ஈசனான எந்தை – 1

-வ.மு.முரளி

பொருள்புதிது இணையதளத்தின் இயக்கத்தில் மிகவும் அகம் மகிழ்ந்த எம் தந்தை இன்று இல்லை. அவர் மரைது இன்றுடன் (பிப். 12) ஒரு மாதம் நிறைகிறது. அவரது இறுதி நாட்கள் குறித்த சுருக்கமான/ உருக்கமான தொடர் பதிவு இது....
இரா.முத்துவேலு.

அன்புடையீர்

வணக்கம். 

எனது தந்தை திரு. இரா.முத்துவேலு அவர்கள் கடந்த 12.01.2025, ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.  இறக்கும் தறுவாயிலும் என்னை அழைத்து எனது கரங்களையும் எனது தங்கையின் கரங்களையும் பற்றியபடி தனது இன்னுயிரை நீத்தார். 

எனது வாழ்வின் மூலம் அவர். இன்று நான் அடைந்திருக்கும் அனைத்து நலன்களும் அவரால் அமைந்தவை. எனது உயர்வுகளில் மகிழ்ந்து, வீழ்ச்சிகளில் வருந்தி, என்றும் தோழனாக உடனிருந்த, எனது உயிரின் நிழல் அவர். இன்று அவர் உடனில்லை. இதை மனம் ஏற்க மறுத்தாலும் உலகின் மாறா நியதியை மாற்ற இயலாது என்பதை மிகத் தாமதமாக உணர்கிறேன். 

கடந்த இரு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தது. இருமுறை மருத்துவ சிகிச்சையாலும் பலமுறை தனது உணவுக் கட்டுப்பாட்டாலும் மீண்டு வந்தார். ஆனால் இம்முறை அவரை மீண்டும் காண இயலாது போய் விட்டது. இதுதொடர்பாக நாங்களும் எனது தந்தையும் நடத்திய மருத்துவ சிகிச்சை போராட்டம் 87 நாட்கள் நீண்டது. அந்த அனுபவங்களை பதிவு செய்வது அனைவருக்கும் பயன்படும் எனக் கருதுகிறேன். 

திருப்பூரில் உள்ள எங்கள் இல்லத்தில், கடந்த அக். 18ஆம் தேதி வீட்டின் புழக்கடையில் கால் தவறி கீழே விழுந்ததில் எனது தந்தையின் பின்மண்டையில் பலத்த அடியும் சிறு காயமும் ஏற்பட்டன. அதன் விளைவாக இயல்பான செயல்பாடு முடங்கி, வலியால் துடித்தார். 

எனவே திருப்பூரில் உள்ள ஏஎம்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். மூளையை ஸ்கேன் செய்ததில் அவரது மண்டை ஓட்டில் சிறு விரிசலும் ரத்தக்கசிவும் கண்டறியப்பட்டன. 

அவரது வயதை (83 நிறைவு) கருத்தில் கொண்டு மருந்து மூலமாக குணப்படுத்த மருத்துவர்கள்  ஒருநாள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் மூளையின் இடப்புறத்தில் ரத்தக் கசிவு அதிகரித்ததால் நினைவிழந்தார். எனவே மண்டைஓட்டைத்  திறந்து ரத்தக்கசிவு / ரத்த அழுத்தம் நீக்கும் அறுவைச் சிகிச்சையை (Craniectomy) உடனே செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். 

அறுவைச் சிகிச்சை செய்வதானால் கோவை மருத்துவமனைக்கு செல்வதாக நாங்கள் கூறினோம். ஆனால் ஆம்புலன்ஸில் அனுப்பும் அளவுக்கு அவரது உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவர்கள் எச்சரித்ததால், உள்ளூர் மருத்துவமனையிலேயே அறுவைச் சிகிச்சை மேற்கொள்வது என முடிவு எடுத்தோம். அதன்படி அக். 19ஆம் தேதி மூளை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிகிச்சை முடிந்த ஐந்தாம் நாளே அவர் சுயநினைவுக்கு வந்தார். நன்றாகப் பேசவும் செய்தார். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குளிர்ச்சி காரணமாக அவருக்கு சுவாசத்தொற்றுப் பிரச்சினை ஏற்பட்டது (Pneumonia). அதிலிருந்து மீள எனது தந்தைக்கு டிரக்கியோடமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. (Tracheotomy – தொண்டையில் துளையிட்டு அதில் ரப்பர் குழாயை நுழைத்து பிராணவாயுவை நுரையீரலுக்கு நேரடியாக செலுத்தும் முறை) . 

தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்கள் இருந்த பிறகு வழக்கமான சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். 

டிரக்கியோடமி சிகிச்சை எனது தந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை. தவிர அவரால் பேசவும், வாய்வழியாக உணவு உட்கொள்ளவும் இயலாத நிலை ஏற்பட்டது. இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவருடன் சைகைகள் மூலமாக மட்டுமே பேச முடிந்தது. தவிர, மூக்கு வழியாக செலுத்திய உணவுக்குழாய் (Ryles tube) மூலமாக மட்டுமே திரவ உணவுகளும் மருந்துகளும் செலுத்தப்பட்டன. 

வாய்வழியாக உணவும் தண்ணீரும் உட்கொள்ளும் போது விழுங்க முடியாமல் புரை ஏறினால் ஆபத்து என்று மருத்துவர்கள் காரணம் கூறினர். ஆயினும் போதுமான உணவு கிடைக்காததால் அவரது உடல் மெலியத் தொடங்கியது. 

தவிர மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவை முழுமையாக நீக்கவும் முடியவில்லை. மூளையின் இடப்புறம் ரத்த அழுத்தம் குறைக்கப்பட்டாலும், வலப்புறம் சுமார் 7 மிமீ அளவுக்கு இருந்த ரத்தக் கசிவால் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கைகளையும் கால்களையும் உதறிக்கொள்வார். அப்போது ரத்த நாளங்களில் மருந்து செலுத்தும் குழாய்கள் பிய்த்துக் கொள்வதைத் தவிர்க்க அவரது கரங்களைத் கட்டி வைத்தனர். அது மிகவும் வேதனையாக இருந்தது. 

இதனிடையே சுவாசக்குழாயில் சேரும் சளியை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சைகள்  தொடர்ந்து நடந்து வந்தன. தவிர செயற்கை முறையில் பிராணவாயு செலுத்தப்பட்டு வந்தது. 

அவ்வப்போது நல்ல நினைவுக்கு வருவதும், சுயநினைவின்றி கைகால்களை உதறுவதும், கட்டிலில் இருந்து இறங்க முயற்சிப்பதும் வாடிக்கையாகின. அதேசமயம்  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அடிக்கடி குறைந்ததால், செயற்கை முறையில் ஆக்சிஜன் செலுத்துவது தொடர்ந்தது. (ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90- 100 இருக்க வேண்டும்).

இவ்வாறு நடந்த தொடர் சிகிச்சையின் முடிவில் 32 நாட்கள் கழித்து, நவ. 18ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். என்றபோதும் அவரது தொண்டையில் இணைக்கப்பட்ட ரப்பர் குழாய் அகற்றப்படவில்லை. 

நுரையீரலில் சளித்தொற்று குறையும் வரை அந்த டிரக்கியோடமி குழாயை அகற்றக் கூடாது என்று மருத்துவர்கள் கூறினர். எனவே வீடு திரும்பிய பின்னரும் அவர் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

அவரை கவனித்துக் கொள்ள வீட்டுத்தாதி ஒருவரை ஏற்பாடு செய்தோம். நானும் உடனிருந்தேன். சைகை முறையில் தந்தை பேசத் தொடங்கினார்…..

(தொடர்கிறது)

$$$

Leave a comment