-வ.மு.முரளி
பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-6 (இறுதிப் பகுதி)

ஜன. 9 ஆம் தேதி இரவு முழுவதும் எனது தந்தை கை, கால்களை உதறியபடியே இருந்தார். அம்மா உறங்காமல் அருகிலேயே அமர்ந்திருந்தார்.
மறுநாள் காலையில் இதுதொடர்பாக டாக்டரிடம் கூறினேன். அதற்கு கூடுதலாக ஒரு மருந்தை திங்கட்கிழமையில் இருந்து கொடுக்கலாம் என்றார்.
சில நாட்களுக்கு முன் எனது தாயிடம் மூக்குக் கண்ணாடியை அப்பா கேட்டார். அதைக் கொண்டு வந்தவுடன் அதை அறிவிக்குமாறு கூறினார். கண்ணாடி அணிந்துகொண்டு குழந்தை போல காட்சி அளித்தார் அவர். அதுபற்றி டாக்டரிடம் கூறியபோது, மீண்டும் கண்ணாடி அணிந்து கொண்டு, குழந்தை போல சிரித்தார். இதுபோன்ற நிகழ்வுகளால் எங்கள் நம்பிக்கை வலுப் பெற்றிருந்த நிலையில், அவரது பின்னடைவு ஏமாற்றம் அளித்தது.
இதனிடையே , கால்களை தூக்கிச் தூக்கி அடித்ததால் சிறுநீர்க் குழாய் கழன்று விட்டது. ஏஎம்சி மருத்துவமனையில் இருந்து நர்ஸ் ஒருவர் வந்து புதிய குழாயைப் பொருத்திச் சென்றார்.
இந்நிலையில் அவருக்கு 10ஆம் தேதி இரவு திடீரென காய்ச்சல் வந்தது. 104.6° F காய்ச்சல். அதற்கு மாத்திரை கொடுத்ததும், அரைமணி நேரத்தில் குப்பென வியர்த்து, உடல் முழுவதும் நனைந்து விட்டது. அதைத் தொடர்ந்து 11ஆம் தேதி அவரது சிறுநீர் வெளியேற்றம் குறைந்தது. அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். தூங்கவே இல்லை.
டாக்டர் அறிவுரைப்படி பார்லி வடிநீர் மூன்று முறை கொடுத்தும் சிறுநீர் குறைவாகவே வெளிவந்தது. காலை முதல் இரவு 7.00 மணிவரை அவர் குறைந்த பட்சம் 1500 மிலி சிறுநீர் கழித்திருக்க வேண்டும். ஆனால் 300 மிலி மட்டுமே வெளியானது. அதுவும் அடர் பழுப்பு நிறத்தில் இருந்தது.
மாலை தங்கையின் குடும்பம் வந்தது. தங்கையின் கணவர் எனது அப்பாவின் கரங்களை வருடியபடி இருந்தார். சிறிது நேரத்தில் தந்தை தூங்கிவிட்டார்.
இரவு 9.30 மணியளவில் அவரது முகத்தில் மாற்றம் தெரிந்தது. அவரது பார்வை ஒரே இடத்தில் நிலைக்கத் தொடங்கியது. உடல் வியர்த்தபடியே இருந்தது.
டாக்டரிடம் கூறினேன். அவர் கூறிய ஹோமியோபதி மருந்தை சில சொட்டுகள் நாவில் விட்டேன். கண்களில் சிறு சலனம் ஏற்பட்டது. ஆக்சிஜன் சுவாசத்தை மீறி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கினார். நேரம் இரவு 10.20 மணி. அவரது உடலின் வேகம் சற்றே குறைந்தது. நான் பூஜையறை சென்றேன்.
அப்போது “முரளி” என்ற அப்பாவின் குரல் கேட்டது. அருகில் இருந்த தங்கை, அப்பா அழைப்பதாகக் கூறி என்னை அழைத்தாள். உடனே அங்கு சென்று அவரது இடக்கரத்தைப் பற்றி, அவரைப் பார்த்தேன். வலப்புறம் தங்கை அவரது கையைப் பிடித்திருந்தாள். அவர் என்னைப் பார்த்தார். பார்த்தது பார்த்தபடியே இருந்தார். கண்கள் மலர்கள் போன்று விரிந்தன. அவரது கரங்கள் சூடாக இருந்தன.
கேர்டேக்கர் பெண் அழத் தொடங்கிய போது தான் தந்தை என்னைப் பிரிந்து விட்டதை உணர்ந்தேன். நம்ப முடியாமல் உடலை உலுக்கிப் பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லை. ரத்த அழுத்தக் கருவி, ஆக்ஸிமீட்டர் எதுவும் செயல்படவில்லை. எனது அன்னையும் அழத் தொடங்கினார்.
கடந்த 87 நாட்களாக அவர் நடத்திவந்த ஜீவ மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது. தனது இரு குழந்தைகளைப் பிடித்த படியே, சிவனுக்கு உகந்த திருவாதிரை நாளில் காலமாகிவிட்டார். துக்கம் தொண்டையை அடைத்தது. துயரத்தின் எந்தச் சாயலும் இன்றி நித்திரை கொண்டிருக்கும் தந்தையைக் காண்கையில் மனதின் ஆழத்தில் நிம்மதி ஏற்பட்டது. கூடவே கண்ணீர் பெருக்கெடுத்தது.
***
தந்தை கீழே விழுந்து தலையில் அடிபட்ட நாளிலேயே ஆபத்தான நிலையில் இருந்தார். அன்று முதல் ஜன. 12 வரை அவர் பட்ட கஷ்டங்களை விவரிக்க முடியாது. அனைவருக்கும் நல்லவரான எனது தந்தை ஏன் இத்தனை கஷ்டங்களை அனுபவித்தார்? பலரும் கேட்ட கேள்வி இது.
மகாபாரதப் போரில் படுகாயமுற்றாலும் உத்தராயணம் வரும் வரை காத்திருந்த பீஷ்மர் தான் நினைவுக்கு வந்தார். அதுபோலவே மார்கழி திருவாதிரை நன்னாளுக்காக எனது தந்தை காத்திருந்தார் போலும். அதற்கு நாங்கள் ஒரு கருவியாக இருந்திருக்கிறோம். அவ்வளவே.
கடந்த 87 நாட்களாக எனது தந்தையின் உயிர் காக்கும் போராட்டத்தில் உடனிருந்த மருத்துவர்கள் (குறிப்பாக திரு. கே. கருப்புசாமி, திரு. கே. கிங் நார்சியஸ்), மருத்துவமனைப் பணியாளர்கள், தாதிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூற வேண்டிய தருணமிது.
வாழ்வாங்கு வாழ்ந்து, கொள்ளுப் பேரன், கொள்ளுப்பேத்திகளையும் பார்த்து, சதாபிஷேகம் கண்டவர் எனது தந்தை. பலநூறு மாணவர்களுக்கு நல்வழி காட்டிய ஆசான் அவர்; இன்று முற்பிறவியின் வினைப்பயன்களை நிறைவு செய்து இறைவனடி சேர்த்துவிட்டார். அவரது வாழ்க்கை பூரணமடைந்தது! அவரது பாதையில், அவரைப் பற்றிய நினைவுகளுடன் பயணிப்பது மட்டுமே இனி எங்கள் கடமை.
***
தந்தையுடனான எனது பந்தமும் அனுபவங்களும் எழுதித் தீராதவை. விரைவில் அவற்றையும் எழுதுவேன். என் தங்கையும் ஆசிரியையுமான உமாமகேஸ்வரி செந்தில் ரமேஷ் எழுதிய கவிதை வரிகளுடன் இந்தத் தொடர் இப்போதைக்கு நிறைவடைகிறது.
***
சமர்ப்பணம்
-மு.உமாமகேஸ்வரி
ஆதியும் அந்தமும் இல்லா
அருட்பெரும் சோதியுடன் துவங்கும்
நம் மார்கழி மாதம்.
வாசலில் இடும் கோலம் முதல்
சமையலின் சுவை வரை
நேர்த்தியாய்க் கற்பித்த என் தந்தையே!
அரிச்சுவடியை சுவற்றில்
கரிகொண்டு எழுதி போதித்தது முதல்,
கலை இலக்கியப் போட்டிகளில்
அச்சமின்றி பரிமளிக்கச் செய்தீர்!
இன்று ஆன்றோர் நிறைந்த சபைகளில்
தயக்கம் இன்றிக் கற்பிக்கையில்
ஒவ்வொரு முறையும் என் மனதோரம் நீங்கள்!
பக்தி இலக்கியம் முதல்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரை
இனிய பாடலாய்ப் பாடி, பாடவைத்து,
பொன்னியின் செல்வன் தந்து
வாசித்தலின் இன்பத்தை உணர வைத்தீர்.
குடும்ப சூத்திரத்தையும்,
குழந்தை வளர்ப்பையும் வழிகாட்டினீர்.
வாழ்க்கையின் தத்துவத்தை
இதுவும் கடந்து போகும் என்று
பொறுமையை போதித்தவர் நீங்கள்.
சுற்றம் போற்றி வாழ்தலிலும்,
பெரியோரைப் போற்றுதலிலும்
பெரும் உதாரணமாய்த் திகழ்ந்தவர் நீங்கள்.
அதிகம் பேசாமல் உரிய செயல்களால்
உற்றார் உறவினர் போற்றும்
அதிஉன்னத இடத்தை வாழ்வில் பெற்றீர்.
எம் தாயுடன் இணைந்து தோள் கொடுத்து
எமை வளர்த்த தாயுமானவரே!
அப்பா என்ற வார்த்தையில்
அனைத்துமாக இருந்தவரே!
இனி வரும் காலங்களில்
இறைவனாய் இருந்து
எங்களுக்கு வழிகாட்டுவீராக!
(நிறைவு)
$$$