ஈசனான எந்தை – 3

-வ.,மு.முரளி

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் இன்று இல்லை. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....பகுதி-3

32 நாட்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய எனது தந்தை மிகவும் சேர்ந்திருந்தார். சைகை மூலம் பேசினாலும் அதனை ஓரளவே புரிந்து கொள்ள முடிந்தது. அதேசமயம் சளித் தொந்தரவு சிறிது சிறிதாகக் குறைந்தது. 

மூக்கில் செலுத்தியிருந்த குழாய் வழியாக திரவ உணவுகளும் தண்ணீரும் வழங்கப்பட்டன. அதுவும் மிகவும் கட்டுப்பாடாக, 100 மிலி அளவில் மட்டுமே வழங்க வேண்டும். புரதம் நிறைந்த ஊட்டச்சத்து மாவுக் கரைசல், காய்கறி வடிநீர், அரிசிக்கஞ்சி, பருப்புக் கரைசல் ஆகியவற்றை அதற்கென வடிவமைக்கப்பட்ட புனல் மூலம் செலுத்தி வந்தோம். சுமார் 15 மாத்திரைகளை தூளாக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதனையும் செலுத்தி வந்தோம். 

அவரது உடல்நிலை தேறி வந்தது. அதையடுத்து நவ. 25ஆம் தேதி மீண்டும் மருத்துவமனை சென்றோம். தொண்டையில் பொருத்தியிருந்த டிரக்கியோடமி குழாய் நீக்கப்பட்டு, 3 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டார். தொண்டையில் இருந்த துளை அதுவாகவே அடைபடும்; அதன் பின்னர் அவரால் பேச முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். 

நவ. 27இல் வீடு திரும்பினோம். மூன்று நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனை சென்றோம். மருத்துவர் மீளாய்வு செய்தார். தொண்டையில் இருந்த துளை ஓரளவு அடைபட்டிருந்தது. வாயில் இருந்து பேச்சொலிக்கான சத்தம் வரத் தொடங்கியது. 

இந்த இடத்தில் ஒரு முக்கியமான தவறு நிகழ்ந்தது. மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் அளித்த பரிந்துரைப்படியே எனது தந்தைக்கு உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை அளவாக வழங்கி வந்தோம். ஆனால் நாங்கள் கொடுத்த திரவங்கள் அவரது தண்ணீர்த் தேவையை ஈடு செய்யவில்லை. 

மருத்துவமனையில் இருந்தபோது தினசரி ரத்த நாளங்கள் வழியே புளூயிட்கள் (சோடியம் குளோரைடு திரவம் உட்பட்டவை) சுமார் 1200 மிலி செலுத்தப்பட்டன. எனவே மருத்துவமனையில் சுமார் 1200 மிலி உணவும் மருந்தும் (feeds) அளிக்கப்பட்டது போதுமானதாக இருந்தது. தினசரி நோயாளியின் உடலுக்கு சுமார் 2000 – 2500 மிலி திரவம் தேவை. இது குறைந்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். அதிகமானால் சிறுநீரகத்தின் வேலை அதிகரித்து, உடலில் சோடியம் சத்து குறையும். 

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய போது இதனை மருத்துவர்கள் தெளிவாக எங்களிடம் கூறாததால் தினசரி சுமார் 1500 மிலி அளவுக்கு மட்டுமே திரவங்களை அளித்து வந்தோம். இதன் விளைவாக நீர்ச்சத்துக் குறைபாடு, சிறுநீரகத் தொற்று ஆகியவை காரணமாக காய்ச்சல் ஏற்பட்டது. 

காய்ச்சலுக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் பலனளிக்கவில்லை. விட்டுவிட்டு காய்ச்சல் வந்ததால், தந்தையின் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. பிறகு, தண்ணீர் கொடுப்பது (உணவு, மருந்து, தண்ணீர் உட்பட்டவை) குறைவாக இருந்ததை உணர்ந்து, மருத்துவர் ஆலோசனைப்படி தினசரி 2500 மிலி அளவுக்கு அதிகரித்தோம். இந்தச் சிக்கல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். 

அவரது உடலியக்கத்தை மேம்படுத்த இயன்முறை சிகிச்சையும் (Physio therapy) அளிக்கப்பட்டது. அதற்கு ஆரம்பத்தில் ஒத்துழைக்க அப்பா மறுத்தார். பிசியோதெரபி நிபுணர் வரும் வரை நன்கு பேசிக் கொண்டிருப்பவர், அவர் வந்தவுடன், கண்களை இறுக மூடிக் கொள்வார். சிறு குழந்தையாக மாறி, தூங்குவது போல நடிப்பார். அதையும் மீறி, பேச்சு கொடுத்து அவரது கை, கால்களை இயக்கி, நாற்காலியில் அமர வைப்போம். 

தந்தையால் இப்போது ஓரளவு பேச முடிந்தது. ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்தார். கேட்கும் கேள்விகளைப் புரிந்துகொண்டு பதில் அளிக்கவும் செய்தார். ஆனால் உடல் மெலிவால் பேச்சின் ஒலி குறைந்திருந்தது. அந்த நிலையிலும் தேவாரப் பாடல்கள் சிலவற்றை அவர் பாடினார். 

அவர் வீட்டில் இருக்கும் போது எப்போதும்  தேவாரப் பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பார். அந்த வழக்கம் அவரது மனதின் ஆழத்தில் பதிந்திருந்ததால் தான், அவரால் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோதும் கூட பாட முடிந்தது என்று நினைக்கிறேன். 

தவிர, நினைவு மயக்கத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார். பள்ளிக்கால நினைவுகள், வீட்டில் இருந்தபோது நடந்த நிகழ்வுகள் ஆகியவை அதில் வெளிப்படும். திடீரென ‘தண்ணீர் கீழே போகிறது… மோட்டாரை நிறுத்து’ என சத்தம் போடுவார். 

எங்கள் குடியிருப்புப் பகுதியின் நலனுக்காக விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கத்தை நிறுவி நடத்தி வருகிறோம். அதன் பொருளாளராக அப்பா இருந்தார். சங்கத்தின் இருப்புத் தொகை அவர் வசம் இருந்தது. சற்றே நினைவு வந்தவுடன், அந்தத் தொகையை சங்கத்தின் தலைவரிடம் கொடுக்குமாறு என்னிடம் கூறினார். இதுதொடர்பாக மட்டுமே மூன்று முறை அவர் பேசினார். தலைவரும் அவரை நேரில் வந்து பார்த்தார். அதன் பின்னரே அந்தப் பேச்சை அவர் நிறுத்தினார். 

அவரால் படுக்கையில் ஒரே நிலையில் தொடர்ந்து படுத்திருக்க இயலவில்லை. அதனால் படுக்கையில் சரிந்து சரிந்து கீழே வந்துவிடுவார். அரை மணிக்கு ஒருதரம் அவரை மேலே தூக்கி படுக்க வைக்க வேண்டும். தலை மேடாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தலையும் உடலும் சமதளமாகிவிட்டால் இரைப்பையில் உள்ள உணவு வாந்தியாகிவிடும். இவ்வாறு சில தடவை ஏற்பட்டிருக்கிறது. எனவே வீட்டுத்தாதியும் (Home care taker) நானும் எனது மனைவியும் மாறி மாறி உடனிருந்து கவனித்து வந்தோம். 

மூக்கில் பொருத்தியிருந்த உணவுக் குழாய் (Ryles tube) அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கும் போல. மூக்கில் நமைச்சல் ஏற்படும் போது கையால் அங்கு சொறிய முற்பட்டு, அந்தக் குழாயை இழுத்து விடுவார். அது நகர்ந்து வெளிவந்து விட்டால் வேறு புதிய ரைல்ஸ் டியூப் குழாயைப் பொருத்தியாக வேண்டும். அதற்கு மருத்துவமனைக்குத் தான் சென்றாக வேண்டும். இதுபோல வீட்டில் இருந்தபோது இரு  முறை குழாய் மாற்றப்பட்டது. (மருத்துவமனையில் இருந்தபோது 5 முறை இக் குழாய் மாற்றப்பட்டது). அதனாலேயே அவரது கரங்களை கட்டிலில் பிணைத்துக்  கட்டியிருந்தோம். அது அவருக்கு பெரும் மன உளைச்சலை அளித்து வந்தது. 

அதேபோல, சிறுநீர் வெளியேறும் குழாயும் அவரது உடலில் (Urinary catheter) பொருத்தப்பட்டிருந்தது. படுக்கையில் இருந்து இறங்க முயன்று கால்களைத் தூக்கிப் போடுவதால் அது கழன்று போகும். இவ்வாறு மருத்துவமனையில் இருமுறையும் வீட்டில் இருமுறையும் சிறுநீர்க் குழாய் கழன்றிருக்கிறது. அதனை தேர்ந்த மருத்துவமனை நர்ஸால் மட்டுமே பொருத்த முடியும். அதற்கு மருத்துவமனையின் வெளிப்புற சேவைப் பிரிவுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இதுபோன்ற சிரமங்கள், அவரது வேகமான செயல்பாட்டால் ஏற்பட்டன. அதுதொடர்பாக அவரிடம் விளக்கமாகச் சொன்னபோது, எங்களுக்கு ஒத்துழைப்பதாகச் சொன்னார். ஆனால் அவரையும் மீறி சில தடவை இந்தச் சிரமங்கள் ஏற்பட்டன. கரங்களைக் காட்டியிருப்பது ஏனென அவரிடம் விளக்குவோம். அவர் தலையை ஆட்டுவார். பாவமாக இருக்கும். மனம் பாரமாகும்

டிச. 6 இல் மருத்துவமனையில் இரண்டாம் மீளாய்வு செய்யப்பட்டது. தவிர, ரத்த நுண்கிருமி பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன்படி சில மருந்துகள் மாற்றம் செய்யப்பட்டன. வீட்டில் சிகிச்சை தொடர்ந்தது. 

காய்ச்சலுக்கு சிறுநீரகத்தொற்றே காரணம் என்று கண்டறியப்பட்டு, அதற்கு ரத்த நாளத்தில் ஊசிமூலம் செலுத்தும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து அளிக்கப்பட்டது. அது எனது தந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று கருதுகிறேன். பத்து ஊசிகளில் மூன்று போடப்பட்ட நிலையில் காய்ச்சல் குறைந்தது. ஆனால்-

டிச. 14ஆம் தேதி காலை திடீரென அப்பாவின் உடல்நிலை மோசமடைந்தது நினைவிழந்தார். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கு  அவர் வந்திருந்தார். உடனடியாக ஏஎம்சி மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

ஆக, மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை இரண்டாம் கட்டமாக தொடர்ந்தது. செயற்கை சுவாசம் (Ventilator) உள்ளிட்ட தீவிர முயற்சிகளால் அவர் நினைவு திரும்பினார். மூன்றாம் நாளில் அறையின் காற்றழுத்ததிலேயே அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு (Oxygen Saturation point) 98 இருந்தது. என்ற போதும், வாய் குழறத் தொடங்கியது. முகம் வற்றி கன்னங்கள் ஒட்டியதாலும் பற்கள் இல்லாததாலும் கீழுதடு உள்ளே மடிந்தது. அவரது பேச்சை உன்னிப்பாகக் கேட்டால் மட்டுமே புரிந்தது. 

தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அவரை 5 நாட்கள் வைத்திருந்தனர். அதன் காரணம் எனக்குப் புரியவில்லை. அதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாக ஊழியர்களிடம் விசாரித்தேன். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தால் சளிப் பிடிக்கும் வாய்ப்பு இருப்பதைக் கூறி அவரை அறைக்கு விரைவில் மாற்றுமாறு கோரினேன். 

அதையடுத்து, டிச. 19இல் வழக்கமான சிகிச்சைப் பிரிவுக்கு இடம் மாற்றப்பட்டார். ஆனால் முந்தைய உடல் வலுவும், பேசும் திறனும், நினைவாற்றலும குறைந்திருந்தன….

(தொடர்கிறது)

$$$

Leave a comment