பழங்குடியினர் × மற்றவர்கள் என வேற்றுமைகளைக் களைவதைப் பற்றி ஆர் எஸ் எஸ் ஸின் அணுகுமுறை பற்றி கூறுகிறார் சுரேஷ் சோனி.
அவருடைய கட்டுரையில் இந்தியர்கள் பலரும் அறியாத , ஆனால் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவம் இது :
ஹிந்துத்துவமே ஒரே தீர்வு
குல்தீப் நய்யார் இங்கிலாந்தில் இந்திய தூதராக இருந்தார். அவர் தன்னுடைய அனுபவம் ஒன்றை எழுதியுள்ளார்.
சோவியத் ரஷ்யா உடைந்து போகும் நிலையில், அதன் அதிபராக இருந்த கோர்பச்சேவ் , ‘கிளாஸ்நோஸ்த்’, ‘ப்ரெஸ்தொரெய்கா’ ஆகிய இரண்டு கோட்பாடுகளைத் தொடங்கி யிருந்தார். அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுடிருந்தார். அவர் நாடு திரும்பிய பிறகு லண்டனில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விருந்து நிகழ்ச்சியில் சந்தித்தபோது தாட்சரிடம் உங்களது சுற்றுப்பயணம் எப்படி இருந்தது என்று நய்யார் கேட்டார். நன்றாக இருந்தது என்று அவர் பதில் அளித்தார். பேச்சுவார்த்தை எப்படி நடைபெற்றது என்று நய்யார் மீண்டும் கேட்டார் .
அதற்கு தாட்சர் கூறினார் : “கோர்ப்பச்சேவ் மிகவும் சோகமாகவும் மகிழ்ச்சியற்றவராகவும் இருந்தார். எதனால் இப்படி இருக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இங்குள்ள பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையே மிகுந்த கசப்பு நிலவுகிறது, கடுமையான மோதல் நிகழ்கிறது. ஆகவே அவர்களால் ஒன்றாக வாழ முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது என்று பதில் அளித்தார். அவர் கூறிய விதத்தைப் பார்த்தால் ரஷ்யா சிதறுண்டு போகும் என்றே எனக்கு தோன்றியது.”
குல்தீப் நய்யார் , தாட்சரிடம் கேட்டார்: “பிறகு நீங்கள் என்ன சொன்னீர்கள்?” “இப்படிப்பட்ட நேரத்தில், உங்கள் நட்பு நாடான இந்தியாவிடம் நீங்கள் ஏன் அறிவுரை கேட்கவில்லை? அந்நாடு இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக, பல்வேறு ஜாதிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகளைக் கொண்ட மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறதே? என்று கோர்பச்சேவிடம் கூறினேன்” என்று தாட்சர் தெரிவித்தார்.
தாட்சர் இவ்வாறு பதிலளித்தது தன்னை அறியாமலேயே தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக குல்தீப் நய்யார் எழுதியுள்ளார்.
ரஷ்யாவில் 15 சமூகக் குழுக்களை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. அவர்கள் பிரிந்து சென்றனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது அவர்கள் இந்தியா- பாகிஸ்தான் என்று இரண்டாக பிரித்து விட்டுச் சென்றார்கள் என்று நாம் நினைக்கிறோம். இதற்கும் மேல் மூன்றாவது விஷயமும் இருந்தது.
அப்போது இங்கே 565 சமஸ்தானங்கள் (சிற்றரசுகள்) இருந்தன. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று அந்த சமஸ்தானங்களை அவர்கள் விருப்பத்திற்கு ஆங்கிலேயர்கள் (தூண்டி) விட்டுச் சென்றனர். ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.
அரசமைப்பு சட்டத்தில் ஹிந்துத்துவம்
அரசியல் சாசனத்துக்கு ஹிந்துத்துவத்தால் ஆபத்து என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். டாக்டர் அம்பேத்கர் வடிவமைத்துள்ள அரசியல் சாசனத்தில் ஹிந்துத்துவத்தின் ஆன்மா உள்ளது என்கிறார் அருண்குமார்.
ஆர் எஸ் எஸ் ஊழியர்கள் களத்தில் தங்களுக்கு எதிரானவர்களின் வாதங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி நடைமுறை சார்ந்து விளக்கியுள்ளார்.
மேற்சொன்ன மூவரும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள். அவர்கள் ஹிந்துத்துவத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப விளக்குகிறார்கள். வெவ்வேறு நிகழ்வுகளில் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு இந்நூல்.
நூல் விவரம்:
தற்கால சூழலில் ஹிந்துத்துவ தெளிவுரை
-டாக்டர் மோகன் பாகவத், சுரேஷ் சோனி, அருண்குமார்
தமிழில்: பத்மன்
வெளியீடு:
விஜயபாரதம் பிரசுரம்,
சேத்துப்பட்டு, சென்னை- 31
விலை: ரூ. 100 /-
தொடர்புக்கு: + 91 89391 49466
$$$