வழிபாட்டில் குழப்பம் விளைவிக்கும் வீணர்கள்

-முரளி சீதாராமன்

தமிழகத்தில் ஹிந்துகக்ளைப் பிளவுபடுத்த பலவிதமான உபாயங்கள் நாத்திகக் கூட்டத்தால் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, வழிபாட்டில் ஜாதி அரசியலை நுழைத்து குழப்பம் விளைவிப்பது. அது தொடர்பாக விழிப்பூட்டும் பதிவு இது…

கடவுள்களில் உக்கிர தெய்வங்கள் – சாத்விக தெய்வங்கள் என்று இருப்பது கூட  அறியாத மாதிரி சிலர் பேசுவார்கள். 

கிராமத்திலே கூட அரசமரத்தடி பிள்ளையாருக்கு ஆடு கோழி பலி போட மாட்டார்கள். 

அதுவே பக்கத்தில் உள்ள எல்லை முனியப்பனுக்கு பலிதான நேர்த்திக் கடன் பண்ணுவார்கள். 

காமாட்சி, மீனாட்சி போன்ற சாத்விக அம்மன்களுக்கு ஆடு கோழி – பலி இல்லை. 

அதுவே உக்கிர தெய்வங்களான – அதே சக்தியின் வீர வடிவமான மாரியம்மன் காளியம்மன்களுக்கு பலிதான நேர்த்திக் கடன் உண்டு. 

இதில் திராவிடமாடல் குறுக்குசால் ஓட்டுவார்கள் – பார்த்தீர்களா? 

காமாட்சி மீனாக்ஷி எல்லாம்  ‘அவாள்’களின் கடவுள் என்பார்கள். காளியம்மனும், மாரியம்மனும்  ‘பார்ப்பனர் அல்லாதார்’ கடவுள் என்பார்கள்! 

மகா பெரியவா சுவாமிகளுக்கே குல தெய்வம் – சிறுவாச்சூர் மதுர காளியம்மன். 

பல பிராமண குடும்பங்களுக்கு உக்கிர தெய்வங்கள் குல தெய்வம் ஆவதுண்டு.

வெங்கடாசலபதி – முனியப்பன், முத்திருளாண்டி வகையில் வர மாட்டார் – ஆனால் அவர் பல பிராமணர் அல்லாத குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருப்பதுண்டு. 

ஆகம நெறிமுறை இல்லாமல் எந்த ஹிந்துக் கோயிலும் இல்லை. 

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி சாந்த ஸ்வரூபி அம்மன் – அங்கே ஆடு கோழி பலி கிடையாது.

சமயபுரம் மாரியம்மன் சக்தியின் உக்கிர வடிவமான அம்மன் – மாரியம்மனுக்கு பலி தான நேர்த்திக்கடன் உண்டு. 

உக்கிர தெய்வ வழிபாடு உள்ள கோயில்களில் கடாமீசை வைத்த பூசாரி கருவறைக்குள்  பூஜை செய்வார். 

ஆனால் அந்த உக்கிர தெய்வத்தை அல்லது தேவதையை குல தெய்வமாகக் கொண்ட பிராமணக் குடும்பத்தினர் கருவறைக்குள் போய்விட முடியாது – வெளியில் நின்றுதான் திருநீறு / குங்குமம் பெற்றுக் கொள்வார்கள். 

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலுக்கு மகா பெரியவா சுவாமிகளே போனாலும், கருவறைக்குள் போய்விட முடியாது.  

சாத்விக சக்தி வடிவமான அம்மன் கோயில்களில் கூட எல்லா பிராமணர்களும் கருவறைக்குள் போய்விட முடியாது. 

சைவ ஆலயங்களில் சிவாச்சாரியார் குருக்கள், தீட்சிதர் ஆகியோரும் – வைணவ ஆலயங்களில் பட்டாச்சாரியார்களும்தான் கருவறைக்குள் நுழைந்து பூஜா காரியங்களில் ஈடுபட முடியும். 

டி.என்.சேஷனும், டி.வி.எஸ். அய்யங்காரும் கூட – பிராமணர்கள் என்ற காரணத்தாலேயே பார்த்தசாரதி கோயில் கர்ப்ப கிரஹத்துக்குள் போய்விட முடியாது. 

சிம்ஸன் சிவசைலம் குடும்பமோ, ஆர்.வெங்கட்ராமன் குடும்பமோ கூட கபாலீஸ்வரர் கோயிலிலோ கைலாசநாதர் கோயிலிலோ கருவறைக்குள் போய்விட முடியாது. 

இவர்கள் இரண்டு வகையறாக்களும் – ஐயர், ஐயங்கார் – தங்கள் சொந்த செலவில் தான தர்மம் செய்து – அவர்களுடைய கிராமத்தில் ஒரு எல்லை முனீஸ்வரன் கோயிலோ, கருமாரியம்மன் கோயிலோ கட்டினால் கூட அதன் கருவறைக்குள் கடா மீசை வைத்த பூசாரிதான் போக முடியும் – கோயிலைக் கட்டியவர்கள் என்று இவர்கள் போய்விட முடியாது! 

 “எத்தனையோ தமிழ் மன்னர்கள், ராஜராஜ சோழன் போன்றவர்கள் கோயில்களைக் கட்டினார்கள் – ஆனால் அந்த ராஜராஜ சோழனே அவன் கட்டிய கோயிலில் கருவறைக்குள் போக முடியாது – ஒரு பார்ப்பான்தான் போவான் – பார்த்தாயா தமிழா உன் பரிதாப நிலைமையை?” – எகிறி எகிறிக் குதிப்பார்கள் திராவிடமாடல் பகூத்தறிவு மாடல்கள்! 

அடேய்! அதே ராஜ ராஜ சோழன் ஒரு முனீஸ்வரன் கோயிலைக் கட்டியிருந்தாலும் அங்கே அதற்கான பூசாரிதான் கருவறைக்குள் போக முடியும் – கட்டிய மன்னன் போக முடியாது! 

என் மனைவி வழி உறவினர் பலருக்கே – அங்காளம்மன், சேலம் கோட்டை மாரியம்மன் போன்ற குலதெய்வங்கள் உண்டு. 

அவர்கள் ஆடு, கோழி அம்மனுக்கு நேர்த்திக்கடன் கொடுப்பதும் உண்டு. 

என்ன, அதற்கான தொகையை பூசாரியிடம் கொடுத்துவிட்டு – உரிய நேர்த்திக்கடனைச் செலுத்திவிடுவார்கள் –  அந்த ஆட்டையோ கோழியையோ பலி போடும் போது இவர்கள் அங்கே உயிர் பலியைக் காணச் சகியாமல் அந்தத் தருணத்தில் போக மாட்டார்கள். அது அம்மனுக்கான நேர்த்திக் கடன்! 

இப்படி இந்தப் பரந்துபட்ட பூமியின் மரபுகளோ, பல்வேறு சமூகங்கள் குறித்த ஆழமான ஞானமோ இல்லாத பகூத்தயறிவு படைத்த அறிவிலிகளே,  இப்படி…  

 “அது  ‘அவாள்’ தெய்வம், இது  ‘நம்மவர்’ கடவுள்…  ‘அவாள்’ தான் கர்ப்பகிரஹத்தில் மணியாட்டுவான்! நம்ம ஆளு கோயில் கட்டிய மன்னனாகவே இருந்தாலும் வெளியில்தான் நிற்கணும்..” என்று எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் பிதற்றுவார்கள்.

வழிபாட்டுக்குள் ஜாதிப்பூசலைக் கொண்டு வரும் இத்தகைய விஷமிகளிடம், தமிழ் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • சேலத்தைச் சார்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான திரு. முரளி சீதாராமன். இது இவரது முகநூல் பதிவு…

$$$

Leave a comment