-ஜடாயு
ஸ்மார்த்தர் என்பதைக் குறித்து தமிழ்ச் சூழலில், குறிப்பாக சைவ சமயம் சார்ந்தவர்களிடையில் ஒருவிதமான குழப்பம் நிலவுகிறது. அதனைத் தெளிவுபடுத்தவே இப்பதிவு. ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் திரு. ஜடாயு எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

சுருதி (ஶ்ரு’தி) என்பது வேதம். ‘கேட்கப்பட்டது’ என்பது இதன் பொருள். ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்மறைகளில் ஒவ்வொன்றிலும் உள்ள ஸம்ஹிதா, பிராம்மணம், ஆரண்யகம், உபநிஷத் ஆகிய நான்கு பகுதிகளும் சேர்ந்த முழுத்தொகுதி வேதம் என்று அழைக்கப் படுகிறது. இந்த வேதமானது “மனிதரால் ஆக்கப்படாமல்” (அபௌருஷேயம்) பரம்பொருளின் நாதவடிவாக தொடக்கமும் முடிவும் அற்று எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்பது இந்துமதப் பாரம்பரியத்தின் ஆதார நம்பிக்கைகளுள் ஒன்று. மாறாக, வரலாற்று ஆய்வாளர்களும், பல நவீனகாலத்திய இந்துக்களும் தொல்பழங்காலத்தில் ரிஷிகளால் பாடப்பட்ட தெய்வீகக் கவிதைகள் வேதங்கள் என்று கருதுகின்றனர். எப்படியானாலும், வேதமே இந்துமதத்தின் ஆதாரமான புனித நூல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஸ்மிருதி என்பதற்கு ‘நினைவு’ என்பது பொருள். வேதஞானத்தையும் வேதநெறியையும் நினைவில் நிறுத்துவதற்காக முனிவர்களாலும், ஞானிகளாலும், ஆசாரியர்களாலும், கூறப்பட்ட உபதேசங்களும், அருளப்பட்ட நூல்களும் அனைத்தும் இதன்கீழ் வரும். இவை மாமனிதர்களாலும் அவதார புருஷர்களாலும் பற்பல காலகட்டங்களில் இயற்றப் பட்டவை. இதன்படி, ஆறு வேத அங்கங்கள் (நிருக்தம், ஜோதிடம்… ) தொடர்பான நூல்கள், உபவேதங்கள் (ஆயுர்வேதம், கந்தர்வ வேதம்.. ), இதிகாசங்கள் (ராமாயணம், மகாபாரதம்), பதினெட்டு புராணங்கள், தர்ம சாஸ்திரங்கள் (மனுஸ்ம்ருதி, பராசர ஸம்ருதி முதலான நெறிநூல்கள்), சடங்கு நூல்கள் (போதாயன, ஆபஸ்தம்ப ஸூத்ரங்கள்..) என்று இவையனைத்தும் ஸ்மிருதி என்பதற்குள் அடங்குவதாகக் கொள்ளலாம். ஸ்ரீமத்பகவத்கீதை பகவானால் உபதேசிக்கப் பட்டதாயினும், வியாச முனிவரின் வாக்காக மகாபாரதத்திற்குள் அமைந்துள்ளதால், ஸ்மிருதியாகிறது. இதன்பொருட்டே, வேதாந்த தரிசனத்தின் மூன்று அடிப்படை நூல்களான ‘பிரஸ்தான த்ரயம்’ என்பதில் கீதை ‘ஸ்மிருதி ப்ரஸ்தானம்’ என்று அழைக்கப் படுகிறது.
ஆக, பரந்த பொருளில் சுருதி எனப்படும் வேதங்களைத் தவிர மற்றுமுள்ள அனைத்து இந்துமத புனிதநூல்களுமே ஸ்மிருதி என்பதில் அடங்கும் என்று கூறலாம். இதன்படி சைவத்திருமுறைகள், திவ்யப் பிரபந்தங்கள், மற்றும் பல இந்திய மொழிகளில் அருளாளர்கள் இயற்றிய பக்தி நூல்களும் கூட ஸ்மிருதி என்பதற்குள் வந்துவிடும் – வேத ஞானத்தை, வேத நெறியை நினைவில் நிறுத்துவதற்காகவே இவையனைத்தும் எழுந்தன என்பதால்.
இனி, மேற்கூறியவற்றில் தர்மசாஸ்திரங்கள் என்ற வகை நூல்களை மட்டுமே ஸ்ம்ருதி என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கமும் உள்ளது. பொயு 9-10ம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உருவான பிற்காலத்திய நூல்களிலேயே ஸ்ம்ருதி என்பதற்கு இத்தகைய குறிப்பிட்டதான பொருள் கொள்ளப் படுகிறது.
“சுமார்த்தர்கள் என்போர் வேதத்தின் உபாங்க நூல்களான மிருதிகள் (ஸ்மிருதிகள்) எனும் நூல்களைப் பின்பற்றுகின்றவர்கள்” என்று சைவசமய நூல்கள் பலவற்றில் எழுதப்பட்டிருக்கிறது. இது முழுமையான, சரியான கருத்தல்ல.
ஸ்மார்த்தர்கள் என்று அழைக்கப் படும் வைதிக அந்தணர்களைக் குறிக்கும் முழுப்பெயர் “ஶ்ரௌத-ஸ்மார்த்த” என்பதே. அதாவது, சுருதியையும் ஸ்மிருதியையும் அறிந்தவர், கடைப்பிடிப்பவர் என்பது இதன் பொருள். அது நீளமாக இருப்பதனாலோ என்னவோ சுருக்கப்பட்டு ஸ்மார்த்த என்று ஆகிவிட்டது. இன்றும் கூட பல வைதிக கர்மங்களில் சங்கல்பம் செய்யும்போது “ஶ்ரௌத ஸ்மார்த்த கர்மானுஷ்டான..” போன்ற தொடர்களை சாஸ்திரிகள் கூறுவதைக் கேட்டிருக்கலாம். சிறந்த வேத பண்டிதர்களை சிரௌதிகள் (ஶ்ரௌதி) என்று அழைப்பதும் உண்டு.
எப்படியானாலும், ஆதாரமாக உள்ள வேதத்தையும், இதிகாச புராணங்களையும் எல்லாம் விட்டுவிட்டு வெறும் தர்மசாஸ்திரங்களை மட்டுமே கடைப்பிடிப்போர் என்று எத்தகைய சாதியும், சமயப்பிரிவும் இந்துமதத்திற்குள் கிடையாது. அதேபோல, தர்மசாஸ்திரங்கள் எனப்படும் நூல்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்ட எந்த சமயப் பிரிவும் கிடையாது. சைவசித்தாந்தம் பற்றி எழுதப் பட்ட பல நூல்களிலும் கூட, மனுஸ்மிருதி போன்ற நூல்களிலுள்ள அறநெறிகளும் ஆசார கட்டுப்பாடுகளும் கூறப்பட்டுள்ளன என்பதே உண்மை.
எனவே, ஶ்ரௌத-ஸ்மார்த்த என்ற சொல் அதன் நேரடியான பொருளில் வேதநெறியைக் கடைப்பிடிக்கும் அனைவரையுமே குறிக்கும். ஆனால் நடைமுறையில், தத்துவரீதியாக ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தத்தை ஏற்றவர்களாகவும், தங்கள் வேத சாகைக்குரிய வைதிக சடங்குகளையும் நெறிகளையும் கடைப்பிடிப்பவர்களாகவும், வழிபாட்டு ரீதியாக சிவன், விஷ்ணு, சக்தி, விநாயகர், முருகன், சூரியன் முதலான அனைத்து வைதிகமான தெய்வ வடிவங்களையும் இணைத்தும், தனியாகவும், இஷ்டதெய்வமாகவும் வழிபடுபவர்களாகவும் உள்ள பிராமணர்களைக் குறிப்பதாக ஸ்மார்த்த என்ற இச்சொல் புழக்கத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக ஐயர் என்ற பின்னொட்டுடன் இவர்கள் அழைக்கப் படுகின்றனர். பாரம்பரியமாக, தத்தம் பிரதேசத்தில் உள்ள சங்கராசாரிய மடங்களையும் அவற்றின் கிளைகளையும் குருபீடங்களாக இவர்கள் ஏற்றுள்ளனர்.
ஆதி சங்கரரது தத்துவ மரபில் சைவ, வைணவ ஆகமங்கள், சாக்த தந்திரங்கள் ஆகிய நூல்களை ஸ்மிருதி என்பதில் சேர்ப்பதில்லை, அவற்றை பிரமாணங்களாகக் கொள்வதும் இல்லை. ஆறு தரிசனங்களில் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சை, வேதாந்தம்) வேதாந்தம் தவிர்த்த மற்ற ஐந்தையும் தத்துவ ரீதியாக சங்கரர் நிராகரித்திருக்கிறார் என்றபோதும், வேதாந்த உண்மையைத் தெளிவுற அறிவதற்காக உதவக்கூடிய படிநிலைகளாக (ஸோபானம்) அந்த தத்துவப் பிரிவுகள் “வித்யா ஸ்தானம்” என்ற அளவில் ஸ்மார்த்த மரபில் பயிலப்படுகின்றன.
ஸ்மார்த்தர் அனுசரிக்க வேண்டிய நித்ய பாராயணம் குறித்த ஒரு பிரபலமான சுலோகம் இவ்வாறு கூறுகிறது:
ஸ்வஶாகோ²பநிஷத்³கீ³தா
விஷ்ணோர்நாமஸஹஸ்ரகம் ।
ஶ்ரீருத்³ரம்ʼ பௌருஷம்ʼ ஸூக்தம்ʼ
நித்யமாவர்தயேத்³க்³ருʼஹீ’ ॥
“தனது வேதசாகையிலிருந்து ஒரு பகுதி, அதிலுள்ள உபநிஷத்திலிருந்து ஒரு பகுதி, பகவத்கீதையிலிருந்து ஒரு பகுதி, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீருத்ரம், புருஷசூக்தம் – இவற்றை இல்லறத்தான் தினந்தோறும் பாராயணம் செய்ய வேண்டும்”.
(இதில் “ஸ்ரீருத்ரம்” என்பது வேத பாராயணத்தில் பிரபலமாக உள்ள நமகம், சமகம் இரண்டையும் சேர்த்தே குறிக்கும்).
அந்த: ஶாக்தோ ப³ஹி:ஶைவோ வ்யவஹாரேஷு வைஷ்ணவ:
என்பது ஸ்மார்த்தர்களின் தெய்வ வழிப்பாட்டுக் கொள்கையைக் கூறும் மற்றொரு பிரபலமான வாக்கியம். “உள்ளே சாக்தன், வெளியே சைவன், வியவகாரத்தில் அதாவது நடத்தையில் வைஷ்ணவன்” என்பது இதன் பொருள்.
இதை முன்னிட்டே தீவிர சிவபக்தரும் ஸ்மார்த்தருமான அப்பைய தீட்சிதர் “ரத்ன த்ரய பரீக்ஷா” (மூன்று ரத்தினங்களைச் சோதித்தல்) என்ற அழகிய நூலில் சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களின் மகிமைகளையும் பட்டியலிட்டு, அவை ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல, எனவே இந்த மூன்று ரத்திரனங்களையும் நான் போற்றுவேன் என்று அறிவிக்கிறார். மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்தரிக்கும் படங்களில் சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களும் சமநிலையில் அருட்காட்சி தருவதை இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.
“ஒரே ஸாதகனுங்கூட முரண்பாடின்றி வெவ்வேறு மார்க்கங்களைச் சமரஸப்படுத்திக் கொள்ளலாம். சக்திவடிவான காயத்ரி உபாசனையில் இந்த சமரஸம் அடங்கியிருப்பதை காயத்ரியை வழிபடுவோர் அறிவர்” என்று உரையாசிரியர் அண்ணா (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்) தனது லலிதா சகஸ்ரநாம உரையின் முன்னுரையில் கூறுகிறார்.

பஞ்சாயதன பூஜை, ஷண்மதம் ஆகியவற்றின் அடிப்படையும் இது தான். பஞ்சாயதனம் என்பது சூரியன், அம்பிகை, விநாயகர், விஷ்ணு, சிவன் ஆகிய ஐந்து தெய்வ மூர்த்தங்களில் ஒரு தெய்வத்தை பிரதானமாக நடுவிலும் மற்ற நான்கு தெய்வங்களை குறிப்பிட்ட வரிசையில் அதன் நாற்புறங்களிலும் வைத்து வழிபடும் முறையாகும். நடுவில் உள்ள பிரதான தெய்வத்தைப் பொறுத்து சிவ பஞ்சாயதனம் அல்லது விஷ்ணு பஞ்சாயதனம் முதலான பெயர்களில் அது அழைக்கப் படும். இத்தகைய வழிபாட்டு முறை மிகத் தொன்மையானது, பஞ்சாயதன அமைப்பு என்பது வேத வேள்விக் குண்டத்தின் அமைப்பிலிருந்து நேரடியாகப் பெறப்பட்டது, ஆகமங்களின் அடிப்படையில் அமைந்த சைவம், வைணம் முதலான சமயப்பிரிவுகள் தனிப்பட்டு உருவாவதற்கும் முந்தைய காலத்தியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பஞ்சாயதன அமைப்பிலான ஆலயங்கள் பல இடங்களில் உள்ளன. சங்கராசாரிய மடங்கள் மற்றும் ஸ்மார்த்தர் இல்லங்களில் உள்ள பூஜா மூர்த்திகள் பெரும்பாலும் இந்த அமைப்பிலேயே இருக்கும்.
ஷண்மதம் என்பது அறுசமய நெறி என்று தமிழில் வழங்கப் படுகிறது. ஆறு தெய்வங்களில் ஒரு தெய்வத்தை முழுமுதல் பரம்பொருளாகக் கருதி வழிபடும் ஆறு உபாசனா மார்க்கங்களின் தொகுப்பு இது. அவை காணாபத்யம் (கணபதி), கௌமாரம் (குமரன்), சைவம் (சிவன்), வைஷ்ணவம் (விஷ்ணு), சாக்தம் (சக்தி), ஸௌரம் (சூரியன்) என்பனவாம். ஏற்கனவே புழக்கத்தில் இருந்த இந்த வழிபாட்டு நெறிகளை சீராக முறைப்படுத்தி, அத்வைத வேதாந்தத்தின் அடிப்படையில் தத்துவ ரீதியாக அவற்றை ஒருங்கிணைத்தவர் என்பதால் ஆதி சங்கரர் ஷண்மத ஸ்தாபகர் எனப்படுகிறார்.
எங்கு சென்றாலும் இந்துக்களின் வீடுகள், சிறிய, பெரிய கடைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பூஜையறைகளிலும் பூஜை மாடங்களிலும் பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதி என்று தொடங்கி குறைந்தது 5-6 தெய்வங்களின் திருவுருவப் படங்களோ அல்லது விக்ரஹங்களோ இருக்கும். எனவே நடைமுறையில் மேற்கூறிய அத்வைத – ஸ்மார்த்த தெய்வ வழிபாட்டுக் கொள்கையையே நடைமுறையில் பெரும்பான்மையான இந்துக்கள் பின்பற்றுகின்றனர் என்பதைக் கவனிக்கலாம். தீவிர சைவ, வைணவ வழிபாட்டுக் கொள்கையுடையவர்கள் என்போர் சிறுபான்மையினரே.
தத்துவரீதியாக எந்த தெய்வ ஸ்வரூபம் மீதும் ஒவ்வாமை இல்லாத காரணத்தால், சிவபூஜை, ஹரி நாம சங்கீர்த்தனம், ராமாயண பாகவத பாராயணங்கள், திருப்புகழ் பஜனை, தேவி உபாசனை, ஐயப்ப பக்தி போன்ற பலவிதமான ஆன்மீக, பக்தி விஷயங்களில் தங்கள் விருப்பத்திற்கும் மன இசைவுக்கும் ஏற்றபடி ஸ்மார்த்தர்கள் ஈடுபடுகின்றனர். இஷ்ட தெய்வம் என்ற கோட்பாடும் அத்வைத – ஸ்மார்த்த மரபு சார்ந்தது தான், ஏனெனில் சிவன் அல்லது விஷ்ணு என்ற ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை மட்டுமே முழுமுதற் கடவுளாக வணங்கும் மரபுகளில் இஷ்டதெய்வம் என்ற கோட்பாடு சாத்தியமே அல்ல. புற அடையாளங்களை வைத்துப் பார்த்தால் விபூதி, கோபி சந்தனம், குங்குமம் எனப் பலவிதமான சின்னங்களையும் அவரவர் குடும்ப சம்பிரதாயப் படி அணிகின்றனர். கீற்றுநாமம் இடும் வழக்கமும் கூட தமிழ்நாட்டு ஸ்மார்த்த அந்தணர்களில் ஒருசாராரிடம் உண்டு.
பாரதத்தில் பல பிரதேசங்களிலும் உள்ள அனைத்து பிராமணர்களையும் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், அதில் ஸ்மார்த்த என்ற வகையினரில் வருவோரே மிகப் பெரும்பான்மையினர்.
ஐயங்கார்கள், மாத்வர்கள் போன்ற மற்ற பிராமண சமூகத்தினரும் ஆதியில் ஸ்மார்த்தர்களாக இருந்து பின்பு ராமானுஜர், மத்வர் முதலான ஆசாரியர்களின் காலத்திற்குப் பிறகு தனி சம்பிரதாயமாகப் பிரிந்து சென்றவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் அந்தந்த சம்பிரதாயங்கள் மற்றும் ஆசாரியர்களின் வரலாறுகளிலேயே உள்ளன. அந்த சம்பிரதாயம் சார்ந்த அறிஞர்களும் இக்கருத்தை மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- நன்றி: தமிழ் ஹிந்து இணையதளம்
$$$