ஈசனான எந்தை – 5

-வ.மு.முரளி

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-5

எனது தந்தை இரண்டரை வயதாக இருந்தபோதே அவரது தந்தை காலமாகிவிட்டார். தாத்தா  திரு. இராமசாமி முதலியார் நெகமத்தில் ஆசிரியராக இருந்தவர். அவரது மறைவை அடுத்து தந்தையின் குடும்பம் தவிப்புக்குள்ளானது. எனது தந்தை உள்பட மூன்று குழந்தைகளுடன் பாட்டி சுப்பம்மாள் தாய்வீடு வந்தார். பாட்டியின் தந்தை (பாட்டையா) திரு. ஆறுமுக முதலியார் தான் மகளின் குழந்தைகளை வளர்த்தார். 

அவர் மிகவும் கண்டிப்பானவர். அவரது பராமரிப்பில் பேரன்கள் வளர்ந்தனர். வறுமை இல்லை. அதேசமயம் வசதியும் இல்லை. உறவுகள் இடையே சங்கடங்கள் வரவே, எனது தந்தையின் குடும்பம் ஆனைமலைக்கு இடம் பெயர்ந்தது. 

அங்கு தான் எனது தந்தையும் பெரியப்பாக்களும் கல்வி கற்றனர். மூவரும் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர்கள் ஆகினர். அதுவரை அவர்கள் எங்கு இருந்தார்கள் என்பதே உறவினர்கள் பலருக்கும் தெரியாது. 

கிணத்துக்கடவு அருகிலுள்ள கோடங்கிபாளையம் எனது தாத்தாவின் பூர்வீகம். அவரது தந்தை கோவிந்தனூரில் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியராக இருந்ததாக எனது தந்தை சொல்லிக் கேட்டிருக்கிறேன். 

கோடங்கிபாளையத்தில் எனது தாத்தாவுக்கு நிலம் இருந்தது. ஆனால் சுமார் 15 ஆண்டுகள் ஊருடன் தொடர்பு இல்லாததால் அந்த நிலம் கைமாறிவிட்டது. அந்தக் காலச் சூழலில் அதுபற்றி யாரும் கவலைப்படவில்லை. பின்னாளில் அதை மீட்க பெரியப்பா முயன்றபோது, “போனது போகட்டும். அதை மறந்து விடுங்கள்” என்று உத்தரவிட்டுவிட்டார் பாட்டையா. 

எனது பெரியப்பாக்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகினர். எனது தந்தை அவிநாசியில் ஆசிரியர் பயிற்சி பெற்று 1962இல் செகண்டரி கிரேடு ஆசிரியர் ஆனார். கிணத்துக்கடவு ஒன்றியம், 10ஆம் நம்பர் புத்தூரில் அவரது ஆசிரியர் பணி தொடங்கியது. 

அதையடுத்து, தாசநாயக்கன்பாளையம், செங்குட்டைப்பாளையம், நல்லட்டிபாளையம், வடபுதூர், வடசித்தூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1978இல் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று மன்றாம்பாளையம் சென்ற அவர் 2000இல் ஓய்வு பெறும் வரை அங்கேயே பணியாற்றினார். 

அப்போதெல்லாம் இன்றிருப்பது போல போக்குவரத்து வசதி கிடையாது. தந்தை சைக்கிள் ஓட்ட மாட்டார். எனவே  நடந்தேதான் பள்ளிக்குச் செல்வார். அவரது நடைவேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது என்று பலரும் சொல்வார்கள். நானும் பார்த்திருக்கிறேன். 

மன்றாம்பாளையம் பள்ளிக்கு அவர் இடமாற்றம் ஆனபோது எனது தாய் வடசித்தூர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். நாங்கள் அப்போது வடசித்தூரில் குடியிருந்தோம். எனவே வடசித்தூரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு தினமும் காலையும் மாலையும் நடந்தே பள்ளிக்குச் சென்று வருவார். காலை 8.00 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி விடுவார். அதேபோல மாலை 5.30 மணிக்கு வந்து விடுவார். 

இவ்வாறு சுமார் எட்டாண்டுகள் அவர் நடந்து சென்றதைப் பார்த்திருக்கிறேன். 1987இல்தான் கிராமப்புறங்களுக்கு பேருந்துவசதி கிடைத்தது. அதன் பிறகே அவர் பேருந்தில் பள்ளி செல்லத் தொடங்கினார்.

சுமார் 25 ஆண்டுகாலம் இவ்வாறு அவர் நடந்ததுதான் அவரது கால்களுக்கு வலுவைக் கொடுத்திருக்க வேண்டும். அவரது கடைசி நாட்களில் சிகிச்சையில் இருந்த போது தனது கால்களை கட்டிலில் மிகவும் வேகமாகவும் வலுவாகவும் தூக்கித் தூக்கிப் போடுவார். கட்டிலே ஆடும். அவரது கால்கள் காயமடையாமல் இருக்க அவற்றை பிணைத்துக் கட்டி வைத்திருந்தோம். 

எனது தந்தை வெற்றிலை கூட போட மாட்டார். புகையிலை,  பீடி போன்ற எந்த எந்தப் பழக்கமும் கிடையாது. அதனால் தான் அவரது ஆரோக்கியம் சிறப்பாக இருந்தது என உணர்கிறேன். கீழே விழுந்து தலையில் அடி படாமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் அவர் இருந்திருப்பார். எங்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லாது போயிற்று. 

தினசரி நடந்து செல்வதால் அவரது கெண்டைக்கால்களில் சிலசமயம் வலி ஏற்படும். அப்போது என்னையும் என் தங்கையையும் கால்கள் மீது ஏறி மிதிக்கச் சொல்வார். தவிர மண்ணெண்ணை பூசுவார். அந்த வலி சரியாகிவிடும். 

அவருக்கு மிகவும் பிடித்த உணவு சப்பாத்தி, இட்லி. எது இருந்தாலும், எப்படி இருந்தாலும் சாப்பிடுவார். உணவை குறை சொல்லி ஒரு நாளும் நான் கேட்டதில்லை. அதுமட்டுமல்ல, சமையலில் எனது தாய்க்கு உதவி செய்வார். இருவரும் ஆசிரியர்கள் என்பதால் ஒருவருக்கு ஒருவர் வீட்டு வேலைகளில் உதவிக் கொள்வார்கள். பாத்திரம் கழுவுவது, வீடு கூட்டுவது, சாணத்தில் மெழுகுவது, வாசலில் நீர் தெளித்துக் கோலமிடுவது, காய்கறி நறுக்குவது போன்ற பணிகளை எனது தந்தை செய்வதை அண்டை வீட்டுக்காரர்கள் வியப்புடன் பார்ப்பார்கள். 

தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் மருமகளுக்கு உதவியாக காய்கறி நறுக்கிய பெருந்தன்மை மிகுந்த அற்புதமான மனிதர் அவர். இதில் அவர் எந்த கௌரவமும் பார்க்க மாட்டார். 

ஆணும் பெண்ணும் சமம், ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருக்க வேண்டும், மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது- என்பது போன்ற வாழ்க்கைப் பாடங்களை நான் எனது தந்தையின் வாழ்க்கை மூலமாக செயல்வழிக் கற்றேன். 

எனது தந்தை மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். அதேசமயம் கோபம் வந்தால் மிகவும் கடுமையாக இருப்பார். அவரால் பலமுறை தண்டிக்கப்பட்டிருக்கிறேன். அவை எட்டாம் வகுப்பு படிக்கும் வரை மட்டுமே. அதன் பிறகு தோழனாகிவிட்டார். 

அவரது கோபம் நியாயமானதாக இருக்கும். சிறிது நேரத்தில் அமைதியாகி விடுவார்; கோபத்தைத் தொடர மாட்டார். அவரது கோபத்துக்கு உறவினர்கள், சக ஆசிரியர்கள் அனைவரும் ஆளாகி இருக்கிறார்கள். அதை அவர்கள் குறையாகக் கருதியதில்லை. 

அவரது பேச்சு உரத்த குரலாக இருக்கும். மெதுவாகவோ, ரகசியமாகவோ பேச அவருக்குத் தெரியாது. கிராமத்து வெள்ளந்தியான மனிதர் அவர். கபடம் சிறிதுமற்ற குணம். அதுவே அவரது தனிச் சிறப்பியல்பு என நினைக்கிறேன். 

அதேசமயம் புதிய விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார். அதில் ஈடுபடுவதைக் தவிர்ப்பார். ஆனால் ஒரு விஷயத்தில் இறங்கி விட்டால் இறுதிவரை விடாது போராடுவார். அவரைப் போலவே நானும் இருக்கிறேன். 

***

உயிருக்கு உயிராக நேசிப்பவர்களை இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் வரும் போது தான், அவர்களுடனான வாழ்க்கை நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அவர்களுடனான உறவும் பாசமும் மனதின் ஆழத்தில் அலைமோதுகின்றன.

டாக்டர் கிங் அவர்கள் வீட்டில் இல்லை. ஓமியோபதி மருத்துவரும் அவரது மனைவியுமான டாக்டர் தமிழரசி என்ன விஷயம் என்று விசாரித்தார். என்னால் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் கழித்து வருவதாகக் கூறி வீடு திரும்பினேன். டாக்டர் கிங்கின் அலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது. மறுநாள் ஆங்கிலப் புத்தாண்டு என்பதால் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் நினைத்தேன். 

வீடு திரும்புகையில், மனம் முழுவதும் அப்பா பற்றிய நினைவுகள். கண்களை கண்ணீர் திரையிட்டு மறைத்தது. எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே தெரியவில்லை. 

வீட்டில் தந்தையின் நிலை மோசமாகி இருந்தது. பார்வை ஒரே இடத்தில் நிலைக்கத் தொடங்கியது. அன்றிரவு டாக்டரை மீண்டும் சந்திக்கச் செல்ல முடியவில்லை. அவர் அருகிலேயே இரவு முழுவதும் நானும் மனைவியும் அமர்ந்திருந்தோம். 

மறுநாள் காலை அப்பாவை ஏஎம்சி மருத்துவமனையில் கவனித்து வந்த டாக்டர் கருப்புசாமி அவர்களுக்கு போன் செய்தேன். அவரிடம் தந்தையின் அப்போதைய நிலையைத் தெரிவித்தேன். இது வலிப்பு வருவதன் அறிகுறி என்ற அவர் உடனே மருத்துவமனைக்கு வருமாறும், புதிய மருத்து எழுதித் தருவதாகவும் சொன்னார். நான் சென்றபோது அவர் இல்லை. 

உடனே டாக்டர் கிங் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவர் என்ன விசேஷம் என்று ஆரம்பித்தார். நான் எனது தந்தையின் உடல்நிலை குறித்து சொன்னவுடன் அதிர்ச்சி அடைந்தார். 

“ஏதோ பொது நிகழ்ச்சிக்கு அழைக்க வந்திருப்பீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது அப்பா அபாய கட்டத்தில் இருக்கிறார் என நினைக்கிறேன். இதை ஏன் என்னிடம் இத்தனை நாட்கள் சொல்லவில்லை? அடடா அருகில் இருந்தும் அவர் கஷ்டப்படுவது அறியாமல் இருந்துவிட்டேனே” என மருகினார். 

“சரி பழைய கதையை மறப்போம். இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே கோவை செல்லுங்கள். அங்கு ராஜவீதியில் உள்ள மருந்துக் கடையில் மட்டுமே ஜெர்மனியில் இருந்து இறக்குமதியான தரமான மருந்துகள் கிடைக்கும். நீங்கள் செல்லுங்கள். நான் அவர்களிடம் போனில் சொல்லி விடுகிறேன்” என்றார். நானும் உடனே கிளம்பினேன். 

டாக்டர் சொன்ன மருந்துகளை வாங்கி வந்தவுடன், அவர் கூறியபடி ஐந்து மருந்துகளை நீரில் கலந்து கொடுத்தேன். அரை மணிநேரத்தில் அப்பாவின் முகத்தில் மாற்றம் வந்தது. ஒரே இடத்தில் நிலைத்த பார்வை மாறி, என்னைப் பார்த்தார். அழைத்தபோது எதிர்வினையாற்றினார். சற்று நேரத்தில் பேசவும் செய்தார்.

அதுபற்றி டாக்டர் கிங்கிடம் தெரிவித்தேன். அவரது குரலில் நிம்மதி தெரிந்தது. “Father is come back. Don’t worry” என்றார். 

மூன்று நாட்கள் கழித்து எங்கள் முகத்திலும் இறுக்கம் குறைந்தது. தந்தையின் முகத்திலும் புன்னகையைக் கண்டேன்….

(தொடர்கிறது)

$$$

Leave a comment