-ரெங்கையா முருகன்
கோவையைச் சார்ந்த அமரர் திரு. சி.கே.சுப்பிரமணிய முதலியார் சைவம் போற்றிய சான்றோர். அவர் 1953ஆம் ஆண்டு கண்ட ஓர் அருங்கனவு, இன்று (2006-இல்) மற்றோர் ஆன்மிகப் பெரியாரால் நனவாகி இருக்கிறது. அதுகுறித்த இனிய கட்டுரை இது....

சென்னை, செங்குன்றம் தாண்டி சைவக் குரவர் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் இல்லக் கிழத்தியரான சங்கிலி நாச்சியார் பிறந்த இடமான ஞாயிறு கிராம சிவன் கோவிலுக்கு அடிக்கடி செல்வேன்.
பெரம்பூரில் கண்கண்ணாடி கடை நடத்தி வந்த சைவ திருவாளர் திரு. கஜேந்திரன் அவர்கள் 1990களில் சிவன் கோவில் கேட்பாரற்று பாழடைந்த நிலையில் இவரது தளராத முயற்சியின் விளைவாக ஞாயிறு சிவன் கோவில் இன்று புத்தம் புது வடிவில் புணரமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் வழிபடும் தலமாக மாறியிருக்கிறது.
1990 களில் ஞாயிறு கிராமம் சிவன்கோவில் சம்பந்தமாக சென்னை முழுவதும் உள்ள பழைய நூலகங்களுக்கு சென்று குறிப்புகள், புத்தகங்களைத் தேடி அலைந்து திரிந்தவர் திரு. கஜேந்திரன் அவர்கள். 1995 வாக்கில் சென்னை லிங்கி செட்டி தெருவில் அமைந்துள்ள மறைமலை அடிகள் நூலகத்தில் அடியேன் உதவி நூலகராகப் பணி புரிந்த காலம்.
கஜேந்திரன் அய்யா வந்து குறிப்பாக சி.கே.சுப்பிரமணிய முதலியார் எழுதிப் பதிப்பித்த பெரியபுராணப் பதிப்பை எங்கெங்கோ தேடி அலைந்து துவண்டுவிடுகிறார்.
இறுதியாக 1995 ஆம் ஆண்டு வாக்கில் மறைமலை அடிகள் நூலகத்தில் வந்து நூலகராகிய என்னிடம் அணுகி சி.கே.எஸ். பெரியபுராணப் பதிப்பை தேடி அலைந்த கதையை என்னிடம் விசனமுற்று கூறிய பிறகு இந்த நூலகத்தில் இருக்கிறதா என்று என்னிடம் புத்தகம் குறித்து விசாரித்தார்.


திரு. கஜேந்திரன் அவர்களது தோற்றம் இவர் பெரியபுராணத்தை படிக்கக் கூடியவரா என்று சந்தேகம் ஒரு பக்கம் தோன்றிய அளவிலான சாதாரண ஆளுமையாகவே எனக்கு தோற்றம் அளித்தார். ஏனென்றால் பெரிய படிப்பாளியும் கிடையாது இவர். இருந்த போதிலும் சிவக்கவிமணியின் பெரியபுராண பதிப்பைத் தேடி பல நூலகங்களுக்குச் சென்று தேடி அலைந்து ஓய்ந்து வருபவரை நாமும் ஏமாற்றி விடக்கூடாது என்றெண்ணி கேட்டமாத்திரத்தில் புத்தகத்தை எடுத்து குறிப்பாக அவர் பல வருடங்களாக தேடும் சங்கிலி நாச்சியார் குறித்த குறிப்பை காட்டியவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
இவரது தேடலுக்கு மூலப்புள்ளி இட்டவர் பண்டிதர் நடேசனார். திரு.நடேசனாரின் வழிகாட்டுதலின் பேரில் சிவக்கவிமணி சி.கே.எஸ். பதிப்பித்த பெரியபுராண உரையை கண்டடைந்தார். அந்த நூலில் குறிப்பிட்டுள்ள படி சங்கிலி நாச்சியார் அவதரித்த இடத்தை குறிக்கும் விதமாக ”ஏயர்கோன் கலிக்காம நாயனார்” புராணப்பகுதியில் கீழ்க்கண்ட செய்யுள் 3361 ம் பாடலில் சங்கிலி நாச்சியார் பிறந்த ஞாயிறு இடம் பெறுகிறது.
“நாலாங் குலத்திற் பெருகுநல முடையார் வாழு ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திருஞா யிறுகிழவர்
பாலா தரவு தருமகளா ராகிப் பார்மே லவதரித்தார்
ஆலா லஞ்சேர் கறைமிடற்றா ரருளான் முன்னை யநிந்தையார்’’
சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் இந்த ஞாயிறு தலத்தினை குறிப்பிடுகையில் ஞாயிறுகிழாரின் திருமகளாக அவதரித்த சங்கிலிநாச்சியார் திருவொற்றியூரை அடைந்து கன்னிமாடத்தில் தங்கி பூத்திருப்பணி செய்து நம்பியாரூரார் என்றழைக்கப்படும் ஆளுடையபிள்ளை சுந்தரரை மணந்து கொண்ட வரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

சிவக்கவிமணி அவர்கள் 01.02.1953 ஆம் ஆண்டு பதிப்பித்த போது சங்கிலி நாச்சியார் பற்றி ஒரு குறிப்பு கீழ்க்கண்டவாறு தருகிறார்….
சங்கிலி நாச்சியார் ஞாயிறு கிராமத்தில் பிறந்த திருமனை ஞாயிறுகிழார் மனை என்று வழங்கி வருகிறது. அதற்கான அடையாளங்கள் இரண்யேசுவரர் கோவிலுக்கு வடகிழக்கில் இருக்கிறது. இந்த வம்சத்தார் முருகேச முதலியார் காலம் வரை குடியிருந்து பின்னர் அண்மைக் காலத்தில் முகமதியர் ஒருவருக்கு அந்த இடத்தை விற்று விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்தனர். இந்த மனையை மீண்டும் மீட்டெடுத்து, சைவர்கள் வணங்கும் திருமடமாக அமைத்து பாதுகாத்து வழிபடுவது சைவமக்களின் பெருங்கடமை.
இந்தச் செய்தி 1953 ஆம் ஆண்டு வெளியான பெரியபுராணம் பதிப்பில் இடம் பெற்றுள்ளது.
இச் செய்தியை அறிந்த பண்டிதர் நடேசனார் இந்த மனைநிலத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் 1960 களில் முற்பட்டு தோல்வி அடைகிறார். அதன் தொடர்ச்சியாக பண்டிதர் நடேசனார் மூலமாக விசயத்தை அறிந்த சீடர் திரு. கஜேந்திரன் அவர்கள் அடுத்த 40 வருடங்களுக்குப் பிறகு சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் பதிப்பித்த திருத்தொண்டர் புராண பதிப்பு மூலம் மனைநிலத்தை கண்டறிந்து திருமனையை சாத்தியமாக்கி 2006 ஆம் ஆண்டு சங்கிலி நாச்சியாருக்கு திருமடம் எழுப்பி குடமுழுக்கு நடைபெற்றது.

இப் பதிப்புக் குறிப்புகள் மூலம் 2006ஆம் வருட வாக்கில் சங்கிலி நாச்சியாருக்கு நினைவைப் போற்றும் வகையில் கோவில் எழுப்பி வரலாற்றை மீட்டெடுக்க உதவியது சி.கே. சுப்பிரமணிய முதலியார் பதிப்பித்த பெரியபுராண உரை என்றால் மிகையாகாது.
தமிழ் கலாச்சாரத்தில் விருந்தில் இடம் பெறும் தலைவாழை இலை மிக முக்கியமானது. “ஈர்வாய் வலம்பெற மரபின் வைத்தார் (அப்பூதி அடிகள் புராணம் பாடல் வரி.32) சாப்பிடக்கூடிய இலை போடும் மரபு உட்பட சின்ன சின்ன தமிழ் பண்பாட்டு விசயங்கள் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் கையாண்டிருப்பார்.
இயற்பகை நாயனார் புராணத்தில் “பழிவிட நீ போ” என்ற இடத்தில் தனி மனிதன், குடிமக்கள், குடி மரபு, மனைவி, மனைவியார் குடி, சுற்றத்தார், ஆகியோருடைய அறத்திற்கு ஏற்படக் கூடிய பல்வேறு பழிகள் குறித்து விளக்கியிருப்பார்.
தமிழ் நாட்டுக்கென நில பரப்பு (Tamil Landscape), பண்பாடு , திணை வாழ்க்கை, திணைமயக்கம்,பழக்க வழக்கங்கள், குலமரபு பண்புகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் நூலாக பெரியபுராணம் இருப்பதால் சி.கே. சுப்பிரமணிய முதலியாரை இந்த நூல் அவரது வாழ்நாள் பணியாக பதிப்பிக்கும் அளவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தி விடுகிறது.
பெரிய புராணத்தின் மீதான ஈர்ப்பு 1894 ம் ஆண்டு அவரது ஆசிரியர் பண்டிதர் திருசிற்றம்பலம் பிள்ளை மூலமாக முதலில் கவனம் பெறுகிறார். அதனைத் தொடர்ந்து பல பெரியபுராண பிரசங்கங்களை கேட்கிறார்.
பின்பு முறையாக 1894 ம் ஆண்டு முதல் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்தும் வாசித்து மனனம் செய்கிறார்.
இதற்கிடையே சைவத் திருத் தொண்டர் கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் கோவையில் பேரூர் சாந்தலிங்க சுவாமிகள் மடத்தார் மூலமாக 1919 முதல் 1922ம் ஆண்டு வரை நாள்தோறும் பெரிய புராணம் பிரசங்கம் நடைபெற்றது.
இப்பிரசங்கம் 1922 அக்டோபர் மாதம் 11ம் தேதி நிறைவேறும் நாளில் யானை மீது பெரியபுராண ஏட்டை வைத்து நகர்வலம் வந்து பெரிய விழாவாக கொண்டாடி சிறப்பு செய்தனர்.
அப்பிரசங்கத்தின் போது சி.கே. சுப்பிரமணிய முதலியார் எவ்வித முன்னேற்பாடின்றி பிரசங்கத்தின் போது குறிப்பிடும் அரிய குறிப்புகளை மனம் கொண்ட அளவில் குறித்து கொண்டே வந்தார்.
கயப்பாக்கம் சதாசிவசெட்டியார் பெ.பு. உரை நிகழ்த்திய பிறகும் கூட 12 ஆண்டுகள் நேரம் வாய்க்கும் போதெல்லாம் பெ.பு. குறிப்புகளை எழுதிக் கொண்டு வந்தார்.
சென்னை பல்கலையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சேக்கிழார் குறித்து மூன்று நாள் உரை நிகழ்த்தி இவரது ஒப்புதலுடன் சேக்கிழார் என்ற நூல் பல்கலை கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
மக்கள் நல்ல வாழ்வு வாழவேண்டுமாயின் அதற்கு பெரியபுராணம் எல்லாவிதத்திலும் உதவும் என்று அசையாத நம்பிக்கை உண்டாயிற்று.
சிதம்பரம் ஆனி உத்திர திருவிழாவில் ஆறுமுக நாவலர் சேக்கிழார் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது உடன் கேட்டுக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் திரு. கனகராயர் நமது நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டுமானால் பெரியபுராணத்தை நன்கு படிக்க வேண்டும் என்று சி.கே.எஸ். அவர்களிடம் அறிவுறித்தினார்.
பெரிய புராணத்திற்கு உரை எழுத வேண்டிய தருணம் சென்னை பல்கலையின் உரைக்குப் பின்பாக மலர்ந்து விட்டது. பல்வேறு பெ.பு. ஏடுகளை தேட ஆரம்பித்தார்.
சிதம்பரம் உலகமூர்த்தி தேசிக மடத்தின் மிகப் பழைய ஏட்டுப் பிரதியை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ கணபதி முத்து கற்பக குருக்களையா மூலமாக பெற்றுக் கொண்டார்.

திருவாவடுதுறை மடப் பிரதி, தருமபுர ஆதின மடப் பிரதி, சாத்தூர் டி. எஸ். கந்தசாமி முதலியார், டி.கே. சிதம்பரமுதலியார் மற்றும் வையாபுரி பிள்ளை போன்றோர் பெரிய புராண ஏட்டுப் பிரதிகளை தந்து உதவினர்.
ஆக 12 பழைய ஏட்டுப் பிரதிகள், மூலப்பிரதிகள் பதிப்புகளான வித்வான் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் (1859 & இரண்டாம் பதிப்பு 1879), சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை பதிப்பு (1879), ஆறுமுக நாவலர் பதிப்பு (1884), உரைப் பிரதிகள் மகாலிங்கையர் பொழிப்புரை, ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் உரை, சுப்பராயலு நாயகர் உரை, காஞ்சி ஆலால சுந்தரம் பிள்ளை அவர்களின் முதல் மூன்று சருக்கங்கள், உரை கையெழுத்துக் குறிப்புகள் கயப்பாக்கம் சதாசிவ செட்டியார், இராமநாத செட்டியார் போன்ற மூல ஆதாரங்களினை திரட்டி தனது பதிப்பு வேலைக்கு பயன்படுத்திக் கொண்டார்.
முதன் முறையாக பழைய ஏட்டுப் பிரதிகளைக் கொண்டும், பதிப்புப் பிரதிகளைக் கொண்டும் பல்வேறு நாயன்மார்களின் தக்க தலங்களுக்கு தேவைப்படுமெனில் நேரடியாக கள ஆய்வும் செய்கிறார்.
கள ஆய்வுகள் மூலம் கிடைத்த கர்ண பரம்பரை செய்திகள், கல்வெட்டு செய்திகள், இலக்கிய செய்திகளுடன் ஒப்பிட்டு பார்த்தல், தரவுகளினை ஒத்துப் பார்த்து இயன்ற வரை தமிழ் நூல்களிலிருந்தே மேற்கோள்களினை கையாண்டார்.
அதற்காக முன்னோர்களுடைய தேவார பாடல் பெற்ற வழித் தடங்களின் தலக் குறிப்புக்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திரங்கள், திருக்குறள், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், சைவபுராணங்கள் ஆகிய சைவ மரபு தமிழ் நூல்களிலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டியதிலிருந்து வேதத்திற்கு வேதமே பிரமாணம் என்பதை நிறுவுவதற்கு தமிழ் வேதமே என்பதையும் நிறுவ முயன்றார்.
சில நாயன்மார்களின் புராணங்கள் அறிவுக்கு ஒத்து வராதவைகளினை கற்பனை என்றும் துணிந்து கூறுவார். அதே சமயம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுக்கு உட்பட்ட செய்திகளை முடிந்த வரை தன்னுடைய ஆராய்ச்சிக் குறிப்புக்களை கொடுத்து தூண்டியும் விடுகிறார்.
உரைத் தொகுப்பில் பாட்டுக்களை பதம் பிரித்து பொழிப்புரை செய்து, அதற்கென விளக்கவுரை தந்துள்ளார்.
விளக்க உரையில் சொல்லாக்கம், சொற்குறிப்பு,இலக்கண குறிப்பு, சாத்திரக் குறிப்பு, முன் பின் தொடர்பு மேற்கோள்கள், எளிதில் பக்கங்களுக்குப் போக அருஞ்சொற்பொருள் அகராதி ,முக்கியமாக நாயன்மார்களுடைய தலங்களின் சிலை புடைப்புகளின் படிமங்களை புகைப்பட கேமரா மூலம் ( புகைப்பட கேமரா அரிதான காலம்) படம் பிடித்து அச்சிட்டு வெளியிட்டார் என்பது மிகவும் முக்கியமானது.
இதற்காக அன்றைய கால சென்னை போட்டோ எம்போரியம் நிறுவனத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
பெரிய புராணத்தின் 17000 பாடல் வரிகளிக்கு ஆறு தொகுதிகளாக 17000 பக்கங்களுக்கு மேல் நல்ல காகிதத்தில் ராயல் சைசில் மிகச் சிறந்த பதிப்பாக வருவதற்கு சுமார் 24 வருடங்களுக்கு மேலான உழைப்பை செலுத்தியவர். நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.
பெரியபுராண பதிப்புக்காக அச்சுப் பணிகளுக்காக மட்டுமே சுமார் 19 ஆண்டு காலமாக நீடித்தது.
இப் பதிப்பில் வெளியான திரு உருவப் படிமங்கள் புகைப் படங்களாக எடுக்க உதவி புரிந்த பெருமக்களையும் குறிப்பிட்டுள்ளார். டி.பி. கிருஷ்ணசாமி முதலியார், துடிசை கிழார் அ.சிதம்பரனார், டி. எஸ். மீனாட்சி சுந்தர முதலியார், போன்றோர் இதில் அடங்குவர்.
முதற் பதிப்பு தில்லை சிதம்பரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் சேக்கிழார் சுவாமிகள் திரு நட்சத்திரத்தில் 05-06.1935 வெளியிடப் பெற்றது.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை பெரியபுராண உரை பதிப்புக்காகவே செலவழித்தவர்.
சென்னை சர்வகலாசாலை செனட் சபையிலும், அகெடெமிக் கவுன்சில் சபையிலும், பாடத்திட்ட குழுவிலும் இவர் அங்கம் வகித்த காலத்தில் கீழ் நிலையில் வைத்து தமிழை பேசிய காலத்தில் தமிழுக்கு சிறப்பு நிலை வகிக்க குரல் கொடுத்தவர். தமிழ் ஆசிரியர்களுக்கு கீழ் நிலை சம்பளம் அளிக்கப் பட்ட போது அவற்றை நீக்க தொடர்ந்து குரல் எழுப்பியவர்.
கேரளாவில் திருமுறை முடியும் இடமான திருவஞ்சைகளம் என்ற இடத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமான் பெருமாளுடன் குதிரை ஏறி சென்ற சிற்ப படிமங்களை புடைப்புச் சிற்பங்களாக கண்டடைந்தார். மேலும் அக் கோவில் பீடத்தில் “திருவஞ்சைக்களம் சபாபதி” என தமிழில் எழுதியதை கண்டறிந்து வெளி உலகுக்கு கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் ஆடிமாதம் சுவாதி திருநாளில் வருடந்தோறும் விசேச வழிபாடு நடத்த கேரளா அரசின் அறநிலையத் துறை மூலம் ஏற்பாடு செய்ய பெரும் பாடு பட்டவர்.
கோவை சிறையில் தியாகச் செம்மல் வ.உ.சிதம்பரனார் சிறையில் துன்புற்ற காலத்தில் பல பெரும் உதவிகளைச் செய்தவர். இதற்காக வ.உ.சிதம்பரனார் சிறையிலிருந்து விடுதலை அடைந்து வெளியே வந்ததும் முதன் முதலாக சி.கே.எஸ்.யை கண்டு தனது நன்றியை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் வ.உ.சி. தனது மகனுக்கும் சுப்பிரமணியன் பெயர் வைத்து தனது செய்நன்றியறிதலை காட்டினார்.
சமீபத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தியாகிகள் பிறந்த நிலத்தில் இந்தியா முழுமையும் மண் எடுத்து சேகரித்தனர். அந்த வகையில் பெரியவர் வ.உ.சி. கோவைச் சிறையில் இருந்த போதும், சிறையை விட்டு வெளிவந்த வேளையில் பெரியவர் வ.உ.சி. நன்றி உரைக்கச் சென்ற வீடாகிய சி.கே. சுப்பிரமணிய முதலியார் வீட்டிலும் மண் எடுக்கப்பட்டது என்றால் இதற்கு மேல் என்ன சிறப்பு இருக்கப் போகிறது!
1953 இல் பதிப்பித்த போது சிவக்கவிமணி வரும் காலத்தில் யாராவது சைவ அன்பர் ஞாயிறு கிராமத்தில் சங்கிலிநாச்சியார் திருமனையை மீட்டெடுப்பார் என்றெண்ணியே அக்குறிப்பினை அளித்திருப்பார் போலும்.
ஆனால் உண்மையில் பெரியவர் வாக்கும் கனவும் பலிக்கும் என்பதற்கு சாட்சியாக திரு. கஜேந்திரன் அவர்கள் எங்கிருந்தோ வாராது வந்த மாமணியாக வந்து ,சிவக்கவிமணியின் பதிப்பாகிய பெரியபுராணத்தில் குறிப்பிட்டபடி சங்கிலி நாச்சியார் திருமனையைக் கண்டறிந்து, அறக்கட்டளையை நியமித்து பொறுப்பாக அந்த மனைநிலத்தை உரிய முறையில் நில உரிமையாளரிடம் பேசி விலைக்கு வாங்கி அதே இடத்தில் திருமடம் கட்டப்பட்டு 2006 ம் ஆண்டில் நிறைவேறியது.
ஆனால் திரு. கஜேந்திரன் அய்யா அவர்களுக்கு சிவக்கவிமணி குடும்பத்தார் உறவு தெரியாமல் போயிருந்தாலும் அவரது மறைவுக்குப் பிறகு சிவக்கவிமணி அய்யா குடும்பத்தார் கஜேந்திரன் அய்யா அவர்களது குடும்பத்தை என் மூலம் அணுகி, தொடர்பு கொண்டு சிவக்கவிமணியின் கனவாக இருந்த சங்கிலி நாச்சியார் திருமடம் எழுப்பிய கதையை அறிகின்றனர்.
அறிந்ததோடல்லாமல் சிவக்கவிமணியின் வம்சாவளியினரான அய்யா க. சிவசுப்பிரமணியன் அவர்களால் தற்போது மீள்பதிப்பாகியிருக்கும் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் ( 6ஆம் பகுதி – வம்பறா வரிவண்டு சருக்கம் 3ஆம் பாகம் – ஏயர்கோன் கலிக்காம நாயனார் உரை) சங்கிலி நாச்சியார் குறித்த குறிப்புப் பகுதியில் சைவத் திருவாளர் கஜேந்திரன் அய்யா எடுத்த முயற்சியை எடுத்துக்காட்டி, பாராட்டி அக்குடும்பத்தினருக்கும் , அணில் போல் உதவி செய்த அடியேனுக்கும் நன்றி தெரிவித்து சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் பெரியபுராண மலை போன்ற படைப்பில் எனது பெயரும் இடம் பெற்றமைக்கு யாம் என்ன தவம் செய்தேனோ!
- இன்று (பிப். 20) சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் பிறந்த நாள்.
$$$