அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடு அவசியம்

-அர்ஜுன் சம்பத்

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டின் அவசியம் குறித்து விளக்குகிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத்…

பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதவீம் அருந்ததியின மக்களுக்கு என 2009 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அரசமைப்புச் சட்டம் 341 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட 76 பட்டியலின மக்களுக்கான சாதிகளில் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, தோட்டி, மாடிகா, பகடை, ஆதி ஆந்திரர் உள்ளிட்ட சாதிகளை அருந்ததியருக்குள் உள்ளடக்க வேண்டும் என இச்சட்டம் வரையறுத்தது.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் பட்டியலின மக்கள்தொகை ஒரு கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 554. இது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 15.7 சதவீதமாகும். இதில், அருந்ததியர் மக்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 61 ஆயிரத்து 487 ஆகும்.

ஒட்டுமொத்த பட்டியலின மக்களில் 5.5 சதவீதம் அருந்ததிய மக்கள் ஆவார்கள். இவர்களுக்கு பட்டியலின மக்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனன் குழு பரிந்துரை செய்திருந்தது.

அருந்ததிய சமுதாயத்தைச் சார்ந்த மக்களை பட்டியலினத்தின் பிற சமுதாயம் சார்ந்த மக்கள் தீண்டாமை கொடுமைகளுக்கும், தீண்டாமை இழிவுகளுக்கும் ஆளாக்கி வந்துள்ளனர். பட்டியலின சாதி மக்களுக்கு உள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் நிலவி வந்துள்ளன.

தமிழகத்தில் பட்டியலின அருந்ததிய மக்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களை பட்டியலினம் சார்ந்த பிற சாதி வெறியர்கள் மிரட்டுவதும், தடுப்பதும், ஏன் கொலை சம்பவங்கள்கூட நடந்துள்ளன.

அருந்ததிய மக்கள் பட்டியலினம் சார்ந்த பிற சாதி மக்களை காதல் திருமணம் செய்தால் ஆணவப் படுகொலைச் சம்பவங்களும் நடந்துள்ளன. அருந்ததிய மக்கள், பட்டியலினம் சார்ந்த பிற சாதி மக்களின் கோயில்களுக்குள் நுழைய முடியாது; சமமாக அமர்ந்து பேசமுடியாது. சாப்பிட முடியாது.

அவர்கள் தாழ்த்தப்பட்டோரில் மிக தாழ்த்தப்பட்டோராக இழிவுபடுத்தப்பட்டனர். அருந்ததிய மக்களுக்கு உள் ஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது,  ‘இது பட்டியலின மக்களின் ஒற்றுமையை பாதிக்கும்; மேலும், 50 சதவீதவீத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயல்; எனவே, இது சாத்தியமில்லை’ என பட்டியலின அமைப்பு சார்ந்த தலைவர்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

‘அருந்ததிய மக்கள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளைப் பேசுகிறார்கள். அருந்ததியர்கள் தமிழர்களே அல்ல, வந்தேறிகள்’ என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். ஆனால், அருந்ததியர்கள் என்று வகைப்படுத்துகிறபோது அதில் தோட்டிகள், பகடை, சக்கிலியர் உள்ளிட்டோர் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவார்கள்.

ஆதி ஆந்திரர், மாடிகா, மாலா உள்ளிட்டோர் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டு தமிழகத்தில் வசிப்பவர்கள். அருந்ததியர்களில் பெரும்பாலானோர் பட்டத்தரசி அம்மனையும், மதுரை வீரனையும் வழிபடுகின்றவர்கள் ஆவார்கள். இதில், தூய்மைப் பணியாளராக, விவசாயக் கூலிகளாகப் பணியாற்றுகின்றவர்கள் அதிகமானோர் உள்ளனர்.

தமிழகத்தில் பட்டியலின மக்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். வட தமிழகத்தில் பறையர் (ஆதிதிராவிடர்) சமூக மக்கள் பெரும்பான்மையானோர் உள்ளனர். தென் தமிழகத்தில்  ‘பள்ளர்’ எனப்படும் தேவேந்திரர் சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மேற்கு தமிழகத்தில் (கொங்குப் பகுதி) அருந்ததிய சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதில், தமிழகத்தில் 15.5 சதவீத பட்டியலின மக்களில் 5 சதவீதவீ மக்கள் அருந்ததிய மக்கள் ஆவார்கள். இவர்கள் பட்டியலின மக்களுக்கான 18 சதவீத  இட ஒதுக்கீட்டில் இவர்களுக்கு உரிய பங்கை அனுபவிக்க முடியவில்லை. எனவே, இவர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது நியாயமானதாகும்.

  • நன்றி: தினமணி (07.08.2024)

$$$

Leave a comment