மும்மொழியும் தமிழக அரசும்

-ஹெச்.ராஜா, துக்ளக் சத்யா

தேசிய கல்விக் கொள்கை பற்றி தமிழகத்தில் தவறான கற்பிதங்களின் அடிப்படையில் ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் உணர்ச்சி அலைகள் தூண்டிவிடப்படுகின்றன. இந்நிலையில் இது தொடர்பான சில பதிவுகளை நமது தளம் இங்கே பதிவு செய்கிறது…

1. அந்தர் பல்டி என்பது இதுதானோ?

-ஹெச்.ராஜா

    திமுக சார்பில் நேற்றைய தினம் (பிப். 18) ஒரு செய்தி ஊடகங்கள் முலமாக வெளியிடப்பட்டது. 

    அதாவது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் என்று… 

    ஏற்கனவே தமிழகத்தில் திமுக மற்றும் அவர்களுடைய கூட்டணி கட்சியினர் நடத்தி வரும் மும்மொழி கல்வி போதிக்கும் CBSE பள்ளிகளின் பட்டியலை நாம் ஏற்கனவே இரண்டு முறை வெளியிட்டிருந்தோம் அதை மீண்டும் நேற்றைய தினம் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு திமுகவின் மொழி அரசியல் நாடகத்தை அம்பலப்படுத்தினர். 

    மேலும் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் மகன் “நான் பிரெஞ்ச் மொழி கல்வி கற்கிறேன்” என தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக வெளியாகி திமுகவின் சாயம் வெளுத்தது. 

    மேலும் உருது மொழிக்கு ஆதரவாக கடந்த காலங்களில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவித்த ஆதரவு வாக்குறுதிச் செய்தியை நாம் பதிவு செய்தோம், பலரும் அந்தச் செய்தியை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து தமிழக மக்களுக்கு திமுகவின் மொழி நாடக அரசியலை நினைவுபடுத்தினர்.

    மேலும் சத்தமே இல்லாமல் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி கற்பிக்க அந்நாட்டு அரசின் தூதரக பிரதிநிதிகளுடன் கடந்த ஆண்டு சென்னை மாநகர மேயர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட செய்தி பத்திரிக்கை ஒன்றில் 28.08.2024 அன்று வெளியாகி இருந்ததையும் வெளியிட்டிருந்தோம். 

    திமுகவினர் ஹிந்தி மொழிக்கு எதிராகவோ அல்லது மும்மொழி கொள்கைக்கு எதிராகவோ போராடுவதாக இருந்தால் அதை வேளச்சேரி சன்ஷைன் மாண்டிசோரி பள்ளியில் தொடங்கி தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நடத்தி CBSE பள்ளிகள் முன்பு தான் நடத்த வேண்டுமென நாம் ஏற்கனவே பலமுறை கூறி இருக்கிறோம். 

    அதன் விளைவாக நேற்று மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் என செய்தி வெளியிட்டிருந்த திமுக திடீரென அந்தர்பல்டி அடித்து…  “கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்” என்று இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது. 

    இதிலிருந்தே திமுகவின் தகிடு தத்தங்களை, பொய் பித்தலாட்டங்களை தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை மறுக்கிறது என்கிற திமுகவின் குற்றச்சாட்டு பொய்யானது. 

    PM SHRI எனப்படும் Pratan Mantri School For Rising India திட்டத்தில் மும்மொழி கல்வி பயிற்றுவிப்பதற்கான மூன்றாவது மொழிக்கான பாடத்திட்டம் உருவாக்குதல், அதற்கான புத்தகங்கள் அச்சிடுதல், அதற்கான ஆசியர்களை நியமித்தல். (அதில் 30 ℅ பேர் பெண் ஆசிரியர்கள்) அவர்களுக்கு ஊதியம் வழங்குதல், பள்ளிகளில் ஆராய்ச்சி மையம் உருவாக்குதல், இணையதள உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்,  விளையாட்டு மையம், சுத்தரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்குதல், ஸ்மார்ட் வகுப்பறைகள் என உள்ளிட்ட அதிநவீன உள்கட்டமைப்பு விஷயங்களுக்காக வழங்கும் நிதியை மேற்குறிப்பிட்ட எந்த விஷயங்களையும் தமிழக அரசு இதுவரை செய்யாத போது அதற்கான நிதியை மட்டும் கோரும் நிலையில் விதிமுறைகளை மீறி எப்படி நிதி வழங்க முடியும் என்று தான் மத்திய அரசு கேள்வி எழுப்புகிறது. 

    மேலும் PM SHRI திட்டத்தில் தமிழக அரசு சேருவதற்கான இசைவு தெரிவித்து அதற்கான உள்கட்டமைப்பு விஷயங்களை செய்வதற்கு முன்றாவது மற்றும் நான்காவது தவணை நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரி தமிழக அரசின் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்த திரு.ஷிவதாஸ் மீனா IAS அவர்கள் மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் திரு.சஞ்சய் குமார் IAS அவர்களுக்கு 15.03.2024 தேதியிட்டு எழுதியுள்ள கடிதம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியானதை அனைவரும் பார்த்திருப்போம். அப்படி எனில் ஏற்கனவே இரண்டு தவணைகளாக PM SHRI திட்டத்திற்கான நிதியை தமிழக அரசு பெற்றது உறுதியாகிறது. மேலும் அந்த நிதியை நேர்மையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்வி வளர்ச்சிக்காக, மாணவர்கள் நலனுக்காக பயன்படுத்தாத காரணத்தாலும் அந்த திட்டத்தை இதுவரை செயல்படுத்தாத காரணத்தாலும் தான் நிதி மறுக்கப்படுகிறது என்பதே உண்மை.

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்களை மட்டுமே பேசி மக்களை ஏமாற்றி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் ஆபத்தான அரசியல் கட்சி தானே திமுக. 

    • திரு. ஹெச்.ராஜா, தமிழக பாஜகவின் மூத்த தலைவர். இது அவரது முகநூல் பதிவு.

    $$$

    2. புரியாமல் குழப்பும் அறிவிலிகள்

    -துக்ளக் சத்யா

    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசியல் கட்சிகள் சரியாகப் புரிந்து கொண்டுள்ளனவா இல்லையா என்றே தெரியவில்லை. புரியாதவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் , முதலில் கட்டாயமாக அந்த மாநில மொழி, அடுத்து ஆங்கிலம், மூன்றாவதாக வேறு ஏதாவது ஒரு இந்திய மொழி-என்பதுதான் மும்மொழிக்கான விளக்கம். இதில் ஹிந்தி படித்தாக வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.

    தமிழகத்தில் வேறு மாநில மொழி பேசும் மக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்கள் தமிழ், ஆங்கிலத்தோடு மூன்றாவது மொழியாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி என்று விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து கற்கலாம். இந்த வாய்ப்பு வழங்கப்படுவதில் என்ன தவறு? தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற திராவிட மொழிகளைக் கூட கற்க விட மாட்டோம் என்பது என்ன கொள்கை?

    பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழ் குடும்பக் குழந்தைகள் மூன்றாவது மொழியாக தமிழைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியும். இது தமிழ் பரவுவதற்கு உதவத்தானே செய்கிறது? மும்மொழி திட்டம் எதிர்க்கப்பட்டால், அங்குள்ள நம் குழந்தைகள் தமிழ் கற்கும் வாய்ப்பு பறி போய் விடாதா?

    “பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதாக ஒப்புக்கொண்டு சென்ற ஆண்டு அதற்கான நிதியும் பெறப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் திட்டத்தை அமல்படுத்தவில்லை. பிறகு எப்படி நிதி தருவது?” என்கிறது மத்திய அரசு.

    மற்ற மாநில அரசுகள் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நிதியும் பெற்றுள்ளன. தமிழக அரசோ “திட்டம் வேண்டாம். நிதி மட்டும் கொடுங்கள்” என்கிறது.

    திட்டத்துக்குத் தானே நிதி? திட்டத்தை அமல்படுத்தாமல் நிதி எப்படி தருவது என்பது மத்திய அரசின் வாதம்.

    இதில் ப்ளாக் மெயில், தடித்தனம், திமிர்த்தனம் என்ற வசவுகளுக்கு என்ன அவசியம் இருக்கிறது என்று நமக்குப் புரியவில்லை.

    ஹிந்தி எதிர்ப்பு என்பதே இன்று காலத்துக்குப் பொருந்தாத கொள்கை. அதனால் ஹிந்தி கற்க விரும்புபவர்கள் கற்கட்டும். விரும்பாதவர்கள் வேறு ஏதாவது ஒரு மொழியைக் கற்கட்டும். இலவசமாக ஏழைக் குழந்தைகளுக்கு தரப்படும் இந்த மூன்றாவது மொழியறிவை ஏன் தடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.

    இந்த நிதி வந்தால்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியும் என்ற வாதம் சரியானதா என்றும் தெரியவில்லை. இத்திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை அவர்களுக்கு எந்த நிதியிலிருந்து சம்பளம் தரப்பட்டது என்று யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

    மும்மொழி திட்டத்தை ஏற்றால், பல மாணவர்கள் ஹிந்தியை மூன்றாவது மொழியாக ஏற்கும்போது ஹிந்தி நுழைந்து விடும் என்பது எதிர்ப்பாளர்களின் அச்சம். ஏற்கெனவே தனியார் பள்ளிகளின் மூலம் ஹிந்தி எப்போதோ நுழைந்து விட்டது. இனிமேல் நுழைவதற்கு என்ன இருக்கிறது? ஹிந்தியை அனுமதித்தால் அது தமிழையும் ஆங்கிலத்தையும் விரட்டி விடும் என்றால், தமிழ், ஆங்கிலத்தை விட ஹிந்தி வலிமையான மொழி என்றாகி விடாதா?

    தேவையற்ற மோதலைத் தவிர்த்து, கொடுக்கிற நிதியைப் பெற்றுக் கொண்டு திட்டத்தை அமல்படுத்துவதே சாதுர்யமான அணுகுமுறை.

    இதற்கு மேல் என்ன சொல்வது?

    • திரு. துக்ளக் சத்யா பத்திரிகையாளர். இது அவரது முகநூல் பதிவு.

    $$$

    Leave a comment