சுதந்திர சிந்தனைக்கு வேரான ஆன்மிகம்

-கருவாபுரிச் சிறுவன் 

குடியரசு தினத்தை ஒட்டி, நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள கட்டுரை இது...

பொலிக! பூரணம் பொங்குக வெற்றியே! 
பொலிக! நல்ல புதுயுக வாழ்க்கையே!
பொலிக! புண்ணிய, பாரத பூமியே! 
பொலிக! மங்கலம், பூவுயிர் யாவிற்குமே!

என தேசத்தின் அழகினை  பைந்தமிழில் பாடினார்  கவியோகி சுத்தானந்த பாரதியார். 

 இப்பாடலின் கருத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது. 

என்ன வளம் இல்லையென்ற திருநாட்டில்?
ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒழுங்காய்ப் பாடுபடு வயல்காட்டில்…
உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில்!

– என்ற பாடல் பாரத தேசத்தின் பெருமையை சொல்லாமல் சொல்கிறது. அது யாருக்கு புரிய வேண்டுமோ! அவர்களுக்குப் புரிந்தால் சரி. அக்கருத்தை உணர்ந்து  தன் பங்களிப்பை ஒவ்வொருவரும் சரியாகவும் மிக நேர்த்தியாகவும்  செய்தால்  எல்லாம் சரியாக இருக்கும் எல்லாம் சரியாக அமையும் என்பதை  நினைவூட்டி 2025 ம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கான சிந்தனையை சிந்திப்பதில்  பெருமகிழ்வு அடைவோமாக.  

இந்த பாரதம் அந்நியரின் பிடியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளும் மன்னர்களில் தொடங்கி தனிமனிதரின் வாழ்வின் இறுதிக்கட்ட சடங்கிற்கு  வரும் குடிமகன்கள் வரை பங்கெடுத்து சுதந்திர இந்தியாவை அரும்பாடுபட்டு உருவாக்கி உள்ளார்கள். 

இதில் ஆன்மிகவாதிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. மற்றவர்களால் மறுத்துவிடவும்  முடியாது. 

இன்று கிராமங்களில் தொடங்கி பெரிய பெரிய நகரங்கள் வரையிலும்  ஒவ்வொரு தனி மனிதரும்  தன் தகுதிக்கு ஏற்றவாறு அன்னதானத்தைச் செயல்படுத்துகிறார்களே அதற்கு யார் காரணம் நன்கு  சிந்திக்க  வேண்டும்.

வடலுார் ராமலிங்க சுவாமிகள் என்ற வள்ளலார்,   கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் சித்திவளாகத்தில் தன்னால் உருவாக்கம் பெற்ற அன்னதானக்கூடத்திற்கு முதன் முதலில் ஏற்றி வைத்த தீபச் சுடர் தான் இன்று வரை  அணையாமல் பிரகாசமாக பலரின் பசியை அமர்த்திக் கொண்டு இருக்கிறது. 

அப்பெருமானின் அருள் முழக்கம்: ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’.

“வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்….  பசித்தோருக்கு அன்னம் இடு. உள்ளத்தில்  குடி கொண்டு இருக்கும் பரம்பொருளே எங்கும் நிறைந்திருக்கிறார்” என  முழக்கமிட்டார். அவரே தனது  திருவருட்பாவில்… 

கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக! 
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க! - தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக! நன்று நினைந்து 
எல்லோரும் வாழ்க இசைந்து. 

என்று ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார். பெரும்பாலும் துறவிகள், ஞானிகள், சாதுக்கள், மகான்கள் யாவரும் அரசும், அரசியலாளர்களும் நல்லாட்சி செய்ய வேண்டும் என்றே  ஆசியளிப்பார்கள். ஆனால்  ஆட்சியில் குற்றம், குறை தென்பட்டால் கண்டிக்க கடுகளவு கூட தயங்க மாட்டார்கள். ஏனென்றால்  ‘துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்கிறார் தொண்டை மண்டலத்திலுள்ள தென் களத்தூரைச்  சார்ந்த படிக்காசு புலவர். 

ராமலிங்க சுவாமிகள் காலத்தில்  வாழ்ந்த விழுப்புரம் திருவாமத்துார் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆங்கிலேய அரசுக்கு  எதிராக தான் எழுதிய பாடல் ஒன்றில் … 

நிரை படப் பசு அனந்தம் கொன்று தின்னும்
நீசர் குடை நிழலில் வெம்பித் 
தரை மகள் அழும் துயர் சகிக்கிலேன் 

எனப் பாடி மக்களிடையே அவர்களுக்கு எதிராக தம் எண்ணத்தை தீர்க்கமாக வெளிப்படுத்தினார்.  மேலும் ஆங்கிலேயர் அந்தாதி என்ற தலைப்பில் நுால் ஒன்றையும் இயற்றி தன் எதிர்ப்பை காட்டி  மக்களிடம் தேசபக்தியையும் சுதந்திர எழுச்சியையும் உண்டாக்கினார். 

ராமலிங்க சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், இன்னும் அறியப்படாத ஆன்மிகவாதிகள் எத்தனையோ பேர் நம் தேசத்தின் நலனுக்காக மனம், மொழி,மொழிகளால் தொண்டாற்றியுள்ளார்கள். அவர்களின் தீவிரத் தொண்டினாலும் தேசத்தலைவர்களின் ஈடுஇணையற்ற  முயற்சியாலும்  நாட்டில் எங்கு பார்த்தாலும் சுதந்திர வேட்கை காட்டுத்தீயாய்ப் பரவியது. அந்த நேரத்தில்… 

தாயின் மணிக்கொடி பாரீர்! அதை 
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்- எங்கும் 
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
சேர்ந்து அதை காப்பது காணீர்- அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத -  நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க!

என பாடி கனவு கண்டார் தீர்க்கதரிசி தேசியகவி சுப்பிரமணிய பாரதியார்.  

அவர் கண்ட கனவு ஆகஸ்ட் 15., 1947 ஆம் ஆண்டு நனவாகி இந்த பாரத தேசம் பூரண சுதந்திரம் அடைந்தது. அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பாரத மாதாவின் அடிமைச்சங்கிலியை உடைத்தெறிய உயிர் கொடுத்தோர் ஏராளம், ஏராளம். 

எத்தனை எத்தனை தேசத்தலைவர்களின் வாழ்வு இருளுக்கு இரையாகி உள்ளது.  கடுஞ்சிறையில் அடைப்பட்டு கொடும்பசிக்கு ஆளாகி, இன்னல்கள் பல அனுபவித்து, கசையடி வாங்கி, செக்கிழுத்து, செங்கல்கள் பல சுமந்து, துப்பாக்கி  குண்டுகளுக்கு இரையாகி இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுத் தந்துள்ள தியாகிகள், வீரர்கள், தேசத்தலைவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவர்களின் உணர்வினை போற்றும் விதமாகவும் ஆண்டு தோறும் சுதந்திர திருநாள், குடியரசு தின நான்னாளில் தேசிய கொடியை ஏற்றி மகிழ்கிறோம்.

 (தேசிய கொடியின் மதிப்பு, மரியாதை தெரியாமல், ஒரு சில அரசு அதிகாரிகளே தலைகீழாக ஏற்றுவது, அந்நியரின் கைக்கூலிகள் அதை மேஜை, நாற்காலிகள் துடைக்கப் பயன்படுத்துவது, நெருப்பிலிடுவது, அழுக்காக்குவது. இன்றைய மாணவர்கள், இளைஞர்களுக்கு அதன் நிறத்தின் தனித்தன்மையாகிய தத்துவம் என்னவென்று தெரியாமலே தன் வாழ்நாளினை வீணாளாகக் கழிப்பது போன்ற இழி செயலில் இன்றும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அந்நாட்களையொட்டி நாளிதழ், தகவல் தொடர்பு சாதனங்களில் வரும் செய்திகளே அதற்கு சான்று  சிந்திக்க.. )

நன்றி மறக்கலாகுமா… 

தமிழகத்தில் பல  இடங்களில் எழுந்த போராட்டங்களை அடக்கி விட்டோம். ஆனால்  ஆங்கிலேயர்களிடம்  இருந்து இந்த நாடு விடுதலை பெற்றே தீர  வேண்டும் என்ற குறிக்கோளில் முழு முச்சாக செயல்படும் திண்டுக்கல் வத்தலகுண்டு சுப்பிரமணிய சிவாவின் பேச்சு, துாத்துக்குடி எட்டையபுரம் சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள், துாத்துக்குடி வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் செயல்பாடு இம்மூன்றும் தமிழக மக்கள் மட்டும் இன்றி இந்த தேசத்தில் வாழும் பெருவாரியான மக்களிடையே சுதந்திர வேட்கையை அவர்களின் நாடி, நரம்பு, ரத்தம், சதை போன்றவற்றில் ஊடுறுவி எழுச்சியை உண்டு பண்ணுகிறது. அவர்களை அடக்கி ஒடுக்க  எங்களால் முடியவில்லை –  என அன்றைய டின்னவேலி  கலெக்டர் பிரிட்டீஷாரின் தலைமைக்கு கடிதம் எழுதினார்  என்றால், நம் தேசத்தலைவர்களின்   தியாகம், அவர்களின் நெஞ்சுரம், எடுத்துக் கொண்ட கொள்கை, குறிக்கோள் போன்ற அருஞ்செயல்களை  இந்த நேரத்தில் சிந்தித்து பார்க்க வேண்டாமா… அதை இளைய  சமுதாயத்திற்கு முறைப்படி தெரிவிக்க வேண்டாமா… அப்படி செய்யவில்லை என்றால் நாம் நன்றி மறந்த பாவத்திற்கு ஆளாகி விடுவோமே. 

ஈடு இணையில்லா இளைஞர்கள்   

தேசிய கவி பாரதியின் வாக்கினை உள்ளத்தில் நிறுத்தி உணர்வில் வெளிப்படுத்தி இப்பார் போற்றும் படி செயற்கரிய செயலை செய்தவர்கள் பலர். அவர்களுள் சட்டென்று நினைவில் வந்து நீங்காத இடம் பெற்றவர்கள் திருப்பூர் குமாரசாமியாகிய கொடி காத்த குமரனும், பிகார் இளைஞர்களும் ஆவார்கள். 

திருப்பூரில் தடையை மீறிய ஊர்வலம். கூட்டத்தைக் கலைக்க தடியடியை  நடத்தினார்கள் அன்றைய போலீஸார்கள். அதில் படுகாயம் அடைந்தான் அந்த இளைஞன்.  ‘வந்தே மாதரம், வந்தே மாதரம், பாரத மாதாவிற்கு ஜெ! பாரத மாதாவிற்கு ஜெ! ’எனக் கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அவன். ஒருபுறம் போலீஸாரால் நடத்தப்பட்ட தடியடியால் மண்டை  பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது. உயிருக்குப் போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் இறுகப் பற்றியபடியே இருந்தன. பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான்.  

அவனது உணர்வு மிகுந்த உணர்ச்சியான தேசபக்தியால் தான் அவன் இன்றும்   ‘கொடி காத்த குமரன்’ என போற்றப்பட்டு வருகிறான்.

ஆகஸ்ட் புரட்சி நேரம். பிகார் மாநில தலைநகர் பாட்னாவின் தலைமைச் செயலகம் சசிவாளையத்தில் பிரிட்டிஷ் கொடியான யூனியன்ஜாக் கொடியை இறக்கி விட்டு இந்த பாரத தேசத்தின் கொடியை பறக்கவிட நினைத்து அங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஊர்வலமாக வந்து முற்றுகை இடுகிறார்கள்.  எச்சரிக்கை செய்து கூட்டத்தைக் கலைக்கிறது ஆங்கிலேய  அரசு. 

இதனால் இளைஞர்களின் கூட்டம் அதிகமாகிறதே தவிர கூட்டம் குறைந்தபாடில்லை. காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு பயப்படாத இளைஞர்களின் கூட்டத்தைக் கலைக்க ராணுவத்தைக் கொண்டு வந்தார்  கலெக்டர் டபிள்யூ.ஜெ. மார்சன், அவருடன் இணைந்து கொண்ட நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் மூவரும் அங்கு 20 வயதுக்கு உட்பட்டு கூடியிருந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்து  கொக்கரித்தவாறு  “கூட்டத்தைக் கலைத்து விட்டு இங்கிருந்து அகன்று விடுங்கள்.  இல்லையேல் உங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கிடைத்துள்ளது” என எச்சரிக்கிறார்கள்.  

பாரதமாதாவின் மூவர்க்கொடியை ஏந்திய  ராமானந்தன்  (15), ஜெகபதிகுமார் (14), ராமகோவிந்த் (18), தேவிபத செளத்ரி (16), ராஜேந்திர சிங்( 13), சதீஷ் சந்ரா ஜா மற்றும் உமாகாந்த் பிரசாத் சின்கா (12) ஆகிய ஏழு இளைஞர்களையும் அவர்களின்  குண்டு சல்லடை சல்லடையாக உடம்பினைத் துளைக்க, ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி  ‘வந்தே மாதரம், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், பாரத மாதாவிற்கு ஜெ’ என சொல்லிக் கொண்டே தேசிய கொடியை பிடித்தவாறு அது மண்ணில் விழாதவாறு  இந்த தேசத்தின் மானம்  காத்து  உயிர்நீத்தார்கள். 

இதில் உமாகாந்தன் காலில் சுட்டவரைப் பார்த்து  ”மார்பில் குறி பார்த்து சுட துப்பில்லை உமக்கு  எதற்கு துப்பாக்கி?” என  கேட்டான் என்றால் அவனுடைய தேச பக்தியை அளவிட்டு கூற முடியுமா… அல்லது அதற்கு ஈடு இணைதான் உண்டா! 

தேசிய கொடியை எப்போதெல்லாம் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் வாழ வேண்டிய வயதில்  இந்த பாரதத்திற்காக உயிர்நீத்த இந்த இளம் இளைஞர்கள் செய்த தியாகம் நம் மனக்கண் முன் வர வேண்டும். இல்லையென்றால் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் இதற்கு பரிகாரம் எதுவும் என்பதே கிடையாது.  

இவர்களுக்காகத்தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையவர்கள்  இப்படி பாடினார் போல… 

மனமுவந்து உயிர் கொடுத்த மானமுள்ள வீரர்கள்
மட்டிலாத துன்பமுற்று நட்டுவைத்த கொடியிது
தனமிழந்து கனமிழந்து தாழ்ந்து போக நேரினும்
தாயின் மானம் ஆன இந்த கொடியை என்றும் தாங்குவோம்!

கொண்டாட்டங்கள் இரட்டிப்பு  

சுதந்திரம் அடைந்த எல்லா  நாடும் சுதந்திர தினம் கொண்டாடும். ஆனால், நமது பாரத தேசம்  மட்டும் சுதந்திர தினம், குடியரசு தினம் என்று இரண்டு நாள்களை அரசு கொண்டாடி வருகிறது.

எந்த நாட்டிலும் இல்லாத “குடியரசு தினம்” என்பது நமது பாரத தேசத்தில் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன ?   

1929 டிசம்பர் 31 இல் அன்றைக்குச் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் முன்னணியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு, லாகூரில் முக்கிய மாநாடு ஒன்றை நடத்தியது.

1930இல் ஜனவரி 26ஆம் தேதியைச் சுதந்திர தினமாக (பூரண சுயராஜ்ய தினமாக) கொண்டாட வேண்டும் என்றும், அந்தக் கொண்டாட்டத்தின் நினைவாக, வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்து, மக்களுக்கு அறிவித்தது.

அதன் அடிப்படையில்  ‘பூரண சுயராஜ்ய தினம்’ என்று அறிவிக்கப்பட்ட ஜனவரி 26ம் தேதி நமக்கு  உணர்வு ரீதியான  சுதந்திர தினம்.

ஜனவரி 26”, என்ற “ஸ்வராஜ்ய தின அறிவிப்பை” ஏற்று, 1932 இல் தேசியக்கொடியை ஏற்றும் தேசியப்பணிக்கு மக்கள் தயாராகினர். வீட்டில் கொடியேற்றுவதில் எல்லோரும்போல தானும் ஈடுபடாமல், ஜார்ஜ் கோட்டையில் நள்ளிரவில் நமது தேசியக் கொடியை இன்றிலிருந்து இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது என்று  நமது தேசியக் கொடியில் எழுதியிருந்தார் கொடி ஏற்றிய குமரன் ஆர்யா என்னும் பாஷ்யம் ஐயங்கார்.

இதனை நினைவில் கொண்டு தான் 1948 ஜனவரி 26ஆம் தேதியன்று சுதந்திரத்தை அறிவிக்குமாறு கோரியது காங்கிரஸ் இயக்கம்.

 ஆனால், இந்தியர்கள் கோரிக்கையை ஏற்காத ஆங்கில அரசு, இரண்டாவது உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்ட ‘1945 ஆகஸ்ட் 15’ தேதியை நினைவில் கொண்டு, தங்களது வெற்றி தினமான ‘ஆகஸ்ட் 15’ இல் சுதந்திரம் தருவதாக அறிவித்தார்கள். 

இந்தியா, பாகிஸ்தான் என நாட்டைப் பிரிக்கும் போது 1948 ஜனவரி 26 அன்று சுதந்திரம் என்று அறிவித்திருந்தால், மக்கள் இந்தியா, பாகிஸ்தான் இடையே அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் இடம் பெயர கால அவகாசம் கிடைத்திருக்கும்.

அவசரகதியில் நாடு பிரிக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் தான் உங்களுக்கு தெரியும் தானே!

ஜனவரி 26 நமக்கு உணர்வுப் பூர்வமான சுதந்திர தினம் அதனை நினைவுறுத்தவே, அரசியல் சாசனம் தீட்டப்பட்ட பிறகு, 1950 இல் ஜனவரி 26 ஆம் தேதியை அன்றைய அரசு  குடியரசு தினமாக அறிவித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

நிறைவாக, 

சமுதாயத்தை நன்னிலைக்குக் கொண்டு செல்லும் விழிப்புணர்வு சக்தியாக, தேசத்தின்  விடுதலைக்காக தன்னைத் தானே அழித்துக் கொண்ட எத்தனையோ இளைஞர்கள், வீரர்கள், தியாகிகள் அவர்களுடைய வாழ்வில் நடந்த சரித்திர நிகழ்வுகள் யாவும் இன்றைய தலைமுறையினராகிய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சிறந்த வாழ்க்கைப் பாடம். 

அவர்களின் சேவை போற்றப்பட வேண்டும். அவர்களின் தியாகம் மதிக்கப்பட வேண்டும். கணக்கற்றவர்களின் உயிரை விலையாக கொடுத்த சுதந்திரத்தை நல்லமுறையில் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என்பதே நல்லவர்களின் விருப்பம். 

அதுவே எல்லோருக்குமான லட்சியம். 

இவை நிறைவேற  கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழிய வேண்டும் என இந்நாளில் அனைவரும் உறுதி மொழி ஏற்போம். 

ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்!

$$$

Leave a comment