-வ.மு.முரளி
பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-6

மறுநாள் காலை வீட்டுக்கு வந்த டாக்டர் கிங் அப்பாவை முழுமையாகப் பரிசோதித்தார். அவரது மருத்துவ அளவீடுகள் அனைத்தும் இயல்பு நிலையில் இருந்தன. ஓரளவு பேசவும் செய்தார். ஆனால் டாக்டரை அவருக்கு நினைவில் வரவில்லை.
இரு நாட்களாக நிலைத்த பார்வையுடன் மங்கியிருந்த அவரது முகம் மீண்டும் ஒளி பெற்றது. எனவே அவருக்கு வழங்கிவந்த 5 ஹோமியோபதி மருந்துகளின் அளவை 5 சொட்டுகளிலிருந்து 10 சொட்டுகளாக அதிகரித்தார்.
தந்தையின் உடல்நிலையை சரிவரக் கண்காணிக்க, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவரது ஆக்சிஜன் அளவு, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை பரிசோதித்து பதிவேட்டில் பராமரித்து வந்தோம். தினசரி புகட்டும் திரவ உணவு, மருந்து, தண்ணீர் ஆகிவற்றின் அளவும், வெளியேறும் சிறுநீரின் அளவும் அதில் குறிக்கப்பட்டு வந்தன. அவற்றை டாக்டரிடம் காட்டினோம். தந்தையின் ஆக்சிஜன் அளவு அறையின் இயல்பான காற்றிலேயே 95- 98 ஆக இருந்தது. என்ற போதிலும், ஆக்சிஜன் அளவு குறைந்தால் அளிக்க ஆக்சிஜன் சிலிண்டரும் வைத்திருந்தோம்.
தந்தையின் உடல்நிலை மிகவும் வேகமாகத் தேறியது. ஒருநாள் எனது மனைவி ராதிகாவிடம், “இன்று என்ன சாப்பாடு?” என்று கேட்டார். “ஏன் மாமா, சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டவுடன், “இருக்கிறதா?” என்று கேட்டார். இதைச் சொன்னவுடன் டாக்டரே ஆச்சரியப்பட்டார்.
ஆனால், வாய் வழியாக உணவு கொடுக்க ஆரம்பிக்கவில்லை. கொஞ்சம் தண்ணீர் கொடுத்துப் பார்த்தோம். அவரே, போதும், வேண்டாம் என்று கூறிவிட்டார். வாய்வழியாக கொடுக்கும் உணவு, தண்ணீரை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டு, புரையேறினால் ஆபத்து என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. மாமனார் சாப்பிடக் கேட்டும் கொடுக்க முடியவில்லையே என ராதிகா கண்ணீர் வடித்தாள்.
ஐந்து நாட்கள் கழித்து ஏஎம்சி மருத்துவமனைக்கு நான் மட்டும் சென்றேன். தந்தையை கவனித்து வந்த பொது மருத்துவர் டாக்டர் கருப்புசாமி அவர்களிடம் தந்தையின் உடல்நிலை முன்னேற்றம் குறித்தும் ஹோமியோபதி மருந்து கொடுத்ததால் அவர் இயல்பு நிலைக்கு மீண்டதையும் சொன்னேன். அவரும் வியந்தார். மேலும் ஒரு மாதத்திற்கு அலோபதி மருந்துகளை உட்கொள்ளுமாறு கூறினார். சில மாத்திரைகளை மட்டும் நிறுத்திவிட்டார். நான் உற்சாகமாக வீடு திரும்பினேன்.
அக். 18 முதல் அதுவரை எனது தந்தை ஐந்து முறை மரண வாயிலை எட்டிப் பார்த்து திரும்பி இருக்கிறார். அவருடனேயே இருந்ததால் அவரது உயிர்ப் போராட்டத்தை முழுமையாக நான் கவனித்து வந்திருக்கிறேன். எனவே இனி தந்தை விரைவில் நலமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை வலுப்பட்டது.
டாக்டர் கிங் அவர்களிடம் மருத்துவமனையில் நடந்த நிகழ்வை கூறினேன். மகிழ்ந்தார். மேலும் 7 ஹோமியோபதி மருந்துகளையும் ஒரு டானிக்கையும் உடன் கொடுக்குமாறு பரிந்துரைத்தார். நானும் கோவை சென்று வாங்கிவந்தேன்.
இப்போது 10 சொட்டு மருந்துகள், 2 மாத்திரைகள், ஒரு டானிக் ஆகியவற்றை வழங்க வேண்டியிருந்தது. அலோபதி மருந்துகளை நிறுத்த வேண்டியதில்லை என்று டாக்டர் கிங் கூறியிருந்தார். அதில் 7 மாத்திரைகளை மேலும் சில நாட்களுக்குக் கொடுத்தோம்.
***
எனது தந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான உடல்நிலை இருந்தது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை அவரது 70 வயதுக்கு மேல் எட்டிப் பார்த்தன. அவற்றுக்கு மருந்து உட்கொண்டு வந்தார். தவிர தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வந்தார். சிறுநீரக புரோஸ்டேட் பிரச்சினைக்கு சில சமயம் மருந்து உட்கொண்டிருக்கிறார்.
2013இல் (அப்போது அவருக்கு வயது 72) கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் அவருக்கு முழுஉடல் பரிசோதனை செய்தோம். அப்போது டிஎம்டி பரிசோதனையில் கடைசிக் கட்டம் வரை எந்தக் களைப்பும் இன்றி ஓடினார். அவரது பரிசோதனை அறிக்கையைக் கண்டு இதயவியல் மருத்துவரே வியந்தார். துணை மருத்துவர்கள் அனைவரையும் அழைத்து, ‘வயதான ஒருவரின் ஆரோக்கியமான இதயம் எப்படி இருக்க வேண்டும்’ என்று தந்தையின் அறிக்கையைக் கொண்டு விளக்கினார். அவர்களிடம் தனது சுகாதாரப் பழக்க வழக்கங்களை தந்தையும் கூறினார்.
தனது 83 வயதிலும் அவர் சுறுசுறுப்பாக இயங்கி வந்தார். 2023 மார்ச்சிலும் (5 நாட்கள்), 2024 ஜூலையிலும் (7 நாட்கள்) சுவாசத் தொற்றுக்காக (Pneumonia) சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே அவர் சிகிச்சையில் இருந்த அதிகமான நாட்கள். ஏஎம்சி மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார். அந்த நாட்களில் அவரை மருத்துவமனையில் இருக்க வைப்பது பெரும் பாடாக இருந்தது. மருத்துவமனையின் சூழல் அவருக்கு சிறிதும் பிடிக்காது. வீடு திரும்பலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பார்.
அப்படி இருந்தவரை இந்த முறை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்தது, பெரும் சித்ரவதை தான். வேறு வழியில்லை. அதிலும் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்த சில நாட்களில் டிரக்கியாடமியும் செய்த பிறகு அவரது இயல்பு நிலை குலைந்தது.
அக். 18 முதல் நவ. 18 வரை 32 நாட்கள் (மூளை அறுவைச் சிகிச்சை, டிரக்கியாடமி) , நவ. 25 – 27 மூன்று நாட்கள் (டிரக்கியாடமி குழாய் நீக்கம்), டிச. 14 முதல் 26 வரை 13 நாட்கள் (மீண்டும் உடல்நிலை பாதிப்பு) என 48 நாட்கள் அவர் இந்த முறை மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அந்த நாட்கள் அவருக்கு மிகவும் கொடுமையான நாட்கள்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது உடனிருந்த என் தங்கை உமாவிடம், “போகிறவனை ஏன் தடுக்கிறீர்கள்? ஆஸ்பிட்டல் ட்ரீட்மென்ட் போதும். என்னை விட்டுவிடுங்கள். அவனிடம் (என்னிடம்) சொல்” என்று அப்பா சொல்லி இருக்கிறார். “இரண்டாவது பேத்தி திருமணம் முடியும் வரை இருப்பேன் என்றீர்களே” என்று கூறி அவரை சமாதானப்படுத்தினாள் தங்கை.
பிரியத்துக்குரியவரைக் காப்பாற்ற நாம் தீவிர முயற்சி செய்கிறோம். அப்போது அவர்கள் படும் துயரம் தவிர்க்க இயலாதது; தர்ம சங்கடமானது. தந்தையின் உடல்நிலை தேறிவரும் போது மகிழ்வதும், அவரது நிலை மந்தமாகும்போது வருந்துவதும் மாறி மாறி நிகழ்ந்தன.
என்றபோதும் அவரை முழுமையாக குணப்படுத்தவே இயலவில்லை. ஒருவேளை டாக்டர் கிங் அவர்கள் கூறியதுபோல ஆரம்பத்திலேயே (மூளை அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகேனும்) ஹோமியோபதி சிகிச்சை அளித்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருந்திருக்கலாம்.
***
கூடுதலாக ஹோமியோபதி மருந்துகள் கொடுத்த பிறகு தந்தையின் உடல்நிலையில் மேலும் நல்ல மாற்றம் தெரிந்தது. நன்றாகப் பேச ஆரம்பித்தார். நினைவுகள் திரும்பின. தேவாரப் பாடல்கள் சிலவற்றை பாடவும் செய்தார். பாடி முடித்த பிறகு “எல்லாரும் நல்லா இருக்கணும்” என்பார். உதடுகள் உள்ளே மடிந்ததால் வார்த்தைகள் குழறினாலும், அவர் பேசியது ஓரளவு புரிந்தது. எனது இரு மகள்களையும் அடையாளம் தெரிந்து பேசினார். அவரது பேச்சுகளை போனில் விடியோவாகப் பதிவுசெய்து டாக்டருக்கு அனுப்பி வந்தேன்.
அம்மாவையும் (விஜயா) என்னையும் (முரளிதரா) மருமகளையும் (ராதிகா) சத்தமாக அழைத்துக்கொண்டு இருப்பார். ஒருநாள் திடீரென என்னை அழைத்தார். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வீட்டுத் தாதி அப்போது வெளியே சென்றிருந்தார் போல. நானும் விரைந்து சென்றேன். “எல்லாரும் எங்கே சென்றீர்கள்? எப்போதும் கூடவே இங்கு தான் இருக்கணும்” என்றார் கோபமாக. அவர் இப்படிப் பேசுபவர் அல்ல. ஏனோ மனதில் உறுத்தியது.
பயந்தது போலவே இரு நாட்களில் சிக்கல் முளைத்தது. அப்போது எங்கள் கவனக்குறைவால் ஒரு தவறு நிகழ்ந்தது.
இயல்பான அறை காற்றிலேயே (Room Air) தந்தையின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு (Oxygen Saturation) 95க்கு மேல் இருந்து வந்தது. எனவே (அலோபதி) மருத்துவர்கள் கூறியபடி அவருக்கு ஆக்சிஜன் கொடுப்பதை நிறுத்தி இருந்தோம். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் அளவை சரிபார்த்து வந்தோம். ஆக்சிஜன் குறைவதாகத் தெரிந்தால் உடனே ஆக்சிஜன் செலுத்தி விடுவோம். இதுவே நடைமுறையில் இருந்தது. ஆனால் அவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தி வந்ததாக டாக்டர் கிங் நினைத்திருந்தார்.
அவர் தந்தையின் ஆக்சிஜன் அளவைக் கேட்ட போதெல்லாம் நாங்கள் ஆக்ஸிமீட்டர் கருவியில் எடுத்த புள்ளிவிவரத்தைக் கூறி வந்தேன். தந்தையின் உடல்நிலை குறித்து அடிக்கடி அவர் விசாரித்து வந்தார். அவரை பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக் கொண்டு அவர் தீவிர முயற்சி மேற்கொண்டார்.
புதிய ஹோமியோபதி மருந்துகளின் விளைவாக அவரது மூளையின் செயல்திறன் அதிகரிக்கத் தொடங்கியது. அது அவரது அதீத உடலியக்கச் செயல்பாடாக வெளிப்பட்டது. கை, கால்களை தூக்கித் தூக்கி போட ஆரம்பித்தார். எனவே அவற்றைப் பிணைத்து வைத்தோம். அவர் அதீதமாக சத்தமிடவும் செய்தார். அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை. நன்கு தேறிவந்த தந்தையின் இந்தப் பின்னடைவு கவலை அளித்தது.
அதுபற்றி டாக்டர் கிங்கிடம் கூறியபோது அவருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. “தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தி வருகிறீர்களா, இல்லையா?”” என்று கேட்டார். ஆக்சிஜன் அளவு குறையும் போது மட்டும் கொடுப்பதாகக் கூறினேன். அப்போது தான் நாங்கள் செய்த தவறு புரிந்தது.
ஹோமியோபதி மருந்துகளின் தாக்கத்தால் மேம்பட்டு வந்த மூளைக்கு கூடுதலாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அது குறைந்த போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் (Suffocation) காரணமாகவே அவர் கை, கால்களை வேகமாக அசைத்திருக்கிறார். இதனை டாக்டர் கிங் கூறிய பிறகு, தந்தைக்கு இடைவெளி இன்றி தொடர்ந்து ஆக்சிஜன் கொடுத்தோம். என்றபோதும், முந்தைய நிலைக்கு அவர் திரும்பவே இல்லை. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
அந்தத் தவறு நடந்திருக்கக் கூடாது. எங்கள் அறியாமையால் நிகழ்ந்த தவறு இது. டாக்டர் கிங் மிகவும் வருந்தினார். எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் என்பது உண்மை தான்.
நாம் விதியை மாற்றி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் அது நம் கையில் இல்லை. இது தந்தையின் இறுதி நாட்களில் உறுதியானது. மேலும் கீழுமாக இருந்து வந்த அவரது உடல்நிலை இப்போது லேசான சரிவை சந்திக்கத் தொடங்கியது. அப்போது தேதி: 10.01.2025.
எனினும் அவர் மீண்டு விடுவார் என நம்பினோம். நம்பிக்கை தானே வாழ்க்கை?….
(தொடர்கிறது)
$$$